ஹிட்லரின் படைவீரன்





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவரது பெயர் பூப்பே. ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். தொழில் நிமித்தம் நான் முதலிற் பயணமாகிய நாடு ஈராக். 1979 ஒக்டோபர் மாதமளவிற் பணியேற்ற போது, அந்த நிறுவனத்தின் தொழில் மற்றும் நிர்வாக முகாமையாளராக இருந்தவர்தான் மிஸ்டர் பூப்பே. அப்போது அவரது வயது அறுபத்தைந்துக்கு மேலிருக்கும். கம்பீரமான தோற்றமுடையவர். நல்ல உயரம். திடகாத்திரமான உடல்வாகு கொண்டவர்.
ஒரு துடிப்பான இளைஞனைப் போல வேலைத் தலத்திற்கு அவர் வரும் சுறுசுறுப்பைக் காண, வேலை செய்கிறவர்களுக்கெல்லாம் புதிய உற்சாகம் ஏற்படும். முழங்கால்களுக்கு மேல் இறுக்கமான காற்சட்டையும், ரீ- சேர்ட்டும் அணிந்திருப்பார். கைகளை வீசி வீசி வலு வீச்சாக நடப்பார். நின்றால், இடுப்புக்குக் கை கொடுத்து நெஞ்சை நிமிர்த்திய நேர்பார்வை. சண் கிளாஸ் அடித்திருப்பார். அவர் யாரைப் பார்க்கிறார், என்ன சொல்லப் போகிறார் என்பது யாருக்கும் புரியாமலிருக்கும். கடுமையான மனுசன். ஏதாவது சிறு பிழை கண்டாலே பெரிய சத்தம் போடுவார். அல்லது சத்தம் போடுவதற்காக ஏதாவது பிழை பிடிப்பார். அவரது அசுகை தென்பட்டதுமே சும்மா அரட்டையடித்துக்கொண்டு நிற்பவர்கள்கூட, ஸ்பனரைக் கையிலெடுத்து எதையாவது கழற்றவோ பூட்டவோ தொடங்கிவிடுவார்கள். அதாவது, மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.
இலங்கை, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய தேசங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு பணியாற்றினார்கள். மிஸ்டர் பூப்பே எந்த நேரத்தில் யார்மீது பாய்வார் என்பது தெரியாத ஒருவித கிடிக்கலக்கத்துடனும் எச்சரிக்கையுடனும்தான் அவரவர் தங்கள் வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள். அதுதான் அவர் அந்த வேலைத் தலத்தை நிர்வகிக்கும் உத்தி. சில வேளைகளில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு ஏதும் பேசாமல் அமைதியாக அலுவலகத்திற்குப் போய்விடுவார். அப்போது தொழிலாளர்களிடமிருந்து வெளிப்படும் நிம்மதிப் பெருமூச்சை அத்தொழிலகத்தின் இயந்திரங்களின் இரைச்சலையும் மீறிக் கேட்கக் கூடியதாயிருக்கும்.
இனித்தான் விஷயத்துக்கு வரப்போகிறோம். ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையே இருந்து வந்த தகராறு முறுகல் நிலையை அடைந்திருந்த நேரம் அது. நாங்கள் பணியாற்றிய தொழிற்தலம் ‘உம்-குஷார்’ எனும் இடத்திலுள்ள துறைமுகத்தில் அமைந்திருந்தது. இது இரு நாடுகளுக்குமிடையிலான எல்லைப் பிரதேசத்திற்கு மிக அண்மையிலுள்ள ஒரு சிறிய நகரம்.
நான் ஈராக் சென்றடைந்து, அப்போது ஓரிரு கிழமைகள்தான் ஆகியிருந்தது. விசா மற்றும் தேவையான வதிவிடப் பத்திரங்களை ஒழுங்கு செய்யும் அலுவல் காரணமாக ‘பாஸ்ரா’ எனும் நகரத்துக்கு சில தடவைகள் போய்வர வேண்டியிருந்தது. பயணிக்கும் போது, வீதியின் இருமருங்கிலுமுள்ள பாலைவன வெளிகளில் நாளும் பொழுதுமாக பாரிய பீரங்கிகள் முளைத்து வான் நோக்கி நிமிர்ந்து நிற்பதைக் காணக் கூடியதாயிருக்கும். ஒன்று இரண்டல்ல. அவற்றைப் பீரங்கி வயல்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இராணுவத்தினர் பதுங்கு குழிகள் வெட்டுவது போன்ற வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். எந்த நேரத்திலும் யுத்தம் வெடிக்கலாம் (யுத்தம் என்றால் வெடிப்பதுதானே?) எனச் செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இலங்கையைச் சேர்ந்த நாங்களோ (அப்போது) யுத்தம் என்றாலே என்னவென்று தெரியாத அப்பாவிகளாயிருந்தோம். (இப்போதென்றால் வேறு கதை). எங்களுக்கு யுத்த பூமியிலிருந்த எந்த அனுபவமும் இல்லை. (வேலைக்குத் தெரிவு செய்யப்பட்டபோது, இப்படியொரு தகுதி தேவையெனக் கேட்கப்படவுமில்லை.) யுத்தம் தொடங்கினால் எப்படியிருக்கும்? குண்டுகள் எங்கெல்லாம் விழும்? எங்கள் தலைகளிலும் விழுமோ?
இத்தனைக்கும் நாங்கள் தங்கியிருந்த குவார்ட்டேஸைச் சுற்றிலும் பல இராணுவ முகாம்கள் இருந்தன. ‘அட, உங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததா…!’ எனப் பிரமிக்க வேண்டாம். அது எல்லைப் பிரதேசமாகையால் அப்படியான பாதுகாப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அது இன்னும் ஆபத்தான இடம் என்றுதான் சொல்ல வேண்டும். ஈரானியப் படைகள் இந்த இராணுவ முகாம்களைத் தாக்கினால், அது எங்களையும் பாதிக்காது என்பது என்ன நிச்சயம்? ஈரானிய விமானங்கள் குண்டு வீச வரும்போது வஞ்சகமில்லாமல் எங்களுக்கும் இரண்டு குண்டுகளைப் போட்டுவிட்டுப் போகலாம்தானே? (வழக்கமான யுத்தவிதிகளின்படி).
அப்படியானால்… எங்கள் கதைகள் இங்கேயே முடியப் போகிறதா? திரும்பவும் போய் எங்கள் குடும்பத்தினரைப் பார்க்க முடியாதா…’ என்றெல்லாம் கலங்கத் தொடங்கிவிட்டோம். எனினும் ஒரு சிறு நம்பிக்கை – பேச்சுவார்த்தைமூலம் பிரச்சினையைத் தீர்த்துவிடுவார்கள். யுத்தம் நடக்காது… என உண்மையாகவே ஓராளுக்கு ஓராள் தெம்பு சொல்லிக் கொண்டிருந்தோம். (நாங்களெல்லாம் வடிகட்டின அப்பாவிகள் என்பதற்கு இப்படியான நம்பிக்கைகளையும் ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.)
ஒருநாள் மதிய போசனத்தின் பின்னர் தொழிலகத்தில் வேலையிலீடுபட்டிருந்தபோது, வாகனமொன்று சைரன் ஒலியெழுப்பியவாறு மேலே அவசரமாகச் சுழன்று எச்சரிக்கும் லைட்டுடன் ஓடிவந்து நின்றது. அதிலிருந்து சில அதிகாரிகள் இறங்கி இன்னும் வேகமாக, மிஸ்டர் பூப்பேயின் அலுவலகத்திற்கு ஓடிவந்தார்கள். நாங்கள் பரபரப்படைந்தோம்.
‘யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டதாம். இன்று மாலை இந்தத் துறைமுகத்தை ஈரானியப் படைகள் தாக்கக்கூடும். உடனடியாக எல்லோரையும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருக்கிறது…’
செய்தியைக் கேட்டதுமே அரைவாசிப்பேருக்கு மூச்சு நின்றது போலாகிவிட்டது. எந்தப் பக்கத்தால் ஓடித் தப்புவது என்றும் தெரியவில்லை. முன் பின் தெரியாத இடம். மனைவிமாரையும் பிள்ளை குட்டிகளையும் நினைத்து சில குடும்பஸ்தர்கள் கலங்கி அழவும் செய்தார்கள். “எங்களுக்கு ஏதாவது நடந்திட்டால் அதுகளை ஆர் பார்க்கிறது?” என மிகப் பொறுப்பான கேள்விகளையும் ஆளுக்காள் கேட்டுக்கொண்டார்கள்.
“உனக்கென்றால் பிரச்சனையில்லை… நீ தனி ஆள். செத்தாலும் பரவாயில்லை…” என ஒருவித பொறாமையுணர்வுடன் என்னைப் பார்த்து அபிப்பிராயம் தெரிவித்தார்கள். எனக்கு அப்போது திருமணமாகியிருக்கவில்லை என்பது உண்மைதான். எனினும் நான் சாகத் தயாராயில்லை. என்னையும் மரணபயம் பிடித்துக் கொண்டிருந்தது.
அப்போது மிஸ்டர் பூப்பே அலுவலத்திலிருந்து வெளிப்பட்டு வந்தார். நாங்களெல்லோரும் அவர் முன் கூடினோம். எங்களைப் பார்த்து ஆதரவாகப் புன்முறுவல் பூத்தார்.
“ஒருத்தரும் பயப்படவேண்டாம். நானிருக்கிறேன். உங்களையெல்லாம் பாதுகாத்து பத்திரமாக உங்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவைப்பது எனது பொறுப்பு. உங்களுக்குத் தெரியுமா… நான் ஹிட்லரின் படையிலிருந்தவன். ஹிட்லரின் கடற்படையில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. போரின்போது தற்காப்புக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். முதலில் இந்தத் தொழிற்தலத்தைப் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய கடமை. ஒரு சிறிய ஸ்பனரையாவது வேலை செய்த இடங்களில் விட்டுவிடாமல் ஸ்டோர் கீப்பரிடம் ஒப்படையுங்கள். இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் அததற்குரிய எல்லாக் பாதுகாப்பான முறையில் வைக்கவேண்டும். கதவுகளையும் லொக் பண்ணுவதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்… இன்னும் ஒரு மணித்தியாலத்தில் நாங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்… சீக்கிரம்…”
அவர் ஹிட்லரின் படையிலிருந்தவர் என்ற செய்தி அப்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. அது எங்களுக்குப் பெரிய தெம்பைத் தந்தது. ஹிட்லரென்றால் லேசுப்பட்ட ஆளா? மிஸ்டர் பூப்பேயில் துணிச்சலைப் பற்றி ஏற்கனவே எங்களுக்குத் தெரியுமாயினும், அவர் ஹிட்லரின் படையிலிருந்தவராகையால் எப்பேற்பட்ட ஆளாயிருக்கும் என்ற துணிச்சலும் எங்களுக்கு வந்துவிட்டது. ஓடிஓடி தொழிற்சாலையை இழுத்து மூடிவிட்டு, ஏற்கனவே தயாராயிருந்த பஸ்களில் ஏறி குவார்ட்டேஸை நோக்கிப் புறப்பட்டோம்.
குவார்ட்டேசிற்கு வந்து சேர்ந்தோம். வேறு வழி இல்லை… சுற்றவர இராணுவ முகாம்கள் பரபரத்துக் கொண்டிருந்தன.. துறைமுகத்திற்கு மிக அண்மையிற்தான் குவார்ட்டேஸ் அமைந்துமிருக்கிறது. (ஊரிலென்றால் எங்காவது கோயில்களிலோ பள்ளிக்கூடங்களிலோ, குண்டு விழாது என்ற அசட்டு நம்பிக்கையுடனாவது போயிருக்கலாம்.) தங்குமிடத்தை வந்தடைந்த எங்களை ஒருவித பயஉணர்வு அழுத்திக் கொண்டிருந்தது.
மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரைதான் இரவுச் சாப்பாட்டு நேரம். சாப்பாட்டை முடித்துக் கொண்டு (சாப்பாடே இறங்கவில்லை என்பது வேறு விடயம்.) முன்னே முற்றத்தில் கூடிக் கூடிக் கதைத்துக் கொண்டிருந்தோம். யுத்தம் பற்றிய ஒவ்வொருவருடைய கற்பனைகளும் அபிப்பிராயங்களும் ஒவ்வொரு விதமாக ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு நடை தொலைவிற்தான் முன்னே பிரதான வீதி. வழமையான பொதுசன வாகன ஓட்டங்கள் எதுவுமில்லை. ஆனால் இராணுவ ட்றக் வண்டிகளும் கனரக வாகனங்களும் இங்குமங்குமாகப் பறந்துகொண்டிருந்தன. அதிலெல்லாம் இராணுவத்தினர் துப்பாக்கிகளை ஏந்தியபடி, ஆடிப் பாடி (ஆனந்தித்து…?) செல்வதைப் பார்க்கக்கூடியதாயிருந்தது. இவற்றைவிட வேறு எந்தக் குண்டுச் சத்தங்களோ யுத்தத்துக்கான அசுமாத்தங்களோ தென்படவில்லை.
அப்போது முற்றத்திற் கூடிநிற்கும் எங்களை நோக்கி மிஸ்டர் பூப்பே தனது அறையிலிருந்து வந்தார். அவரைக் கண்டதும் இயல்பாகவே நாங்கள் அவருக்கு அண்மையிற் கூடினோம். பொறுப்பும் பாசமுமுள்ள ஒரு தந்தையைப் போல அவர் எங்களுடன் ஆதரவாகப் பேசித் தெம்பூட்ட முயன்றார். தன் பக்கத்தில் நின்ற சிலரை முதுகுக்குக் கை கொடுத்து பக்கவாட்டில் அணைத்துக் கொண்டு, ‘பயப்பட வேண்டாம்’ எனக் கூறினார். இவ்வளவு கடுமையான மனுசன் இவ்வளவு மென்மையாக நடந்து கொள்கிறாரே என, எங்களிற் சிலருக்கு ஆனந்தக் கண்ணீர்கூட உகுத்தது. தான் ஹிட்லரின் படையிற் சேவை செய்தபோது, இப்படியான யுத்த நேரங்களில் படையினரிடையே நடந்த சில ஹாஸ்ய சம்பவங்களைக் கூறி அதற்குத் தானே சிரித்துச் சிரித்து எங்களையும் சிரிப்பூட்ட முயன்றார். ஆனால் நாங்களோ சிரிப்பு என்பதையே மறந்தவர்கள் போல பேயறைந்து போய் நின்றோம்.
அப்போது இருளப் போகும் நேரம்.
‘சட.. சட’ எனச் சுடும் சத்தங்கள் கேட்கத் தொடங்கியது. துப்பாக்கி வேட்டுக்களைத் தொடர்ந்து பாரிய குண்டுச் சத்தங்களும் கேட்டன. வானத்தில் பெரிய பந்து போன்ற நெருப்புக் கோளங்கள் அங்குமிங்கும் சீறிக் கொண்டு பறந்தன.
மிஸ்டர் பூப்பே சடாரென விழுந்தார். கைகளையும் விரித்துக் கொண்டு முகம் குப்புற அவர் கிடந்த விதத்தைப் பார்த்தால், ஒருவேளை சாஸ்டாங்க நமஸ்காரம் செய்கிறாரோ என்றுகூடத் தோன்றியது. ‘எல்லாரும் விழுந்து படுங்கோ… எல்லாரும் விழுந்து படுங்கோ… எல்லாரும் விழுந்து படுங்கோ..” எனச் சத்தமும் போட்டார்.
ஆனால் நாங்கள் எவருமே அப்படிச் செய்யவில்லை. அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்பது பலருக்குப் புரியவுமில்லை. மிஸ்டர் பூப்பே குரல் அடைக்க அடைக்கக் கத்திக்கொண்டேயிருந்தார். “கீழே படுங்கள்… கீழே படுங்கள்…”
இந்த நிலைமை ஓர் ஐந்து நிமிடம் வரை நீடித்தது. குண்டுச் சத்தங்கள் ஓய்ந்ததும் மிஸ்டர் பூப்பே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்தார்.
‘இது ஒரு தற்காப்பு முறை. குண்டு போடும்போது அது வெடித்துச் சிதறும் துகள்கள்தான் எங்களைத் தாக்குகிறது. நிலத்தில் விழுந்து படுத்தால் அதிலிருந்து தப்பிக் கொள்ளலாம்…’ என விளக்கமளித்தார்.
நாங்கள் அப்போது சிரிக்கத் தொடங்கினோம். அது அவர் விழுந்து படுத்ததற்காக அல்ல. அது ஒரு தற்காப்பு முறை என்பதில் ஐயமில்லை. ஆனால் மிஸ்டர் பூப்பே பேசமுடியாதவர்போல வெடவெடத்துக் கொண்டிருந்தார். நடுக்கம் அவரது தேகத்தில் உதறலெடுத்துக் கொண்டிருந்தது. ஹிட்லரின் படைவீரனையும் பயம் பிடித்துக் கொண்டதே என்பதுதான் எங்களுக்குச் சிரிப்பு மூண்டதற்கான காரணம்.
பின்னர் தெரியவந்தது… ‘அவை சும்மா சமிக்ஞைக் குண்டுகளாம். தங்களது சக இராணுவ முகாம்களின் தயார் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஒருவர்க்கொருவர் செய்துகொண்டே சமிக்ஞைதான் அது.’
– மல்லிகை, 2002.
– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |