ஹரிஜன்




(1966ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பாகம் -1 | பாகம் -2
முன்னுரை

இந்தியா முன்னேறுகிறது ; நமது சமுதாயம் புது மலர்ச்சி பெற்றது. ஏழு கோடி மக்களைத் தீண்டாதவர் என்ற காலம் போய்விட்டது; தீண்டாதே, பாராதே, வராதே என்றவர்கள் இன்று கோவிலில் சரிசமனாகத் தொழுகின்றனர் ; கல்விக்கற்று முன்னேறுகின் றனர் ; சட்ட சபையில் அங்கம் வகிக்கின்றனர் ; மந்திரியாகி நாட்டை ஆளுகின்றனர். அமெரிக்காவில் அபிரஹாம் லிங்கனுமல், புக்கர் வாஷிங்பனும் தொடங்கிய சமரச இயக்கம் இன்றும் வெற்றிபெறவில்லை. மார்டின் கிங் இன்னும் காந்திவழியே போராடிக் கொண்டிருக்கிறார். நமது நாட்டில் நந்தனார், திருப்பாணாழ்வார் காலந்தொட்டு வந்த இயக்கம் இன்று வெற்றிகண்டது. இன்று திருக்குலத்தார் சரிநிகர் சமான ராகக் கல்வி கற்று முன்னேறுகின்றனர். இதன் பெருமை யாரைச் சேரும்? ஒரே ஒருவரையே சேரும். அவரே, மஹாத்மாகாந்இ! பாரத நாடு இன்று பெற்ற நன்மைகளெல்லாம் நமது நாட்டுத் தந்தையின் ஆசியால் வந்தன. மஹாத்மாவின் சத்திய சோதனையும், சாந்தப் போரும் ௫ நடாலில் தொடங்கின. அங்கும் ஒரு தண்டி யாத்திரை நடந்தது. இந்தியரை இழிவு செய்த கறுப்புச் சட்டத்தைத் தகர்த்த காந்தியடிகள் இந்திய மக்களின் அடிமை விலங்கை மூறிக்கவே இங்கும் ஒரு தண்டி யாத்திரை செய்தார். மஹாத்மாகாந்தி எத்தனையோ அற்புதத் தொண்டுகளைச் செய்தார். அவற்றுள் ஹரிஜன முன்னேற்றத்தை முதன்மை யாகக் கருதுவோம்.
1915-ல் மதுரைக்கு வந்தார் மஹாத்மா; ஜார்ஜ் ஜோஸஃப் வீட்டில் அவரைக் கண்டேன்.
ஒன்றாக வாழ்வோம்
தன்றாக வாழ்வோம்
உலகம் ஒருகுலமே.- அதில்
ஒற்றுமையே பலமே!
என்றொருப் பாட்டைப் பாடினேன். அருகே ஒரு தோட்டி தெருவைக் கூட்டினான், அவன் குழத்தை மண்ணில் விளையாடியது. “உன் பாட்டை அந்த பங்கியிடம் பாடு” என்றார். பாடினேன்; அவனுக்குக் கருத்து விளங்கியது. ‘அப்படி யானால் நல்ல பாட்டுத்தான். கவிகள் சாதாரண மக்களுக்குப் புதிய விழிப்பு வரும்படி எளிய நடையில் பாடவேண்டும், பேசவேண்டும், எழுதவேண்டும்” என்றார் காந்தி, பிறகு மண்ணில் விளையாடும் குழந்தையைச் சுத்தம் செய்துவரச் சொன்னார். அவ்வாறே அதற்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிப் புதிய துண்டை உடுத்திக் கொணர்த்தேன், “இதுதான் நல்ல தொண்டு; தாழ்த்தப்பட்டவர் உயர வேண்டும். மண்ணில் புரண்டு தூசி படிந்த உடல்களைக் கழுவ வேண்டும்.” என்றார். இச்சமயம் A.வைத்தி நாத ஐயர் வந்தார். எல்லாரும் கலந்து பேசினர். அதன் முடிவு இதுவே:–
“உரிமைப்போர் உள்ளும் புறமும் நடக்க வேண்டும். உட்போர் நமது சமுதாயத்தின் மேடு பள்ளங்களை நீவிச் சமநிலையை நாட்டும். புறப்போர் அன்னிய மாயத்தை ஓட்டி அன்பை நாட்டி, விடுதலை தரும். தீண்டாமையை விலக்கித் தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவது உட்போரில் முதன்மையானது. தாழ்த்தப்பட்டவரை நான் ஹரிஜனர் என்கிறேன். நமக்காக வயல் வரப்புகளிற் பாடுபட்டு, ஊர் சுத்தம் செய்பவரை ஒதுக்கி வைப்பது கொடுமையாகும். “ஒதுக்கி வைத்தவர் வாழ்வை இனிப் புதுக்கி வைப்போம்.” என்றார் மஹாத்மா. அன்றே ஹரிஜன இயக்கம் எழுந்தது. மதுரையில் க.வைத்தி நாதரும், N.M.R.சுப்பு ராமரும் செய்த ஹரிஜன சேவை சரித்திரப் புகழ் பெற்றது அந்தக் காலத்தில் சிவகங்கையில் நான் சேரியில் பள்ளிக்கூடம் தொடங்கினேன்(1914); ஆசிரியராயிருந்தபோது ஸ்ரீராம சமுத்திரத்தில் ஹரிஜன சங்கமும் பள்ளிக்கூடமும் நடத்தினேன். பாமணியில் கிராமசேவை செய்தபோது பெரிய மிராசுதார்களும் ஹரிஜனரும் ஒன்றாகக்கூடி வழிபாடுகள் செய்யவும், பஜனை செய்யவும், உண்ணவும் ஏற்பாடு செய்தேன். மஹாத்மா காந்தி என்னை ஆக்கப்பணிகளில் ஊக்கி நடத்தினார்.
அந்தக் காலம் கிராம சேவைக்காக நான் பல நாடகங்கள் நடத்தினேன். அவற்றுள் ஒன்று ‘ஹரிஜன்’ என்ற இந்த நாடகம். இந்த நாடகத்தைச் செப்பனிட்டு, இக்காலத்திற் கேற்றபடி சில திருத்தங்கள் செய்தேன்.
மதுரைமின் பொதுநலச் செம்மலான ஸ்ரீ N.M.R.சுப்பு ராமனின் அறுபதாண்டு விழாத் தலைமை தாங்கியபோது, இந்நாடகத்தைப் பற்றி அவர்களிடமும் ஸ்ரீ P.K. இராமாச் சாரியாரிடமும், ஸ்ரீ ௧. அருணாசலனாரிடமும் குறிப்பிட்டேன். இதை வெளியிடும் முயற்சியை அவர்கள் ஊக்கினர், இந் நாடகத்தை ஹரிஜன ரக்ஷகரான மஹாத்மா காந்திக்கு அர்ப்பணிக்கிறேன்.
-சுத்தானந்த பாரதி.
நாடக பாத்திரர்
ஜெயராமன் M.A.. — ஹரிஜன சங்கத் தலைவன், தேசபக்தன்-காந்திபக்தன்.
கைலாசபட்டர் — ஜயராமன் தந்த வைதீகப் பழம்,
கனபாடிகள் — வேதம் படித்தவர் ; பழைய ஆசாரக்காரர் – காலப்போக்கை அறி யாதவர்,
வேதவல்லி — கனபாடிகள் மகள் – படித்த பெண், ஜயராமனைக் காதலிப்பவள். ஹரிஜன சேவகி.
நல்லாயி – திருக்குல மாது; பாடுபட்டுப் பிழைப்பவள்.
வீரமுத்து — அவள் மகன்; அறிவாளி; சமூகத் தொண்டன். டாக்டர் பட்டம் பெறுகிறான்.
வைத்தி நாதர் — தலைவர்.
N.M.R. சுப்புராமர் — தலைவர்.
கிறிஸ்தவ பாதிரியார்.
கதைச் சுருக்கம்
மதுரையில் மஹாத்மா காந்தியின் ஆசியால் ஹரிஜன சங்கம் ஏற்படுகிறது ; A.வைத்திநாத ஐயரும், N.M.R, சுப்பு ராமைய்யரும அதைப் பாதுகாக்கிறார்கள். ஜயராமன் M.A, அ.தன் காரியதரிசியாகி சங்கத்தைப் பல துறைகளில் வளம் பெற வளர்க்கிறான். ஜயராமனுக்கு வேதவல்லி என்ற கன்னிப்பெண் துணை செய்கிறாள். வேதவல்லி பள்ளிக் குழந்தைகளுக்கு, ஆடல், பாடல், தாடகம் பயிற்றுகிறாள். ஜயராமன் ஆதாரப் பள்ளிக்கூடம் நாட்டி, நூறு ஹரிஜன மாணவருக்குத் தொழில் முறைக் கல்வி பயிற்றுகிறான். நூற்பு, நெசவு காயிதம், பைண்டிங், அச்சு, மரவேலை, தோட்டப்பயிர் முதலிய பல தொழில்களால் சங்கத்தை வளப்படுத்துகிறான்.
ஜயராமன் தந்தை கைலாசப்பட்டர்; வேதவல்லி தந்தை கனபாடிகள் – இருவரும் மீனாக்ஷி சுந்தரேசர் கோவில் பூஜை செய்பவர். ஜயராமன் — வேதவல்லியின் ஹரிஜன சேவை இவர்களுக்குப் பிடிக்கவில்லை, இருவரும் இருவருக்கும் தடை போடுகிறார்கள். பழைய வர்ண தர்மத்தையே பேசுகிறார்கள். கனபாடிகள் வேதவல்லியைப் பலமாகக் கண்டிக்கிறார். பெண்கள் பேசக்கூடாது என்கிறார் – ஆனால் ஜயராமனும், வேதவல்லியும் ஹரிஜன சேவையில் தீவிரப்படுகின்றனர். எவ்வளவு முயன்றும் தீண்டாமைப் பேய் ஒழியவில்லை. ஹரிஜனர் சிறுமை தீரவில்லை.
மீனாட்சி கோவிலில் பூஜை தீபாராதனை நடக்கிறது. சந்நிதித் தெருவில் சில ஹரிஜனர் நின்று, சந்நிதி விளக் கைப் பார்த்துக் கும்பிடுகின்றனர். அவர்களுள் அதோ விறகு சுமந்து நிற்பவள் நல்லாயி. அவள் மகன் வீரமுத்து. கோவிலுக்குள் போவோரைக் கூர்ந்து பார்க்கிறான். தானும் போகத் துடிக்கிறான். நல்லாயி “நாமெல்லாம் தீண்டாச் சாதி; உள்ளே போனால் உதைப்பார்” என்கிறாள். “அம்மா நான் ஒருநாள் மீனாட்சியம்மனைப் பார்த்தே தீருவேன்”என்று பையன் சபதம் கூறுகிறான். அப்போது ஒரு பாதிரி மதம் மாறும்படி வேண்டுகிறான். நல்லாயி மறுக்கிறாள். நல்லாயி விறகு விலை கூறிக்கொண்டு ஆவணி மூல வீதிக்கு வருகிறாள்.
அப்போது தான் பட்டரும், கனபாடிகளும் கலி காலத்தைத் தூற்றுகின்றனர். ஜயராமனைத் திட்டுகின்றனர். ஜயராமனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்க மறுக்கிறார் கனமாடி. இந்த விவாவதம் நடக்கும்போது, நல்லாயி விறகு சுமந்து வருகிறாள். பட்டர் அவளைத் தள்ளி நிற்கச் சொல்லி, அவள் தந்த சில்லரையைக் கழுவியெடுத்துச் சிறுமை செய்கிறார். ஜயராமன் அவரைக் கண்டித்து, நல்லாயிக்கு உணவுதந்து வீரப்பனை ஹரிஜனப்பள்ளியிலும் சேர்த்து ஆதரிக்கிறான். வீரப்பன் பட் பட் என்று பதித் சொல்லி பட்டர் வாயை அடக்குகிறான். பட்டரும் கனபாடிகளும் சங்கத்தைக் கவனிக்கிறார்கள்.
ஹரிஜன சங்கத்தில் காந்தித் திருநாள் நடக்கிறது. வேதவல்லி குழந்தைகளுடன் காந்தித் தாத்தா பாட்டுப் பாடுகிறாள். குழந்தைகள் அதற்கேற்ற வேடம் பூண்டு ஆடுகின்றனர். பிறகு ஒற்றுமைப் பாட்டுப் பாடுகின்றனர். பட்டர் உள்ளம் காந்தியிடம் பதிகிறது, கனபாடிகளிடம் மாறுதல் ஏற்படுகிறது. ஆயினும் பழம் பிடிவாதம் விட வில்லை.
வைத்திநாதர், சுப்புராமன், ஜயராமன் மூவரும் மீனாட்சி கோவிவில் ஹரிஜனப் பிரவேசம் செய்கின்றனர். தை வெள்ளிக்கிழமை. சங்க நாதத்துடன் தேவாரம் பாடிக் கொண்டு ஆசாரமாக ஹரிஜனர் கோவிலுட் செல்லுகின்றனர். பட்டரும் கனபாடிகளும் மீனாட்சியை வழிபட்டு “தாயே தீண்டாதாரை உள்ளே விடுவது அக்கிரமம், அதைத் தடுக்க வேண்டும்” என்று முறையிடுதல்., மீனாக்ஷி அசரீரியாய் “என் குழந்தைகளை யெல்லாம் உள்ளே வரச் சொல்” என்கிறாள். வைத்திநாதரும், சுப்புராமனும் ஹரிஜனரைக் கோவிலுக்குள் அமைதியாக அழைத்துச் செல்லுகின்றனர். ஞானசம்பந்தரின் “வீடலாலவாயிலாய்” பாடி வீர நடைபோட்டு உள்ளே சென்று பரவசமாகப் பாடி வணங்குகின்றனர் திருக்குலத்தார், நல்லாயி பேரின்ப மடைகிறாள். வீரமுத்து சபதம் நிறைவேறியதென்று களிதுள்ளுகிறான். மற்றொரு சபதம் நிறைவேற அவன் டாக்டருக்குப் படிக்கிறான்.
மீனாட்சி மண்டபத்தில் வேதவல்லி ஹரிஜனக் குழந்தைகளுடன் கும்மி கோலாட்டம் நடத்துகிறாள். அந்தப் பாடல் எல்லார் உள்ளத்தையும் உருக்குகிறது. நாடெங்கும் ஹரிஜன ஆலயப் பிரவேசத்தைப் போற்றுகிறது.
ஆனால் கனபாடிகளின் முரட்டு மூளை “ஹாஹு” என்று கிளம்பி வெறி பிடிக்கிறது. “நானே மீனாட்சி, நான் கோவிலைவிட்டுப் போகிறேன்” என்று குமுறுகிறார். அவ ருக்கு மூளைநோய் காண்கிறது. கீழே விழுந்து கைமுறிகிறது, பட்டருக்கும் இரத்தக் கொதிப்பு – இருவரும் நரக வேதனைப்படுகிறார்கள். டாக்டர் மாத்யூ இதற்குள் பார்த்து கைவிட்டுச் செல்கிறார். வீரமுத்து டாக்டர் பட்டம் பெற்று, மதுரை ஜில்லா மருத்துவ அதிகாரியாகிறார். நல்லாயி பெருமகிழ்ச்சி யடைகிறாள். கனபாடிகள் நோய் அதிகமாகிறது.
ஒருநாள் ஜயராமன் டாக்டர் வீரமுத்துவைக் கூட்டி வருகிறான். டாக்டர் கைக்குக் காயம்கட்டி, உடம்பில் ஒத்தடம் கொடுத்து, மூளைக்கும் சிகிச்சை செய்கிறார். இதே மாதிரி முன்னே டாக்டர் மாத்யூ சிகிச்சை செய்தார், அவர் ஹரிஜனாயிருந்து கிறிஸ்துவரான பிறகு அக்கிரகாரத்திலும் சுதந்தரமாக வைத்தியம் செய்கிறார். இதை கனபாடி அறிவார். வீரமுத்துவை பட்டர் கண்டுபிடிக்கிறார். “அன்று விறகு தூக்கிவந்த நல்லாயி மகனா டாக்டர் வீரமுத்து” என்று வியக்கிறார். வீரமுத்துவின் அன்பு அவரை உருக்குகிறது. மனதினின்று தீண்டாமைப் பேய் ஓடுகிறது.
கனபாடிகள் தன் மகள் வேதவல்லியை ஜயராமனுக்குத் திருமணம் செய்ய இணங்குகிறார். வேதமுத்துவே எல்லாச் செலவையும் செய்கிறான். டாக்டர் வேதமுத்து டாக்டர் தர்மாம்பாளை மணம் புரிகிறார்.
ஹரிஜன சங்கத்தில் திருமணம் மிகச் சிறப்பாக நடக்கிறது. கனபாடிகளும், பட்டரும் வாழ்த்துகின்றனர். எல்லாரும் ஹரிஜன் சேவையில் மகிழ்ச்சி கொள்ளுகின்றனர். வாழ்வு வளம் பெருகிறது. மானிடம் மாண்புறுகிறது.
-சுத்தானந்த பாரதியார்.
ஹரிஜன் (நாடகம்)
காட்சி: 1 – மீனாட்சி வழிபாடு
[மீனாட்சியம்மன் அழகான அலங்காரங்களுடன் விளங்கு கிறாள். விளக்குகள் பளிச்சிடுகின்றன, பட்டர் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுகிறார்.]
[நாத நாமக்கிரியை-ஆததாளம்]
ஆதி பராசக்தியே
அன்னை மீனாட்சியே
ஜோதிச் சுடரொளியே
சுதந்தர வானமே!
மேதினிக் கோயிலில்
விளங்குயிர் வடிவமே
வேதத்தின் மெய்ப்பொருளே
வெற்றியருளுவையே |
வாழ்கநின் அன்பர் கூட்டம்
வாழ்கதின் ஆத்ம சக்தி
வாழ்க பாரத நாட்டின்
வளம் பெறுங்கலைகளே
வாழ்க சமயோக
வாழ்வு நலம் பெருகிச்
சூழ்க வுலகமெல்லாம்
சுத்த ஓம் சக்திநாதம்!
[தீபாராதனை–மணிச் சத்தம்– அன்பர் துதி]
மாதா பார்வதி ஓம் சரணம்
மதுராம்பிகையே ஓம் சரணம்
ஆதார சக்தி ஓம் சரணம்
அன்னை மீனாட்சி ஓம் சரணம்
காட்சி: 2 – நல்லாயி-வீரமுத்து
[தெருவில் ஜனக்கூட்டம். மீனாட்சி சந்நிதியில் தீபாராதனை தெரிகிறது ; பாட்டு வருகிறது. நல்லாயி அப்படியே தெருவில் நிற்கிறாள். தலையில் விறகுக் கட்டு, கையில் மண்ணெண்ணைப் புட்டி, இடுப்பில் சாமான் கூடை. கந்தல் புடவை. பையன் வீரமுத்து பக்கத்தில் நிற்கிறான். அவன் இங்குமங்கும் கூர்ந்து நோக்குகிறான். எல்லாரும் கோவிலுக்குள் செல்லுகின்றனர்.]
நல்லாயி: தாயே மீனாட்சி, உன் தரிசனம் எப்போது கிடைக்குமோ! அம்மா பரதேவீ, எல்லோரும் கோவிலுக்குள்ளே போய் உன்னைத் தரிசிக்கிறார்களே. நாங்கள் மட்டும் என்ன பாபம் செய்தோம்…அம்மா…
வீரமுத்து: ஏனம்மா…எல்லாரும் உள்ளே போறாங்களே- நாமும் போவோமே…நான் போவேன் [முந்துதல்]
நல்லாயி : டே பயலே–போகாதே
வீரமுத்து; ஏனம்மா நாமும் மனிதரே… நாமும் இந்த நாட்டிலே பிறந்தோம்..நாம் ஏன் கோவிலுக்குள்ளே போகக்கூடாது?
நல்லாயி: கூடாதுன்னா கூடாது
வீரமுத்து: ஏன் கூடாது?
தல்லாயி: நாம் தீண்டாச் சாதி
வீரமுத்து : அப்படீன்னா…
தல்லாயி: ஐயமாருங்க சாத்திரம் அப்படிச் சொல்லுது…நம்மை அவங்க தொடக் கூடாது; நாம் அவங்க கிட்டப் போகக்கூடாது.
வீரமுத்து: இவங்ககிட்டப் போக வேண்டாம்; சாமிகிட்டப் போனால் என்ன? மினாட்சிக்கும் தீண்டாமை உண்டா?
நல்லாயி : சும்மா இருடா வாயாடீ; அது நம்ம வீதி!
வீரமுத்து: விதியைக் காலால் மிதி!
[விபூதி ருத்ராட்சம் தரித்த கனபாடிகள் முகத்தைச் சுளித்து],
கனபாடிகள் : டேடே. ஏபிள்ளை, தீண்டாதேபோ, அப்புறம்!
வீரமுத்து: ஏனையா கோவிலுக்குள்ளேதான் போகக் கூடாது; தெருவிலும் நாங்கள் நிற்கக் கூடாதா…?
கனபாடிகள் : போடான்னா நாயே; அதிகப் பிரசங்கி, உதை விழும்….
தல்லாயி : முத்து, பேசாதேப்பா; நாம் ஓரமாகப் போவோம்,
வீரமுத்து : அம்மா, இதே மீனாட்சி கோவிலுக்குள்ளே உன்னையும், நம்ம சனங்களையும் ஒருநாள் கூட்டிப் போகிறேன் பார்.
(வருதல் பாதிரி, பிடில் இழுத்து)
பாதிரி: லாலலல்லலலலலலா
சேசு நாதரை நம்புங்கள்
சிலுவையைக் கும்பிடுங்கள்
லலலலலலலலா
பாவிகளுக்காக..-ஆவியைத் தந்தாரே
லாலலலலலா
பரம பிதாவின் பரிசுத்தக் குமரன்
பகவான் ஏசுவை நம்புங்கள்.
அஞ்ஞானிகளே, வாருங்கள், ஞானஸ். நானம் பெறுங்கள்.
நல்லாயி: ஏனையா எங்களைப் பாவி, அஞ்ஞானி என்கிறீர். தாங்க ஒரு பாவமும் அறியோம்.
பாதிரி: ஏழையே; கல்லை கட்டையைத் தொழும் அஞ்ஞானிகளுடன் கூடாதே.
வீரமுத்து : உன் சிலுவை கட்டைதானே:; அதைக் கும்பிடச் சொல்லுகிறாயே.
நல்லாயி : சீ அப்படிச் சொல்லாதே, அது தியாகத்தின் சின்னம். நாம் எந்த மதத்தையும் இகழக் கூடாது.
பாதிரி : ஏசுதாதர் பாவத்தைத் தீர்ப்பார், படிப்புத் தீருவார், உணவு தருவார், வா என்னுடன். உன்னைத் தீண்டாதான் கோவிலுக்குள் வராதே என்கிறான். கிறிஸ்து அன்புடன் உன்னை வர வேற்கிறார். வா, வா அம்மா, வா தம்பி, சேர் எங்கள் மதத்தில்.
நல்லாயி : நான் ஏனையா உன் மதத்தில் சேருவேன்? இந்துமதம் எங்கள் மதம்; காந்தியின் மதம் இந்து மதம். அதிலேதான் இருப்போம்.
பாதிரி : போ போ, தீண்டாதே என்கிறான்.
நல்லாயி: ஐயா தீண்டாமை நாளையே ஓடிப்போகும், பிறகு இந்துக்களெல்லாம் ஒரே குலமாக வாழ்வோம்.
பாதிரி : அஞ்ஞானியே, உன்னைப் பறையன் பள்ளன் சக்கிலி என்கிறானே,
நல்லாயி : ஐயா அதெல்லாம் அந்தக் காலம், இப்போது காந்தியுகம் நடக்கிறது. இராமானுஜர் எங்களை திருக்குலத்தார் என்றார். காந்தி ஹரிஜனர் என்கிறார். எங்கள் குறை நீங்கும். மீனாட்சியை நாங்களும் தரிசிப்போம். சிவதரிசனம் செய்வோம்.
பாதிரி : மீனாட்சி, ஹஹஹ சிவம்…என்னாபேர். பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே கடவுள்
வீரமுத்து : கடவுள் பரலோகத்திலேதான் இருக்கிறாரோ. இகலோகத்தில் இல்லையோ? எங்கும் இருப்பார் கடவுள். இதயத்தில் இருப்பார் கடவுள்.
[பாதிரி பிடில் இழுத்துக் கொண்டே ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தந்து செல்லுகிறான்.]
யேசுநாதரை நம்புங்கள்
வீரமுத்து : ஏனம்மா இதுவும்சரிதானே. தம்மை இவர்கள் இழிவு செய்கிறார்களே நாம் கிறிஸ்துவராய் விட்டால் மரியாதையாயிருக்கலாமே.
நல்லாயி : அது பிசகு தம்பி, நாம் என்றும் இந்துக்கள், நாம் மதம் மாறினால் நம் நாட்டுக்கே கெடுதல். இப்படித்தான் நமது மதத்தை விட்ட கோடிக் கோடிப்பேர் நமக்கே விரோதிகளாய் விட்டார்கள். நம் வீட்டில் குப்பையிருந்தால் அதைக் கூட்டியெறியாமல் வீட்டையே விட்டுப் போவதா? தீண்டாமை நாளையே ஓடிப்போகும் ஆண்டவனை நம்பு. சிவனே, எங்கள் குறை தீர வேண்டும். உன்னாலே நாம் ஆளாக வேண் டும். இன்று கஞ்சிக் கடனைத் தீர்ப்போம். விறகு! விறகு! [போதல்]
காட்சி: 3 – கனபாடி, பட்டர், ஜயராமன்
[ஆவணி மூல வீதி. பட்டர் பாக்கு வெட்டியால் சீவல் நறுக்கிப் போட்டு, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியுண்டு மெல்லுகிறார்.]
பட்டர் : கலிகாலம், கலிகாலம்; காலம் கெட்டே போனது [புகையிலை போட்டு] கலியுகம் இப்படி போனது இந்தப் பயல் வரட்டும் சொல்றேன்.
கனபாடிகள் : (கோபமாக வத்து) திமிர் ஏறிப்போனது. தள்ளிப் போன்னா எதிர்பேசுறான். சின்னப் பயல், கைலாசபட்டரே, கேட்டீரா செய்தி! ஹரிஜன சங்கமாம், காந்தியாம், சமதர்மமாம் கோவிலுக்குள் பள்ளுப்பறை நுழைவதாம். தீண்டாமைக்குச் சாவு மணியாம் சாதி ஒழிப்பாம்.
பட்டர் : கனபாடிகளே, எல்லாம் ராமாயணத்திலும் ஸ்காந்த புராணத்திலும் எழுதி வைத்த படியே நடக்கிறது, நாமெல்லாம் திரேதா யுகத்திலிருந்து பார்க்கிறோம், கலிநாடகம் நடக்கிறது.
கனபாடி : உன் பிள்ளைதானப்பா கலிசொரூபம். என் பெண் வேதவல்லியும் அவன் போலவே பேசுகிறாள். இவளைப் படிக்க வைத்ததே பிசகு,
பட்டர் : [பொடிமட்டையைத் தட்டி உறுஞ்சி] சிவா சிவா (தும்முதல்) இந்தப் பயலுக்குக் கலியாணம்.
சுனபாடிகள் : பட்டையை இப்படித்தா! [பட்டையுடன் பொடி உறுஞ்சல்]
பட்டர் : அடபாவி, பட்டை முழுதும் மூக்கில் ஏறி விட்டதா?
கனபாடி : இதுதான் பூர்ண பூரகம், ரேசகம் வருதுபார்; அஸ்க்! இஸ்க்! இந்த வேதவல்லிக்குக் கவியாணம் இஸ்ஸ்க்! கலியாணம் உஸ்ஸ்! தை மாசம் இஸ்க்கு.
பட்டர்: சகுனமாகவில்லை ; மூன்று தும்பல் மூதேவி
கனபாடி : இரண்டு தும்மல்
பட்டர் : இரண்டு. தும்மல் இராட்சசி;
கனபாடி : ஒரே தும்மல் ஹ-ஸ்-ஸ் க்!
பட்டர் : ஒரே தும்மல்-ஆண் உதவாக் கரை; பெண் ஒடு காலி.
கனபாடி : என் பெண்ணா! உன் பிள்ளையைச் சொல்லு
பட்டர்: என் பிள்ளையா! உன் பெண்ணைச் சொல்லு. உன் பெண்ணுக்கு ஹரிஜன சங்கத்தில் என்ன வேலை?
கனபாடி: எல்லாம் உன் பிள்ளை ஜயராமன் செய்த வேலை. இவளை P.U.C. படிக்கத் தூண்டியது அவன். அவள் ஊசி, இவன் நூல்.
பட்டர் : எல்லாம் கட்டிப் போட்டால் சரியாய்ப் போகும் குடும்பம் குழந்தை குட்டி வந்தால் அடங்கிப் போகும்.
கனபாடி: நம் பிழைப்பைக் கெடுக்கிறானே! இதுவரையில் அர்ச்சனை வரும்படி நம்மது. கற்பூரத் தட்டில் விழும் சில்லறை நம்மது. மடப்பள்ளி நம்மது. நமச்சிவாய என்று விபூதிதந்தால் நாலு பணம் கிடைத்தது. இப்போது எல்லாம் சீட்டு; கணக்கு; தமிழில் மந்திரமாம், இதராளும் சொல்லலாமாம். சீர்திருத்தமாம் கோவிலில் தீண்டாதாரை விடுவதாம். அபசாரம் அபசாரம்:. இந்த அபசாரக் கும்பலுக்கு உபசாரம் செய்வது அந்த வக்கீல், அவருக்கு வலது கை உன் பிள்ளை.
பட்டர் : உன் பெண்ணுங்கூடத்தான். ஹரிஜனப் பள்ளிக்கூடத்தில் அவள் பாட்டுச் சொல்லித் தருகிறாள். இதோ அலறுகிறது பார் பாட்டு
[பின்னே மைக்கில் பாட்டு வருகிறது]
ஆண்டவன் பொதுவே
ஆலயம் பொதுவே
அனைவரும் உள்ளே வாருங்கள்
அன்புடன் ஒன்றாய்ச் சேருங்கள்!
[வருதல் ஐயராமன்]
கனபாடி: சிறிதாவது பயமிருக்கிறதா-பாரும்!
ஐயராமன் : பயப்படும் காலம் போச்சுதடா!
பாரெல்லாம் ஒரு குலம் ஆச்சுதடா!
ஜயப்பறை கொட்டிக் குதித்திடுவோம்.
ஜன சக்தி தன்னை மதித்திடுவோம்!
கனபாடி: டே ஜயராமா என்னடா பாட்டு–வீடா உறவா வேலை வெட்டியா-எதுவும் இல்லை,
ஐயராமன் : உலகம் எல்லாம் என் வீடு
உயிர்கள் எல்லாம் என் உறவு
உலகுக்கு நன்மை என் வேலை
உள்ளந்தோறும் என் சாமி
கனபாடிகள் : சரி சரி, ஏதோ கோளாறு; கைலாசம், பிடாரி கோவிலில் உடுக்கடித்து மந்திரம் போடு. இனன் மூளை நேராகட்டும்; பிறகு பெண்ணைக் கொடுப்போம்.
பட்டர்: இரும் கனபாடிகளே, என் வீதி இப்படியானது. இந்தப் பாதகனுக்கு என் அர்ச்சனைப் பணமெல்லாம் கொட்டினேன். எம்மே தேறி எருமைக்கடா ஆனான். டே ஜயராமா, ஊர் சிரிக்கிறதே! எங்கே திரிகிறாயடா! நாம் என்ன ஜாதி, என்ன குலம்!
ஜயராமன் : மனிதச் சாதி நாமெல்லாம்
மற்றொரு சாதி இல்லையடா !
புனிதக் காந்தியின் குலமே
புரிவதெல்லாம் பொது நலமே!
கனபாடி : இங்கேதான் பைத்தியம் முற்றிவிட்டது. து. அப்பா, ஏற்றத் தாழ்வில்லாமல் இப்படிப் பேசத்தான் உன் அப்பன் பாடுபட்டுப் படிக்க வைத்தானோ?
ஜயராமன் : ஏற்றத் தாழ்வைப் பேசாதே
ஏகமாய் வாழக் கூசாதே
காற்றைப் போலே கட்டற்றோம்
கலந்து வாழ முற்பட்டோம்.
Co-existence, emotional Integration என்று நேரு சொல்லுகிறாரே. தெரியுமா? தீண்டாமை இந்து சமுதாயப் பீடை என்கிறாரே காந்தி, தெரியுமா?
பட்டர் : அடமுட்டாள்! அவனெல்லாம் பணம் வைத்துக் கொண்டு பேசுறான். இங்கேயும் ஒரு வக்கீலை யர் பள்ளன், பறையன் எல்லாம் கோவிலுக்குள்ளே போக வேண்டும் என்கிறார். இன்னொரு பணக்காரர் கீழ்ச் சாதிக்குச் சோறு போட்டு, படிக்க வைத்துக் கொம்பு சீவி விடுகிறார். ஹரிஜன், காங்கிரஸ், சீர்திருத்தம், கதர், காந்தி என்பதெல்லாம் நமது ஆசாரத்திற்கு விரோதம்; இதெல்லாம் விட்டுத்தொலை. ஒரு பெண்ணைக் கட்டிக்கோ; குடித்தனம் செய்; குழந்தை குட்டி பெறு; நாலு பேர் மதிக்க நட. பணமில்லாதவன் பிணம்; வெறுங்கை முழம்போடுமா? அவர்கள் – சம்பாதித்து வைத்துக் கொண்டு சமரஸம் பேசுகிறார்கள். ஊரில் வசூலித்து, காரில் சுற்றி, ஓட்டு வாங்கி நாட்டைக் கலக்குகிறார்கள் , உன்னை யாரடா மதிப்பார்?
ஜயராமன் : அப்பா சமூக தியாகிகளை, தேசபக்தர்களை, பொது நல வீரர்களை அவ்வளவு இழிவாகவா நினைத்தாய்? தியாக சிலர்களை அலட்சியமாகப் பேசாதே: வைத்திநாதையமர் தமது வக்கீல் வரும்படியெல்லாம் ஹரிஜன முன்னேற்றத்திற்கும் தேசபக்தருக்கும் தருகிறார். சுப்பராமன் தன் செல்வத்தையே செலவிட்டு ஹரிஜனருக்குக் கல்வியும் தொழிலும், முன்னேற்றமும் தருதிறார். இருவரும் புண்ணிய புருஷர். மஹாத்மாவின் ஆசிபெற்றவர்கள்.
கனபாடிகள் : மூடுவாயை-இவர்களுக்கு என்ன வேலை? பள்ளுப் பறைகளைத் தூண்டி விடறது; கோவிலுக்குள்ளே தீண்டாச் சாதியைக் கொண்டு போறது! வைதிகரான எங்களைத் திட்டறது; மேடைமேல் வார்த்தையைக் கொட்டறது! பத்திரிகையில் பெயரைப் போடறது. இங்கு மங்கும் ஓடறது ; பேர்புகழ் தேடறது. கூட்டம் கூடறது !
ஜயராமன் : திருவாயை மூடறது! காலமறியாத கசண்டுப் பேச்சு! கனபாடிகளே, கேளுங்கள், நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள், நமது தாடு இந்தியா; இந்த நாட்டில் பிறந்தவர் இந்தியர்; இந்தியர் ஒரு குலம், ஓரினம்; நாமெல்லாம் ஒற்றுமையாக வாழவேண்டுமா? அல்லது வேற்றுமைக் ‘ந்தலாகி அழிய வேண்டுமா?
பட்டர் : ஒற்றுமை நல்லதுதானப்பா, ஆனால் 5 விரலும் வேற்றுமை தானப்பா. குரலுக்குக் குரல் வித்தியாசம் உண்டப்பா.
ஐயராமன் : விரலுக்கு வீரல் உண்டு வேற்றுமை–நல்ல
வேலை செய்தாலுண்டு ஒற்றுமை
குரலுக்குக் குரலுண்டு வேற்றுமை–பாட்டிற்
கூடிக் குழைந்திடின் ஒற்றுமை.
பட்டர் : பழத்துக்குப் பழம் வேற்றுமைதானே.மாம்பழம் ஒரு சுவை, பலாப்பழம் ஒரு சுவை, வாழை ஒரு சுவை. இதோர் அழகு, அதோர் அழகு.
ஜயராமன் : பழத்துக்குப் பழம் உண்டு வேற்றுமை
பஞ்சாமிர்தத்திலே ஒற்றுமை
அழகுக்கு அழகுண்டு வேற்றுமை
அன்புத் துடிப்பிலே ஒற்றுமை.
அப்பா, உலகில் ஒன்றைப் போல் ஒன்று இராது; மரங்கள் பல, ஆனால் தோட்டம் ஒன்று; துறைகள் பல கடல் ஒன்று; உடல்கள் பல, உயிர் ஒன்று; பான்மை பல, பசிதாகம் ஒன்று; அடிப்படையான ஒற்றுமையைக் கருதி நாமெல்லாம் ஒரு குல மாந்தராவோம்.
கணபாடி : டே ஐயராமா, வேதாத்யயனம் பண்ணி, கனம் சொல்லும் நானும் அந்த மாடறுக்கும் மாசாணமும் ஒன்றா?
பட்டர் : பிராமணோத்தமரான நாமும், சந்தி ஜபமில்லாத அந்த நீசரும் ஒன்றா? அவர்களைக் கோவிலுக்குள் விடுவதா?
ஜயராமன் ; மாட்டுத் தோல் செருப்பைப் போட்டு நடக்கிறாயே. கோவிலுக்குள் பூனை, எலி புகவில்லையா; அதைவிட மனிதன் இழிவா அப்பா! பிராமணர் எத்தனைபேர் வேதம் படித்து சந்தி ஜபம், ஓமம், செய்பவர்? முதலில் நீ ஒழுங்காக மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்கிறாயா? பிராணாயாமம் செய்கிறாயா? மந்திரம் முணு முணுக்கும் போதே மனம் சந்தைக் கடையில் சாமான் வாங்குகிறதே!
பட்டர் : நமது மனசு அடங்காவிட்டால் வேத சாஸ்திரங்கள் என்ன செய்யுமப்பா? பகவான் வால்மீகி இராமாயணத்திலே கலிகாலத்திலே இன்னது இப்படி நடக்கும் என்று சொல்லுகிறார்; வர்ணதர்மம் இருக்காது; வாயாடித் தனம் அதிகமாகும்; சாதிக்குழப்பம் வரும்; பெண்டுகள் பேசுவர்; நடத்தை கெடும்; பாபம் பெருகும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அதன்படியே நடக்கிறது.
கனபாடிகள்: சுருக்கமாகச் சொல்லு கைலாசம்; கவிதர்பார் நடக்கிறது; பெண்கள் பிரசங்கம் பண்ணறது; பதினெட்டுச் சாதியும் கலந்து சாப்படறது. அப்பனைப் பிள்ளை அடக்குறது. கண்கண்ட இடத்திலே போறது; காதல் மணம் பண்ணறது. கோவிலிலே பஞ்சமர் நுழையிறது; எல்லாம் கலிகாலக் கோலம்.
ஜயராமன் : ஐயா, காலம் முன்னேறுகிறது ; கண்கள் விழித்தன; சாதியுகத்திற்குச் சாவுமணி அடித்தோம்; சோதியுகம் புலர்ந்தது. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்; இந்துக்கள் நம்மவர்; எல்லாருக்கும் பசிதாகம், ஒன்று; உயிரன்பு ஒன்று. பஞ்சமர் என்று ஏழு கோடிப் பேர்களை தாம் சேரியில் ஒதுக்கினோம்; அன்னிய மதங்களில் புகுந்து அவர்கள் நமக்கே பகையாயினர். சேரிச் சாம்பான் டாக்டர் ஜான் ஆனால் மரியாதை செய்கிறோம். தீண்டாமை என்ற பேயால் நாம் கெட்டோம். நமது வயல் வரப்புகளில் உழைப்பவர் யார்? ஊரைச் சுத்தம் செய்பவர் யார்? அவர்களை நாய் போல நடத்துவதா கருணை? எல்லோரும் கடவுளைத் தொழத்தானே கோவில் உள்ளது; அதில் ஹரிஜன் புகுந்தால் சாமி ஓடிப்போகுமா? நந்தனார் சிதம்பரம் கோவிலுட் புகுந்தாரே, நடராஜப் பெருமான் ஓடிப் போனாரா? ஸ்ரீரங்கத்தில் திருப்பாணாழ்வார் புகுந்தாரே? அரங்கநாதர் ஓடிப் போனாரா? கனகர் உடுப்பி கோவிலிற் புகுந்தாரே ; கண்ணன் கனிவுடன் ஏற்றாரே. சங்கசாசாரியாரின் மனிஷாபஞ்சகம் உங்களுக்குத் தெரியாதா?
“யத்ரயத்ர மனோ யாதி
ப்ரஹ்மணஸ் தத்ர தர்சனம்”
பார்க்குமிடமெல்லாம் பரமன் என்று வாக்கு பொய்யா? பிராமணனுக்கு ஓருயிர்; ஹரிஜனுக்கு வேறுயிரா? இவனுக்கொரு நெஞ்சத் துடிப்பு, அவனுக்கொரு நெஞ்சத் துடிப்பா? இவனுக்கொரு கடவுள்; அவனுக்கொரு கடவுளா? கோவில் பூஜை வேதியன் செய்கிறான் ட ங்கா, டமாரம், மிருதங்கம் முழங்குவது எதனால்? அவற்றின் தோல் யார் தருவது? கோவிலைக் கட்டினவன் யார்? சிலை வடித்தவன் யார்? கோவில் நிவேதனத்திற்கு நெல் விளைத்தவன் யார்? மேளக்காரர் யார்? இவர்கள் எல்லோரும் கோவிலிற் பங்கு கொண்டவரே. கடவுள் சத்நிதிமுன் எல்லோரும் ஒன்றே.
பட்டர் : முட்டாள்! ஹும்! எம், ஏ. படித்து இப்படிப் பேசும் பிள்ளையை என்ன சொல்லுவது? கச்சேரிக்குப் போகும் மூளை சேரிக்குப் போகிறது! வேதியர் பிள்ளை சாதியை மறுக்கிறான். காலம் அப்படியானது! வம்பு வளர் கிறது. வசவு தமக்கு.
ஐயராமன் : போதும் அப்பா, நாளை காந்தி ஜயந்தி; வா, சங்கத்திற்கு, குழந்தைகள் ஆடல் பாடல் மூலம் எங்கள் பணி நலத்தை அறிவாய்.
பட்டர் : தெரியுமடா உங்கள் பணி நலம். சுற்றிச் சுற்றி முடிவென்ன? ஆசிரம தர்மத்தை ஒழிக்கிறது? சனாதன தருமத்தை அழிக்கிறது; தீண்டா தாரைக் கோவிலுக்குள் நுழைக்கிறது ; சாதி பாராது சாப்பிடுறது! இதுதான் ஆதியிலே, ஆதிகவி, வால்மீகி ராமாயணத்திலே சொன்னாரே. இன்னுமென்ன? இந்த அனாசாரத் தினாலேதான் அரிசி படி இரண்டு ரூபாயானது. ஆயுசு குறைந்தது.
ஜயராமன் : மனித சமுதாயம் ஒன்றே-அதன்
மன்னவனான மனச்சாட்சி ஒன்றே
இனிய உலகமும் ஒன்றே-உல
கெங்கும் விளங்கும் இறைவனும் ஒன்றே
எல்லோரும் இன்புற வாரீர்-நாம்
எல்லோரும் எல்லார்க்கும்
இன்புற வாழ் வோம்!
இதுதான் எங்கள் பல்லவி.
உள்ளம் ஒன்றி உலகில் வாழ்வது
கள்ளம் இன்றிக் கலந்து வாழ்வது!
பட்டர் : பள்ளத்திலே விழுந்து பாழாவது!
[உள்ளே மனைவி: அவனோடே என்ன வம்பு… அடுப்புக்கு விறகில்லை – உலைக்கு அரிசியில்லை. இங்கிதம் தெரியாத ஆண் பிள்ளைகள்…சாமான் வாங்கி வாரும்.]
இது அவள் உத்தரவு.
கனபாடிகள் : எனக்கும் விறகு வேண்டும்.
ஜயராமன் : அதோ வருகிறாள் விறகுக்காரி.
காட்சி: 4 – நாங்களும் மனிதரே
[நல்லாயி-வீரமுத்துடன் விறகு சுமந்து வருதல்]
நல்லாயி : விறகு! விறகு! வேலம் விறகு!
வீரமுத்து : நல்ல விறகு! காட்டு விறகு !
பட்டர்: ஏ விறகுக் கட்டை! விறகுக் கட்டை!
ஜயராமன்: விறகுக் கட்டையில்லை; அங்கே வருவது இரண்டு ஜீவன்கள்.
நல்லாயி : ஐயா புண்ணிய முண்டு; ஒரு விலை பேசி இறக்குங்க.
பட்டர் : விறகுக் கட்டை, நீ என்ன சாதி?
வீரமுத்து : காட்டு விறகுக் கட்டைக்குக்கூடச் சாதியா?
பட்டர் : டே, நீ தீண்டாச் சாதியா; கிட்ட வராதே, எட்டி நில்!
நல்லாயி: பட படக்கும் வெயில் ; சுமை கனக்கிறது; தலை வலிக்கிறது; தெருத்தெருவாக அலைந்து கால் கடுக்கிறது. தெய்வமே, இன்றைக்குக் கஞ்சி கிடைக்குமா? விறகுப் பணத்திற்குக் கேப்பை வாங்கி, சுள்ளி பொறுக்கிக் கஞ்சி வைத்து நாலு பேர் பசியாற-வேண்டும் … ஐயா, நல்ல விறகு-
பட்டர் : அடீ எட்டி தின்று கத்து. என்ன சாதி?
ஜயராமன் : மனிதச் சாதி அவள் பெண். அவன் ஆண். நாமும் அப்படியே —
பட்டர் : தீண்டாச் சாதி! அதோ சாக்கடை ஓரத்திலிரு. அடீ, கிட்ட வராதே …
நல்லாயி : நாங்களும் உன்னைப்போலச் சீவனையா ; நாங்க ஹரிஜனர்,
வீரமுத்து : எங்களுக்கும் தன்மானமுண்டு; கடவுளுண்டு. கருணையுண்டு. ஏன் பாயிறீர்; தள்ளித்தானே நிற்கிறோம்.
பட்டர் : அட சுண்டைக்காய் பயலே – காங்கிரஸ்காரன் கற்றுக் கொடுத்தானோ? திமிராகப் பேசுகிறாய் – அங்கிருந்து பேசு, காசை வீசுகிறேன். என்ன விலை?
நல்லாயி : விதி, விதி! கதியுண்டோ கடவுளே! ஐயா, நல்ல விறகு – ஒரு ரூபா.
பட்டர் : அரை ரூபா.
கனபாடிகள் : கால் ரூபா.
வீரமுத்து : அநியாயம் வேண்டாமையா. வேகாத வெய்யிலிலே விறகு சுமந்து வந்தோம். இரக்க மில்லையா?
பட்டர் : சரி தொலை – முக்கால் ரூபா.
நல்லாயி : கூட நாலணாத்தானே ஐயா – ஏழை; இதை விற்று இந்தக் குடும்பம் பிழைக்க வேண்டும். ஒரு ரூபா உங்களுக்குப் பெரிதா – ஐயா – சரியான விலையே சொல்லுகிறேன்.
பட்டர் : முடியாது இரண்டணா குறை, தர இரண்டணா. இந்தா ஒரு ரூபா. (வீசி எறிதல்; அது சாக் கடையில் விழுகிறது.)
ஜயராமன் : என்னப்பா அநியாயம் ! காட்டில் விறகுவெட்டி, இவ்வளவு தூரம் நீ நடந்துவந்தால் இப்படிச் செய்வாயா? சை, சை, என்ன கல்மனம் | நல்லாயி, இரு ; நான் எடுத்துத் தருகிறேன். (எடுத்துத் தருதல்)
பட்டர் : சை, சை, சை, .. பிருஷ்டாள் … கிட்டப் போகாதே… இரண்டணாவை அப்படி வைத்து ஓடடீ … கழுவி எடுக்கிறேன். தண்ணீர் கொண்டுவாடா ஜயராமா…
ஜயராமன் : அப்பா, மனிதனை மனிதன் இப்படி நடத்தக் கூடாது. காலம் மாறியது.
பட்டர் : சீ சீ, போடா அந்தப்புறம்… தீண்டாதே! கிண்டாதே! (காசை கழுவுதல்)
வீரமுத்து : ஏய்யா நாங்க தந்த காசைக் கழுவி எடுக்கிறீங்களே – நாங்க போட்ட விறகையும் கழுவி எடுங்களேன் – விறகுமேலே விறிங்கள் தண்ணீர்!
ஜயராமன் : ஹஹஹ – சபாஷ் பயலே, (கிட்டச் சென்று தட்டிக்கொடுத்து) அப்பா, இந்தப் பையன் அழகாகப் பேசுகிறான்.
கனபாடிகள் : ஐயையோ, ஐயையோ – அவனை ஏனப்பா தொட்டாய் – போ சங்கற்பம் சொல்லி முழுகு – பூணூலை மாற்று; காயத்திரி ஜபி.
ஜயராமன் : கனபாடிகளே, இந்த ஏழைக் குழந்தையைத் தொட்டதற்காகவா? இந்தக் குழந்தையிடம் அன்பு பாராட்டியதற்காகவா? அன்பிற்கா தண்டனை? கனபாடிகளே, இதுகாறும் ஹரி ஜன சகோதரர்களைக் கிட்டவராமல் ஒதுக்கிய பாபத்திற்காக நீரே மனம் வருந்திப் பரிகாரம் செய்ய வேண்டும். நல்லாயி, இந்தப் பையன் படிக்கிறானா?
நீல்லாயி : படிக்கத்தான் துடிக்கிறான் – பள்ளிக்கூடத்துள்ளே வராதே என்று அங்கே ஒருவன் அடிக்கிறான் – படிப்பிலும் தீண்டாமை புகுந்து விட்டது…
வீரமுத்து : ஐயா நீங்க நல்லவர்; நானும் எட்டு வருசமாகப் பார்க்கிறேன்; எங்களை இவங்க படுத்தும் பாடு படுமோசம். பார்ப்பனர் மட்டுமா? மற்றச் சாதிகளும் எங்களைத் தீட்டுப் பண்டமாக்கி விட்டனர். சாதி எப்போது ஒழியுமோ!
பட்டர் : அதிகப்பிரசங்கி – போதும் பேச்சு … தூக்குடா விறகை, ஜயராமா, வெய்யில் கொளுத்துகிறது, மிதியடி போட்டு வருகிறேன். (மிதியடி போட்டு நடக்கிறார், தடுக்கி விழுகிறார், மிதியடி பிய்ந்து போகிறது.) ஐயையோ – காயம்! ஐயையோ மிதியடி விண்டுபோனது – சக்கிலிகிட்டத் தர வேண்டும்.
வீரமுத்து : மிதியடி தைக்கும் எங்களுக்கு மிதியும் அடியுமே மிச்சம். இப்போது யார் உமது மிதியடியைப் பழுது பார்ப்பது? தாரும் இங்கே –
கனபாடி : அது உன் வேலை. தோல் வேலை – உன் சுதர்மம்.
வீரமுத்து : நாங்கள் எங்கள் சுதர்மத்தைச் செய்கிறோம். தீங்கள் உங்கள் சுதர்மத்தைச் செய்கிறீர்கள். எங்களை இழிவு செய்வதேன்?
பட்டர் : நீங்கள் தீண்டாப் பிள்ளை …
வீரமுத்து : (பாடி ஆடுகிறான்)
யாரை தீர் தீண்டாதார் என்கிறீர்!
எவரை நீர் இழிவாகப் பேசுறீர்!
ஊரைக்கூட்டிச் சுத்தம் செய்யும் எம்மையா?
உயிரைக்காக்கும் பயிரைக்காக்கும்
எம்மையா?
பாட்டாளி மக்களான எம்மையா?
பகலவிரவாய்ப் பாடுபடும் எம்மையா?
கூட்டாளி மக்களான எம்மையா?
கூசாது தள்ளிப்போ என்னுவீர்!
தோலுரித்துச் செருப்புத்தைத்துத் தருகிறோம்
ஜோராகக் கிறிச்சுநடை போடுறீர்
வேலிகட்டித் தோட்டம்போட்டுத் தருகிறோம்
வெய்யிலுக்கு இளநீர் வெட்டிக்
கொடுக்கிறோம்
கண்வீழித்துக் காவல்காக்கும் வீரர்நாம்
கஞ்சியுண்டு நாய்க்குடிலில் வாழ்கிறோம்
மண்ணிலத்தில் பொன்விளைக்கும் மன்னர் நாம்
மனிதரென்றே மதியாது பேசுறீர்.
பட்டர் : அட விசுக்கான்! எங்கே கற்றாய் இந்தப் பாட்டை! டட கிட்டவராதே – ஆட்டம் போதும்,
ஐயராமன் : மெய்தானே அப்பா, இதெல்லாம் அன்புச்சாமி பாட்டு, ரேடியோவில் வருகிறதே, கேட்டதில்லையா? வீரமுத்து, நீ அறிவாளி; ஹரிஜன சங்கம் நடத்தும் பள்ளிக்கூடத்தில் படி.
நல்லாயி : ஐயா, இவன் நாலாள் வேலை செய்கிறான். இவன் வேலைசெய்து பிழைப்பு நடக்கிறது.
ஜயராமன் : நல்லாயி, பிள்ள படிக்கட்டும். உனக்கும் சங்கத்தில் வேலை தருகிறோம்.
நல்லாயி : என் புருஷன், தோட்டவேலை பார்ப்பார்.
ஐயராமன் : எங்கள் தோட்டத்தைக் கவனிக்கட்டும்.
கனபாடிகள் : இப்படி நமக்குச் சொல்லுகிறவர் இல்லையே…அப்பா, எனக்கும் ஒரு வேலை தாயேன்…
ஜயராமன் : என்ன வேலை செய்வீர் ?
கனபாடிகள் : கோவிலில் மணியடிப்பேன்; பஞ்சாங்கம் பார்ப்பேன்.
ஜயராமன் : கனபாடிகளே, காலம் மாறிப்போனது. உழைப்பவனுக்கே உணவு. மணியாட்டும் ; மந்திரம் போடும்; ஆனால் வயிற்றுக்கு உழைத்தே தீர வேண்டும். உமக்கு ஒரு செய் நிலம் தருகிறோம்; காய்கறித் தோட்டம் போடுமே! பஞ்சு தருகிறோம்; நூல் நூற்றுத் தாருமே! சக்தியுள்ளது; கோதுமை உடையுமே! உடல் உழைப்பு வேண்டும், உலகம் உழைப்பகம்!
வீரமுத்து : அப்படிச் சொல்லுங்க ஐயா! எங்களைப்போலே நீங்களும் பாடுபடவேண்டும்.
கனபாடிகள் : நான் என்ன ஜாதி! இவன் என்ன ஜாதி! டே பயலே–போடா சேரிக்கு…
வீரமுத்து: ஐயா, நானும் மனித ஜாதி! நீரும் மனித ஜாதி! உள்ளே நானும் ஜோதி; நீரும் ஜோதி.
கனபாடி: அதிகப் பிரசங்கி; கோவில் பக்கம் வா, சொல்லுகிறேன்…
வீரமுத்து : ஐயா, நாங்க கோவிலுக்குள் வந்து மீனாட்சியம்மன் முன்னே நின்று கும்பிடும் காலம் இதோ வந்தது.
கனபாடி: இவர்களுக்கு படிப்பு வேறே; பள்ளிக்கூடம் வேறே.
வீரமுத்து : ஐயா நான் படித்து முன்னேறி உங்கள் வீட்டுக்குள் வந்து கைபார்க்கப் போகிறேன் – ஒருநாள்…
நல்லாயி: முத்து, திமிராகப் பேசாதே, வா… போவோம்.
ஜயராமன் : நல்லாயி, நாளை வா சங்கத்திற்கு, காந்தி பிறந்த நாள் — நல்ல நாள்.
கனபாடி : கைலாசம், உன் பிள்ளையைக் கண்டி.
பட்டர் : உன் பெண்ணைக் கண்டி. இதோ, இவன் கிளம்பிவிட்டான்…
(வேதவல்வி தெருக்கோடியிலிருந்து ஜயராமனைப் பார்த்துச் சிரிக்கிறாள்.)
கனபாடி: அதோ அவளும் கிளம்பிவிட்டாள் – இரு…காலை ஒடித்துவிடுகிறேன்.
(தொந்தியைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்.)
காட்சி: 5 – வேதவல்லி, கனபாடி
(வேதவல்லி P.U.C. புதுப்பண்பாட்டினள். படித்தவள்; காந்திபக்தை, இனிய பாடகி, ஹரிஜன சங்கத்தில் குழந்தைகளுக்கு ஆடல் பாடல் சொல்லித்தருபவள். தந்தை கனபாடிகளுக்கு விந்தையான விடை தருபவள் – ஜயராமன் காதலி, வேதவல்லி அழகான புடவை கட்டி, மலர் முடித்து, மஞ்சள் குங்குவமிட்ட மங்கல முசுத்துடன் மலர் நகை குலுங்க, ஒரு பையுடன் வெளி வருகிறாள்.)
கனபாடி : ஹே ஹே! வேகம் எங்கே போகிறது?
வேதம் : வேதம் ஓதுவோரிடம் போகிறது!
கனபாடி: காலை நறுக்கிவிடுவேன்; போ வீட்டுக்குள்ளே. அந்தப் பயலுடன் என்ன உறவு?
வேதம் : பயலுடன் இல்லை. புயலுடன் – சமூகப் புயலுடன் மோதுவது எங்கள் வேலை…
கனபாடி : என்ன புயல்! இங்கே என்னைப் பார்த்துப் பேசு…வைதிகன் வீட்டுப்பெண் – இப்படி-?
வேதம் : எப்படி அப்பா? வைதிகம் என்றால் என்ன?
கனபாடி : மடி ஆசாரம், எச்சல், தீண்டல் சாதி பார்த்து நடப்பது. தீண்டத்தகாதவரைத் தீண்டா திருப்பது.
வேதம் : ஆசாரம் எங்களுக்கும் உண்டு.
“அன்பாயிருப்பதே ஆசாரம்
அறிவாய் நடப்பதே ஆசாரம்
பண்பாடாவதே ஆசாரம்
பழுதறு நடையே ஆசாரம்.”
கனபாடி : சரி, நீயும் ஜயராமனானாய் – அதிகப் பிரசங்கி, நாக்கை அறுப்பேன் பேசினால். பெண்கள் பேசலாமா? வீட்டைலிட்டு வெளியே வரலாமர? குனிந்த தலை நிமிரலாமா? குரலைத் திறக்கலாமா? பாடலாமா? ஆடலாமா? மேடையேற லாமா? உன் வயசென்ன? காரியமென்ன? தை பிறந்தால் கவியாணம்.
வேதம் : தினம் இந்த வாய்பாடுதான் ஒப்பிக்கிறாய் – அப்பா. காலம் மாறிப்போனது, பெண்ணென்றால் பொம்மையில்லை, வீட்டுக் கைதியில்லை. அடிமைத் தாதியில்லை, எங்கள் கண்ணைக்கட்டி அடிமை செய்த காலம் போய்விட்டது.
கண்கள் விழித்தெழுந்தோம் — மூடக்
கட்டைப் பிளந்தெறிந்தோம்
பெண்கள் தலை நிமிர்ந்தோம் — அஞ்சும்
பேதமை ஏதினிமேல்?
கனபாடி : சரி, சரி, அந்தப் பயல் போட்ட தூபம்! உன் னைப் படிக்கவைத்ததே பிசகு – படிப்பே கூடாது. அதிலும் இந்தக் கோணல் எழுத்து கிட்ட வரக்கூடாது. என்ன துணிச்சல், என்ன துணிச்சல் – பயமே இல்லை.
வேதம் : அப்பா, வேதம் பயப்படச்சொல்லியிருக்கிறதா- அடிமைப்படச் சொல்லியிருக்கிறதா-?
“கோழைத்தனம் விடுத்தோம் — வீரக்
கோபுரம் போலுயர்ந்தோம்
ஏழையர் யாரினிமேல் — ஏமாற்றும்
எத்தர்கள் யாரினிமேல்?””
கனபாடி: அப்புறம் — மிச்சத்தையும் பாடு…
வேதம் : “கற்றுக் கலை வளர்ப்போம் — நாங்கள்
காதல் மணம் புரிவோம்.”
கனபாடி: ஹும் — காரியம் மிஞ்சிப்போனது — விபரீதம் விபரீதம் – இந்தக் காதல் கலியின் தர்பார் காதலியே..அப்புறம்?
வேதம் : “ஒற்றுமை கொண்டுயர்வோம் — இந்த
உலகக் கோவிலிலே…”
கனபாடி : உலகம் கோவிலாம்; மீனாட்சி இருப்பது கோவில் இல்லையா?
வேதம் : உலகக் கோவிலில் எல்லாரும் வணங்கலாம் ; எப்போதும் வணங்கலாம். ஆகாயம், நட்சத் திரம், சூரியன், சந்திரன், காற்று, வெளிச்சம், மழை எல்லாம் வானக் கோவிலிலிருந்து வருவன. நீங்கள் மணியாட்டும் கோவிலில் எல்லாரும் புக முடியாதே, சாதி, மதம், சாத்திரம், கோத்திரம், சாம்பல், நாமம் – இன்னும் எத்தனையோ பேதம் உண்டே! பழமையின் கொடுமை ஒழிய வேண்டும்.
கனபாடி : பழைய சம்பிரதாயங்களை ஒழிக்க நீ யார்? இத்த இழவுக்குத்தான் மூலையும் முக்காடுமாகப் பெண்ணுக்குக் கட்டுப்பாடு விதித்தது பழைய சட்டம் –
வேதம் : வஞ்சப் பழங்கொடுமை — எங்கள்
வாழ்வை யழிக்காமல்
மஞ்சளும் குங்குமமும் — புது
மலருமா யிருப்போம்.
மானிட வாழ்வினுக்கே – பெண்மை
மங்கல சக்தியன்றோ?
ஏனினி வேற்றுமைகள் — கதிர்
இன்றி இரவியுண்டோ?
கனபாடி : உன் மனம் போனபடி நடப்பாயா? வீட்டில் அடங்கிக் கிடப்பாயா? உன்னை விலங்குபோட்டு வைக்கிறேன். போடி உள்ளே – வயது பதி ணெட்டு – இழவெடுத்த சாரதா சட்டமில்லா விட்டால் ஆறு வயசிலேயே அத்தான் வந்திருப் பான். இதற்குள் இரண்டு பிள்ளை பெற்றிருப் பாய்.
வேதம் : வீர வுறுதி கொண்டோம். பழம்
விலங்கை முறித்தெறிந்தோம்
பாரினையாளுகின்றோம் — ஓம்
பராசக்தி பெண்மை என்றோம்,
(சலங்கை குலுங்கச் -செல்லல்)
கனபாடி: இனி வீட்டுக்கு வராதே — அப்படியே போ..
வேதம் : காத்தித் திருநாள் — நீயும் வா…
கனபாடி : என்ன காந்தி! என்ன காங்கிரஸ்! என்ன தேசம் ! என்ன பாசம் -. படுமோசம் காந்தித் திருநாளாம் — ஏன்ன நடக்கிறது — பார்த்து வற்து தலை முழுகுவேன்.
வேதசாரம் போச்சே .
வேதியர் மகிமை போச்சே.
சாதியும் போச்சே சமயமும் போச்சே
சமரசமே எங்கும் பேச்சே! (போதல்)
– தொடரும்…
– ஹரிஜன் (எல்லாரும் ஓர் குளம் என்ற உணர்ச்சியைத் தூண்டும் சிறந்த சமயோக நாடகம்), இயற்றியவர்: கவியோகி சுத்தானந்த பாரதியார், முதற் பதிப்பு:1966, தமிழ்நாடு ஹரிஜன சேவக் சங்கம், சென்னை.