வைராக்கியம்




(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவன் மேனியெங்கும் வெடவெடத்தது.

உடம்பு பதறவும், உணர்ச்சி தகிக்கவும் அவன் நிலை தடுமாறிப் போனான். நிலையிலிருந்தும் அவன் தடுமாறிப் போனவன் தான்.
அந்த இடத்தைப் பார்க்கும்போதெல்லாம், பார்க்க கூடாதென்று நினைத்துக் கொண்டாலும் தொழில் புரிகிற வேலைத் தளமாக அமைந்து விட்ட காரணத்தால், போகும் போதும் வரும்போதும் கண்ணில் பட்டுப் பட்டு அவன் மனச் சாட்சியைக் குத்திக் கிளறி சித்திரவதை பண்ணுகிறதை அவனால் தடுக்க முடியவில்லை.
மூன்று அடுக்கு மாடியுடன் அந்த தொழிற்சாலைதான் எத்தனை கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
தேயிலைக் கொழுந்தை உலர்த்தி பக்குவப்படுத்த வாகு வாய் நீண்டு படுத்த குன்றின் மீது உயரமாக எழுப்பப்பட் டிருக்கிறது அத்தொழிற்சாலை. வீசும் காற்றின் வேகத்தி லேயே உலர்த்தும் வேலையைச் சுளுவாக்க வேண்டி ஐந்தடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட கண்ணாடியன்னல்கள் அதன் அழகை அதிகப்படுத்துகின்றன.
அதன் அழகும் கம்பீரமும் எவரது இரசனையையும் தட்டி எழுப்பிவிடும் சக்தி வாய்ந்தன. ஆனால், அவனைப் பொறுத்தமட்டில் அந்த அழகும் கம்பீரமும் அவன் அடி மனதில் சலனத்தை ஏற்படுத்தும் சக்தியை இழந்து விட்டிருந்தன.
அவன் மேனி கூனிக் குறுகியது. அவன் மனம் பயத் தால் நடுங்கியது. அவன் எத்தனை அற்பமானவனாகி விட்டான்? அவன் நண்பர்கள் அவனை எப்படி வழிதவறச் செய்து விட்டனர்?
மீண்டும் அதே தவறை செய்வதா? மருதமுத்து மனம் குழம்பிப் போனான்.
அவன் பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியவன். அவன் சமையலை சாப்பிடுவதற்கென்றே அவனை மணம் முடித்துப் போயிருப்பார்கள். அவன் கை வண்ணம் அவ்வளவு நேர்த்தியானது.
அவன் சமைப்பதை சாப்பிட பழகிப் போனவர்களுக்கு பிரமச்சாரிய வாழ்க்கையில் பிடிப்புத் தோன்றத்தான் செய்யும்.
அவனொருவன் இருந்ததும் நல்லதாய்ப் போய்விட்டது. அல்லாவிட்டால் நகரிலிருந்து ஆறு மைல்களுக்கு அப்பால் அமைந்துவிட்ட நாகரீகம் பரவாத அந்த நாட்டு மூலையில், நகர்ப்புற வாழ்க்கையில் ஊறித் திளைத்து மயங்கிய இளை ஞர்கள் யாரேனும் தொழில் செய்ய வருவார்களா? வந்தா லும் தொடர்ந்து இருப்பார்களா?
பொன்னுத்துரையும் சொல்லாமல் போயிருப்பார். நல்ல வேளையாய் மருதமுத்து இருந்து காப்பாற்றினான்.
வேளாவேளைக்குச் சாப்பாடு இல்லை. நேரகாலத்தோடு நித்திரையில்லை. அயர்ந்து தூங்கும் அர்த்த ராத்திரியில் ரண்டு மணியோ மூன்று மணியோ “அயிரிச்சி, வேலையை தொடங்கலாங்கைய்யா’ என்று குரலெழுப்பும் வாட்ட காரன் என்ற இத்தனை இன்னல்களையும் எண்ணி மலைக்க. பொன்னுத்துரை மறந்து போனதற்கு காரணமே மருதமுத்து தான்.
நாகரீக சமுதாயத்தின் காற்றுவீசாத அந்த முடங்கிப் போன மூலையிலும் கூட, தொழிலாளர்களை வயப்படுத்தி வேலை வாங்க அவருக்குச் சிரமமாயிருந்தது. அதுதான் அவருக்கு மலைப்பைத் தந்தது.
எட்டி நடந்தால் பட்டணம் என்று நகருக்கருகே அமைந்து விட்ட பகுதிகளில் வாழுகிற தொழிலாளர்கள் நகரில் நடக்கும் எந்த ஒரு பொதுக் கூட்டமானாலும் போய்க் கலந்து கொண்டு, தோட்டத்திற்கு திரும்பி வந்தவுடன் கூட்டத்தில் சொன்ன எதையோ ஒன்றை ஏதோ ஒன்றாக விளங்கிக் கொண்டு தாங்களும் குழம்பி சக தொழிலாளர் களையும் குழப்பி தங்கள் சமூகத்தையே கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருப்பதை அவர் வருத்தத்தோடு கவனித்து வைத்திருக்கின்றார்.
வர்க்கம் என்றும் வகுப்பு என்றும் பாகுபடுத்தி அந்த உழைக்கும் உயிர்களைப் பிரித்து வைக்கும் எந்த சக்தியையுமே அவருக்கு பிடித்திருக்காது.
தார்மீக சிந்தனையும், மனிதாபிமானமும் வேரோடாத வரை, அந்த மக்களுடைய வாழ்வில் விடிவு வரப் போவ தில்லை. விடியாவிட்டால் வெளிச்சம் ஏது?
இருட்டில் என்ன செய்கிறோம் என்ற அறிவும் எப்படிச் செய்கிறோம் என்ற நிதானமும் இல்லாமல் தட்டுத்தடுமாறி, முட்டிமோதி விழுந்து கொண்டும் – விழித்துக் கொண்டும் தவிக்கிற அந்த மக்களின் உணர்ச்சிகளில் தாம் எப்படி விஷம் கலக்கப்பட்டிருக்கிறது?
அவர் பயந்தே போனார்.
அவர் அங்கு வந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகி விட்டது. அவருக்கு முன்பு அங்கு உதவி டீமேக்கராக இருந்த சில்வா, இரவு நேரத்தில் தொழிலாளர்கள் இலை தட்டுவதை மேற்பார்வை செய்யப் போனபோது தொழிற்சாலையின் மேல் மாடியிலிருந்து யன்னல் வழியாக தவறி தலைகுப்புற கீழே விழுந்து இறந்து போனதால் ஏற்பட்ட வெற்றிடத்தை அவர் அடைத்துக் கொண்டார்.
அங்கு வந்த நாள்முதலாக அவரும் அந்தச் சம்பவங் குறித்து யார்யாரோ எப்படியெல்லாமோ கதைத்திருக்கிறதை கேள்விப்பட்டிருக்கிறார். ஆத்திரம் மேலிடும்போது “போன அய்யா போனப் பாதையிலத்தான் நீங்களும் போகப் போறீங்க” என்று எத்தனையோ தொழிலாளர்கள் அவர்களிடமே பொரிந்து விழுந்திருக்கின்றனர்.
புலியை நினைத்துக் கொண்டு பூனைக்கு பயப்படும் மனித சுபாவத்தை எண்ணிச் சிரித்துக் கொள்ளும் அவர், அதையெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால், நேற்று-
ஆள்விட்டனுப்பியும் அவன் வர மறுத்துவிட்டான். அவனை நம்பியிருந்திருந்தால் அவர் அவனை அடித்தே கொன்று இருப்பான்.
அவருக்கு அப்படி ஆத்திரம் பிறப்பது எதனால்?
அவர் அவனிடம் வைத்திருந்த நம்பிக்கையினாலா? அந்த நம்பிக்கை இன்று பொய்யாகிவிட்டதே என்ற ஏமாற் றத்தினாலா? ஆத்திரம் என்பது பொய்யாகிவிட்ட நம்பிக்கை தானா?
அவரை தொழிலாளர்களுக்குப் பிடிப்பதில்லை. காருண்ய மற்ற அவரது அதிகாரமும், தாட்சண்யமற்ற அவரது பரிகா ரங்களும் அவரிடம் அவர்களுக்கு வெறுப்பையே தந்தன.
“மனுஷன் பிசுநாறி, போயி தொலைஞ்சாத்தான் நமக்கு விமோசனம்” என்று அவர்கள் பேசிக் கொள்வதை அவரே கேட்டிருக்கிறார்.
கண்டும் காணாமலும் கதைத்தவர்கள் தன்னெதிரிலேயே கண்ணைக் காட்டவும் காதை கடிக்கவும் ஆரம்பித்தபோது, தன்னில் பொறிக்கனலாக புறப்பட்டிருக்கிற உணர்வை புதைத்து வைக்க அவருக்கே சிரமமாயிருந்தது.
அவருக்கு அப்படியென்றால் அவனுக்கு…!
மருதமுத்துவின் நிலைமை தர்மசங்கடமாகி விட்டது. இரு தலைக்கொள்ளி எறும்பு போலானது அவனது நிலைமை.
ஒருசேர உடல் வருத்தி பாடுபடும் பட்டாளி வர்க்கத்தைச் சார்ந்தவன் அவன். முரட்டுத் துணிச்சலும் முறுக்கேறிய பிடிவாதமும் அவனுக்கு இயல்பாயமைந்திருந்தன. என்றா லும், அவருக்கு வீட்டில் உதவியாய் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டு, அந்த பழக்கத்தாலேயே அவரது மனிதாபிமானத்தையும், மனிதர்களிடம் வைத்திருக்கும் பரிவையையும் புரிந்துகொள்ளவும், புரிந்து பலன் பெறவும் அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.
சில்வாவைவிட இவரை அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தப் பிடிப்பே அவனை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டிருந்தது.
அவரிடம் நெஞ்சைத் தொடுகிற அன்பு இருந்தது. அவன் இமையோரத்தில் விழிநீரைத் திரட்டுவிக்கும் தாட்சண்யம் நிறைந்த செயல்களை அவர் செய்திருக் கின்றார்; அவனை கேட்காமலேயே அவனது நிலைதெரிந்து உணவென்றும் உடையென்றும் காசென்றும் அவர் அள்ளித் தருகின்றார்.
அவரிடம் சுரந்து வழிகிற மனிதாபிமானத்தைக் காட்ட அவை போதாதா?
ஆனால், வேலைத்தளத்தில் தொழிலாளர்களை கசக்கி, அவர்கள் சக்தியின் முழுப்பயனையும் வெளிப்படுத்தாமல் விடமாட்டார். இரண்டையும் ஒருசேர அனுபவித்து, தொழிற் சாலையில் கண்டிப்பான டீமேக்கர் சுந்தரேசனாகவும், வெளி இடங்களில் இலக்கிய மனம் படைத்த சாதாரண மனிதராக வும் அவரைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு மருதமுத்து ஒருவனுக்குத்தானே கிடைத்தது?
அவனே இன்று அவருக்கு மாறாக நடக்கத் துணிகை யில் அவரது ஆத்திரத்தையும் — கண்டிப்பையும் – கட்டளை யையும் மாத்திரமே கண்டு பழகியவர்களுக்கு அவரை என்ன செய்யத் தோன்றாது?
அவரது உயிரை முடித்துவிடத் தீர்மானித்தனர். அந்த முடிவு ஒன்றும் அவர்களுக்குப் புதிய தல்ல. அவருக்கு முன்பே, சில்வா டீமேக்கரை தொழிற்சாலையின் உச்சியிலிருந்து யன் னல் வழியாக வெளியே தள்ளி,யாருக்கும் எளிதில் சந்தேகம் எழாதவாறு தங்கள் எண்ணத்தைச் செயல்படுத்தியது. அவர் களுக்கு பழக்கமாயிருக்கிறது உண்மையில் ஆரம்பத்தில் அந்த பழக்கத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததே மருத முத்துதான். அதே மருதமுத்துதான் இப்போது அது தவறானது என்று அடித்துப் பேசுகிறான்.
“நமக்குப் பிடிக்காம போற ஒவ்வொருத்தரையும் நாம இப்படி கொன்றுகிட்டுத்தானிருக்கணுமா?”
“இப்படி கொல்ல பிடிக்கலேனா, சோத்தில் நஞ்சை போட்டு கொன்னுடு. அது இதைவிட லேசுதான்” அவனிடம் தர்க்கித்து சினம் மிகுந்த ஒருவன் குறுக்கிட்டான்.
“நம்மை அறியாமலேயே முதல் ஒரு தரம் குற்றம் செஞ்சிருக்கிறோம். எங்கே வெளிபட்டுவிடுமோ என்று பயந்து செத்துக்கொண்டிருக்கும்போதே இன்னொருக்காக வும் அதே குற்றத்தைச் செய்ய பிடிவாதம் பிடிக்கிறீங்க. எனக்கென்னவோ சரியென்று படவில்லை”. மருதமுத்து விளக்கினான்.
”அப்படினா என்னத்தான் செய்யனுங்கிற நீ.”
“ஒங்க பேச்சுக்கு கட்டுபட்டு என்னை அறியாமலே எங்கே நாம் பேசுவதை அவரிடம் வாய்தவறி சொல்லி விடுவேனோ என்று பயந்து இரண்டு நாட்களாக அவர் வீட்டுப் பக்கமே போகல. தொழில் விஷயத்தில் ஆயிரம் குறைகளிலிருந்தாலும் அவர் நல்ல மனுஷர். என்மேல் இப்போது எத்தனை ஆத்திரமாக இருப்பார்னு எனக்குத் தெரியுது.”
“இருந்துட்டு போகட்டுமே, நல்லதுதான். நாம் நெனச்சதைச் செய்ய அது மிச்சம் சுளுவாயிடும்!”
மருதமுத்துவுக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. அவனுக்குத் தெரிந்த நியாயமெல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டான். ”அவனுக்கு அவர் உதவியிருக்கிறார். அதனால், அவன் அவருக்குச் சார்பாக பேசுகிறான்’ என்று அவர்கள் அத்தனை பேருமே அவனைக் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் செய்வது சரியாயிருக்குமோ என்று அவனுக்கே ஐயம் ஏற்பட்டது, அவன் வாயை மூடிக் கொண்டான்.
இரவு நேரத்தில் வேலையைத் தொடங்க சுந்தரேசன் வருவார், மேல்மெத்தையிலிருந்து. சில்வா டீமேக்கரைத் தள்ளிவிட்டதைப் போல அவரையும் தள்ளி ஆளைத் தீர்த்து விட தீர்மானித்து விட்டனர்.
மருதமுத்துவால் இருப்புக் கொள்ள முடியவில்லை. என்ன செய்யவென்று அவனால் முடிவெடுக்க முடியவில்லை.
அவர்களோடு சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்டுவதா? அவர்கள் செய்ய நினைப்பதை அவரிடம் கூறி எச்சரிப்பதா?
அவன் குழம்பிப் போனான்.
கையால் எட்டித் தொடும் அளவுக்கு, அருகில் யாரும் நின்றால் மாத்திரமே அடையாளம் காணக்கூடிய அளவுக்கு இருள் திரை விரித்திருந்தது.
கதவு தட்டும் சத்தம் கேட்டு சுந்தரேசன் வெளியே வந்தார். மருதமுத்து நின்று கொண்டிருந்தான். அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அவனை அதற்குமுன் பார்த்ததில்லை – அவனை நினைக்கையில் அவருக்குப் பாவமாயிருந்தது.
அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்றவர், நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டே அவனைப் பார்த்தார். ‘அவன் உணர்ச்சி களை இழுத்தெடுக்கும் பாவனையில்.
அவன் அவரை பார்த்தால் தானே!
“மருதமுத்து நேற்று ஏன் வரவில்லை?”
அவன் மௌனம் கலையவில்லை.
“இப்ப ஏன் வந்திருக்கிறன்னாவது சொல்லேன்” சற்றுத்தாமதித்து மீண்டும் அவரே பேசினார். அவனோ இன்னும் வாய் திறக்கவில்லை.
“சரி,சில்வா டீமேக்கர் எப்படிச் செத்தாருன்னாவது சொல்லேன்.”
அவனுக்குச் ‘சொரேர்’ என்றது. அவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான். அவரது கேள்வியின் அர்த்தம் என்ன? அவருக்கு விஷயம் தெரிந்துவிட்டதா?
சுந்தரேசன் புன்னகைத்தார்.
“மருதமுத்து நேற்று நீ ஏன் வராமலிருந்த, இன்னைக்கு இரவு என்ன செய்யனும்னு உங்க கூட்டாளிகள் நினைச்சிக் கிட்டிருக்காங்க என்று எனக்கு நல்லாத் தெரியும். உன்மேல் எனக்கு ஒன்னும் கோபமில்லை. இப்பகூட இது’ வரைக்கும் எதுவும் வெளிப்படுத்தாம நின்னியே அதில எனக்கு ஒரு விஷயத்தில் சந்தோஷம்தான்” அவர் சற்றே நிறுத்தினார்.
”ஐயா”. அவன் அலறினான் அந்த அறையே அதிருமாப்போல!
“பதறாத. உன்வரைக்கும் நீ சரியாகத்தான் நடந் திருக்க. உண்மையில் அப்படி நடந்து கொண்டதற்காக உன்னைப் பாராட்னும்னு கூடத் தோனுது! வகுப்பு வர்க்கம் என்று சொல்லி அணிவகிக்க இப்படி உறுதி தேவைதான். ஆனா, மனுஷ உணர்ச்சிகளை மதிக்காம துரோகம் செஞ்சு புட்டோம்னு நீ உனக்குள்ளாகவே தவித்துக் கொண்டிருக் கையிலேயே எனக்கு இதெல்லாம் எப்படித் தெரியவந்தது…”
அவன் அவரை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந் தான், இவ்வளவு தெரிந்த மனிதரா இத்தனை அமைதியாக இருக்கிறாரென்று!
“ஒரு அரைமணி நேரத்துக்கு முன்பு நீ இங்கு வந் திருந்தா இதெல்லாவற்றையும் எனக்குச் சொல்லிக் கொண் டிருந்த உன் கூட்டாளியை நேரிலேயே பார்த்திருக்கலாம்”
மருதமுத்துவின் கண்கள் வெறிக்கத் தொடங்கின: அவன் முகம் கறுக்கத் தொடங்கிற்று.
“மருதமுத்து… இதெல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவன் என்ன கேட்டான் தெரியுமா? ‘ஐயா சாப்பாட்டுக்கு என்ன செய்யுறீங்க- மருதமுத்து வரலிங்களா?’ என்று. அது வரைக்கும் உறங்கிக் கொண்டிருந்த என் அறிவு அப்போது தான் விழிக்கத் தொடங்கிற்று. அவன் எதை எதிர்பார்த்து வந்தான் என்பதைக் காணமுடிந்தது. ”நான் சமைக்கட்டுங் களா” என்று கேட்டவனை “வேண்டாம் போ என்று அனுப்பிவிட்டேன். ஏன் தெரியுமா?”
மருதமுத்து விழித்தான். அவனுக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை.
“நீ வந்து சமைக்கணும்னு நான் வைராக்கியமாயிருந் தேன். ஏன் என்றால் என்னிடம் இருக்குமாப்போல ஒரு வைராக்கியம்—விஷயம் நல்லதோ கெட்டதோ இறங்கிய பிறகு குரங்குப் பிடியா பிடிக்கனும்கிற நினைப்பு உன்கிட்டத் தான் இருக்கு, அதனால்தான்”
“அந்த வைராக்கியம் எங்கே சிதைந்து போயிருக்கு மோன்னு பயந்து, என்கிட்ட உனக்கு இருக்கிற அன்பின் காரணமாக உன்னுடைய நண்பர்கள் பேசியதையெல்லாம் என்னிடம் வாய்தவறி சொல்லிவிடுவோமோ என்று பயந்து தான் நீ இரண்டு நாளாக இங்கு வராமலிருந்தேன்னு எனக்குத் தெரியும்”
“இப்பவும் இவ்வளவு நேரம் வரையிலும் உன் வாயி லிருந்து அவைகளைப்பற்றி ஒரு வார்த்தைகூட வெளிவராம இருக்கிற அந்த வைராக்கியம் இருக்கிறதே… அதைத்தான் நான் விரும்புகிறேன். வர்க்கம், வகுப்பு என்ற ரீதியில் உரு வாகிற அணிக்கு அதுதான் தேவை” ஆற்றொழுக்காய் பேசிய அவர் அமைதியானார்.
அவன் அவரை நிமிர்ந்து பார்த்தான். அவனுக்கு அவரைப் பூரணமாக விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், இத்தனை நாளும் விளங்கிக்கொள்ளாத ஒன்றை விளங்கிக் கொண்ட திருப்தி ஏற்பட்டது.
– 1971
– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.