வேடிக்கை நடத்துனர்கள்
கதையாசிரியர்: உரு.வளவன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: June 23, 2026
பார்வையிட்டோர்: 211

“எழுதுவது என்னவோ பொதுவான கருத்து என்னவென்றாலும்… படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் அவருக்கான தனித்த ஞாபகங்களை கிளறி விட்டு போகிறது…”
மேலே குறிப்பிட்ட இந்த சொற்றொடரை நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள்….
ஒவ்வொரு நாளும் நாம் படிக்கும், கதைக்கும், கேட்கும் எல்லா விடயங்களிலும் நாம் நம் ஆழ்மனதில் பதிந்து விட்ட நினைவலைகளை கிளறி விட்டு போகிறது அல்லவா…!
மேலும் சொல்பவர் ஒரு அர்த்தத்தில் சொல்ல.. கேட்கும் நாம்.. வேறு அர்த்தம் புரிந்து கொள்ள… அந்த நாளே… நரகமாகி விடுகிறது…
கேட்கும் ஒவ்வொரு சொல்லும்… சூழ்நிலைக்கு ஏற்ப புரிந்து கொள்ளப் படுகின்றது…
குறிப்பாக ஒரு போன் கால் பேசும் போது பரிமாறிக் கொள்ளப் பட்ட சம்பாஷனை மிகப்பெரிய பிரச்சினைகளை தீர்க்க முடியும்… அதே சமயம்… சாதாரண விஷயம் … பெரிய சண்டையில் போய் முடிவதும் உண்டு…
எனவே, நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும்… எதிரில் இருக்கும் நபர்களின் மனவோட்டத்திற்கேற்பவே புரிந்து கொள்ளப் படுகின்றது…
நான் கீழே எழுதியுள்ள இந்த சம்பவம், ஒரு உண்மையான அனுபவத்திலிருந்து எழுதியது.
“திருத்துறைப்பூண்டி டு தொண்டியக்காடு, 9ம் நம்பர் டவுன் பஸ்”
1980-களில், இப்போது இருப்பது போல் தனியார் போக்குவரத்து வசதிகள் கிடையாது. பொதுஜன போக்குவரத்து வசதிகளான அரசு மற்றும் தனியார் பேருந்துகளையே, பெரும்பாலும் மக்கள் அனைவரும், ஏழை பணக்காரர் என்ற பேதமின்றி எல்லோரும் பேருந்து போக்குவரத்தையே நம்பி இருந்த காலம். சற்று பணக்காரர்கள், அவர்கள் வீட்டிலிருந்து பேருந்து நிலையம் வரையில் அவர்களது சவாரி வண்டியில் வந்து இறங்கி. பேருந்தில் ஏறி கொள்வார்கள். அவர்களை திரும்ப அழைத்துச் செல்ல, குறித்த நேரத்துக்கு அந்த சவாரி வண்டி வந்து காத்து நிற்கும்.
எங்கள் ஊருக்கு, 1973-75, வருடங்களில், முதலில் ஒரு பேருந்து வந்தது. அந்த பேருந்தில் ”SRVS – ஸ்ரீ ராம விலாஸ் பஸ் சர்வீஸ்” என்று எழுதியிருந்தது. பின்னர், கொஞ்ச நாட்களிலேயே அரசுடைமையாக்கப் பட்டு “சோழன் போக்குவரத்துக் கழகம்” என்று ஓடியது.
பாமர மக்கள் அதை “சோளம் பசுவு” வந்துட்டா – போயிட்டா, இப்படி தான் கேட்பார்கள்.
இப்படித்தான் மற்ற இடங்களிலும், தனியார் பேருந்துகள் அரசுடைமையாக்கப் பட்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகம், சேரன் போக்குவரத்துக் கழகம் மற்றும் பல்லவன் போக்குவரத்துக் கழகம், என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
இதை ஒரு மொழி வித்தகர், சோழன் உங்கள் தோழன், பல்லவன் மிக நல்லவன், பாண்டியன் உங்களுக்கு வேண்டியவன், சேரன் உங்கள் பேரன் என்று பெருமைப் படுத்தி புகழ்ந்து பேசினார். அந்த காலத்தில், பேருந்து நடத்துனர்களுக்கு, அந்த கால போலீசார் வந்திருக்கும் அரை கால் சட்டை போன்ற கால்ச்சட்டைகள் தான் சீருடை. அப்போது ஒரு நடத்துனர், மிகவும் தடிமனான பருமனாக இருப்பார். அவரை “டிக்கெட் மாக்கான்” என்று பட்டப் பெயர் வைத்து அழைப்பர்.
மற்றுமொரு பேருந்து மதிய நேரத்தில் வாய்மேட்டிலிருந்து மன்னார்குடி வரை முத்துப்பேட்டை வழியாக செல்லும் பேருந்து ஒன்று இருந்தது. அந்த வழித்தடம், அதிக தூரம் சுற்றிச் செல்வதால், “உலகம் சுற்றும் வாலிபன்” என்று சொல்வதுண்டு. அதில் வரும் நடத்துனர், ஏறும் பயணிகள் ஏறி விட்டால், பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு, எங்க போறது, என்று உறவினரை விசாரிப்பது போல் விசாரித்து டிக்கெட் தருவார்.
இந்த சோழன் போக்குவரத்துக் கழகத்துக்கு , கும்பகோணம் டெப்போ தான் தலைமை இடம். அங்கு இருந்த ஒரு மேலாண் இயக்குனர், வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் என்பதால், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டியில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுத்தார்.
அதன்படி 11ம் எண் டவுன் பஸ், திருத்துறைப்பூண்டி -குரவப்புலம் மற்றும் 9ம் எண் டவுன் பஸ் தொண்டியக்காடு டு திருத்துறைப்பூண்டி, இயக்கப்பட்டது. இந்த இரண்டிலும் 11ம் நம்பர் வழித்தடம் சாலை வசதி சற்று நன்றாகவே இருந்தது.
ஆனால், 9ம் நம்பர் வழித்தடம், மிகவும் மோசம். சிறுவழி சாலை, இருபுறமும் வயல்கள், மற்றும் முள்வேலிகள் நிறைந்தது. எதிரில் ஒரு இருசக்கர வாகனம் வந்தாலே, இடது பக்கம் ஒதுக்கினால் வேலியில் உள்ள முட்கள், உள்ளே உட்கார்ந்திருக்கும் பயணிகள் மேலே கீறி பதம் பார்த்து விடும். மாட்டு வண்டி எதிரில் வந்தால் இன்னும் சிரமம். இப்படி பேருந்தை இயக்கி வர வேண்டி இருப்பதால், இந்த 9ம் நம்பர் டிரைவர் கண்டக்டர், யாருமே டூட்டி எடுக்க மாட்டார்கள்.
இந்த 9ம் நம்பர் பஸ் தொண்டியக்காட்டில் இருந்து திருத்துறைப்பூண்டி டவுன் உள்ளே நுழையும் போது, அந்த பேருந்தில் ஏறுவதற்கு ஒரு ஊரே காத்திருக்கும். அந்த பஸ் ஸ்டாண்டில் உள்ளே நுழையும் போதே, கண்டக்டர் சொல்வார். யாரும் ஏறக்கூடாது, பஸ் டெப்போ போவுது. மந்திரவாதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டது போல், அனைத்து பயணிகளும், நின்று விடுவார்கள். பஸ் நேராக, சற்று தொலைவில் உள்ள டெப்போவில் போய் நிறுத்தி விட்டு, டிரைவர் கண்டக்டர் இருவரும் எங்காவது போய் விடுவார்கள். பஸ் ஸ்டாண்டில், காத்திருக்கும் பயணிகளில், முன்னணி பயணிகள் சிலர், ஒரு முடிவெடுத்து, டெப்போவை நோக்கி செல்வார்கள். அங்கு டெப்போ மேனேஜர், சார் டிரைவர் கண்டக்டர் ரெண்டு பேறும், எங்க போனாங்கன்னு தெரியல… பின்னாடி போய் பாருங்க… சொல்லி கூட்டிகிட்டு போங்க, என்பார்.. அவர் சொன்ன படியே, ஒரு மூத்திர சந்தின் பின்னால் உள்ளே ஒரு அறையில் சட்டையை கழட்டி ஒரு ஆணியில் மாட்டிவிட்டு இருவரும் ஒரு பெஞ்சில் படுத்து இருப்பார்கள். முன்னணி பயணிகள் சிலர் அவரிடம் போய் கெஞ்சாத குறையாக, அண்ணே, வாங்கண்ணே, என்று கூப்பிடுவார்கள். அதற்குள் இரண்டு பேர், டீ, வடை, பண், வரிக்கி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுங்கண்ணே, அப்புறம் வண்டிய எடுக்கலாம் என்று அவ் அவர்களை குஷிப் படுத்துவார்கள். உங்க அன்புத் தொல்லை தாங்க முடியலைப்பா, என்று அலுத்துக் கொண்டு, மறுக்காமல், டீ, வடை, பண், வரிக்கி இத்யாதிகளை சாப்பிட்டு விட்டு, சரி போவமா..! என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டு வண்டியை எடுப்பார்கள். முன்னணி பயணிகள் டெப்போவிலேயே ஏறி வசதியான இருக்கையில் உட்கார்ந்து கொள்வார்கள்.
ஆனால், இந்த டிரைவர் – கண்டக்டர் இருவருக்குமே, பயணிகள் மத்தியில், அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு. பொங்கல், தீபாவளி என்றால், அவர்களுக்கு ஊரில் விளையும் தேங்காய், மாங்காய், புளி, வேர்க்கடலை, காய்கறிகள், மீன், கருவாடு போன்றவை அன்பளிப்பாக அள்ளி தள்ளி விடுவார்கள். இந்த டிரைவர் – கண்டக்டர் இருவருக்குமே, இந்த ஊர்களில் நடக்கும் திருவிழா, கல்யாணம் போன்ற எல்லா நிகழ்வுகளுக்கும் கண்டிப்பாக அழைப்பு உண்டு. பயணிகள் அனைவரையும், டிரைவர் – கண்டக்டர் இருவரும் அறிவார்கள். ஒரு நபர் ரோட்டு ஓரத்தில் தயங்கி நின்றாலே, வண்டியை நிறுத்தி, எங்க போறது, என்று கேட்டு ஏற்றிக் கொண்டு செல்வார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் அந்த 9ம் நம்பர் டவுன் பஸ்ஸில் ஒரு கண்டக்டர் இருந்தார். அவர் எந்த ஒரு வேடிக்கையான பேர்வழி. யார் டிக்கெட் கேட்டு பணம் கொடுத்தாலும், நோட்டை வாங்கி போட்டுக்கொள்வார், மீதி தர மாட்டார். ஒரு சிலர் பணம் தர விட்டாலும், டிக்கெட் கிழித்து கொடுத்து விடுவார். இடையில் இறங்கும் நபருக்கும், கடைசி நிறுத்த டிக்கெட் தான் தருவார். முன்னும் பின்னும் போகும் போது, அந்த நபரிடம், மெல்லிய குரலில், இன்னும் காசு வரல, என்று முனகி விட்டு செல்வார்.
அந்த வண்டியில் ஒரு நாள் செக்கிங் இன்ஸ்பெக்டர் ஏறி விட்டார். அவர் எல்லாரிடமும் டிக்கெட் இருக்கான்னு செக் பன்னிட்டு, கண்டக்டரிடம், டிக்கெட் புக் தரும் படி கேட்டு வாங்கி, சரிபார்த்துக் கொண்டிருந்தார். கண்டக்டர் டிரைவர் பக்கம் போய்விட்டு பஸ் அடுத்த சிங்கிள் போக வேண்டிய ஊர் பேர் பலகையை மாற்றினார். திரும்பி வந்த கண்டக்டரிடம், செக்கிங் இன்ஸ்பெக்டர் இன்வாய்ஸ் கொடுப்பா, என்றார். நான் டிக்கெட் புக் தரும்போதே இன்வாய்ஸ் சேத்து தான் கொடுத்தேன். எனக்கு தெரியாது. இன்வாய்ஸ் உங்ககிட்ட தான் கொடுத்தேன், எங்க தோலைச்சீங்க, என்று சொன்னார் கண்டக்டர். செக்கிங் இன்ஸ்பெக்டர் பதறிவிட்டார். கோளாறான ஆளா இருக்கானே! இவன் பஸ்ல ஏறி இன்னைக்கு ஏழரையை இழுத்துட்டோமே..! என்று நொந்து கொண்டார்.
அப்போது ஒரு பயணி இவற்றை எல்லாம் கவனித்து, ரசித்துக் கொண்டு இருந்தவர், செக்கிங் இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்டார், என்ன சார் ஆச்சு? சனியனை தூக்கி பனியன் உள்ள உட்டுக்கிட்டேன்…இன்னைக்கு, நான் இப்படி வகையா, இவன் கிட்ட வந்து மாட்டிகிட்டேன், என்றார் செக்கிங் இன்ஸ்பெக்டர். சார், நீங்க போய், அந்த போர்டு கிட்ட பாருங்க, இந்த கண்டக்டர், ஊர் போர்டு மாத்தினார். அங்க பாருங்க, என்று காதோடு சொன்னார். அவசர அவசரமாக ஓடிப்போய் பார்த்தார் செக்கிங் இன்ஸ்பெக்டர். தொண்டியக்காடு என்று ஊர் பெயரோடு, பேர் பலகையின் உள்ளே இருந்தது இன்வாய்ஸ்… அதை எடுத்துக் கொண்டு வந்த செக்கிங் இன்ஸ்பெக்டர்,
நம்ம கண்டக்டரிடம் கொடுத்து விட்டு, ஒரு கும்பிடு போட்டு விட்டு, இனிமேல், உன் பஸ்ல ஏறுனா, என்னை செருப்பால் அடி., என்று சொல்லிவிட்டு இரங்கி வேக வேகமாக டெப்போ உள்ளே சென்று விட்டார்.
இவ்வாறு சில பல வேடிக்கையான சம்பவங்கள் நிறைந்த ஓட்டுநர் நடத்துநர்கள் நிறைந்த சோழன் போக்குவரத்துக் கழகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
சிவா வெட்ஸ் ஜெனி
பிரசன்னா சுவாமிநாதன்
June 23, 2026
அமெரிக்காவில் கிச்சா
கிரேஸி மோகன்
June 14, 2026
அமெரிக்காவில் கிச்சா
கிரேஸி மோகன்
June 9, 2026