வெள்ளிக் கிழமை லீவு வேண்டும்!
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 5,222
இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நிறைய திரைப் படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
போன வெள்ளிக் கிழமை நாலு புதுப் படம் ரிலீஸ். நானும் என் மனைவியும் ரிலீஸ் அன்று ஒரு படத்தின் காலைக் காட்சிக்குப் போயிருந்தோம்! அன்று தான் படம் ரிலீஸ் என்பதால் சற்று இளைஞர் கூட்டம் அதிகமாகவே இருந்தது!
பெண்கள் பகுதியில் இரண்டே இளம் பெண்கள் தான் நின்று கொண்டிருந்தார்கள்.
என் மனைவி அங்கு போய் எங்களுக்கு முதல் வகுப்பு டிக்கெட் எடுக்க அந்த இரண்டு பெண்களுக்குப் பின்னால் நின்றாள். நான் சற்று தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்தேன்.
என் மனைவிக்கு முன்னால் நின்ற இரண்டு இளம் பெண்களுமே ஆளுக்கு பதினான்கு டிக்கெட் எடுத்தார்கள்! எனக்குப் புரியவில்லை!
அவர்கள் எல்லாம் யாருக்காக டிக்கெட் வாங்கினார்கள் என்பது தியேட்டருக்குள் போய் நாங்கள் உட்கார்ந்தவுடன், தெரிந்தது!
எங்களுக்கு முன் இருந்த இரண்டு வரிசைகளிலும் அந்த ஆளுக்கு பதினாலு டிக்கெட் வாங்கிய இரண்டு பெண்களும் நின்று கொண்டு, வரிசையாக இருபத்தி எட்டு சீட்டுகளுக்கும் தங்கள் நண்பர்களை உட்கார வைத்தார்கள்!
எனக்கு முன்னால் வந்து வரிசையாக உட்காந்தவர்களைப் பார்த்தவுடன் எனக்கு வியப்பாக இருந்தது!
ஒரு பெண் ஒரு ஆண், ஒரு பெண், ஒரு ஆண் என்று மாற்றி மாற்றி வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள்!
அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து அவர்கள் எல்லோருமே கல்லூரி மாணவ மாணவிகள் என்று தெரிந்தது. அவர்கள் தங்களிடமிருந்த விலை உயர்ந்த செல் போன்களில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு ‘செல்பி’ வேறு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு அடுத்தவர் பார்ப்பார்கள் என்ற கூச்சமோ, பயமோ சிறிதும் இல்லை! அந்தக் காலைக் காட்சிக்கு தியேட்டர் முழுவதும் இப்படி மாணவ மாணவி கூட்டத்தால் நிறைந்து விட்டது! வந்திருந்த எல்லோருமே கல்லூரி மாணவ மாணவிகளே!
தனியாகப் போய் அவர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டதால் எங்களுக்குத் தான் வெட்கமாக இருந்தது!
ஒரு புதுபடம் வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆனா, முதல் காலை காட்சிக்கு வயசானவங்க போய் தயவு செய்து எங்களைப் போல் மாணவ செல்வங்களுக்குத் தொல்லை கொடுக்காதீங்கோ!
அரசு அலுவலகம் எல்லாம் இப்ப இரண்டாவது சனிக்கிழமை. நான்காவது சனிக்கிழமை எல்லாம் லீவு விடறாங்க!
போகிற போக்கைப் பார்த்தா வருங்காலத்தில் இந்த மாணவச் செல்வங்கள் ரிலீஸ் படம் பார்க்க வெள்ளிக் கிழமை லீவு விடச் சொல்லுவார்கள்!…
அப்படி ஒரு கோரிக்கை அவர்கள் வைத்தாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை!
– மக்கள் குரல் 10-7-2018