வெறும் மரமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2025
பார்வையிட்டோர்: 164 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிஸ்மில்லா என்று கடைத்தெருவின் முதல் கடை யில் டேப்பைத் தட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தார் பக்கிரி. 

“இப்பத்தான் கடை திறக்கிறேன், தெரியல்லையா?: என்று சீறி விழுந்தார் கடைக்காரர். 

பக்கிரி கோபம் கொள்ளவில்லை. தம் நெற்றியைத் தொட்டுச் சலாம் வைத்துக்கொண்டே அடுத்த கடைக்குப் போய் டேப்பைத் தட்ட ஆரம்பித்தார். 

“நம்ப கடையிலே வியாழக்கிழமைதான் தருமம், தெரியாதா சாயபு?” என்றார் முதலாளி. 

பக்கிரிக்குக் கோபம் என்பதே தெரியாது போலிருக்கிறது. யாசகந்தான் கேட்கிறார். அதனால் கோபத்திற்கு இடமில்லை. அலுப்பு இருக்கும் அல்லவா? பக்கிரிக்கு அலுப்புக்கூட இல்லை. யாரேனும் பக்கிரியின் தங்கமான தன்மையை ஊன்றிக் கவனித்திருந்தால் பேரின்பப் பெருவாழ்வுக்கு வழி கடைத்தெரு வழியாகக்கூடப் போகமுடியும் என்பது தெரிந்துவிடும். நிலை குலையாத அவ்வளவு அமைதியுடன் அடுத்த கடைக்குச் சென்றார். 

“நீ வந்த வேளை சில்லறை இல்லையே, சாயபு” என்றார் கடைக்காரக் கிழவனார். 

யாசகம் கேட்பதில்கூட அதிருஷ்டம் துரதிருஷ்டம் இருப்பதுபோன்ற பழியைக் கிழவனார் பக்கிரிமீது சுமத் தினார். வழக்கம்போலச் சலாம் வைத்துவிட்டுப் பக்கிரி அடுத்த கடைக்குப் போய், டேப்டைத் தட்டினார். டேப் தகடுகள் ஜிகு ஜிகு என்று ஒலித்தன. கடை முதலாளி புதியவர்; இளைஞர். எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஒரு சின்னக்கட்டு ஊதுவத்தியும் அரையணாக் காசும் பக்கிரியினிடம் கொடுத்தார். பக்கிரி நெற்றியைத் தொட்டுச் சலாம் செய்து விட்டுக் கடைக்காரர் தலையை மயில்பீலியால் ஒரு தரம் தடவினார். பிறகு, அல்லாவின் நற்பெயரை, 

அல்லாவின் நற்பயெரைச் 
சொல்லு சொல்லு- எல்லாப்
பொல்லாங்கும் போகுமென்று
சொல்லு சொல்லு
 

என்று பாடிக்கொண்டே சென்றார். 

அடுத்தது புஷ்பக் கடை. பக்கிரியைக் கண்டதும் கடைக்காரருக்கு மகிழ்ச்சி ஒரு புறம், வியப்பு ஒருபுறம். 

“என்ன பக்கிரி ! ரொம்ப நாளாகக் காணோமே?” 

“காணாமல் என்னங்க? கழுதை கெட்டால் குட்டிச் சுவருதானுங்களே ! குட்டிச்சுவா இல்லாட்டிப் பாழும் மண்டபம். அது மாதிரிதான் ஊரிலே சுத்திக்கிட்டுக் கிடக்கிறேன். அல்லா கண் திறக்கிற வரையில் சுத்தித் தானே ஆகோணும்: நாலு காசு கிடைச்சாப் போது மின்னு போயிடறேனுங்க.” 

புஷ்பக் கடைக்காரருக்குத் தம்மை அறியாமலேயே பக்கிரியிடத்தில் ஓர் அன்பு உண்டு. 

“இப்பொத்தான் கடையைத் திறக்கிறேன். பக்கி ரிக்குப் போணி பண்றேன்” என்று கூறிக் கொண்டே இரண்டணாக் காசையும் ஒரு பாகம் மல்லிகைப் பூச் சாரத்தையும் கொடுத்தார். 

“பக்கிரிக்குப் பூ எதுக்குங்க வீணா?” 

“பக்கிரிகிட்டெ கொடுத்தால் அல்லாவுக்குப் போய்ச் சேரும்.” 

மயில்பீலியால் புஷ்பக்காரர் தலையில் தடவி விட்டுப் பக்கிரி அடுத்த கடைக்குப் போனார். அதற்குப் பிறகும் சில கடைகளுக்குப் போனார். சில இடங்களில் காசு கிடைத்தது; சில இடங்களில் வசவு கிடைத்தது. எது கிடைத்த போதிலும் யா அல்லா என்று கூறி வணக்கம் செய்துவிட்டு அவர் போய்க்கொண்டிருந்தார். பின்னும் சிறிதுநேரத்திற்குள் அவர் மனம் மாறிவிட்டது. கையில் இருந்த காசுகளை எண்ணிப் பார்த்தார். அன்றைப் பாட்டுக் குப் போதுமானது இருந்தது. ஒரு படி அரிசி யும் உப்பும் மிளகாயும் வாங்கிக்கொண்டார். பத்தடிக்கு அப்பால் சென் றபொழுது ஒரு கோழிக் குஞ்சு விலைக்கு வந்தது. அதையும் வாங்கிக் கொண்டு ஊர்ப்புறத்துக் காட்டை நோக்கிச் சென்றார். 

காட்டின் முன்புறத்தில் பெரிய ஆலமரமும் குள மும் இருந்தன. டேப்பையும் கோட்டையும் மூட்டையை யும் இறக்கி வைத்துவிட்டுச் சமையல் வேலையைத் தொடங்கினார். சமையல் அவருக்கு எப்பொழுதுமே பெரிய காரியமாய் இருந்ததில்லை. இப்பொழுதும் அப்படித்தான். 

மரத்தடியில் வேண்டிய செங்கல் கிடந்தது. புதரில் வேண்டிய சுள்ளி இருந்தது. பையில் நெருப்புப் பெட்டி இருந்தது. வேறு என்ன வேண்டும் ? ஒரு கலயத்தைத் தண்ணீரும் அரிசியுமாக அடுப்பில் ஏற்றினார். அரை மணிக்குள் சோறாகிவிட்டது. பிறகு இறகைப் பிய்த்து விட்டுக் கோழிக் குஞ்சை மண் சட்டியில் போட்டு அடுப்பில் ஏற்றினார். 

கோழிக் குஞ்சு வாடிக்கொண்டிருந்தது. கொஞ்சங் கொஞ்சமாக ஈரத்தின் அரவம் சட்டியில் அடங்கி விட்டது. புரட்டிப் போட்டால் பக்குவம் ஆகிவிடும் என்று நினைத்தார். துடுப்பு வேண்டுமே! காட்டில் துடுப்பு ஏது? ஒரு விநாடி திகைப்படைந்தார். மறு விநாடி எதிர்ப்புறத்தில் நின்றுகொண்டிருந்த தனி மரம் ஒன்று தென்பட்டது. அதிலிருந்து ஒரு சிறு கொம்பை ஒடித்து நுனியைக் கிள்ளி எறிந்துவிட்டுத் துடுப்பாக்கிக்கொண்டார். 

கோழிக் குஞ்சை அந்தக் குச்சியால் மூன்று நான்கு தடவை புரட்டி விட்டார் ஐந்தாம் தடவை புரட்டும் பொழுது விர்ர் என்ற ஓசை எழுந்தது. சட்டியில் இருந்த மாமிசம் சிறகு பெற்றுப் பறந்து போய்விட்ட து. திரும்பத் திரும்பச் சட்டியைப்பார்த்தார். கோழிக் குஞ்சு இருந்த சுவடே தெரியவில்லை. திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தார்! கோழிக் குஞ்சு சிறகுடன் கண்ணெதிரே பறந்துபோய் எதிர்ப்புறத்து மரமொன்றில் உட்கார்ந்து கொண்டிருந்தது. 

பசிக் கொடுமையுடன் அதைப் பிடிக்க ஓடினார். அது மற்றொரு மரத்திற்குப் பறந்து சென்றுவிட்டது. அதைத் தொடர்ந்து சென்றார். கைக்குக் கிட்டுவது போல் இருக்கும். ஆனால் கிட்டாது. இப்படியே ஆசை காட்டிக் கோழிக் குஞ்சு அவரை நெடுந் தூரம் இழுத்துச் சென்றுவிட்டது. பக்கிரி சலிப்படைந்தார். கால்கள் துவண்டன. பசி காதை அடைத்தது. இனித் தொடர் வதில் பயனில்லை என்று நின்றுவிட்டார். 

நின்றவுடனே மின் வெட்டினாற்போல ஓர் எண் ணம் எழுந்தது. ‘உயிரற்ற கோழிக் குஞ்சுக்கு உயிர் ஊட்டியது எது? வெறும் மாமிசத்தைக் குஞ்சாக்கி இறகளித்து வெட்டவெளியில் பறக்கச் செய்தது எது?” என்ற எண்ணங்கள் முளைத்தன. தன் கையில் இருந்த துடுப்பு தென்பட்டது. துடுப்பால் கோழிக் குஞ்சைப் புரட்டியபொழுதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது என்று ஞாபகம் வந்தது. ஒரு விநாடி கண்ணை மூடியா அல்லா என்றார். மறுவிநாடி துடுப்பில் இருந்த இரண் டோர் இலைகளை எடுத்து மென்று தின்றார். இரண்டொரு நிமிஷங்களுக்குள் கும்மென்று அடைத்திருந்த காது தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. வயிற்றைக் கிண்டிய பசி ஆறிவிட்டது. மனத்தை அழுத்திய அலுப்பும், உடலை அழுத்திய அயர்வும் இருந்த இடம் தெரியவில்லை. அதற்கு மாறாக அவருக்குள் புதிய ஒளி யும் அமைதியும் சக்தியும் கடலலைபோல் எழுந்து பாய்ந்து கொண்டிருந்தன, ‘வாஹ்வா! வாஹ்வா’! என்று மகிழ்ச்சியால் ஒரு கணம் பொங்கினார். 

அடுத்த விநாடி ‘இந்த மர்மம் அந்த மரத்தில்தான் ஒளிந்திருக்கிறது’ என்ற நினைப்பு மூண்டது. அந்த மரத்தைத் தேடிக்கொண்டே பக்கிரி வந்த வழியே திரும் பினார். ஆனால் வழி தெரியவில்லை. மரமும் தென்பட வில்லை. 

அந்தக் கொம்பை வைத்துக்கொண்டு இன்னும் மரத்தைப் பக்கிரி தேடிக்கொண்டுதான் இருக்கிறார். 

இப்பொழுதெல்லாங்கூடக் கடைத்தெருப் பக்கம் சில சமயம் அவர் வருகிறார். ஆனால் கையில் டேப் இல்லை. வயிற்றில் பசி இல்லை! கையில் அந்தக் கொம்பு! கண்ணில் ஒரு லாகிரி. எந்தக் கடை வாசலை யும் இப்பொழுது அவர் மிதிப்பதில்லை. 

பக்கிரிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கடைக்காரர்கள் நினைக்கிறார்கள். புஷ்பக் கடைக் காரரும் ஊதுவத்திக் கடைக்காரரும் அவர் மஸ்தான் ஆகிவிட்டார் என்று மறுக்கிறார்கள். தாமாக யாரே னும் அவருக்கு இப்பொழுது கொடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. ஆனாலும் அவருக்குக் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. 

– பிச்சமூர்த்தியின் கதைகள்‌, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1960, ஸ்டார்‌ பிரசுரம்‌, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *