வெந்தணலால் வேகாது





(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இராம இராவண யுத்தம் முடிந்துவிட்டது. தனது நிகும்பலை யாகத்தின் பின் எதிரிகளை ஒரே மூச்சில் ஒழித்துக் கட்டிவிட எண்ணியிருந்த மாவீரன் இந்திரசித்தன் போய்விட்டான். எதிரியை கும்பிட்டு வாழமுடியாமல் அண்ணனுக்காகக் கூற்றையே ஆடல் கொண்டு விட்டான். கும்பகர்ணனும் ‘தன்னையே’ நோக்கி நெடும் பகை தேடிக்கொண்ட இராவணனும் கடைசியாகப் போய் விட்டான்.

நெருப்புப்பிடித்து எரிந்த காட்டிலே எஞ்சியிருந்த மொட்டை மரம்போல விபீஷணன் மட்டும் மிஞ்சினான்.
விபீஷணன் விரும்பியது போலவே இராமர் அவனுக்கு தன்கையாலேயே இலங்கையின் மணிமுடியைச் சூட்டிவிட்டார். இப்போது அவன் இலங்கை மன்னனி!
மன்னனா? விபீஷணன் யாருக்கு மன்னன்? கவித்தொடர் குரக்குச் சேனையழித்த காட்டிற்கா? இடிந்து தரைமட்டமாகிக் கிடக்கும் இலங்கா நகரத்திற்கா? யாருக்கு?
சரித்திரம் கண்டும் கேட்டும் இராத மகத்தான போரிலே மானமும் வீரமும், இராஜ விசுவாசமும் உள்ள இலங்கையவர்கள் எல்லோருமே மாண்டு விட்டார்கள். எஞ்சியிருந்த பெண்களும் வயோதிபர்களும் விபீஷணனைத் தம் மன்னாக மனதால் ஒப்பவில்லை. அப்படியானால் விபீஷணன் யாருக்கு மன்னன்?
“எங்களுடைய அரசர் அவையிலே தேவர்கள் ஏவல் செய்தார்கள். எங்கள் பெண்களை தேவமாதர் நீராட்டினார்கள். அப்படியான மாவீரர் இருந்து ஆண்ட இலங்கைச் சிம்மாசனத்திலே, இராட்சியத்துக்கு ஆசைப்பட்டு அண்ணனையே காட்டிக் கொடுத்த துரோகியா இருப்பது? சீ….
மானமுள்ள ஈழமக்கள் விபீஷணனை இப்படி வெளிப்படையாகவே திட்டினார்கள். போரிலே வெற்றி பெற்ற இராமனே வந்தாற் கூட அவர்களை அடக்கியாள முடியாதுபோல விபீஷணனுக்குத் தோன்றிற்று. ஆனாலும் ‘நான் என்ன செய்வது? அண்ணன் நீதி பிறழ்ந்து தகாத காரியத்தைச் செய்தானல்லவா நான் நாட்டை ஆள வேண்டிவந்தது. எப்போதும் “மறத்தை அறம் வெல்லும்’ என்று தத்துவார்த்தம் பேசிக்கொண்டு இலங்கையை ஆளத்தான் முயன்றான் விபீஷணன்.
ஆனால் அவனுக்கு மந்திரியாக அமைய நாட்டிலே எந்தத் துரோகியும் இருக்கவில்லை. தமையனைக் காட்டிக்கொடுத்த துரோகிக்கு குற்றேவல் செய்து வாழ்வதை விட உயிரையே விடத் தயாராக இருந்தனர் மக்களெல்லாம்.
வெறிச்சென்ற கிடக்கும் அரண்மனை, தன் முகத்திலேயே விழிக்க விரும்பாத மக்கள்,அண்ணனைக் காட்டிக் கொடுத்த துரோகி என்று மக்கள் தூற்றும் பழிச்சொல்….. விபீஷணனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது.
அரண்மனையில் இருப்புக்கொள்ள முடியாத விபீஷணன் எழுந்து கால்போன திக்கில் நடந்தான்.
அரண்மனையில் இருந்து நகரத்திற்குச் செல்லம் அந்த ராஜபாட்டையில் இருமருங்கிலும் நிரைத்து நின்ற மாடமாளிகைகள் எங்கே? கூட கோபுரங்கள் எங்கே? அம்மாளிகைகளிற் கேளிக்கைகளிற் களித்து நிற்கும் மக்கள் எங்கே ஒரே சுடுகாடாகவல்லவா இருக்கிறது. பிண வாடை… துர்க்கந்தம்…. பிலாக்கணம்…. இராகவா! இப்படி ஒர நாட்டிற்கா நான் மன்னனாக வரவேண்டும்?
விபீஷணனின் தலைசுற்றியது. எங்கே போகிறேன் என்ற பிரக்ஞையே இன்றி அவன் போய்க்கொண்டிருந்தான்.
எங்கிருந்தோ ஒரு கிழட்டுக் குரல் கேட்கிறது. “அண்ணனைக் காட்டிக் கொடுத்த துரோகி ஊர்வலம் வருகிறான். ஒளிந்து கொள்ளுங்கள். அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது.”
விபீஷணனின் எண்சாண் உடம்பும் அவமானத்தில் ஒரு நாணாகக் குறுகியது. கூனிக் குறுகியபடியே அந்தக் குரல் எட்டாத துாரத்திற்கு ஓடிவிடவேண்டும் என்று எண்ணியவன் போல ஓடினான். அந்தக் குரல் அவனைத் துரத்துவது போல இருந்தது.
நான் இராட்சியத்திற்கா ஆசைப்பட்டேன்? அதற்காகவா அண்ணனைக் காட்டிக் கொடுத்தேன்? ஏமாற்றமும், குழப்பமும் அவமானமம் சுழியிடும் விபீஷணன் மனதிலே கேள்விகள் மிதந்தன. “இல்லை, அறம் வெல்வதற்கு நான் துணைபுரிந்தேன்” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே விபீஷணன் எங்கே போகிறேன் என்ற பிரக்ஞையேயின்றி நடந்தான்.
அப்படியானால் ஏன் நான் இராட்சியத்தைக் கையேற்றிருக்க வேண்டும்? நான் இல்லாவிட்டால் இந்த இராட்சியத்தை ஆள்வது யார்? அண்ணனோடு இலங்கை, இராட்சியமும் அழிந்துவிடத்தான் வேண்டுமா?
தானே மன்னனாகவும், பிரஜையாகவும், தானேதானாக, தானே எல்லாமாக மனதுள் தர்க்கம் பண்ணியபடி விபீஷணன் நடந்தான்.
ஒழுங்கு நியதி ஏதும் இன்றி தறிகெட்டு ஓடும் அவன் சிந்தனையிலே ஒரு திடீர் திருப்பம். “இராட்சியத்திற்காக அண்ணணைக் காட்டிக்கொடுத்த துரோகி என்று இலங்கை மக்கள் சொல்கிறார்கள். எல்லாம் அறிந்த இராகவன் எப்படி நினைத்தான்?
நான் அவனைச் சரணடைந்த போது ‘இந்தா வீபீஷணா இலங்கா ராச்சியம்என்று சத்தியம் செய்துதானே என்னை வரவேற்றான். குகனையும், சுக்கிரீவனையும் தழுவிக் கொண்டது போல என்னைத் தழுவிக் கொள்ளவில்லை. ‘சமயத்தில் அண்ணணைக் கைவிட்ட துரோகி’ என்று சுக்கிரீவன் ஏற்கனவே இராமனுக்குச் சொல்லியிருந்தானாம். அதை அவரும் நம்பியிருந்தார்.
அநுமன் இல்லாவிட்டால் அவர் என்னை ஏற்றுக்கொண்டிருப்பாரா?
சந்தேகத்தோடு என்னை ஏற்று, பயன்கருதிய நட்பு என்ற எண்ணத்தோடுதான் இராகவன் இலங்கை இராட்சியத்தை எனக்களித்தாரா?
குட்டை குழம்பிய விபீஷணன் மனச்சகதியிலே குமிழியாய்க் கிளம்பிய கேள்விகட்கு அவனால் விடையளிக்கவே முடியவில்லை. விண்விண்ணென்று இடிக்கும் நெற்றிப் பொட்டை கையால் அமுக்கிப்பிடித்துக் கொண்டு எங்கோ நடந்தான். அவன் நோக்கற்ற நடையிலே செயலற்ற ஓர் அமைதி பிறந்தது. “எல்லாம் விதிப்பயன். அறம் வெல்வதற்கு நான் ஓர் கருவியாக இருந்தேன். அவ்வளவுதான்” என்ற மங்கலான தெளிவுதான் அவனுக்கு ஏற்பட்டது.
“தம்பி அறம் வெல்லலாம். ஆனால் நீ இல்லாமல் அறம் வென்றிருக்காதா?”
யார் பேசுவது? இடிந்து நிலமாய்க்கிடக்கும் அரண்மணைக் கற்குவியல்களிடையே இருந்து கும்பகர்ண அண்ணாவா பேசுவது?
ஆமாம், நான்தான் கேட்கிறேன். நீ இல்லாமல் அறம் வெல்ல முடியாதா?
“அறம் வெல்லுவதற்கு துணைபுரிவது நம் கடமை இல்லையா அண்ணா?”
கடமை! அண்ணனுக்குச் செய்யவேண்டிய கடமையை விடவா? விபீஷணா! நானுங் கூட அண்ணனுக்கு அற உபதேசம் செய்தேன். அவர் கேட்கவில்லை என்பதற்காக எதிரியைச் சரணடைந்து அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை. அதனால்தான் உன்னை மானமுள்ள எல்லோருமே துரோகி என்கிறோம்.
“அண்ணா! நான் தீர்மானிக்க முன்னமே பெரியண்ணா என்னைப் போவென்று விரட்டி விட்டாரே ” ” இல்லை, என்கண்களில் விழிக்காதே போ என்று தான் அவர் ஆத்திரத்தில் சொன்னார். இராமனோடு சேர்ந்து என்னைக் காட்டிக்கொடு ” என்று சொல்லவில்லை.
“அண்ணா! இராமனோடு நட்பாயிரு என்று அன்று அறிவுரை புகன்ற நீங்களுமா என்னை ஏளனஞ் செய்கிறீர்கள்?
இராமனுடன் நட்பாயிரு என்று சொன்னேன். ஏன் போரிலே நாங்கள் எல்லாம் மாண்டு மடிந்தால் ‘ஆதிநூல்மரபினாலே கடன்களும் ஆற்றி’ என்று சகோதரன் என்ற உரிமையோடு கூடச் சொன்னேன். தம்பி! இராமனோடு நட்பு பூண்டது வேறு. அண்ணணைக் காட்டிக் கொடுத்தது வேறு. இந்திர சித்தனின் நிகும்பலை யாகத்தைக் கெடுக்குமாறு எப்போதாவது உன்னிடம் நான் சொன்னேனா?
“ஆமாம்! அதைக் கேளுங்கள் சித்தப்பா” என்ற சிம்மகர்ச்சனை எங்கிருந்தோ கேட்டது.
“மகனே! நீயுமா அறவழி தப்பிவிட்டாய்” என்று அலறினான் விபீஷணன்.
அறவழியாம் அறவழி! எனது நிகும்பலை யாகத்தைக் கெடுத்த எக்களிப்பால் அறத்தைப் பற்றி உபதேசிக்கிறீரா? நீர் பேசும் அறம், பழிபடவந்த உமது கொள்கையை என்றைக்குமே மறைத்துவிடாது.
நான் ஒரு பழியுஞ் செய்யவில்லை மகனே! அறம் வெல்வதற்கு ஒரு கருவியாக இருந்தேன்’ என்ற பழைய தத்துவத்தையே திருப்பியடித்தான் விபீஷணன்.
மகனா? என்னை மகன் என்று கூப்பிட உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் வெட்கப்படாவிட்டாலும் உங்களைச் சிற்றப்பா என்று சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. விபீஷணரே! இராட்சியத்திற்கத்தானே ஆசைப்பட்டீர். எனது தந்தையாரின் வீரரத்தம் இலங்கை மக்களின் நரம்புகளில் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. முடியுமானால் அவர்களை ஆட்சி செய்து பாரும்’ என்று கெக்கட்டமிட்டுச் சிரித்தான் இந்திரசித்தன்.
‘மகனே! என்னைச் சித்திரவதை செய்யாதே! உன் காலில் விழுந்து கெஞ்சுகிறேன். என்னை மன்னித்துவிடு என்று பிரக்ஞையற்று வீழ்ந்தான் விபீஷணன்.
மறுபடியும் உணர்வு பெற்று எழுந்த விபீஷணன் “அண்ணா நான் இராட்சியத்திற்காக உங்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. நீங்கள் அப்படி நினைத்தால் நான் இன்றைக்கே இராட்சியத்தை கைவிட்டு விடுகிறேன்” என்று முனங்கினான். “துரோகி! சாகசமாபண்ணுகிறாய்? உன் தங்கைக்கு மூக்கை அரிந்து மானபங்கம் பண்ணியவனை நண்பனாக ஏற்றுக்கொண்டவனல்லவா என்னைக் காட்டிக் கொடுத்தாய்? ஒரு தங்கைக்காக, இந்த தேசமும் வீரப்போர் புரிந்த மானத்தை நிலைநாட்டிய போது, உன் செய்கை எல்லாருக்குமே தீராத அவமானத்தைக் கொண்டு வந்து விட்டது. போரிற் தோற்றதற்காக அல்ல, உன்னால் நம் குலத்திற்கு ஏற்பட்ட பழிக்காகத்தான் நான் மனம் வருந்துகிறேன்.”
எதற்குமே நிலைக்காத அண்ணன் இராவணனின் பெருமூச்சு விபீஷணனின் குறுகுறுக்கும் நெஞ்சத்தைச் சுட்டுப்பொசுக்கியது. அந்த வேதனைத் தீயின் வெக்கையை பொறுக்கமாட்டாதவனாய் விபீஷணன் ஓடினான். எங்கேயென்று தெரியாமல், ஏன் என்று விளங்காமல் ஓடினான்.
ஓட்டம் ஓட்டமாக ஓடி நகர்ப்புறத்தை கடந்து ஆற்றங்கரைக்கு வந்துவிட்டான். ஆற்றங்கரைக்கு அப்பால் சீதை சிறையிருந்த அசோகவனம் இருந்தது. எரியுண்ணாமல் பசுமையோடிருந்த அவ்வனத்தைக்கண்டதும் மறுபடியும் ‘அறம் என்றைக்குமே வெல்லும் அதற்கு நான் ஒரு கருவி என்ற எண்ணம் அவன் மனதிற் தலைதுாக்கியது. “நீ இல்லாமல் அறம் வென்றிருக்க முடியாதா?” கும்பகர்ணன் இப்போதும் அதைத்தான் மறுபடியும் கேட்கிறான். பதில் சொல்ல யாரால் முடியும்? இராமனே இராட்சியத்தை மனதிற் கொண்டுதான் நட்புக் கொண்டேன் என்று எண்ணுகையில் அறம் வெல்ல நான் ஒரு கருவி என்பதை உலகம் நம்புமா?
அதை நம்பாத போது நான் என்றைக்குமே துரோகியேதானா?
“இல்லை. நான் துரோகியாக மாட்டேன். மானத்தோடு வாழ்ந்த ஒரு வீரப்பரம்பரைக்கு நான் இழுக்காக இருக்கமாட்டேன். இந்த இராட்சியத்தைக் கையேற்றதால் அல்லவா என்னைத் துரோகி என்று எல்லாருமே திட்டுகிறார்கள். எனக்கு இந்த இராட்சியமே வேண்டாம்!
விபீஷணன் தலையைக் கல்லில் முட்டிக்கொண்டு அழுதான். இராட்சியம் வேண்டாம் என்றால் மட்டும் இழுக்கு அகன்று விடுமா? தலையை கல்லில் முட்டிக்கொண்ட விபீஷணன் வெறுத்துப் போய் முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் மண்டோதரி ஆற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு என்ன தோன்றிற்றோ? புனித கங்கையே! என் பாவங்களைக் கழுவிக் கொள். என்னால் என் குலத்துக்கு ஏற்பட்ட மாசைக் கழுவிக் கொள்வதற்காக உன்னைச் சரணடைகிறேன். என்னை ஏற்றுக்கொள் தாயே!
விபீஷணன் கங்கையில் வீழ்ந்து விட்டான். வீராதி வீரர்களின் அஸ்தியை ஏற்றுப் புனிதப்படுத்திய சீதாகங்கை என்ற மண்டோதரி ஆறு விபீஷணனின் களங்கத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு நிர்விசாரமாக ஓடிக்கொண்டிருந்தது. வேதனைத் தீ, குற்றமுள்ள நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கி தூய்மையாக்க முடியாததால் தன்னைத்தானே நீரினில் ஆழ்த்திக்கொண்ட விபீஷணன் அதன் பிறகு ஆழ்வாராகி விட்டான் போலும்!
வ.அ.இராசரெத்தினம்
கிழக்கிலங்கை தந்த படைப்பாளி வ.அ.இராசரெத்தினம். கொழுகொம்பு, துறைக்காரன் என்பன அவரது நாவல்கள். அவரது நாவல்களிலும் சிறுகதைகளிலும் மகாவலிகங்கை ஆற்றின் சலசலப்பு எழுந்து கொண்டே இருக்கும். கிரௌஞ்சவதம் அன்னாரது சரித்திர நாவல். ஈழத்தின் உன்னதமான சிறுகதையாக தோணி விளங்குகின்றது.
– 16.05.1959
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.
![]() |
வ. அ. இராசரத்தினம் (சூன் 5, 1925 - பெப்ரவரி 22, 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். திருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி…மேலும் படிக்க... |