கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 210 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரதான வீதியில் இருந்து ஒழுங்கை ஊடாக சைக்கிள் திரும்பியது. சிறிது தூரம்தான் கல் ஒழுங்கையின் இரு பக்கங்களிலும் வீடுகள் அப்பால்- 

கழுத்தை முறித்துப் பார்க்கும் உயரம் கொண்ட பனைமரங்கள் நிரை நிரையாக கருகருவென்று, மெல்லிய தாக அசைந்து கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவைதான். 

சினிமாக் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் களைக்க களைக்க ஓடிக் கட்டிப்பிடித்து தெய்வீகக்காதல் புரிய அருமையான இடம். 

அப்பனைகளின் ஊடாக வளைந்து வளைந்து செல் லும் ஒழுங்கைப் பாதை. அதைவிட நடப்பவர்களும் சைக்கிள்காரர்களும் தங்கள் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றமாதிரி உண்டாகி விட்ட எண்ணற்ற ஒற்றையடிப் பாதைகள். அவற்றின் தடயங்கள். 

பளிச்சென துடைத்து விட்டாற் போல கீழே பசியபுல் வெளி. சின்னச் செடிகள்கூட இல்லாமல் பார்ப்பதற்கு என்ன ஆனந்தம். 

பனைகள் கொண்ட அந்தப் பாரிய பிரதேசம் கண் களுக்கு தரிசனம் ஆனவுடன் நெஞ்சில் இனம் புரியாத பூரிப்பு. 

சைக்கிள் இயல்பாகவே வேகம் குறைந்தது. அம்மன் கோயிலடியால் திரும்பிப் போகும் நாலைந்து ஆட்களைத் தவிர வேறு ஆட்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். 

வழக்கமாக முன்பு நாங்கள் குந்தியிருந்து, வம்புகள் புனையும் அந்த இடத்திற்கு வந்தாலும் சைக்கிள் தனியே பனையோடு சாய்ந்தது. 

எப்போதும் நாங்கள் அமர்ந்திருக்கும் அந்தக் கற்கள் அப்படியேதான் இருக்கின்றன. நாங்கள் நித்தமும் வந்து போவதால் கற்கள் இருந்த பகுதியில் புற்கள் இல்லாமல் வெறுமையான தரை தெரியும். இப்போது பசிய புற்கள் தலைகாட்டி நிற்கின்றன. 

கல் ஒன்றில் அமர்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க ஏனைய கற்களில் சில சிதறிப்போய் இருக் கின்றன. வேறு இரண்டில் துளைகள். அண்ணாந்து பார்த்தால் பனைகளில் கூட ரத்தமில்லாக் காயங்கள். அட கற்கள் கூடத் தப்பவில்லை. 

மேலே பார்த்தால் வானம் எங்கள் எதிர்காலம் போல் இருக்கவில்லை. மெல்லிய நீலத்தில் துலக்கமாகப் பிரகா சித்தது.உரத்து வீசிக் கொண்டிருந்த காற்றினால் பனை யோலைகள் தாளம் தப்பாமல் இசைபாடின. 

சுற்றிச் சுற்றிப் பார்க்க என்ன இனிமை. நெஞ்சத்தில் முகிழ்ந்தெழும் அந்த இனிய உணர்வுகளுக்கு இணை இல்லை. 

எவ்வளவு காலத்திற்குப் பிறகு இந்த இடத்திற்கு வந்து இந்த இனிமையை நுகர சந்தர்ப்பம் கிடைத்திருக் கின்றது. அதுகூட முழுமையானதா? என்று என்னை நானே கேட்கவில்லை எங்கள் பிரதேசத்தில் எங்குதான் நின்றாலும் எந்தப் பகுதிக்குத்தான் போனாலும் நிம்மதி யாக ஆறுதலாக நிற்க முடியாமல் மாயச் சக்தி மனதுக்குள் புகுந்து விரைவாகப் போ என்று சொல்லிய படிதானே இருக்கின்றது. 

பனைகளுக்கு அப்பால் அம்மன் கோயிலின் அந்த உயர்ந்த கோபுரம் தெரிகின்றது. கோயிலில் இருந்து தெற்குப் பக்க வாசலால் வரும் பக்தர்கள் இந்த வழி யால்தான் வருவார்கள். 

பார்வைகளை எறிந்து கொண்டு வரும் அந்தப் பக்த கோடிகளுக்காக நாங்கள் தவம் இருந்த அந்தக் காலம் நேற்றுக் கண்ட கனவு போல. 

காத்திருக்கும் இளைஞர்களே எங்கள் இடைகள் உங்கள் கண்களில் படுகின்றதா? எங்களுக்கு முதுகு ஒன்று இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் ப்ரா அணிவதாக ஞாபகமிருக்கின்றதா? என்ற பல கேள்விகளை வாய்களாலே கேட்காமல் – 

தங்கள் அதீத நாகரிகத்தின் உடைகளால் கேட்டுக் கொண்டு முந்தநாள் புஷ்பித்த பெண்கள்கூடப் போவார்கள். நம்புவது கஷ்டம்தான். அவர்கள் கோயிலில் இருந்துதான் வருவார்கள். 

அட்வாண்ஸ் லெவல் படித்து கொப்பிகளும் சைக்கிள் களும் துணையாக இருந்து காலையிலும் மாலையிலும் ரியூஷன் ரியூஷன் என்று அலைந்து ரியூஷன் முடிய இந்த இடத்திற்கு முன்னரே காத்திருக்கும் எங்களிலும் வயது ழுதிர்ந்த பல்துறை விற்பன்னர்களான குருவானவர் களின்’ தாழ்படியும் சீடர்களானோம். 

எத்தனை சைக்கிள்கள் எத்தனை ஆட்கள். ஓமானுக்கு உழைப்பதற்கோ, கனடாவுக்கு அகதியாகவோ போகாமல் எத்தனை பேர் இந்த மண்ணும் இந்தக் காற்றின் சுவாச மும்தான் எங்கள் ஜீவாதாரங்கள் என்று நம்பிக் கொண்டு- 

சில வேளைகளில் இரவு ஏழெட்டு மணிவரை ரியூஷன் முடித்துக் கொண்டு வரும்போது ஒருவன் வாயால் சங்கூதுவான். இன்னுமொருவன் சேமக்கலம்,தேவாரம், திருவாசகம் என்று…பஜனைக்குப் பிழையில்லை. இண் டைக்கு இதைத் தெருவில் வேண்டாம் வீட்டில்கூடச் செய்வதற்குத் துணிவு இல்லை. 

கல்லைவிட்டு இறங்கி புல்வெளியில் படுக்க வேணும் என மனம் நினைக்கிறது. புல்தரையில் படுத்துக் கொண்டு வானத்தையே பார்க்க வேண்டும் போலத் தோன்றுகிறது. 

பதினைந்து பேருக்கு குறையாத எங்கள் திருக்கூட்டம் என்னமாதிரி சிதறுண்டு போனது. கோயிலுக்குப் போய் காஞ்சிபுரங்களையோ, கனகாம்பரங்களையோ பார்த் தால் என்ன? றீகல் தியேட்டரில் அரையிருட்டில் சிகரெட் புகைத்து, வெள்ளைக்கார கோமானும், சீமாட்டியும் படுக்கையில் புரள்வதை பார்க்கும் ஆர்வமுடன் போதாவது சரி, கல்யாண வீடுகளில் சபை நடத்தி சாதனை புரிவதிலாகட்டும் சரி எங்கும் எதிலும் நீக்கமற எல்லோரும்தான். 

கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன மாதிரி நான் மாத்திரம் இந்த பனை மரங்களுக்கு மத்தியில் இருந்து நிம்மதியாக ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியாத சூழ்நிலையில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு..நினைத்துப் பார்க்க வேடிக்கையாக இருக்கின்றது. 

மீண்டும் மீண்டும் பழைய நினைவுகள். அப்போது எங்களது குருவானவர்களாக இருந்த ஒருவருக்கு பழைய சினிமாப் படங்கள் என்றால் நன்றாகப் பிடிக்கும். பொழுது மங்கி சூரியன் தூரத்தே தெரியும் பளைகளின் அடிப்பகுதியில் மறைந்து கொள்ள அவரது பாட்டுக் கச்சேரி தொடங்கும். 

மெல்லிய குரலில் தமிழ் சினிமாவில் அப்போது நாங்கள் மிகவும் இனிமை வாய்ந்ததென நினைத்த பாடல் களை அவர் பாட நாங்கள் தாளம் போடுவோம். அப்படி ஒருநாள் பாடும்போதுதான் வசந்தியும் தாயும் அந்தப் பகுதியால் நடந்து வந்தார்கள். 

“பாடதேங்கோ 
அண்ணை பாடதேங்கோ” 

என்று சத்தம் போட்ட வண்ணம் நாதன் பனை மரத்துக்கு பின்னால் மறைந்தான். 

அவனது திடீர் அதிரடி நடவடிக்கைக்கு காரணம் புரியாமல் தடுமாறிப் பின்னர்தான் அவன் வசந்திக்குக் காதல் வலை வீசுகின்றான் என்று ஒருவன் சொல்ல, 

“நாதன் இஞ்சைதான் சிகரெட்டோடை நிற்கின்றான்” என்று கூட்டத்தில் ஒருவன் சத்தம் போட மிகுதிப் பேர் பெரிதாகச் சிரித்து சத்தம் போட்டார்கள். 

நாதனுக்கு அந்த நேரத்தில் கண்ணீரே வந்து விட்டது. கொஞ்ச நாட்கள் எங்கள் கூட்டத்தோடு சேராமல் கூடத் திரிந்தான். காதல் உறுதியான பின்னர் ஏதோ வீரதீர செயல்கள் செய்தவன் போல பழையபடி சேர்ந்தான். 

‘என் காதல் தெய்வீகக் காதல் அவள் இல்லாமல் உயிர் வாழ மாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்த நாதன் தான் முதலில் உயர்படிப்பு என்று சொல்லி லண்டன் போனான். போனவன் போனதுதான். 

மூன்று நாலு வருடங்களுக்கு முன்னர் லண்டனிலும் யாழ்ப்பாணத்திலும் தனித்தனியே வீடுகளும் ஏனைய ரொக்கங்களும் நகைநட்டுக்களாகவும் சீதனம் வாங்கி ரேப்ரெக்கோடரில் நாதஸ்வரம் ஒலிக்க லணடனில் தாலி கட்டினதாகக் கேள்வி. 

நாதன் லண்டன் போன சில காலத்திற்குள்ளேயே எங்கள் சூழலில் நாலைந்து பேர் லண்டன் போய் சேர்ந்து விட்டார்கள். இப்போது கண்டால் சிரிப்பதுகூட பெரிய வேலையாக நினைத்து, “உம்” என்று விட்டுப் போவார்களோ அல்லது “ஹாய்” என்பார்களோ தெரியாது. 

அவர்களின் வீடுகள் பெருத்து விட்டன. மனிதர்களும் மாறிவிட்டார்கள். முதல் நாள் வீடியோவில் பார்த்த பகலில் படம் என்ன மாதிரி என்று. அடுத்த நாள் வாயடித்து, இரவில் மீண்டும் வீடியோ ஏதாவது. உதவி கேட்டு வருபவர்களை தூரத்தே கண்டு விட்டு கதவு களைப் பூட்டிவேலைக் காரப் பெட்டை மூலம் வீட்டில் ஆட்கள் இல்லை என்று சொல்லியும், வசதியானவர்கள் வந்தால் வீட்டின் ஹால் வரை அழைத்து “கூல்றிங்ஸ்” சும் “சோட்டீற்ஸ்” சுமாக சந்தோஷம் பாடி… இந்த நடவடிக்கைளில் இதுவரை மாற்றம் இல்லை. 

கையில் ட்ரான்சிஸ்டர் ரேடியோ சகிதம் ஒருவன் சைக்கிளில் என்னை வினோதமாகப் பார்த்துக் கொண்டு போனான். ரேடியோவில் மாலை நேர செய்தியறிக்கை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. 

இப்போது நினைத்துப் பார்க்க சிரிப்பாக இருக் கிறது. “என்ன தம்பி யோசனை’ என்று அந்தப் பழக்க மான குரல் காதில் விழ திசை திரும்பினேன். வாழ்விழந் திருந்த நெற்றியில் திருநீற்றுப் பூச்சுடன் என் சகபாடி களால் 

ஒருவனான செந்தூரனின் தாயார். முகத்தில் புன்னகை இல்லை. நிரந்தரமான சோகம் குடிகொண்ட அதில் ஒருவகை அமைதி. “சும்மா” என பதிலை இழுக்க வேண்டியதாயிற்று. “என்ன சும்மா பொழுது நல்லாய் போட்டுது.தனிய இதில் இருக்கிறது சரியில்லை அதுவும் இந்த நேரத்தில்” என்றாள் அவள். 

செந்தூரனும் அவன் அம்மா போலதான். கதைப்பான் முகச்சாயல் கூட அப்படியேதான். எனக்கு செந்தூரன் தான் கதைப்பது போல இருந்தது. 

கணப்பொழுதில் அவன் நினைவு வந்தது. எத்தனை கனவுகளைச் சுமந்து கொண்டு திரிந்தவன், அந்தக் கனவு களையெல்லாம் அப்படியே காற்றில் பறக்க விட்டு, வேலை தேடியும் போகாமல், அகதியாகவுய் போகாமல் போய்ச் சேர்ந்து விட்டான். 

அதிர்ந்து பேசத் தெரியாமல் எல்லோரையும் நேசித்து, கஷ்டப்பட்டவர்களுக்காக கண் கலங்கி, மற்றவர்கள் துயரத்தில் தானும் பங்கு கொடுத்து என்னமாதிரிப் போனான். 

எங்கள் அணியில் இரண்டாவது வெளியேற்றம் அப்படித்தான் நடந்தது. சொல்லாமல், கொள்ளாமல் செந்தூரன் மறைந்து போனான். பின்னர் இரண்டு மூன்று பேர் போனார்கள். 

நெருக்கடி மிகுந்த அந்த நேரத்தில் நாங்கள் இந்தப் பகுதிக்கு வருவதை நிறுத்திக் கொண்டோம். புறப்பட்டாலும் வீட்டில் விட மாட்டார்கள். அந்த நேரத்தில்தான் அவர்கள் மறைந்து போனார்கள். 

இரண்டு வருடத்தின் பின்னர் செந்தூரனைக் கண்ட போது அவன் முகத்தில் புதிய பொலிவு பிறந்திருந்தது. முகத்தில் மட்டுமல்ல மக்களுக்காக வாழத் தொடங்கிய அவனை அப்போதுதான் புரிய ஆரம்பித்தோம். 

“இண்டைக்கு வேலைக்குப் போகல்லையே” செந்தூர னின் அம்மாதான் கேட்கின்றார். 

“போய் வந்திட்டன் சைக்கிளில் வந்தாப் போல பழைய இடத்தில் இருந்து பாக்க வேணும் போல இருந்தது. அதுதான் என்று சொல்லி சமாளிக்க – 

“கண்டது நல்லதாய் போச்சு. நான் சொல்லி அனுப்ப இருந்தனான். தம்பியின்ரை ஆண்டுத்திவசம் வாற புதன் கிழமை கட்டாயம் வரவேணும். அவன்ரை சிநேகிதரில் உன்னைப்போல இரண்டொரு பேர்தானே ஊரோடை நிற்கிறியள்” என்றாள் அவள். 

செந்தூரன் செத்துப்போய் ஒரு வருடமாகி விட்டது என்பதை நம்ப முடியாமல் இருக்கிறது. அவன் மரணித்து போனதும் ஊரே அழுது கொண்டு ஊர்வலம் போனது. நேற்றுப் போல நெஞ்சில வேதனை உண்டானது. கண் களில் கணணீர் வந்தது. 

இளமைக் காலத்தில் எத்தனை கூத்தடித்த எங்கள் மத்தியிலும் சில செந்தூரன்கள். நினைத்துப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. 

செந்தூரனின் அம்மா விடை பெற்றுப் போனார். எனக்குத் தெரியக் கூடிய காலத்திலிருந்து அவனின் அம்மா உடுப்பது அதே வெளிறிய சாறிதான். மெலிந்து போன உடலுடன் கூட இப்போது சோகம். வீட்டுக்குப் போனா லும் அதே ஓலை வீடு. கறையான் அரித்த வேலிகள்.வயது முதிர்ந்த கன்னிப் பெண்களான செந்தூரனின் சகோதரிகள். 

பனை மரங்கள் ஊடாக மெல்லிருள் பரவத் தொடங்கி விட்டது. மேலும் இருந்து யோசிக்கக் கவலைகள்தான் மிஞ்சும். 

பனையில் சாத்தியிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் உருட்டத் தொடங்க எதிரே ஒரு சைக்கிள் முன் பாரில் ஒரு பெண் பிள்ளையுடன் மெலிந்த தாடியும் வாடிய முகமுமாக. வடிவாகப் பார்த்தால் சிவலோகன். 

“டேய் சிவலோகன் என்று என்னை மறந்து சத்தம் போட “இன்னா மச்சி” என்ற அவன் குரல் என்னைத் திகைக்க வைத்தது. பேச்சுக்கூட மாறி விட்டதா! 

அவன் சைக்கிளை நிறுத்தி என் அருகில் வந்தான் ‘என்னடா உனக்கு நடந்தது” என்று கேட்க. 

அவன் சிரித்தான். அது வேடிக்கைச் சிரிப்பா? கவலைச் சிரிப்பா என்று புரியவில்லை. 

“போன கிழமைதான் வந்தனான் மச்சான்” என் று. சொன்ன அவனில் வறட்சி தெரிந்தது. அழுக்கான உடை கள் “பெரிதாக யோசிக்காதே மச்சான் அகதியாய் கப்பலில் வந்தனான். உன்னை வந்து சந்திக்கத்தான் நினைச்சனான். ஆனால் வசதிப்படேல்லை கப்பலில வரேக்கையே பிள்ளையளுக்கும் மனுசிக்கும் சுகமில்லை.” 

நான் ஆச்சரியமடைந்தேன். 

“நான் சொல்லுறது எல்லாம் உனக்குப் புதினமாய்த் தான் இருக்கும். என்ன செய்யறது மச்சான் என்ரை தலை விதி” என்றான். எது தலைவிதி என்று நான் கேட்க வில்லை. 

“இது என்ரை மூத்த பிள்ளை ஐந்து வயதாகிறது. கடைசிப் பிள்ளைக்கு மூன்று மாதம் இடைவெளியில் வேறை இரண்டு” என்று அவன் சொன்னது பகிடி போலத் தெரியவில்லை. 

எங்கள் அணியில் இருந்து மூன்றாவது வெளியேற்றம் சிவலோகன் போன்றவர்கள் புறப்பட்டபோது நடந்தது. அகதிகள் என்ற பெயரோடு போய்ச் சேர்ந்தவர்களோடு சிவலோகன் போன்றவர்களும் போய்ச் சேர்ந்தார்கள். 

சிவலோகனுக்கு எதிலுமே அக்கறை இல்லை. குடும் பத்தில் கூடப் பெரிய பொறுப்பும் இல்லை. மேற்கொண் டும் படிக்காமல் தொழிலும் தேடாமல் சிகரெட்டும் இடைக்கிடை, சாடையாகத் தண்ணியும் அடிச்சுக் கொண்டு திரிந்த அவன் ஊரில் நிலமை மோசமாகிய போது ஓடித் தப்பி விட்டான். 

“நீ கலியாணம் முடிச்சிட்டியே” என்ற அவனைப் பார்த்துச் சிரித்தேன். 

”நீ அப்படியே இருக்கின்றாய் போல நான் போய்ச் முடிச்சன் மச்சான் சேர்ந்த உடனே கலியாணம்தான் கடைசியில் கண்ட மிச்சம் நாலு பிள்ளையள்தான்” என்று சொன்ன அவன் கடுமையாக இருமினான். 

“என்ன செய்யிறது மச்சான் போன உடனே. ஒரு அகதி முகாமிலதான் இருந்தனான். வேலை ஒண்டுமில்லை. ஒரு பெட்டை கண்ணுக்கு முழிப்பாய் தெரிஞ்சாள் கண்ணைக் கொடுத்தன். பிறகு அவசரப்பட்டுப்போனேன். தலையைச் சுத்தேலாமல் போட்டுது. சிம்பிளாய் கலியாணம் முடிச்சு வீட்டையும் அறிவிச்சன். அவ்வளவுதான் வீட்டுக்காரர் நான் கலியாணம் முடிச்ச பகுதியைப் பற்றி விசாரித்திருக்கினம். இடம் அவைக்குப் பிடிக்கேல்லை. அதோடை. எனக்குக் கடிதம் எழுதறதை விட்டிட்டினம். நானும் அக்கறைப்படேல்லை! நாங்கள் செம்பு தண்ணி எடுக்கக்கூடிய இடத்தில் அவன் கலியாணம் முடிக்கேல்லை எண்டு அப்பா சத்தம் போட்டாராம். நான் என்ன செய்ய மச்சான்” என்று சொல்லி அவன் தொடர்ந்து இருமினான் 

இப்ப கப்பலில் வந்தவுடனே தந்த காசு இரண்டா யிரம் வரேக்க கொண்டு வந்த கொஞ்சக் காசோடைதான் இருக்கிறன். இனி இருக்க ஒரு இடம் தேட வேணும் சீவிக்க ஒரு வேலை தேட வேணும்” 

”இஞ்சை வந்து உங்கடை வீட்டை போகேல்லையே. இப்ப எங்கை இருக்கிறாய்” என்று கேட்டேன். 

“மனுசி வீட்டுக்காரரோடைதான் இருக்கிறன். ஆனால் அங்கை இருக்க இடம் காணாது. அதுகளோடை ருக்கவும் ஏலாது எந்த முகத்தோடை நான் எங்கடை வீட்டைப் போறது. போனாலும் அவை என்னையும் மனிசியையும் பிள்ளைகளையும் சேர்ப்பினமோ. ஏன் பிரச் சினைப்படுவான், ஏதாவது பார்ப்பம்” 

நான் அவனை நினைத்து பரிதாபப்படுவதா, வேத னைப்படுவதா என்று தடுமாறினேன். 

“அவனவன் என்னென்ன மாதிரி அங்கையிருந்து கனடா, ஜேர்மனி, அவுஸ்ரேலியா என்று மாறினாங்கள். நான் பரதேசி ஆனதுதான் மிச்சம் என்றான். 

”சரி சரி உதுகளை இப்ப யோசிச்சு என்ன செய்யிறது. இனி நடக்கிறதைப் பார். இப்ப எங்கை போறாய்.” 

“இப்ப இவளுக்கு உதில இருக்கிற டாக்குத்தரிட்டை மருந்து எடுக்க வந்தனான்” என்று சொன்னான். 

அந்த அழகான சின்னப்பிள்ளை தன் சுழலும் வட்டக் கண்களால் மருட்சியுடன் என்னைப் பார்த்தது 

“தங்கச்சிக்கு என்ன பெயர்” என்று கேட்டேன். 

பிள்ளை சொல்லாமல் சிவயோகனைப் பார்த்தது. 

“சொல்லன் பெயரைக் கேட்டால்” என்று பிள்ளையைப் பார்த்து எரிந்தான் அவன். 

எனக்கு ஆத்திரம் வந்தது. 

“சொலலுங்கோ அச்சாப்பிள்ளை” என்றேன்.

“ஜெயமாலினி” என்று கீச்சிட்ட குரலில் பிள்ளை சொல்ல. 

“ஏண்ரா டிஸ்கோ சாந்தி என்று வைக்காதேயன்” என்று சிவயோகனைப் பார்த்துக் கேட்க வேணும் போல இருந்தது. கேட்டும் பிரயோசனப்படாது. 

முழுமையாக இருள் சூழ்ந்து விட்ட நிலையில் நேரம் போனது தெரியாமல் அவனோடு பொழுது போய் விட்டதை உணர்ந்தேன். 

சட்டென்று இயல்பான உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. இனி வீடு போய் சேருவது பற்றி மனம் பதற் றப்பட ஆரம்பித்தது. 

“பொழுதுபட்டால் றோட்டில் போறது பிரச்சினையே மச்சான்” என்றான் சிவலோகன். 

“உனக்குப் பிள்ளை இருக்குத்தானே, உனக்குப் பிரச்சினை இல்லை” என்றேன் நான். 

இருளில் கரும் பூதங்களாகத் தெரிந்த பனை மரங்கள் “ஊய்” உன்ற சத்தத்துடன் வெருட்ட ஆரம்பித்தன. 

– வீரகேசரி, 31-08-1988.

– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *