கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 24, 2025
பார்வையிட்டோர்: 10,088 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னமோ போ, நான் எவ்வளவு பச்சையாக இருக்கேன், இருப்பினும் சீக்கிரம் காய்ந்து விடுகிறேன்” என்றது கீரை.

“ஆமாம். உனக்கு வைட்டமின் அதிகம் தான், உன்னைச் சாப்பிட்டால் கண் தொந்தரவு கிடையாது. என்ன பயன், நீதான் காய்த்து விடுகிறாயே. என்னைப் பார்” என்றது வெண்டைக்காய்.

“உனக்கு என்ன, உன்னைச் சாப்பிட்டால் முளை வளரும், கணக்கு நன்றாக வரும். ஆனால் உன் குழகுழப்பு! சீ, அதான் பிடிக்காது. என்ன இளமை இருந்து என்ன பயன்? என் உடல் எவ்வளவு நீளம் பார்த்தாயா!” என்றது புடலங்காய்.

“ஏ, பாம்புக் காயே! உன்னை விஷம் தீண்டினால் கசந்து விடுவாய். ஆனால் உன்னைச் சாப்பிட்டால் தோல் வியாதியே வராது என்பது உண்மை. என்ன பயன், காற்று அடித்தால் ஓடிந்து விடுவாய். என் கவர் பார்த்தாயா!” என்றது தகதக தக்காளி.

“ஆமாம். உனக்கு வைடமின் அதிகம். உடம்புக்குக் குளுமை.அது என்னமோ உன் ருசி தனிதான். ஆனால் நான் மேலே விழுந்தால் நீ என்ன ஆவாய்?” என்று கேலி செய்தது பூசணி.

எல்லாக் காய்களும் விழுந்து விழுந்து சிரித்தன, “ஏய் பூாணி நீ பார்க்கத்தான் குண்டாக இருக்கிறாய். உன் உடம்பை வெட்டினால் நீராகப் போய்விடும் என்ன பயன்? என்னைப் பார், என் உடல் கலர் பார்!” என்றது பீட்ரூட்.

“அடாடா! வாங்க சிகப்பு ராஜா! உன்னை உண்டால் ரத்தம் பெருகும். உடலுக்கு நல்லதுதான், ஆனால் உன் தோற்றமே பிடிக்கவில்லை” என்றது சேனைக் கிழங்கு.

“ஐயா, சேனையாரே! உன்னிடம் பத்து வைட்டமின் சத்து இருப்பது உண்மைதான், ஆனால் உன் தோற்றமே பிடிக்கவில்லை. நான் தான் உசத்தி” என்றது வெங்காயம். “நான் இல்லாமல் எந்தப் பதார்த்தத்திலும் ருசியில்லை, நானே காய்கறிகளின் ராஜா!” என்றது.

”போதுமே! உன்னை உரித்தால் என்ன வரும்? உறிக்க உறிக்க உறிந்தே விடுவாய் நீ” என்று ஏளனமாகத் தள்ளி விட்டது பாகற்காய், “என்னைப் பார். என் கலர் என்ன அழகு என்ன! என்னைவிடச் சிறந்தவர் யார்?” என மற்ற காய்கறிகளையும் எட்டி உதைத்தது. மற்ற காய்கறிகளும் சேர்ந்து சண்டை போட்டன.

எல்லாம் காட்டுக்குச் சென்று தவம் செய்தன, பாகற்காயும் வெங்காயமும் கடைசி வரை தவம் செய்தன. விஷ்ணு பெருமாள் தோன்றி “என்ன வேண்டும்?” என்றார்.

உடனே பாகற்காய், “அப்பனே எந்தக் காய்கறியும் அடையாத சக்தி எனக்கு வேண்டும். எல்லோரும் என்னையே உண்ண வேண்டும், மற்றவை அழிய வேண்டும்” என்றது.

“இதோ பார், உனக்கு இருக்கும் ஆணவத்தால் நீ கசப்புத் தன்மை அடைவாய். ஆனால் மற்றவை அழிய வேண்டும் என்று நினைப்பதால் உனக்குக் கசப்புத் தன்மை விலகாது” என்றார்.

அப்போது வெங்காயம் அவரைப் பணிவாக வணங்கியது!. விஷ்ணு, “வெங்காயமே! நீ ஏழைகளின் நண்பன், நான் உன்னிடம் என்றும் இருப்பேன், உன்னை வெட்டிப் பார்த்தால் சங்கு சக்கரம் தோற்றம் தெரியும். உன்னை அடைய வேண்டுபவர்கள் கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டு அடைவர். ஆம், ஆண்டவனிடம் சேரக் கஷ்டப்பட்டுத்தான் சேர வேண்டும். நீ என்றும் அழியாப் புகழ் பெறுவாய், குளுமையான சக்தி, எளிமையான தோற்றம் பெறுவாய், உன்னால் பல விதத்தில் உபகாரம் உண்டாகட்டும்” என்று கூறினார்.

ஆமாம். வெங்காயத்தைக் குறுக்கு நெடுக்காக வெட்டிப் பாருங்கள். சங்கு சக்கரம் தெரியும். இதனால்தான் விசேஷ காலங்களிலும், பண்டிகை காலங்களிலும் சிலர் இதை உண்பது இல்லை. சில வைனவர்கள் இதை உண்ணாததற்கும் இதுதான் காரணம்.

– மழலை மலர், மங்கையர் மலர், 1982-07-01.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *