வீண் அவா
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 7
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரிலே தம்பியப்பன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பொருட் செல்வம் மிகுதியாக இல்லை. தந்தை தேடிய பொருளாக ஐந்நூறு ரூபாக்கள் தாம் கிடைத்தன. அப்பொருளை முதற் பொருளாக வைத்துக்கொண்டு கண்ணாடிப் பொருள்கள் வாங்கி வாணிகம் செய்து முன் னுக்கு வரலாம் என்று முடிவு செய்தான். ஐந்நூறு ரூபாக் களுக்கும் கண்ணாடிப் பொருள்களை வாங்கி ஒரு பெரிய கூடையில் வைத்துக் கடை வைத்தான்.
கடையில் உட்கார்ந்த தம்பியப்பனுடைய மனம் வீணான அவாவிலும் எண்ணத்திலும் ஓடியது. “நான் இந்தப் பொருள்களை இரட்டிப்பான விலைக்கு விற்றால் ஆயிரம் ரூபா கிடைக்கும். பிறகு ஆயிரம் இரண்டாயிர மாகும். இப்படியே செல்வம் பெருகிக் கொண்டிருக்கும். நான் பெரிய வீடு வாசல்களைக் கட்டிக் கொண்டு மிகுந்த சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருப் டு மிகுந்த சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பேன். செல்வத்தைக் களவு செய்வதற்குக் கள்ளர்கள் இரவிலே வருவார்கள். அவர்களைத் தடியை எடுத்து நன்கு புடைப்பதோடு, ‘ஓடுங்கள் ஓடுங்கள்’ என்று சொல்லி இவ்வாறு காலாலும் பலமாக. உதைப்பேன் என்று எண்ணமிட்டுக்கொண்டே எதிரில் இருந்த கூடையை ஓங்கி உதைத்தான். கண்ணாடிப் பொருள்களெல்லாம் உடைந்து நாசமாயின.
தம்பியப்பன் வீண் எண்ணத்தில் இருந்து திடீ ரென்று விழித்துக்கொண்டான். தம்பியப்பனுடைய கதையைக் கேட்டவர்கள் விழுந்து விழுந்து நகைத் தார்கள். கைப்பொருளையும் இழந்துவிட்ட தம்பியப்பன் பிறகு பலவகையான தொல்லைகளை யடைந்து வருந்தித் திரிந்தான்.
“உண்பது நாழி உடுப்பது நான் குமுழம்
எண்பது கோடி நினைந் தெண்ணுவன—கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.”
(உரை) உண்பதுநாழி – சாப்பிடுவது ஒரு நாழி அரிசிச் சோறேயாகும், உடுப்பது நான்கு முழம்-அரையிலே கட்டுவது நான்கு முழ வேட்டியேயாகும். (இவ்வாறாகவும்), நினைந்து எண்ணுவன எண்பதுகோடி-நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாக இருக்கின்றன, (ஆகையினால்) கண்புதைந்த- மனக் கண் குருடாக இருக்கிற, மாந்தர் குடிவாழ்க்கை – மக்களின் குடி வாழ்க்கையானது, மண்ணின் கலம்போல மட்கலம்போல, சாம்துணையும் இறக்குமளவும், சஞ்சலமே- துன்பந்தருவதாகவே இருக்கிறது.
(கருத்து.) மக்கள் எண்ணும் வீண் எண்ணமானது அவர்கள் சாகும் வரையிலும் அவர்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிப்பதாக இருக்கிறது.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026