வீட்டுக்கு ஒரு….! – ஒரு பக்க கதை






மழை வேண்டுமானால் வீட்டுக்கு ஒரு மரம் நட வேண்டும் என்று ஒரு காலத்தில் தொகுதி மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்த அந்த முன்னாள் அமைச்சரின் சட்டசபைத் தொகுதியின் இடைத் தேர்தலும், இந்த பாராளுமன்றத் தேர்தலோடு வந்து விட்டது! அதனால் அவர் குட்டி போட்ட பூனை மாதிரி தொகுதியில் தினசரி வலம் வந்து கொண்டிருந்தார்.
அவர் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டாஸ்மாக் கடை இருந்தது. அதை உயர் நீதி மன்ற உத்திரவுப் படி மூட வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. மக்களின் எதிர்ப்பை சமாளித்து அந்த டாஸ்மாக் கடையை ஊருக்குள் திறந்து வைத்த ஆளும் கட்சி பிரமுகரும் அவர் தான்!
இப்பொழுது அவர் அந்தக் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், ஒரு கிழவி ஓடி வந்து “ஐயா!….நீங்க போன முறை வந்தபொழுது வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொன்னீங்க!… இப்ப நாங்க எல்லோருமே வீட்டிற்கு ஒரு……..” என்று ஆரம்பித்து முடிப்பதற்குள், அவர் கிழவியைக் கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தபடி சொன்னார் தலைவர்.
“அப்படியா!…ரொம்ப சந்தோஷம் பாட்டி!.” என்றார் சிரித்துக் கொண்டே!
“எங்களுக்கு அதில் சந்தோஷம் இல்லயே தலைவரே!…நீங்க நடு ஊருக்குள் டாஸ் மாக் கடையைக் கொண்டு வந்து திறந்து வைத்ததால்,.நாங்க இந்த மூணு வருசத்திலே வீட்டிற்கு ஒரு குடிகாரனைத்தான் வளர்த்து வச்சிருக்கிறோம்!…” என்றாள் கிழவி.
– 1-6-2019 இதழ்