வீட்டுக்குப் போலாம்




(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அலைபேசியின் சிணுங்கல் கேட்டதும் எடுத்துப் பார்த்தேன். அழைப்பு அபிநயாவிடமிருந்து

”அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டா. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. இந்த ஊரிலே எனக்கு யாரையும் தெரியாது. வித்யா, நீ சீக்கிரம் வாடி. அப்பாவை ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிண்டு போகணும்” பதட்டத்துடன் பேசினாள்.
”இதோ வந்துட்டேன். ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டு வரேன்.. தயாராய் இரு அபி” என்று சொல்லிவிட்டு குரோம்பேட்டையிருக்கும் அபிராமி ஆஸ்பிட்டலுக்கு போன் செய்து உடனே ஆம்புலன்சை அனுப்ப ஏற்பாடு செய்து விட்டு என் பெரியப்பா பெண் அபிநயா வீட்டுக்குக் கிளம்பினேன்.
என்னைப் பார்த்ததும் ”.வந்துவிட்டாயா வித்யா? .எனக்கு மூச்சு வந்தது போல் இருக்கிறது. அப்பா மயங்கி விழுந்துவிட்டார். அவருக்குச் சிறுநீரக கோளாறுதான் காரணமாய் இருக்கும்.. இன்னைக்கு காலையிலிருந்து மிகவும் சோர்ந்து காணப்பட்டார்” என்றாள் அபி.
பெரியப்பாவைப் பார்த்தேன். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். மூக்கில் கையை வைத்துப் பார்த்தேன் . மூச்சு வந்தது. உயிர் இருக்கிறது என்று நிம்மதியாய் பெருமூச்சு விட்டேன்.
”ராஜி எங்கே?” என்றேன். ராஜி அபிநயாவின் தங்கை.
“அந்த அறைக்குள் உட்கார்ந்து சுவத்தைப் பார்த்துண்டுருக்கா.”
உள்ளே பார்த்தேன். ராஜி தரையில் அமர்ந்து சுவத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
”ராஜி, என்ன பண்ணிண்டு இருக்கே?”
”என்ன பண்ணிண்டு இருக்கே. வெவ்வெவ்வே….” ராஜி அழகு காண்பித்தாள்.
எனக்கு அவள் மேல் கோபம் வரவில்லை. நான் சிரித்தேன்.
ராஜி.. நாங்க ஆஸ்பித்திரிக்கு போய் விட்டு வந்து விடுகிறோம். ஜாக்கிரதையாய் இரு.
“அப்பாவை உடம்பு சரி ப்ண்ணிட்டு கூட்டிட்டு வா. ல்லேன்னா உன்னைச் சும்மா விடமாட்டேன் “ என்றாள் ராஜி கண்ணை உருட்டியவாறே.
”அவளுக்கு ஒண்ணும் தெரியாது . அவ சொல்றது எதையும் காதிலே போட்டுக்காதே ”என்றாள் அபி.
ஆம்புலன்ஸ் வந்து விட்டது. சித்தப்பாவை ஆம்புலன்சில் ஏற்றி விட்டு நானும் அபியும் அதிலேயே ஏறினோம்.. ராஜி மாடி பால்கனியிலிருந்து எங்களைப் பார்த்து டாடா காண்பித்தாள்.
என் நினைவு பின்னோக்கிச் சென்றது.
பெரியப்பா பாம்பேயில் ஒரு தனியார் கம்பெனியில் பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். எனக்கு நிறைய செஞ்சுருக்கார். பத்து வயசிலே என் அப்பாவை பறி கொடுத்துட்டு நின்னபோது என் படிப்புச் செலவை அவர்தான் ஏத்துண்டார். என் கல்யாணத்தின்போது மாங்கல்யம் கூறைப் புடவை வாங்கிக் கொடுத்தார்.
குள்ளமாய் இருப்பார். பருமனான உடல். எண்பத்து ஆறு வயது ஆகிறது. வாக்கிங் ஸ்டிக் கூட இப்போதுதான் உபயோகப் படுத்த ஆரம்பித்திருக்கிறார்.
மூன்று வருடங்களுக்கு முன் பெரியம்மா ஹார்ட் அட்டாக்கில் மேலே போனதிலிருந்து பிறகு அவர்தான் பசங்களைப் பார்த்துக் கொண்டார். முதல் பெண் அபிநயா. கல்யாணம் ஆகி கணவனை இழந்தவள். குழந்தை இல்லை. அறுபது வயது ஆன சீனியர் சிட்டிசன். சர்க்கரை, பி.பி., முட்டி வலி . தைராய்ட் பிரச்சனை இத்யாதி, இத்யாதி…… இரண்டாவது பெண் ராஜி. மன நிலை சரியில்லாதவள். இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரியப்பா பாம்பே வீட்டை ஒரு கோடிக்கு விற்று விட்டு சென்னை வந்து செட்டில் ஆனார். . பம்மலில் வீடு வாங்குவதற்கு நான் உதவி செய்தேன். ”உன் பெண் கல்யாணத்துக்கு வைச்சுக்கோனு இரண்டு லட்சம் கொடுத்தார். அவரை மாதிரி நல்ல மனசு யாருக்கு வரும் ? அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.”
ஆறு மாசத்துக்கு முன் பெரியப்பாவுக்கு சிறுநீரக பிரச்சனை. ஆஸ்பத்திரியில் நான்கு நாட்கள் இருந்தார். இப்போது மறுபடியும் அந்தப் பிரச்சனை வந்திருக்கிறது. .
ஆஸ்பத்திரியில் பெரியப்பாவை ஐ.சி. யு வில் அட்மிட் செய்து விட்டு . நான் அன்று முழுவதும் ஆஸ்பிட்டலில்தான் இருந்தேன்.
அடுத்த நாள் முதல் ஆபிஸ் போவதற்கு முன்னால் காலையில் போய்ப் பெரியப்பாவைப் பார்த்துவிட்டு போவேன்.
அன்று நான் சீக்கிரமாய் வந்து விட்டேன். அபி வீட்டுக்குப் போய் விட்டு வரும்வரை காத்திருந்தேன்.
அபி சோகமாய் வந்தாள்.
“ஏதாவது பிரச்சனையா? ஏன் உன் முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது?”
”எல்லாம் ராஜியின் பிரச்சனை . அவள் ஒண்ணுமே புரிஞ்சிக்க மாட்டேன் என்கிறாள். சாப்பாடு, தூக்கம், ரேடியோ கேட்பது இதெல்லாம்தான் அவள் வாழ்க்கையாய் இருக்கிறது. நேற்று வீட்டிலே சாதத்தை நிறைய வடிச்சு வைக்கிறாள்.. ஏன் அப்படிச் செய்கிறாய்? என்று கேட்டால் என்னை முதுகில் போட்டு அடிக்கிறாள். சில சமயம் ரொம்ப வயலண்ட் ஆகி விடுகிறாள். என்ன செய்வது ? என்றே தெரியவில்லை. அவளுக்கு அப்பா சின்ன வயதிலிருந்தே செல்லம் கொடுத்து கெடுத்துட்டார். அவளையும் பார்த்துண்டு ஆஸ்பத்திருக்கும் வந்துண்டு போக முடியல்லே.”
”ராஜியை ஒரு நல்ல சைகாலஜிட் கிட்டே காண்பிக்கலாமே.”
“எல்லாம் அப்பாதான் ஏற்பாடு செய்யணும். அவர்தான் மாத்திரையை தினம் காபியில் போட்டுக் கொடுத்து துங்க வைச்சுடறார். பத்து வருஷமாய்தான் ராஜிக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. அது இருக்கட்டும், அப்பா என் கிட்டே சொல்லியிருக்கார். ஆஸ்பத்திரியில் ரொம்பச் செலவு செய்யக் கூடாது. வீட்டிலேயே வைச்சுண்டு வைத்தியம் பார். எனக்கு ஏதாவது ஆயிடுத்துன்னா நீயே காரியத்தை செஞ்சுடுன்னு சொல்லிருக்கா.”
‘அவர் பேசற நிலையில் இல்ல . அவர் உடம்பு குணம் ஆற வரையில் இந்த ஆஸ்பிடலில் இருக்கட்டும்.”
இரண்டு நாள் கழித்தும் பெரியப்பா இரண்டாவது மாடியில் தனிஅறைக்கு மாற்றப்பட்டார். அவருக்குத் தனியாக மானிடர் வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் உறங்கிய நிலையிலேயே இருந்தார்.. கண் விழித்தால் பேச முயற்சி செய்வார். ஆனால் பேச வராது.
அபி ராஜியை வைத்துச் சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். வீட்டில் அவள் தனியாய் இருக்கிறாள். சாக்லெட் அதிகம் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாள் என்று புலம்பினாள். ஆஸ்பிட்டலையும் பார்த்து வீட்டையும் பார்ப்பது மிகவும் சிரமமாயிருக்கிறது. அப்பாவை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விட வேண்டும் என்று ஆத்திரப்பட்டாள்.
“நான் போய் குளிச்சிட்டு சாப்பிட்டு வந்துடறேன். அது வரை நீ இங்கே இரு” அபி ஆஸ்பிட்டலிருந்து கிளம்பினாள்.
பெரியப்பா கண் திறந்து பார்த்தார். பெரியப்பா, பெரியப்பா என்று கூப்பிட்டேன். அவரால் பேச் முடியவில்லை.
அபி வந்து விட்டாள் அவளுடன் ராஜியும் வந்திருந்தாள். பச்சை கலரில் சுடிதார் போட்டிருந்தாள்.
பெரியப்பா படுத்திருந்த கட்டிலின் அருகே போய் அவரைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அப்பா நான் வந்துட்டேன். புது சுடிதார் போட்டுண்டு வந்திருக்கேன். வீட்டுக்குப் போகலாம் வாங்க. உங்களுக்கு சாக்லெட் வாங்கி வைச்சிருக்கேன் “ என்று குழந்தையைப் போல் சொன்னாள்.
“அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அழைச்சிண்டு போகலாமென்று ராஜியும் என் கூட வந்திருக்கிறாள். டாக்டரைப் பார்த்துப்பேசணும்” என்றாள் அபி.
”டாக்டர் சொல்லும் போதுதானே டிஸ்சார்ஜ் ஆகணும். நம் இஷ்டம் போல் வீட்டுக்குப் போய்விட முடிய்மா? உனக்குத் தெரியாது. இன்னும் ஒரு வாரம் ஆனாலும் பரவாயில்லை. டாகடர் டிஸ்சார்ஜ் செய்யும்போது வீட்டுக்குப் போலாம்” என்றேன்.
”அவ்வளவு நாள் என்னால் பொறுக்க முடியாது. நாலு நாளுக்கே ஒரு லட்சம் ஆகி விட்டது . என்னிடம் இருந்த பணம் எல்லாம் செலவு ஆகி விட்டது. அப்பாவுக்குப் பணத்தைச் செலவு செய்தால் பிடிக்காது. அப்பா படிபடியாய் முன்னுக்கு வந்தவர். என் கிட்டே. ”பணத்தைச் செலவு பண்ணாதே. எனக்கு ஏதாவது ஆகி விட்டால் நேரா சுடுகாட்டுக்கு எடுத்துண்டு போய் விடு. சங்கர் சாஸ்திரிகளிடம் போன் பண்ணிச் சொல்லு. அவர் இறுதி சடங்குகளைப் பண்ணுவார். அதற்கான பணம் அவரிடம் கொடுத்து வைத்திருக்கிறேன் “ என்று சொல்லியிருக்கார். ஒருக்கால் அப்பாவுக்கு உடம்பு குணம் ஆகிவிட்டால் நீ ஏன் என்னைக் கேட்காமல் அவ்வளவு பணத்தை செலவு செஞ்சே ? என்று திட்டுவார். “
“அவர் இருக்கிற நிலையிலே அவர் எதுவும் கேட்க மாட்டார். அவரை நாம் தான் பார்த்துக்கணும் . அவர் பணத்திலிருந்து அவர் மருத்துவத்துக்கு நீ செலவு செய்றே. நீ பணம் செலவு பண்ண வேண்டா. எவ்வளவு ஆனாலும் நான் செலவு செய்கிறேன்.பெரியப்பா கடைசிக் காலத்திலே நிம்மதியாக இருக்கட்டும்.”
நீ எதுக்கு என் அப்பாவுக்காகச் செலவு செய்யறேன்னு சொல்றே. இதிலே ஏதோ வில்லங்கம் இருக்கிறது. என் அப்பா, நான் ஏதாவது செஞ்சுக்கிறேன். என் விஷயத்திலே நீ தலையிடாதே. வாயை மூடிண்டு சும்மா கிட. நான் இப்பவே டாக்டர் கிட்டே போய் டிஸ்சார்ஜ் பண்ண ஏற்பாடு செய்றேன்” என்று கோபத்துடன் அறையின் கதவருகே சென்றாள்.
நானும் அவள் அருகே விரைந்து சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு “அபி, நான் இன்னைக்கு நல்ல நிலைமையிலே இருக்கிறதுக்கு காரணம் பெரியப்பாதான். அவருக்கு உடம்பாலேயும் பணத்தாலேயும் எவ்வளவு செஞ்சாலும் தகும். என் செய்கையில் எந்த உள்நோக்கமும் கிடையாது. என்னை நம்பு “ என்று கெஞ்சினேன்.
“போடி சரிதான். நீ என்ன சொன்னாலும் நா நம்ப மாட்டேன். எங்க சொத்தை நீ அபகரிக்க பார்க்கறே.. என்னைத் தடுக்காதே.. .என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, ஹையா, அப்பாவைக் கூப்பிட்டுண்டு வீட்டுக்குப் போலாம்” என்று ராஜியிடமிருந்து உற்சாகக் குரல் வந்தது.
திரும்பிப் பார்த்துத் திடுக்கிட்டேன்.
பெரியப்பாவின் மூக்கில் வைத்திருந்த டியூப், கையில் போட்டிந்த டியூப், வாயில் போட்டிருந்த கவசம் எல்லாம் பக்கத்தில் விழுந்து கிடந்தது. அவரைக் கட்டிலில் சாய்ச்சு உட்கார வைச்சுட்டு சிரிச்சுண்டே நிக்கறா ராஜி..
“அடிபாவி…” பதற்றத்துடன் கட்டிலுக்கு அருகே ஓடினேன். கட்டிலின் மேல் ஏறி உட்கார்ந்து பெரியப்பாவின் தலையை எடுத்து என் மடியின் மீது வைத்துக்கொண்டேன்.
அபி ராஜியை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள். அடி கூறு கெட்ட் கழுதை ஏண்டி அப்படி பண்ணே அவருக்கு ஓண்ணு ஆச்சுன்னா யாரு அதுக்கு பொறுப்பு…
என் மடியில் படுத்திருந்த பெரியப்பாவின் முகத்தில் திடீரென்று பிரகாசம் வந்தது. விளக்கு அணைவதற்கு முன் பிரகாசமாய் எரிவது போல் மனிதன் மறைவதற்கு முன் முகம் பிரகாசிக்கிறதோ என்று தோன்றியது. கண்களில் நீர்த்துளி தளும்ப குனிந்து அவர் காதருகில் மெதுவாக ‘ நாராயணா, நாராயணா, நாராயணா,
நாராயணா என நாமத்தை ஓதினேன்.
அவர் வாயிலிருந்து ‘ம்ம்’ என்ற சப்தம் மெதுவாக கேட்டது. அது உயிரின் ஒலி என்று
உணர்ந்தேன். அவர் வாய் பிளந்தது. அதே சமயம் அவர் முகத்திலிருந்து ஒரு ஒளி மேநோக்கி சென்றது போல் எனக்குப் பிரமை ஏற்பட்டது. அவர் உடம்பு சில்லிட்டது.; கனமானது. துக்கத்தால் என் நெஞ்சு வெடித்தது போல் இருந்தது.
அபியை பார்த்தேன் அவள் இன்னும் ராஜியிடம் வசைபாடிக் கொண்டிருந்தாள்.
மூளை கெட்ட முண்டமே. வயசு என்ன கொஞ்மா உனக்கு. ஐம்பத்தெட்டு வயசு ஆனாலும் . புத்தி இன்னும் வரவில்லையே. இப்படி செஞ்சா உன்னை ஹோம்லே விட்டு விடுவேன்…….
”அபி, அப்பாவுக்கு எல்லாம் முடிஞ்சி போச்சு. குழந்தையைத் திட்டாதே..”
‘அப்பா’ என்று அரற்றியவள். சாஸ்திரிகளுக்குச் சொல்லணும் என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து எண்களை அழுத்தத் தொடங்கினாள்.
ராஜி கட்டிலுக்கு அருகில் ஓடி வந்து, “அப்பா, இன்னும் ஏன் படுத்துண்டு இருக்கே. வா, வீட்டுக்குப் போலாம், வீட்டுக்குப் போலாம்” என்று அவரை உலுக்கினாள்.
– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com