வீடு பேசும் நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2026
பார்வையிட்டோர்: 150 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

அந்த அழகான பசுமையான கிராமத்தில் மாலைச் சூரியன் மெதுவாக மேற்கே சாய்ந்து கொண்டிருந்தான். அந்த கம்பீரமான பழைய வீட்டின் முன் நின்ற வேப்பமரம், காற்றில் தலையசைத்து ஏதோ சொல்ல முயல்வது போல இருந்தது. நாற்பது ஆண்டுகளாக அந்த வீட்டில் வாழ்ந்திருந்த ராமசாமியும் மீனாட்சியும், இன்று முதல் முறையாக அந்த வீட்டை விட்டு வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

வயது எழுபதைக் கடந்துவிட்டது. இருவரின் தலைமுடியும் வெளுத்து விட்டது. ஆனால் அந்த வீட்டின் ஒவ்வொரு சுவரிலும், ஒவ்வொரு அறையிலும் அவர்கள் இளமையின் சிரிப்புகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன.

“மீனாட்சி, எல்லாப் பொருளும் எடுத்து வைத்தாச்சா?” என்று ராமசாமி கேட்டார்.

“வைத்தாச்சு. ஆனா இந்த வீட்டை மட்டும் எப்படி எடுத்துட்டுப் போறது?” என்று சிரிக்க முயன்றாள். ஆனால் குரலில் சோகம் வழிந்தது.

அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் வெளிநாடுகளிலும் பெரிய நகரங்களிலும் செட்டிலாகிவிட்டார்கள். அனைவரும் நல்ல நிலைமையில் இருந்தார்கள். “அப்பா, அம்மா, நீங்கள் மட்டும் தனியா இருக்க வேண்டாம். எங்களோட வந்து இருங்க” என்று பலமுறை அழைத்தார்கள்.

இறுதியில், உடல்நிலை காரணமாக, பிள்ளைகளின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர்கள் வீட்டைப் பூட்டி விட்டு நகரத்தில் உள்ள மகன் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தனர்.

அன்று இரவு, பொருட்கள் எல்லாம் கட்டி வைக்கப்பட்ட பிறகு, இருவரும் ஹாலில் தரையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது ராமசாமி திடீரென்று சொன்னார்.

“மீனாட்சி, இந்த வீட்டுக்கு நாம நன்றி சொல்லணும்.”

அவள் ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“வீட்டுக்கா?”

“ஆமாம். நம்ம பிள்ளைகளை விட இந்த வீட்டுக்குத்தான் நம்ம வாழ்க்கை முழுக்க தெரியும்.”

அந்த வார்த்தைகள் அவளது மனதைத் தொட்டன.

இருவரும் மெதுவாக வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் சென்று நின்றார்கள்.

முதலில் மூத்த மகன் அருண் இருந்த அறை.

“இங்கதான் அவன் முதல் முறையா நடந்தான்,” என்றார் ராமசாமி.

“ஆமாம். இந்த சுவரைப் பிடிச்சுதான் நடக்கக் கற்றுக்கிட்டான். விழுந்தா அழுவான். நான் தூக்கிக்கிட்டு சமாதானப்படுத்துவேன்.”

சுவரில் இன்னும் மங்கலாக குழந்தை கை எழுத்துகள் தெரிந்தன.

“இது யாரோ கிறுக்கிய கோடு மாதிரி தெரியுது…” என்றாள் மீனாட்சி.

ராமசாமி சிரித்தார்.

“கோடு இல்ல… அருணோட சூரியன்.”

“சூரியனா? எனக்கு கோழி மாதிரி தான் தெரியுது.”

இருவரும் சிரித்தார்கள்.

சிரிப்பு முடிந்ததும் மௌனம் வந்து அமர்ந்தது.

“இப்ப அவன் இரண்டு குழந்தைகளோட அப்பா…” என்றார் ராமசாமி மெதுவாக.

மீனாட்சி ஜன்னலைப் பார்த்தாள்.

“நேத்திக்கி மாதிரி இருந்தது… இப்ப எவ்வளவு தூரம் போயிட்டான்.”

அறையின் அமைதி அந்த நினைவுகளைக் கேட்டு புன்னகைப்பது போல இருந்தது.

அடுத்த அறை மகள் காவேரியுடையது.

மீனாட்சி ஜன்னலைத் தொட்டாள்.

“இந்த ஜன்னல் வழியா மழை வந்தா, அவ கையை நீட்டி தண்ணீர் பிடிப்பா.”

அவள் கண்களில் நீர் துளிர்த்தது.

“கல்யாணம் ஆன நாளும் இதே ஜன்னல் வழியா வெளியே பார்த்துக்கிட்டே அழுதா.”

இந்த ஜன்னல் வழியா தான் அவ உலகத்தைப் பார்த்தா.”

“நீ பால் கொண்டு வந்து நின்றதும் நினைவிருக்கா?” என்று கேட்டார் ராமசாமி.

“பால் குடிக்கிறாளோ இல்லையோ, நான் இங்க வந்து நின்றதுக்குத்தான்.”

அவள் கண்களில் ஈரம் தெரிந்தது.

“அம்மா ஆகுறது கஷ்டம் இல்லங்க…” என்றாள் மெதுவாக.

“அம்மா இல்லாம இருக்குறதுதான் கஷ்டம்.”

சுவர் மௌனமாக அந்தக் கதையை மீண்டும் நினைவுபடுத்தியது.

கடைசியாக இளைய மகன் விஜய் இருந்த அறைக்குச் சென்றார்கள்.

அங்கு இன்னும் பழைய கிரிக்கெட் மட்டையின் அடையாளங்கள் சுவரில் இருந்தன.

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன், வீட்டுக்குள்ள விளையாடாதேன்னு!” என்று சிரித்தார் ராமசாமி.

சுவரில் இன்னும் பந்து அடித்த தடங்கள்.

ராமசாமி அதைத் தொட்டார்.

“இந்த தடம் இன்னும் இருக்கு…”

“நீங்க கோபப்பட்ட நாள் நினைவிருக்கா?” என்றாள் மீனாட்சி.

“கோபம் அவன் மேல இல்ல… அவன் பயந்து அழுததுக்குத்தான்.”

அந்த அறையில் ஒரு சிறிய சிரிப்பு பிறந்தது. ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

அவர்கள் சமையலறைக்குள் நுழைந்தனர்.

அந்த அறை எண்ணற்ற கதைகளின் சாட்சி.

காலை அவசரங்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் சண்டைகள், தேர்வு நாட்களின் பதற்றங்கள், பண்டிகை நாட்களின் இனிப்புகள்…

மீனாட்சி அடுப்பை மெதுவாகத் தொட்டாள்.

“எத்தனை ஆயிரம் தோசை சுட்டிருப்பேனோ தெரியல.”

ராமசாமி சிரித்தார்.

“அதனாலதான் நம்ம பிள்ளைகள் இவ்வளவு தூரம் வளர்ந்தாங்க.”

அப்போது இருவரும் பூஜை அறைக்குள் சென்றனர்.

அங்கே சிறிய விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

“இந்த அறைதான் நம்ம கஷ்டத்தையும் சந்தோஷத்தையும் பார்த்தது,” என்றார் ராமசாமி.

“அருணுக்கு வேலை கிடைக்கணும்னு எவ்வளவு வேண்டிக்கிட்டோம். காவேரி பிரசவத்துல நல்லபடியா இருக்கணும்னு எவ்வளவு பிரார்த்தனை பண்ணோம்.”

அவர்களின் குரல் நடுங்கியது.

வீட்டின் ஒவ்வொரு மூலையும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை திரைபடமாக காட்டியது.

மாடிக்குச் செல்லும் படிக்கட்டின் அருகே வந்ததும் மீனாட்சி திடீரென்று நின்றாள்.

“என்னாச்சு?” என்றார் ராமசாமி.

அவள் மேலே சுட்டிக்காட்டினாள்.

மின்மீட்டர் பெட்டியின் மேல் ஒரு குருவிக்கூடு இருந்தது.

உலர்ந்த புற்கள், சிறு குச்சிகள்… காலம் அதை சிதைத்திருந்தாலும் அதன் வடிவம் இன்னும் இருந்தது.

ராமசாமி மெதுவாகப் புன்னகைத்தார்.

“அட இது இன்னும் இருக்கா?”

மீனாட்சி மெதுவாக கேட்டாள்.

“என்னங்க… நாம மறக்க முடியுமா இதை?”

அவர்கள் இருவரும் அங்கேயே சில நிமிடங்கள் நின்றார்கள்.

ஒரு காலத்தில் அந்தக் கூட்டில் இரண்டு குருவிகள் கூடு கட்டின. முட்டைகள் வைத்து, குஞ்சுகள் பிறந்தன.

அந்த நாட்களில் குழந்தைகள் பள்ளிக்குப் போகும் முன் இதைத்தான் முதலில் பார்த்தார்கள்.

“அம்மா! வாயைத் திறக்குது பாருங்க!”

“அப்பா! இறகு முளைச்சிருக்கு!”

என்று ஓடிய நாட்கள் நினைவில் நிழலாடியது.

ஒரு மாலை நேரத்தில்…

ஒரு குஞ்சு கூட்டின் விளிம்பில் நின்றிருந்தது.

பறக்கத் தெரியாமல் பயந்தது.

தாய் குருவி எதிரே அமர்ந்து சத்தமிட்டது.

சில நொடிகள் தயக்கம்.

பிறகு… ஒரு தாவல்.

சிறகுகள் அடித்தன.

அது பறந்துவிட்டது.

அன்று விஜய், “அது போயிடுச்சு!” என்று அழுதது இன்னமும் நினைத்தால் சிரிப்பு வருது என்று சொன்னார் ராமசாமி.

“அது போகவில்லை… வளர்ந்துடுச்சு,” என்றாள் மீனாட்சி மெதுவாக.

“நம்ம பிள்ளைகளும் அப்படிதானே?”

ராமசாமி அந்தக் காலியான கூட்டைப் பார்த்துக் கொண்டே,

ஆமாம் மீனாட்சி “கூடு காலியாகுறது தோல்வி இல்ல… குஞ்சு பறக்குறதுதான் வெற்றி.” என்றார்.

இறுதியாக அவர்கள் மாடிக்குச் சென்றார்கள்.

அங்கேதான் குழந்தைகள் பட்டம் விட்டார்கள். தேர்வு முடிந்ததும் நட்சத்திரங்களை எண்ணினார்கள். கோடை இரவுகளில் குடும்பமே சேர்ந்து படுத்துத் தூங்கியது.

மாடியின் விளிம்பில் நின்று வானத்தைப் பார்த்தார் ராமசாமி.

“நம்ம வாழ்க்கை எவ்வளவு சீக்கிரம் போயிடுச்சு, மீனாட்சி.”

“பிள்ளைகள் வளர்றதைக் காணும்போது தெரியல. இப்பதான் புரியுது.”

சில நிமிடங்கள் இருவரும் பேசாமல் நின்றனர்.

அந்த நேரத்தில், அந்த வீடே பேசத் தொடங்கியதுபோல அவர்களுக்குத் தோன்றியது.

“நீங்கள் என்னை விட்டு போகிறீர்கள் என்று வருத்தப்பட வேண்டாம். உங்கள் சிரிப்புகளால் நான் நிறைந்திருக்கிறேன். உங்கள் குழந்தைகளின் காலடிச் சத்தம் இன்னும் என் தரையில் இருக்கிறது. உங்கள் கண்ணீரும் உங்கள் மகிழ்ச்சியும் என் சுவர்களில் பதிந்திருக்கின்றன.”

மீனாட்சியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“ஒரு வீடு என்பது செங்கல் மற்றும் சிமெண்ட் அல்ல. அதில் வாழ்ந்த மனிதர்களின் அன்புதான். நீங்கள் எனக்குள் அன்பை நிரப்பினீர்கள். அதனால் நான் ஒரு வீட்டிலிருந்து இல்லமாக மாறினேன்.”

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

காலையில் புறப்படும் நேரம் வந்தது.

வாசல் கதவை மூடுவதற்கு முன் ராமசாமி ஒரு முறை திரும்பிப் பார்த்தார்.

வாசல் கதவின் அருகே நின்று கொண்டு

“மீனாட்சி… அந்தப் பழைய சாவி எங்கே?”

சமையலறையில் இருந்த மீனாட்சி உடனே பதில் சொல்லவில்லை. அடுப்பை அணைத்துவிட்டு மெதுவாக வெளியே வந்தாள். அவள் கையில் ஒரு பழைய பித்தளை டப்பா இருந்தது. அதைத் திறந்தபோது, அதில்

குழந்தைகளின் பழைய புகைப்படங்கள், பள்ளி அட்டைகள், சில கடிதங்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன.

“இதுல தேடுறீங்களா, இல்ல இதையே கொண்டு போகலாம்னு யோசிக்கிறீங்களா?” என்று சின்ன சிரிப்புடன் கேட்டாள்.

ராமசாமி மெதுவாக சிரித்தார்.

“இந்த வீட்டைத் திறக்குற சாவி மட்டும் இல்ல மீனாட்சி… நம்ம வாழ்க்கையையே திறந்த சாவி இது.”

அவர் அந்தச் சாவியை வாங்கிக் கொண்டார். ஆனால் கதவைப் பூட்டவில்லை. வெகுநேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு… திருமணமான இரண்டாவது நாளில், இதே சாவியால் இந்த வீட்டுக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தார்கள்.

அப்போது வீடு புதிது.

இப்போது வீடும் வயதாகியிருந்தது.

அவர்களைப் போலவே.

இன்று அவர்கள் இந்த வீட்டை விட்டு புறப்பட வேண்டிய நாள்.

லாரியில் பொருட்கள் ஏறிக்கொண்டிருந்தன. ஆனால் வீட்டுக்குள் இன்னும் ஏறாமல் இருந்தது நினைவுகள்.

அந்த வீடு அமைதியாக நின்றது. ஆனால் அந்த அமைதிக்குள் ஆயிரம் கதைகள் இருந்தன.

மீனாட்சி வாசற்படியில் குனிந்து மண்ணைத் தொட்டு வணங்கினாள்.

“நன்றி,” என்றாள் மெதுவாக.

“எதுக்கு?” என்று கேட்டார் ராமசாமி.

“நம்ம பிள்ளைகளை நல்ல மனிதர்களா வளர்க்க உதவினதுக்கு.”

ராமசாமியின் கண்களும் கலங்கின.

அவர் கதவை மெதுவாக மூடினார்.

பூட்டு போடப்பட்ட சத்தம் ஒரு முடிவைப் போல இருந்தது. ஆனால் அது உண்மையில் ஒரு முடிவு அல்ல.

ஏனென்றால் அவர்கள் வீட்டை விட்டுப் போயிருக்கலாம். ஆனால் அந்த வீடு அவர்களை விட்டு எங்கும் போகவில்லை.

அவர்களின் முதல் சம்பளத்தின் மகிழ்ச்சி, குழந்தைகளின் முதல் அழுகை, தேர்வில் பெற்ற வெற்றிகள், திருமண நாளின் சந்தோஷம், இழப்புகளின் வேதனை, பிரார்த்தனைகளின் நம்பிக்கை—எல்லாவற்றையும் அந்த வீடு தன் உள்ளே பாதுகாத்துக் கொண்டிருந்தது.

கார் மெதுவாக நகரத் தொடங்கியது.

தூரத்தில் வீடு சிறிதாகிக் கொண்டே போனது. ஆனால் அவர்களின் நினைவுகளில் அது இன்னும் பெரியதாகவே இருந்தது.

ராமசாமி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே சொன்னார்:

“நம்ம பிள்ளைகள் வாழ்க்கையில் செட்டிலாகிட்டாங்க. அது நம்ம வெற்றி.”

மீனாட்சி தலை அசைத்தாள்.

“ஆமாம். ஆனா அந்த வெற்றியை முதல்ல கொண்டாடியது இந்த வீடுதான்.”

கார் திருப்பத்தைத் தாண்டி மறைந்தது.

அந்த பழைய வீடு மட்டும் கம்பீரமாய் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.

வாசலில் வேப்பமரம் காற்றில் அசைந்தது, மீனாட்சிக்கும் ராமசாமிக்கும் விடைபெறுவது போலவும், மீண்டும் வரச் சொல்வது போலவும் இருந்தது.

ஏனென்றால் சில வீடுகள் கட்டப்படுவதில்லை. அவை அன்பால் உருவாக்கப்படுகின்றன.

அப்படிப்பட்ட வீடுகள் காலத்தைத் தாண்டி வாழ்கின்றன. அவற்றின் சுவர்களில் நினைவுகள் மூச்சுவிடுகின்றன. அவற்றின் கதவுகள் எப்போதும் திறந்த மனதுடன் காத்திருக்கின்றன.

அந்த வீட்டும் அப்படித்தான்.

கல்பனா ராஜகோபால் பெயர்: கல்பனா ராஜகோபால்வயது: 56எழுதிய சிறுகதைகள்: 25பிரசுரமானவை: 12 கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11 கதைகள் கல்பனா ராஜகோபால் ஆரம்ப எழுத்தாளரான நான் கடந்து ஒரு வருட காலமாக கட்டுரைகள் மற்றும் கதைகளை கல்கிக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *