வீடும் பல்லக்கும்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2024
பார்வையிட்டோர்: 226
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இனிமேல் ஏழாயிரத்து ஐந்நூறுதான் கூலி. அதுக்குக் குறை யாது.உங்களுக்கு பிடிச்சா இருங்க. இல்லாட்டி, இந்த மாதம் வீட்டைக் காலிசெய்யுங்க.” வீட்டுச் சொந்தக்காரன் பீரிஸ் சிங்களத்தில் சொல்லிவிட்டுப்போன வார்த்தைகள் அவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்தன.
திடீரென இரண்டாயிரம் ரூபா ஏற்றம்! ஐயாயிரத்து ஐந்நூறி லிருந்து ஏழாயிரத்து ஐந்நூறுக்கு ஏற்றம். எவ்வளவு சொல்லியும் அவன் இளகுவதாய் இல்லை.
மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்தபோது நாலாயிரத்து ஐந்நூறிலிருந்து, அடுத்த வருடம் ஐயாயிரத்து ஐந்நூறாகி, இந்த வருடம் ஏழாயிரத்து ஐந்நூறாகிவிட்டது!
இவ்வளவு காலம் பழகிய பழக்கத்தை முன்வைத்து இரந்து பார்த்தும், பீரிஸ் இறங்கிவருவதாய் இல்லை. அவனும் இந்தப் பழக்கத்தைப் பேணுவதுபோலவே சிரித்துக் கதைத்தவாறே தன் நிலைப்பாட்டிலிருந்து இம்மியும் விலகாது இருந்தான்.
அதற்கு மேலும் பேசுவதற்கு இடமில்லை.
பீரிஸ் போய்விட்டான்.
அவன் போனபின், சிவா, மேசையில் கை இரண்டையும் குத்தவைத்து நாடியைத் தாங்கியவாறு உட்கார்ந்திருந்தான்.
பாண்டவர்கள் தங்குவதற்கு ஐந்து கொட்டில்களாவது போட்டுக்கொள்ள இடந்தருமாறு துரியோதனன்முன் இரந்து நின்ற கிருஷ்ணன், மனச்சோர்வோடு திரும்பிக்கொண்டிருந்தான்.
“அவர்களுக்கு ஈ இருக்கும் இடங்கூடத் தரமாட்டேன்” என்று துரியோதனன் கூறியது கிருஷ்ணன் காதுகளில் மீளொலிக்க, அவன் இதழ்களில் மாயப் புன்னகை தவழ்ந்தது.
செல்வநாயகத்தோடு செய்த உடன்படிக்கையை, பண்டார நாயக்கா கிழித்தெறிகிறார்.
செல்வநாயகம் செய்வதறியாது வீட்டுச் சின்னத்தை வைத்துக் கையைப் பிசைந்தபடி பார்த்துக்கொண்டு நிற்கிறார்.
இதைப் பார்த்து ஜெயவர்த்தனா கைகொட்டிச் சிரிக்கிறார். தன் கண்டி யாத்திரைக்கு, கைமேல் பலன் கிடைத்ததில் அவருக்குப் பரம சந்தோஷம்.
வீட்டுச் சொந்தக்காரன் பீரிஸ், ஜெயவர்த்தனாவில் புகுந்து பண்டாரநாயக்காவில் வெளிவருகிறான்.
இப்போ சிவா இருந்த இடத்தில் செல்வநாயகம் நாடியில் கைவைத்தவாறு இருக்கிறார்.
சிவாவுக்குப் பழைய நினைவுகள் கிளம்பி வந்தன.
அவனுடைய அப்பா, சிங்களநாட்டில் பெரிய கடை முத லாளி. அவருடைய கடைக்குப் பின்னால் அன்றாடம் கூலிப் பிழைப்பை நம்பி வாழும் ஏழைச் சிங்களக் குடிகள். அந்தக் குடிசைகளில் வாழும் சிங்களப் பிள்ளைகளும், அவர்களுடைய பெற்றோரும் இவனோடு அன்பாகப் பழகுவதும், இவர்களிடம் அடிக்கடி ஜீவனோபாய உதவிபெறுவதும் வழமையாகிப்போய் விட்ட ஒன்று.
திடீரென, பண்டாரநாயக்கா இருபத்திநாலு மணித்தியாலத் தில் ‘சிங்களம் மட்டும்’ என்று கத்துகிறார்.
செல்வநாயகம், பொன்னம்பலம் ஆதியார் பராளுமன்றத்திற்கு முன்னாலிருக்கும் கடற்கரையில் போய்க் குந்தியிருந்து சத்தியாக் கிரகம் செய்கின்றனர். கல்லெறி விழுகிறது. குந்தியிருந்தோர் நெற்றிகளில் இருந்து இரத்தம் வழிகிறது.
இவன் கடைக்குப் பின்னால், இவனோடு விளையாடிய சிங்களப் பையன்களின் முகத்தில் ஒரு மாறுபாடு. இவனைக் கண்டதும் இப்போ முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டு “யாப்பன மாடு… ஓடு” என்று, அவர்கள் இடையில் தூஷணத்தைப் புகுத்திக் கொச்சைத் தமிழில் கூறிப் பெரிதாகச் சிரித்தனர். பெரியவர்கள் இவனையும், இவன் அப்பாவையும் பார்த்து, முகத்தில் திடீரென ஏற்பட்ட விகாரத்தோடு, “உம்பலாட்ட பெடறல்த ஓண? உம்பலாட்ட பணாஹட்ட பணஹத ஓண?” என்று கேலி செய்கின்றனர்.
சிவாவின் உள்மனம் ஒருவித அசௌகரியத்தால் கூனிச் சுருக்கங்கள் கண்டது.
அவனது அப்பாவின் கடை, சொத்து, சம்பாத்தியம் எல் லாம் திடீரென அடித்தளம் கெட்டு ஆட்டங்காணுவதுபோல் அவனுக்குப் பட்டது.
இனி வீடு தேடும் படலம் ஆரம்பமாயிற்று. செல்வநாயகம் யோசிக்கிறார்.
சிவா அவருக்குள்ளிருந்து வெளிப்பட்டுச் செல்கிறான். அவனது வீடு தேடும் விவகாரத்திற்கு உதவி செய்யப் பல இடைத் தரகர்கள் வந்துசேர்கிறார்கள்.
“இப்ப வீடு வெள்ளவத்தையில் எடுக்கமுடியாதய்யா. மாதம் பத்தாயிரம் ரூபா, ஒன்றரை வருஷம் அட்வான்ஸ். உங்களுக்கு குடுக்க முடியுமா?” – வீட்டு புரோக்கர் பெரேரா கேட்கிறான்.
“எனக்கு இந்தக் கூலி கட்டாது. மாதம் ஐயாயிரம், ஒரு வருஷ அட்வான்ஸ் எண்டா பேசுங்க. அதுக்குமேலே ஒரு சத மும் என்னால் முடியாது.” சிவா கூறினான்.
“அதெல்லாம் முந்தி. இப்ப வெள்ளவத்தையில் நீங்க சொல்லிற கணக்குக்கு வீடில்ல..” புரோக்கர் பெரேரா மிகக் கேலியாகவும் அலட்சியமாகவும் கதைத்தான்.
பெரேராவின் பேச்சிலிருந்த கேலி, முன்னர் அவன் அப்பாவின் கடைக்குப் பின்னால் இருந்த சிங்களவர்கள், அவன் அப்பாவைப் பார்த்து, “உங்களுக்கு சமஷ்டியா வேணும்? உங்களுக்கு ஐம்பதுக் கைம்பதா வேணும்?” என்று கேட்டுக் கேலி பண்ணியதை ஏனோ நினைவூட்டிற்று.
முன்னர் எழுபதுகளில் அவனது நண்பர்கள் ஒரு பெரிய வீட்டை வெள்ளவத்தையில் 250 ரூபா கூலி கொடுத்துத் தங்கியிருந் தபோது அவனும் தங்கியிருக்கிறான். இப்போ 2500 ரூபாவுக்குக்கூட ஒரு அறை எடுக்க முடியாது!
செண்பகப் பெருமாள் யாப்பா பட்டினத்து மண்ணை எடுத்து வந்து தங்கப்பேழையில் வைத்து லங்கா ராணியிடம் கையளித்து வணங்கிநிற்கிறான். அவள் அவனுக்குப் பதவி உயர்வு கொடுத்து முதுகில் தட்டிவிட, பெருங்களி கொள்கிறான்.
முன்னர் இனக்கலவரம் கொழும்பில் வெடித்தபோது, ‘லங்கா ராணி’ கப்பலில் அகதிகளாகத் தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டபோது அவனும் அதில் போயிருக்கிறான். அப்போது யாழ்ப்பாணத்தில் வீடு இருந்தது. இப்போ வீடு தேடிக் கொழும்பில்…
“ஏன் இப்ப வெள்ளவத்தையில் வீடு எடுக்க முடியாது?” புரோக்கர் பெரேரா கூறியவற்றுக்கு ஏதும் பேசாது தன் சிந்தனை வயப்பட்டிருந்த சிவா, திடீரென முடுக்கிவிடப்பட்டவன்போல் யந்திரகதியில் கேட்டான்.
“இப்ப வன்னியில் இருந்து மிச்சம் சனம் வாறதுதானே மாத்தயா… அதனால, இப்ப எல்லாம் கூடக் காசு.”
“அப்ப இனி எங்க வீடு ‘சீப்பா’ எடுக்கலாம்?” “தெஹிவளையில் பாப்பமா? அங்க கொஞ்சம் ‘றேற்’ குறைவு.”
“சரி அங்க பாப்பம்.”
யாழ்ப்பாணத்து மண் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட தன்பின் கொழும்பு மண்ணுக்கு இன்னும் கிராக்கி அதிகரிக்கிறது. அகதிகளாக யாழ்ப்பாணத்தவர் கொழும்பு வந்து நிற்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இவர்கள் வீடும் தோட்டந்துரவுகளும் புல்டோ ஷர் கொண்டு இடிக்கப்பட, இங்கே கொழும்பில் மூலைமுடுக்கு, சந்துபொந்துகளிலெல்லாம் வீடுகள் எழுகின்றன. அரைகுறையாகக் கிடந்த வீடுகள் தமிழரின் அட்வான்ஸ் பணத்தில் பெரிதாக நிமிர்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இவர்களின் கல்லறைகள்கூட இருக்கக் கூடாதென்ற நிலையில் தரைமட்டமாக்கப்பட, அவர்களின் ஆவி களுக்குக்கூட நிம்மதி கிடைக்காத அந்தரநிலை.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தவர் எல்லாம் கொழும்புக்கு அள்ளுப்படுவது தம் உயிரைத் தக்கவைத்து நிம்மதி தேடவா?
வீட்டு புரோக்கர்கள் பலருக்குப் பின்னால் வீடு தேடும் படலத்தில் சிவா.
பெரேரா காட்டிய வீடுகள் ஒன்றும் சரிவரவில்லை. பின்னர், அவனே கைவிட்டுவிட்டான்.
இன்னும் பெரேராவின் சகாவான பீற்றர் எங்கெங்கோவெல் லாம் கொண்டுபோனான். ஆனால், இவன் காட்டிய வீடுகளும், தமிழர்களை எங்காவது தள்ளிவிட்டு, காசு பெற்றுக்கொண்டால் போதும் என்ற சுயநலத் தேவைகளால் உந்தப்பட்டவைபோலவே பட்டன.
“சரனங்கர ரோட்டில் இருக்கிற வீடு எப்படி?” பீற்றர் கேட்டான்.
“அந்த வீடு ‘றேற்’ குறைவுதான், ஆனா, மிகவும் சின்னவீடாப் போச்சு.”சிவா கூறினான்.
“அப்ப வைத்தியா ரோட்டு வீடு?”
“அது பரவாயில்லை. ஆனா, நல்லா உள்ளுக்க போயிற்று. கனதூரம் நடக்கணும், பள்ளிக்கூடம்போற பிள்ளையளுக்கு சரிவராது.”
“அப்ப அந்த பன்சல வீடு?”
“அந்த வீட்டுக்கு அருகில இருக்கிற ஆக்கள் நல்ல ஆக்கள் மாதிரிப் படயில்ல…”
“ஆரு சொன்னது?”
“ஆக்களைப் பார்க்க அப்படித்தான் படுகுது…”
“அப்ப அந்த ஹில் ஸ்றீற் வீடு நல்லதுதானே?”
“அதுக்கு இரண்டு பஸ் எடுக்கோணும்…”
“சும்மா போங்கய்ய… உங்களுக்கு வீடு எடுக்கேலாது.” பீற்றர் ஆத்திரப்பட்டுக் கதைத்தான்.
பீற்றர் காட்டிய வீடுகளைச் சிவா நிராகரித்தமைக்கு, அவன் கூறிய வெளிக் காரணிகளைவிட, வீட்டுச் சொந்தக்காரர்கள் வைத்த நிபந்தனைகளே முக்கிய காரணிகளாக நின்றன.
ஒரு வீட்டில், இரவு பத்து மணிக்குமேல் லைற் எரிக்கக் கூடாதென்றனர். இன்னோர் இடத்தில் ‘பைப்’ தண்ணீரைவிட்டு, கிணற்று நீரையே பாவிக்க வேண்டுமென்றனர். இன்னொரு வீட்டில் ‘விசிற்றர்ஸ்’ என்று யாரும் வரக்கூடாது என்றனர். இன்னொரு வீட்டில் இரவு பத்து மணிக்குள்ளேயே எல்லோரும் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்றனர்.
பீற்றர் காட்டிய வீடுகளில் முன்வைக்கப்பட்ட இத்தகைய ஐந்து அம்ச, ஆறம்ச நிபந்தனைகள்தான் சிவாவை அந்த வீடுகளை அணுகவிடாது ஓட, ஓட விரட்டின. இந்த விவகாரங்களும், அதை யொட்டியெழும் மனித இருப்பையே நசுங்கவைக்கும் மேலாதிக்கப் போக்குகளும் புரோக்கர்மாருக்கு எங்கே விளங்கப்போகுது?
“தன் நெஞ்சிலேயே வீட்டைச் சின்னமாக வைத்துக்கொண்டு வீடுதேடிய செல்வநாயகத்துக்கே ஒழுங்கான வீடு கிடைக்கேல்லை யாம். நீங்களா வீடு தரப்போறியள்?” சிவா சத்தம்போட்டு, தன் னோடு கூடவந்த புரோக்கர் பீற்றருக்குக் கேட்கும்படியாகச் சொன்னான்.
புரோக்கருக்கு அவன் சொன்னது அரைகுறையாக விளங்கிற்று.
“ஆரு செல்வநாயகம்?” – அவன் கேட்டான்.
“அந்த தமிழ் புரோக்கர்” சிவா கூறினான்.
“அப்பிடியா? ஆனா, அவங்களுக்கு இந்த ஏரியாவில் வீடு எடுக்க ஏலாது. அவங்களுக்கு இந்தப் பக்கம் பழக்கம் இல்ல.”
“பழக்கம் என்ன பழக்கம், நெஞ்சில உரம் பத்தாது!”
“அது சரி” -மீண்டும் புரோக்கர் ஒன்றும் விளங்காது ஒத்துக் கொண்டான்.
கையில் காசில்லாமல் என்னைப்போல வீடு தேடும் ஒருவன் எங்கும் இருக்கமாட்டான். இன்னும், வீடு கிடைக்காவிட்டாலும் என்னை வீடு பார்க்கக் கூட்டித்திரியும் புரோக்கர்மாருக்கு ஐம்பது, நூறென்று ‘சந்தோஷப்படுத்தல்’ வேறு.
ஒவ்வொரு சிறுதொகைச் செலவுகூட எனக்கு, என் இரத்தத்தை உறிஞ்சுவதுபோல் பட்டது.
போன வருடம் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக அடைவுவைத்த நகைகள் இன்னும் மீட்கப்படவில்லை. அவை இருந்தாலாவது இம்முறை வீடு தேடுவதைக் கொஞ்சம் தைரியத் தோடும் செய்யலாம். ஆனால், இப்படி ஒன்றுமே இல்லாத கையறுநிலையில் வீடு எங்கே எடுப்பது!
எவ்வாறானாலும் வீடு தேடியே ஆகவேண்டும்.
ஆனால், எப்படி என்றுதான் தெரியவில்லை.
மந்திரத்தால் மாங்காய் பறிக்கிற விவகாரமா, வீடு தேடுதல் என்பது? எனக்குக் கிடைக்கிற வருவாயின் லட்சணத்தில் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கமுடியுமா?
வெளிநாட்டிலுள்ள அவன் உறவினர்களுக்குப் பல கடிதம், தொலைபேசிமூலம் செய்தி அனுப்பியாயிற்று. மருமக்கள், பெறா மக்கள், ஒன்றுவிட்ட சகோதரர்கள், பேரர்மார் என்று எத்தனை வகையான உறவுகள். அவர்களுக்கு இங்கிருந்து பிறப்புப் பத்திரம், விவாகப் பத்திரம், கலியாணப் பொருத்தம், நற்சாட்சிப் பத்திரம் என்று உதவி தேவைப்படும்போது கால, நேரம் பார்க்காது தொலை பேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால், இவர்க ளிடமிருந்து இப்படி இக்கட்டான நேரத்தில் இங்கிருந்து ஏதாவது உதவி தேவைப்படும்போது, எல்லா உறவுகளும் மூடுண்டு நிசப்த மாகிவிடும். இவ்வேளையில் எந்தவித இரத்த உறவுமற்ற நண்பர் களிடமிருந்து திடீரென வந்து சேரும் உதவிகள் உண்மையில் கடவுளின் வருகையாகவே அவனுக்குப் படுவதுண்டு. இம்முறையும் அப்படி ஒரு நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் எங்கள் வீடும் இருப்பும் எம் பிரக்ஞையில் தட்டுப்படாத வெறும் சடங்காகவே இருந்திருக் கிறது என்பதை இப்போதே அவன் உணர்கிறான்.
“வீட்டுக்கு நேரே புள்ளடி
அதிகப்படி பத்தாயிரம்
சிறைச்சாலை பூஞ்சோலை
தூக்குமேடை பஞ்சுமெத்தை
வீடின்றி வாழ்வில்லை…”
என்றவாறு முன்னர் ஐந்து வருடத்திற்கொருக்கால் வரும் தேர்தலின் போதும் பின்னர் மாவட்ட சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்று வருகின்ற போராட்டங்களின்போதும் தமிழருக்கு வீடுபெற்றுத்தரப் போராடும் கறுப்புக்கோட்டு புரோக்கர்மார் ஏவிவிடும் ஏவல் பிசாசுகள் இப்படி வந்து யாழ்ப்பாணத்து வாழ்க்கையைச் சுரணைகெட்டதாக்கியிருக்கலாம் என்று அவன் எண்ணியதில் நிரம்ப உண்மையுண்டு.
ஆனால், இப்போ கொழும்பு வந்ததிலிருந்து இந்த இருப்புப் பற்றிய பிரக்ஞை பிறழ்வுபட்டு விகாரப்பட்டது போன்ற நிலை. ஒவ்வொரு ரூபா செலவிலும் அதன் நோண்டுதல், பிராண்டுதல் முதல் எமது பிரக்ஞையை பலூன்மாதிரி உப்பவைத்தது.
மாதம் மாதம் தண்ணீர்க்காசு, கரண்டுக்காசு என்பவற்றோடு நாளாந்தம் பாண், தேயிலை, பால், மீன், மரக்கறி என்று ஒவ்வொன் றுக்கும் கொட்டுகிற காசு, சதா எங்கள் இருப்பைச் சத்துணவு இல்லாத சோமாலியாக் குழந்தைகளின் வயிற்றைப்போல் வீங்க வைத்துக்கொண்டேயிருந்தது.
இவ்வளவோடு இது நின்றுவிடப்போகிறதா?
இரவு பன்னிரெண்டு மணிக்கு வீடே நல்ல உறக்கத்தில் மூழ்கியிருக்கும்போது எமது இருப்பை நிச்சயப்படுத்திக்கொள்வது போல் கதவு தட்டப்படும். துடித்துப்பதைத்துக்கொண்டு தூக்கம் முகமெல்லாம் வழியக் கதவைத் திறந்தால் இரண்டு ராணுவக்காரர் ஆயுதம் சகிதம் காவல்தர பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்து கொண்டே
“பொலிஸ் றிப்போட், பொலிஸ் றிப்போட்” என்று ஒருவர் குரல்கொடுக்க, “ஐடென்ரிற்றிக் கார்ட், ஐடென்ரிற்றிக் கார்ட் என்று அடுத்தவர் கேட்க, அவற்றை எங்கிருந்தோவெல்லாம் துழாவியெடுத்து பயபக்தியோடு கையளிக்க, வீட்டில் உள்ள அனைவரும் ஆவியுலகத்தவர்போல் தோற்றம் அளிக்க, பொலிஸா ரின் உதடுகளில் ஒருவித கேலிச் சிரிப்பு.
“உங்களுக்கு சமஷ்டியா வேணும்? உங்களுக்கு ஐம்பதுக்கைம் பதா வேணும்?” – முன்னர் சிவாவின் கடைக்குப் பின்னால் இருந்த சிங்களவர்கள் கேட்ட கேள்விகள், இப்போ இந்தப் பொலிஸாரின் கேலிச் சிரிப்பில் எக்காளமிடுவதை அவன் காண்கிறான்.
முன்னர் பொலிஸ் றிப்போட்டுக்கு புகைப்படம் என்பது தேவைப்படவில்லை. இப்போ புகைப்படங்கள் குடும்ப சமேதரராய் எடுத்து அதில் ஒட்டப்பட்டிருக்க, அதில் இவர்களின் அனாதைத் தோற்றம் பொலிஸாரின் கேலிக்கும் கிண்டலுக்கும் மேலும் தூபம் இடுவதாகவே இருந்தது.
இவ்வாறு நள்ளிரவுகளில் தூக்கக் கலக்கத்தோடு பொலிஸா ரோடு போராடும் நிகழ்வுகளுக்கு வால்வைப்பதுபோல் சிலவேளைகளில் பகல் நேரங்களில் கதவு தட்டப்படும். அவசரஅவசரமாகக் கதவைத் திறந்து பார்த்தால், ஒரு ‘மகான்’ கையில் ஒரு லிஸ்ற்றோடு, இழுவுண்ட காற்சட்டையும் சேர்ட்டுமாக நின்றுகொண்டிருப்பார்.
“என்ன வேணும்?”
“ரோஹினி ரோட்டில் ஹீன் மாத்தையா செத்துப்போனது. அவரை கனத்தைக்குக் கொண்டுபோக உதவி செய்யுங்க…” சாராய நாற்றமும் சிகரட் புகையுமாக நிற்குமவர், ஒரு மாதத்துக்குள் எத்தனையோ பேரைச் சாகடித்துவிட்டு கனத்தைக்குக் கொண்டு போக வந்திருக்கிறார். அப்படி வரும் இத் ‘தொண்டர்’ எந்த சிங்கள வீட்டுப் பக்கமும் தன் தலையைக் காட்டாமல் பார்த்துக் கொள்வதுதான் அவரது தனி விஷேடம், திறமை.
“இப்ப காசில்லை”
“கொஞ்சமாவது குடுங்க” “கொஞ்சமும் இல்லை”
“பொய் சொல்ல வாணாம் ஐயா. கொஞ்சமாவது குடுங்க”
“என்னட்ட காசில்லை போ”
“என்ன போ சொல்லிறது? பறதெமலா! நீ பாமன்கட சந்திக்கு வா, நான் பாக்கிறன்!”
ஒவ்வொரு நிகழ்விலும் எமது இருப்பென்பது முள்ளந்தண்டில் குத்தப்படுவதுபோன்ற அனுபவம்.
ஊரில் இருக்கும்போது தமக்குள் சாதிபார்த்து, தன்னினத்தில் பலரைத் தீண்டாதோராய் தள்ளிவைக்கும் தமிழரை, ஏற்கனவே சிங்களவன் பஞ்சமரில் ஒருவனாகக்கண்டு ‘பறைத்தமிழன்’ என்று தள்ளிவைத்திருக்கிறான் என்பதுதான் வேடிக்கை!
இரண்டு மாதகால அலைச்சலுக்குப் பின்னர் ஒருவாறு வீடு கிடைத்தது. அவன் எதிர்பார்த்ததுபோலவே ஓர் அன்புள்ளம் பிறநாட்டில் இருந்து பணம் அனுப்பியது தக்க நேரத்தில் உதவிற்று. அதைக்கொண்டு அவன் புதிய வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத் தான். முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வீடு அது. அவரது பெரிய வீட்டுக்குப் பின்னால் இந்த வீடு இருந்தது. முன்பிருந்த பீரிஸ் தந்த வீட்டைவிட இது எவ்வளவோ மேல். புரோக்கரோடு எனது வீட்டுச் சொந்தக்காரரைச் சந்திக்கச் சென்றபோது என் கண்களை முதலில் கவர்ந்தது, அந்த வீட்டுக் கண்ணாடி அலுமாரிக் குள் தெரிந்த முகமட் ஜின்னாவின் படந்தான். இந்தியாவிடமிருந்து முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானைப் பெற்றுக்கொடுத்த ஜின்னா! ஏனோ, அந்தப் படம் என்னை உற்றுப் பார்ப்பதுபோல் பட்டது.
அன்றிரவு பதினொரு மணியாகியும் புதிய வீட்டு ஒழுங்குகள் முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்குப் பொருட் களை ஏற்றி இறக்கியது. அதற்காக லொறிக்காரனுக்கு அறுத்துக் கொட்டிய கூலி. புரோக்கருக்குத் தாரைவார்த்த கூலி. பொலிஸ் றிப்போட்டுக்குப் புகைப்படம் எடுக்க ஸ்ரூடியோக்காரனுக்கு அள்ளிக்கொடுத்தது. தமிழர்களை, அவர்கள் வாழும் இடங்களில் இருந்தெல்லாம் குடியெழுப்பி அகதிகளாக அலையவிட்டுக் கொண்டே, அவர்கள்மூலம் சிங்களவர்களுக்கு வியாபாரம் காட் டும் அரசாங்கம்! எல்லாவற்றிலும் இந்த வியாபாரம் உள்ளோடி யிருந்தது. ஏதாவது அவசரமாக யாழ்ப்பாணம் போக வேண்டுமா? இருக்கிறதே, 5000, 6000 ரூபா என்று கறந்துகொண்டு உங்களை அனுப்பிவைக்க ‘லயன் எயர்’ என்றும், ‘மொனறா’ என்றும்! வவுனியா தடுப்புமுகாமைவிட்டுக் கொழும்பு வர வேணுமா? 40, 50 ஆயிரம் என்று அந்தச் சேவை செய்ய இருக்கிறார்கள் பொலிஸ் அதிகாரிகள்! தமிழ் மக்களின் ஒவ்வொரு விடுதலை இருப்புக்கும் விலைபேச வைக்கும் ஆட்சி!
ஏன் இந்த அவலம்?
யார் செய்த பழி எம்மில் சூழ்ந்தது?
என் நினைவில் பொன்னம்பலம் இராமநாதன் ஓடிவருகிறார். பின்னர் ஜி.ஜி. பொன்னம்பலம் நினைவுக்கு வருகிறார்.
இங்கிலாந்தில் இருந்து வந்து துறைமுகத்தில் இறங்கிய பொன். இராமநாதனை, சிங்களவர்கள் பல்லக்கில் இழுத்துவருகிறார்கள்.
1915இல் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மூண்ட இனக்கலவரத்தில், சிங்களவர்களுக்காக ஆங்கில ஆட்சியினரிடம் சென்று பரிந்துரைத்தமைக்காக நன்றி செலுத்தும் முகமாக அவர்கள் இவரைப் பல்லக்கில் வைத்து குதிரைகள்போல் இழுத்து வருகிறார்கள்.
வாறார் வாறார் தலைவர் வாறார்!
எங்கள் லிங்கம் அமிர்தலிங்கம்!
அதிகப்படி பத்தாயிரம்!
வீட்டுக்கு நேரா போடு புள்ளடி!
நான் காணாத பல்லக்கில் காவப்பட்ட தலைவரை, நான் கண்ட கூட்டணிப் பல்லக்குக்காவிகளின் ஊர்வலத்தோடு என் மனம் என்னையறியாமல் ஒப்பிட்டுப் பார்க்கிறது.
இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டபோது, தான் பல்லக் கில் வைத்துக் காவப்பட்டதால் உச்சி குளிர்ந்து பெரும்பான்மை இனத்தோடு ‘ஒண்டுக்கிருக்கலாம்’ என்று எண்ணிய பொன்.இராமநாதன், அருணாச்சலம் ஆதியார் கருத்து, கூட்டணி திருச்செல்வம் ஆதியார் ஊடாக வந்து இன்றுள்ள பல தமிழ்க் கட்சிப் புரோக்கர்களிடம் ஊறி வியாபித்துநிற்கிறதா?
சுதந்திரப் பிரகடன காலத்தில் தமக்கெனத் தனியான இடத் தைக் கேட்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்ட தலையில்லாத தலை வர்கள், இல்லை, தலையில்லாத புரோக்கர்கள்! இல்லை, பல்லக்கில் தூங்கிய மகான்கள்!
ஜின்னா படுபயங்கரமாகச் சிரிக்கிறார்.
ஜின்னா, மகாத்மா காந்தியைக்கூட நம்பவில்லை!
காந்திக்குப் பின் வருபவர்கள் எல்லாம் காந்திமாதிரி இருப் பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஜின்னாவின் தீர்க்கதரிசனம் சரியாகவே இருந்தது.
பாபர் மசூதி – இராமர் கோவில் இடிபாடுகளுக்கிடையில் ஈஸ்வர அல்லாஹ் தேரேநாம்’ என்ற காந்தியார் பஜனை உயிரற்று ஒலிக்கிறது.
அன்று இரவு புது வீட்டில் சிவாவுக்கு நித்திரை வருவதாய் இல்லை.
அவன் படுக்கையில் கிடந்து உழன்றுகொண்டிருந்தான். பல கற்பனைகளும் எண்ணங்களும் அரைகுறைக் கனவுகளும் காட்சிகளும் அவனை மூழ்கடித்துக்கொண்டிருந்தன.
ஜின்னாவுக்கு இந்தியப் பிரதமர் பதவியைக் கொடுக்கவேண் டும் என்று காந்தி நிற்கிறார். ஆனால், சுயநல நோக்குடைய நேரு, பட்டேல் போன்றவர்களுக்கு அதில் விருப்பமில்லை.
ஜின்னாவை இந்தியப் பிரதமர் ஆக்கியிருந்தால் பாகிஸ்தான் கிடைத்திருக்குமா?
செல்வநாயகம் யோசிக்கிறார்.
பொன். இராமநாதனைச் சிங்களவர்கள் பல்லக்கில் வைத்து இழுத்திருக்காவிட்டால், தமிழ்ப் பிரதேசங்களுக்கு இன்றுள்ள நிலை ஏற்பட்டிருக்குமா?
ஜெயவர்த்தனா இலங்கையைத் துண்டாடியபடி கண்டி யாத்திரை செல்கிறார்.
பண்டாரநாயக்கா, செல்வநாயகத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் கிழித்தெறிகிறார்.
செல்வநாயகம் யாழ்ப்பாணக் கச்சேரியடியில் சத்தியாக்கிர கத்தை ஆரம்பிக்கிறார்.
மூன்று மாதங்கள் நீடிக்கும் சத்தியாக்கிரகப் போராட்டம்!
ஒரு நாள் இரவு சத்தியாக்கிரகிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சத்தியாக்கிரகிகள் அடித்துவிரட்டப் படுகின்றனர். சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்.
ஒரு நாள் ராணுவ நடவடிக்கையோடு சத்தியாக்கிரகம் நின்று போகிறது!
காந்தியும் ஜின்னாவும் மாறிமாறிப் பெரிதாகச் சிரிக்கின்றனர். “இது சத்தியாக்கிரகமா? இது சத்தியாக்கிரகமா?” என்பதுபோல் அவர்கள் சிரிப்பொலி கேட்கிறது.
கதவு தட்டப்படுவதுபோல் இருக்கிறது.
சிவா விழித்தெழுந்து போய்த் திறக்காமலேயே யாரோ உள்ளே வருவது தெரிந்தது. ஒரு கரிய உருவம்போல் இருந்தது. நெஞ்சு படபடக்க அவன் வந்தவனைப் பார்க்கிறான்.
யார் அவன்? அந்த மாயப் புன்னகை!
கிருஷ்ணனா?
‘கிருஷ்ணா, நீ எங்கே இந்த நேரத்தில்…?”
“மீண்டும் துரியோதனிடம் போகிறேன்; பாண்டவர்களுக்கு டம் கேட்டு.”
“பாண்டவர் பிரச்சினை எப்போ முடிந்துபோயிற்றே? இப்போ என்ன திரும்பவும்?”
“இல்லை, காலங்காலமாக ஒவ்வோர் இடத்தில் ஒவ்வோர் தளங்களில் அது நடந்துகொண்டுதான் இருக்கிறது…”
“எங்கள் நிலையைப் பார்த்தாயா?”
“உங்களுக்கென்ன, ஏதோ விதத்தில் தப்பிவந்து கொழும்பில் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள்… ஆனால்…”
“ஆனால் என்ன…?”
“ஆனால், குந்தியிருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி ஒருநேரக் கஞ்சிக்கே வழியின்றிக் காட்டிலும் ரோட்டிலும் செத்துக் கொண்டிருக்கும் உன் ஊர் மக்களைத் தெரியுமா?”
‘ஆம்’ என்பதுபோல் நான் பேசாது இருக்கிறேன்.
“அவர்களுக்காகத்தான் போகிறேன்.’
அவன், என்னைக் கடந்து மேலே போவது தெரிந்தது. யூதர்களை அழைத்துச்சென்ற மோசஸ்போல் அவன் நடையில் துயர் தெரிந்தது.
அவன் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியிலும் துயர், அதற்கு சுருதி கூட்டுவதுபோல் நான் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் படித்த நம்மூர்க் கவிஞனின் வரிகள் எழுந்துவந்து என்னுள் ஒலித்தன.
“உயிர் வாழ
மீன்கள் தாடையால் சுவாசிக்கின்றன.
மனிதன் நாசியால் சுவாசிக்கின்றான்
விடுதலைக்காகப் போராடும் நாம் உயிர்வாழ
நம் மொழி, நம் நிலம், நம் பண்பாடு மூலமாகச்
சுவாசிக்கின்றோம், இதையிழந்து
வாழ்வதெங்கே?”
– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.