விலகிப் போகிறவன்





(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சகாக்களிடமிருந்து தான் மிகவும் விலகிப்போய் விட்டதாக இப்போதெல்லாம் அடிக்கடி உணர முடிகிறது எப்படியென்று தெரியவில்லை – ஆனால் தானறியாமலே இந்த விலகல் கொஞ்சங் கொஞ்மாக நேர்ந்திருக்க வேண்டும்.

‘தன்னைச் சூழ்ந்திருக்கிறவர்களுடன் சேர்ந்து வாழு கிற கலையைப் பயின்றிராதவன், வேறெந்தக் கலையைக் கற்றிருந்தாலுங்கூட, வாழத்தெரியாதவனேயாவான்’ – என் கின்ற அர்த்தத்தில் யாரோ சொன்னதை எங்கோ படித்தது வேறு, இந்த உணர்வை அதிகப் படுத்தி உறுத்திக் கொண்டிருந்தது.
அவர்கள் ஜெயனை வெறுத்தார்கள் என்றில்லை-நிச் சயமாக இல்லை, ஆனால் ஒரு ஒதுக்கம். தங்கள் நட்பை இவனுடன் பகிர்ந்து கொள்ளத் தயக்கங்காட்டிய மாதிரித் தெரிந்தது. கன்ரீனில் தேநீருக்குக் கூட்டமாகப் போகிற போதில் அவனுக்கு அழைப்பு வருவதில்லை. படம் பார்க்கப், போகிற திட்டம் வனையும் சேர்த்து விவாதிக்கப் படுவகதில்லை…..”
இவையெல்லாம் பெரிதாக தெரிய ஆரம்பித்திருக் கின்றன. இந்த இடை வெளியை தவிர்க்க அவன் தீர்மானங்க கொண்டான்.
வகுப்பறையை நினைவூட்டுகிற கந்தோர். வரிசையாக மேசைகள். இந்தக் கூடம், வகுப்பறைகளிலும் பெரியது என்பது ஒரு வித்தியாசம்-நாலு வகுப்பறைகளை சேர்ந்த அளவு. மற்றபடி, எல்லோரும் ஒருபுறமாய் பார்த்தபடி அமர்ந் திருந்து வேலைபார்க்கையில், வகுப்பறையில் பாடங்கேட்கிற நினைவு வரும். வாத்தியார் இடத்தில், மிஸ்டர் பெர்னாண் டோ. இந்த இருபது பேரையும் மேய்க்கிற பெர்னாண்டோ.
பகல் இடைவெளிகளில் இடம்பெறுகிற கலகலப்பு முசுப்பாத்திகளாலும் அலுவலகம் வகுப்பறையை ஒத்திருந் தது. பெர்னாண்டோ நல்ல மனிதர்-கண்களை மூடிக் கொண் டிருந்து விடுவார். வேலை முடிந்தால் சரி. அவருக்கு மேலே சுந்தரலிங்கத்தார். விட்டுக் கொடுத்து வேலை வாங்குகிற தந்திரசாலி. இந்தச் சத்தங்களை என்றைக்குமே காதில் விழுத்திக் கொள்ளாதவர்.
இம்மாதிரி வேளைகளில்-ஒரு நாளைக்கு ஒன்று என்று- அவிழ்த்துவிட, யோகேஸ்வரனிடம் நிறையக் கதைகள் ஸ்ரொக்கிலிருந்தன. வெற்றிலை துப்பிய தவளையின் கதை, காஞ்சோண்டிச் செடியைக் கும்பிட்டவன் கதை-எல்லாம் அவன் சொன்ன கதைகளே. இந்த வரிசையில் இன்று அவன் கந்தையா வாத்தியாரின் கதையைச் சொன்னான்.
கந்தையா வாத்தியார், சரியான சுதிக்கந்தன். நரிக் கள்ளன், ஆள். வாத்தியார் வீட்டுக்குப் பக்கத்து வீடு, சுப்பிரமணியம். சுப்பிரமணியத்துக்கு மத்திய கிழக்கு நாடு களுக்குப் போய்ச் சம்பாதிக்க நிறைய ஆசை இருந்தது. வலு பாடுபட்டு, ஒரு மாதிரி, ஓமானில் ஒரு வேலை தேடிக் கொண்டு அவன் புறப்பட்டபோது, அவன் பெண்சாதிக்கு இரண்டோ மூன்றோ மாதம் தலைப்பிள்ளை. இவள் கொஞ்சம் பேய்த் தரவளி, விவேகம் குறைவு, வெருளி, சுப்பிரமணியம் புறப்பட்டபின், கந்தையர் ஒருநாள் அவளிடங் கேட்டார்.
“எடி, இவன் சுப்பிரமணியத்துக் கென்ன பைத் தியமோ? ஏனிப்பிடி |அரை குறையிலை விட்டிட்டுப் போனவன்?”
“எதை வாத்தியார்?”
“தலையை மர்த்திரம் உண்டாக்கி விட்டுப் போயிருக் கிறான். இனி, கை, கால் உடம்பெல்லாம் வைக்கிறது ஆராம்?”
(இந்த இடத்தில் சிரிப்புப் பற்றியது)அவள் பயந்து போனாள். வாத்தியார் கொஞ்சநேரம் சுப்பிரமணியத்தைத் திட்டினார். பிறகு கொஞ்சநேரம் யோசித்து விட்டு, வேண்டா வெறுப்பாக சொன்னார்.
“இனி என்ன செய்யிறது? வேணு மெண்டா, நான் மீதியை வைச்சுத்தாறன்….”
வாத்தியார் ஒரு நாளைக்கு ஒரு உறுப்புவீதம் உருவாக்கத் தொடங்கினார்.
ஆர்ப்பாட்டச் சிரிப்புகள் வெடிக்கவும் “பொறுங் கடாப்பா,இன்னுமிருக்கு கதை….” என்றான் யோகேஸ் கம்பீரமாக.
ஒரு வருஷத்துக்குப் பிறகு, சுப்பிரமணியம் வந்தான். ஒருநாள் ஆசையாக பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்த போது பெண்சாதி சொன்னாள்.
“ம்ஹூம்! போனவேளையிலை தலையை மாத்திரம் வச்சிட்டுப் போய்ட்டு, இப்ப வந்து வலுசந்தோஷமாக் கொஞ்சுறீங்கள். கந்தையா வாத்தியார் மாத்திரம் இல்லாம லிருந்தா, என்ன நடந்திருக்கும்?”
எல்லோரும் வயிறு வெடிக்கச் சிரித்தார்கள். ஜெய அனுக்கும் சிரிப்பு அடிவயிற்றைப் புரட்டியது. ஆனால் ஒரு கணந்தான்! பாவம் சுப்பிரமணியம் என்றிருந்தது. பாவம் அவன் பெண்சாதி… கந்தையா வாத்தி, எப்பேர்ப்பட்ட வில்லாதி வில்லன்….! – ஜெயனுக்குச் சிரிப்பு நின்றுவிட்ட
பகிடிக் கதை என்றாலும், இதைக் கட்டியவன் ஒரு கதைஞன்தான். ஆனால் என்ன இரக்கமற்ற, குரூர கற்பனை! – இதற்காகத் தன்னால் சிரிக்கவே முடியாது; ஒப்புக்குத்தானும் சிரிப்பு வராது.
சுப்பிரமணியம், “உன் பெண்டாட்டி எவ்வளவு பெரிய பரிதாபம்! நீயும்….!” – ஒரு கணமேனும் வந்த சிரிப்புக்காகத் தன்னில் கோபங் கொண்டான்.
எதற்காகவோ மீண்டுமெழுந்த இன்னொரு பெரிய சிரிப்பலை, வாயை இறுக மூடியிருக்கும் இவன்மேல் வந்து மோதியது. சிரிப்பால் இடுங்கிய சிலசோடி கண்களில் அந்த விலகல் தெரிகிறது!…. ‘நீ வித்தியாசமானவனோ?’ என் கேட்கிற பாவனை தெரிகிறது….
அந்நியங் கொள்வார்கள்தான்; கொள்ளட்டும்.
– கணையாழி, ஜனவரி – 1981.
– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.