வினாக்களைத் தேடும் விடைகள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 8,274
இன்னா….புள்ள எம்மேல கோவமாடூ, ரெண்டு நாளைக்கு முன்னே நல்லாதானே பேசினு இருந்தே, இப்ப என்ன ஆச்சினு முஞ்ச து]க்கி வெச்சினு பேசாம ரொம்ப பிகு பன்றே…..ஏதாவது பேசு புள்ள…
பொய்க் கோபத்துடன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.
இன்னா…. புள்ள இதோ பாரு நாம் பாட்டுக்கு கேட்டுனே இருக்கேன் ஒன்னும் சொல்லாம போனா எப்படி…டூ எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா பேசிட்டுப் போ நீ இப்பிடி பேசாம இருந்தா எனக்கு மனசு என்னமோ பன்னுதுமே.
ஒருவர் கெஞ்ச, ஒருவர் மிஞ்ச, அங்கு ஒரு ஊடல் அரங்கேறிக் கொண்டிருந்தது, அவளின் முகத்தில் மட்டும் ஏதோ ஒரு இனம் புரியாத வேதனை….தெரிந்தது.
எங்கிட்ட பேசாதைய்யா, இப்ப தான் ரொம்ப ஆம்பளையா அக்கரையா வந்து கேக்குற, இந்த அக்கற நேத்து எங்க போனது, நேத்து முழுக்க உன்ன தேடிப் பார்த்து, உன்ன பாக்காம நான் தவியா தவிச்சிப்புட்டேன். உனக்கு என்னாச்சோ, ஏதாச்சோன்னு பயந்துபுட்டேன். உன்ன நெனச்சி நெனச்சி அழுகை……அழுகையா வந்தது. உன்ன பாக்காததால நீ என்ன மறந்துட்டு வேறு எங்காவது போயிட்டியோன்னு நெனக்சி உம் மேலே ரொம்ப கோவம் கோவமா வந்தது, நல்ல வேல இன்னிக்கு நீ வந்த, இன்னிக்கும் வரலேன்னு வச்சிக்க, நடக்கறதே வேறயா இருந்திருக்கும் என்று பொய்க் கோபத்துடன் ஒரு இடி இடித்தாள்.
அது சரி…இப்பத்தான் கோபம் போயிடுச்சி இல்லே, இந்தா இத சாப்பிடு என்று அவன் வடையை ஊட்டினான்
“எனக்கு வேணாய்யா, எனக்கு வயிறு செரியில்ல என்னமோ பன்னுது. நீயே சாப்புடு” என்றவுடன் பதட்டத்துடன் அவன்
என்ன பன்னுது சொல்லு புள்ள, என்னால ஏதாவது செய்ய முடியுமானு பாக்குறேன்,
அய்ய, ஆளாப்பாரு …இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம், என்று வெட்கப் பட்டு, தலைய ஒரு பக்கமா சாய்ந்து முகம் சிவக்க பார்த்தாள். கருப்பானாலும் களையான அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது, பார்க்க அதுவும் அழகாகத்தான் இருந்தது.
அவள் வெட்கத்தை ஓரக் கண்ணால் பார்த்து அவன் ரசிக்க, அவன் ரசித்து பார்த்ததை அவளும் பார்த்து மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். அந்த சிரிப்பில் வடையை மெல்ல அவன் ஊட்ட, வெட்கத்தோடு அதை வாயில் வாங்கிக் கொண்டு காதலாய் அவள் ஒரு பார்வை பார்க்க அந்த வடை அவர்களுக்கு சுவையாக இருந்தது.
யாரோ வரும் சத்தம் கேட்டு இருவரும் அங்கிருந்து சிட்டாக பறந்து வேறு இடத்திற்கு வந்து வசதியான இடத்தில் உட்கார்ந்தனர், அவன் அவள் காதருகே குனிந்து, தலையை மெல்ல வருடி “உடம்பு என்னம்மா செய்யுது” என்று பரிவோடு கேட்க, அவளும் அவன் காதில் ஏதோ சொல்ல, அதைக் கேட்டு அவன் சந்தோசத்தில் துள்ளி ஆகாயத்தில் ஆனந்தமாய் மேலும் கீழும் பறந்தான்.
மெல்ல அவள் கிட்டே வந்து, அவள் வயிறை தொட்டுப் பார்த்து மெல்ல தடவிக் குடுத்து, அன்போடு ஒரு முத்தம் குடுத்தான். அதில் கிரங்கிய அவள், அவன் வயிறை தொட்டு வருடிக் குடுக்கும்போது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வில் தன் உடம்பை சிலிர்த்துக் கொண்டாள்.
“இதோ பாருங்க, இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு, அதுக்குள்ள ஒரு நல்ல இடமா பாருங்க, நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு தேடிப் பாக்குறேன்.”. நீ கவலப்படாதபுள்ள, இன்னும் ஒரு நாள் முழுசா இருக்கு இல்லே, எப்படியும் தேடி கண்டு புடிச்சிடுவேன். “மரம் வெச்சவன் தண்ணி ஊத்தாமலா போவான்;,”
“அந்த பழமொழிய மட்டும் சொல்லாதையா, இங்க மரம் எங்க இருக்குடூ அதுக்கு ஊத்த தண்ணி எங்க இருக்குடூ மரங்கள வெட்டினதால மழை இல்ல அதனால நிக்க நிழலும் இல்ல எங்க பார்த்தாதலும் கட்டடம் தானே இருக்கு.
எது எப்படி இருந்தாலும் நாளைக்குள்ள நாம ஒரு இடத்த பார்த்தாகனும் அதுக்கு ஏதாவது வழி இருக்கானு பாருய்யா, “இங்க பாரு புள்ள, எதுக்கும் நீ கவலப் படாதே, நம்பிக்கைய இழக்காதே, முடிஞ்சவரைக்கும் தேடி ஒரு இடத்த கண்டுபிடிப்போம், நிச்சயமா ஒரு நல்ல வழி பிறக்கும்” என்று ஆதரவாய் அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் அவள் கண்ணயர்ந்தாள்.
விடியல் எல்லோருக்கும் பொதுவாகத்தான் விடிகிறது. நாம் தான் அவரவர் பிரச்சனைகளுக்கேற்ப அந்த விடியலை வரவேற்கிறோம். அதைப் போலதான் அந்த இருவரும் காலைப் பொழுதில்
இன்னாடா… ரொம்ப சோகமா இருக்கே, முகமெல்லாம் ரொம்ப வாடிப்போய் இருக்கு? ராத்திரி நல்லா தூங்கலியா? ஏதாவது சாப்டியா? என்றான் அவன்.
“இல்லங்க, எதுவும் சாப்பிட பிடிக்கல, தோதா ஒரு இடம் கிடைக்கிறவரைக்கும் எனக்கு சோறு தண்ணி இறங்காது து]க்கமும் வராது”.
“என்னால முடிஞ்சவரைக்கும் எல்லா இடத்திலும் சுத்தி தேடிப் பார்த்துட்டேன். நமக்கு தோதான ஒரு இடம் எங்கேயும் இல்ல, ஆனா, அதுக்குப் பதிலா ஒரு இடத்த பார்த்து வச்சிருக்கேன், நீ வந்து பார்த்துட்டு உனக்கு பிடிக்குதானு சொல்லு” என்றவுடன், அவள் வேகமாய் தலையசைக்க இருவரும் விருட்டென்று பறந்து அந்த இடத்தை போய் பார்த்தனர்.
“அய்யோ..ஸ இந்த இடத்திலா…. ஸ வேணாங்க, இங்க இருந்தா நம்ப வாரிசு அநியாயமா செத்துடும். இங்க இருப்பதை விட, நீங்களே உங்கக் கையால என்ன கொன்னுடுங்க, இல்லேனா என்ன இப்படியே விடுங்க, நா எங்காவது கரண்ட கம்பியிலே அடிபட்டு செத்துப் போறேன்.
அவன், அவளை ஆதரவாக அணைத்து, “இதோ பாரு புள்ளே இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியல, இதவிட்டா வேறு இடம் எங்கும் இல்ல, அதனால எல்லாப் பொருளையும் இதோ இங்க சேர்த்து வச்சிருக்கேன். நீ சம்மதமுன்னு சொன்னா ஒரு நொடியிலே ரெடி பன்னிடுறேன்”
நிறைமாத கர்பிணியான அவள், தன் நிலையை நினைத்து மனசுக்குள் அழுதுக் கொண்டாள். இந்த நிலைக்கு ஆளாக்கிய படைத்த கடவுளை நோவதாடூ இல்லை, இயற்கையை அழித்து வாழும் சுயநல மனிதர்களோடு வாழும் தன் தலை எழுத்தை நோவதா என்று தன்னையே நொந்துக் கொண்டு அரை மனதோடு சம்மதித்தாள்.
அவள் சம்மதித்தவுடன், சேர்த்துவைத்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து பிறக்கப்போகும் தன் குழந்தைகளின் முகத்தை மனதில் நினைத்துக்கொண்டே ரசனையோடு கட்டினான். கட்டி முடித்தவுடன் அவளை அன்பாய் அணைத்து முத்தமிட்டு தலையை வருடிக் குடுத்து அழைத்துக் கொண்டு போய் அந்தக் கூட்டில் உட்காரவைத்து விட்டு, இறைத்தேடப் பறந்து போனது அந்த ஆண் காகம்.
பெண்காகமோ அந்த செல்போன் டவர் ஆண்டெனா கம்பிகளின் இடுக்கில் கட்டிய கூட்டில் பயத்துடன் முட்டையை இட்டு அந்த முட்டைகளை ஏக்கத்துடன் பார்த்து அடைகாத்துக்கொண்டிருந்தது. இறைத் தேடிப்போன ஆண் காகம் இறையோடு வந்து அந்தக் கூட்டை ஆவலாய் எட்டிப் பார்த்தது, அதில் தான் ஈன்ற முட்டைகளோடு அடைகாத்துக் கொண்டிருந்த பெண் காகம் அந்த கூட்டில் செத்துக் கிடந்ததைப் பார்த்து “அய்யோ” என்று ரெக்கையால் தலையில் அடித்துக் கொண்டு அழுதது… ஆம் செல்போன் டவரில் இருந்து வந்த கதிர்வீச்சின் தாக்கத்தால் அடைகாத்துக்கொண்டிருந்த பெண் காகம் இறந்துவிட்டது.
ஆண்காகமோ, செய்வதறியாது திகைத்து நின்றது. எதனால் தன் துணை இறந்தது என்று தெரியாமல்.