வாக்கும் போக்கும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 148 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(பழைய கதை புதிய பாடல்!)

வயிற்றுப் பசியால் மிக
வாடி நின்ற சிறுநரி
ஆற்றங் கரை அருகிலே
அமைந்த வீடு சென்றது!

உள்ளி ருந்து கேட்டதாம்
ஊரைக் கூட்டும் அழுகுரல்
நள்ளிரவுக் குளிரிலே
நடுங்கிக் குழந்தை அழுததாம்!

குழந்தை தன்னைப் பேணிடும்
கூலிக் காரப் பெண்ணவள்
குழந்தை தன்னை மிரட்டினாள்
கொடிய குரலில் இப்படி!

“தூங்க வில்லை நீயெனில்
தூக்கி எறிவேன் வெளியிலே!
அங்கிருக்கும் மிருகங்கள்
அன்னமாக்கும் உன்னையே!”

என்று சொல்லி மிரட்டினாள்
ஏகக் குரலில் கத்தினாள்
என்ற போதும் குழந்தையும்
ஏங்கி ஏங்கி அழுதிட

வெளியில் நின்ற நரியதன்
வெளிர் சிவப்பு நாக்குமே
துளித்துளியாய் ஒழுகிட
தின்னும் ஆசை மிகுந்ததாம்!

கோபம் வந்த பெண்ணவள்
கொடுமையாகக் கதவினை
வேக மாகச் சார்த்திட
வீட்டு நாய்கள் வீறுடன்

கேட்டைத் தாண்டிப் பாய்ந்தன
போட்டி போட்டு நரியின
விரோதியாக எண்ணியே
வேட்டை யாட விரட்டின!

கூலிக் காரப் பெண்ணவள்
கூற்றை நம்பி கெட்டதாம்
வேலிக் கருகில் நின்றஅவ்
வயிறுபசித்த நரியுமே!

ஓடிச் சென்று பதுங்கிட
ஓரிடத்தைத் தேடியே
நாடிச் சென்று மறைந்தது
நரியும் தன்னைக் காக்கவே!!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *