கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 878 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘நம்பிக்கையே கதி; நம்பிக்கையீனம் அழிவின் வழி…..’ 

அக்கரையை அடைதல் அவ்விரு நண்பர்களினதும் இலட்சியமாக அமைந்தது. வழியில் காட்டாற்றின் வெள்ளப் பெருக்கு. அதனைக் கடந்து செல்லும்வழி புலனாகாது திகைத்து நின்றனர். 

அவ்வமயம், அவ்விடம் துறவி ஒருவர் வந்து சேர்ந்தார்.  

‘ஏன் இந்த வியாகூலம்?’ குரலில் அன்பு பிழிந்து கேட்டார். 

‘மறுகரையை அடைதல் வேண்டும். மார்க்கம் அறி யாத தவிப்பு!’ 

‘வியாகூலம் அவநம்பிக்கையின் விளைச்சல். அதனைத் துறவுங்கள். என் இருப்பிடம் மறுகரையிலேதான். இக்காட் டாற்றின் போக்கு நான் அறிந்தது. என்னைப் பின்பற்றுங்கள்! வாருங்கள்!’ நம்பிக்கையூட்டும் குரலிற்கூறி, துறவி நடக்கத் தொடங்கினார். 

அத்துறவியின் வார்த்தைகளில் ஒருவன் பரிபூரண நம்பிக்கை வைத்தான். அவரைப் பின்பற்றினான். 

‘இக்கிழவரின் கூற்றை தம்பி, ஆழமறியாத இவ்வாற்றில் கால்களை வைக்கின்றாயே….’ என மற்றவன் தடுத்தனன். 

முன்னவன் தன் சகாவின் எச்சரிக்கை வார்த்தைகளை செவிகளில் வாங்கிக்கொள்ளாது, துறவியிலே முழு நம்பிக்கை வைத்துத் தொடர்ந்தான். 

துறவியும் அவனும் அக்கரை சேர்ந்தனர். 

இக்கரையில் பின்தங்கியவனுக்கு மன உடைவு. துறவியின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துப் பின்பற்றி யிருக்கலாம் என்ற உண்மை அப்பொழுதுதான் உறைத்தது. 

துறவி ஆற்றினைக் கடந்த வழிப்பாட்டில் நடக்கத் தொடங்கினான்; நடுவழியில் சுழியிலே அகப்பட்டுக்கொண்டான். சற்று நேரத்தில் சுழியின் போக்கில் அடித்துச் செல்லப்படலானான். மீளவேயில்லை. 

நண்பனுக்கு நேர்ந்த கதியை நினைத்துக் கரை சேர்ந்தவன் துக்கித்தான். 

‘நதியைக் கடந்து கரை சேர்ந்த பிறகும் வியாகூலமா? உன் கருமங்களைக் கவனி. நீ என்னில் நம்பிக்கை வைத்தாய். நம்பிக்கையே கதி; நம்பிக்கையீனம் அழிவின் வழி. அவனுக்கு என்மீது நம்பிக்கை இருக்கவில்லை. நான் நடந்த வழிப்பாட்டிலேதான் நம்பிக்கை இருந்தது….’ எனத் துறவி அமைதியாகக் கூறினார்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *