வழிகாட்டிகள்
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருமதி பத்மநாதன் மேசையிலிருந்து பைல் களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். பியூன் கொண்டுவந்து வைத்திருந்த தேநீர் ஆறிப் போயிருந்தது. புது அதிபராக அந்த மகளிர் கல்லூரிக்கு நியமனம் பெற்று வந்த அவருக்கு நாற்பது வயதிருக்கும். கூந்தல் ஆங்காங்கே நரைத்திருந்தது. இரட்டை நாடி சரீரமானாலும் நல்ல கம்பீரமான தோற்றம். தீட்சண்யமான விழிகளால் முதல் பார்வையிலேயே எவரையும் எடைபோடும் திறன், சிறப்பான ஆளுமை என ஓர் அதிபருக்குரிய சகல தகுதிகளும் அவரிடம் நிறைந்திருந்தன.
பைல்களில் கையெழுத்திட்டு முடித்தவர், ஆறிப்போன தேநீரை மடமடவென குடித்து முடித்துவிட்டுக் கையில் பிரம்புடன் தன் காரியாலயத்தைவிட்டு வெளியேறினார். அப்போதுதான் இடைவேளை முடிவுற்றிருந்தது. சுற்றுமுற்றும் பார்வையிட்டபடி நடந்த அதிபரின் பார்வையில் பட்ட காட்சியை மனதுள் பதித்தவராய், மேலே நடந்தார். மலசல கூடங்கள் இருந்த பக்கமாக மாணவிகள் சிலர் கும்பலாக நிற்பது கண்டு, சந்தடி செய்யாமல் அவ்விடத்தை அண்மித்தபோது, சன்னமான பேச்சுக்குரல் அவரின் செவிகளில் தன்னிச்சையாய் விழுந்தது.
“ஏய், இன்னைக்கு செய்தி வாசிப்பாளர் வரல்லடி”
“அது யாரு செய்தி வாசிப்பாளர்?”
“அட ஒனக்கு விஷயமே தெரியாதா? கல்பனா மிஸ்ஸோட ‘விருதுப் பெயர்’ அதுதான்! அவங்க வகுப்புக்கு வந்தாங்கன்னா, அன்னைக்குள்ள பாடத்த அவங்க பாட்டுக்கு கடகடன்னு வாசிப்பாங்க, அதான் நாங்கெல்லாம் சேர்ந்து ‘விருது’ வழங்கினோமாக்கும்!”
“கல்பனா மிஸ்ங்கிறது… ஜன்னல் வைச்ச ஜாக்கெட்டு போட்டுட்டு வருவாங்களே! அவங்களா?”
“அவங்களே தான்”
“சரி, பாடம் விளங்குமா எல்லோர்க்கும்?”
“அதப்பத்தி யாருக்கு கவலை? அவங்கட பாடத்துக்கு பாதிப்பேர் கொட்டாவி விட, மீதிப்பேர் மடியில கொமிக்ஸ் புக் வைச்சி வாசிப்போம்.”
“கண்டுட்டாங்கன்னா?”
“அவங்களா? நீ ஒண்ணு! அவங்களுக்கு அவங்கட சாரிய ஒழுங்குபடுத்தவே பாதிநேரம் போகுது! எங்கள கவனிக்கிறதாவது!” அதைத் தொடர்ந்து ‘கொல்’லென்று சிரிப்பொலி எழுந்தது.
“ஏய். பாத்திமா மிஸ் விவாகரத்து வாங்கப் போறாங்களாமே! உண்மையா?”
“ஆமா, இன்னைக்கி எங்கட வகுப்புக்கு வர்ற டீச்சர்ஸ் எல்லோரும் அதைப்பத்தித்தான் பேசிக்கிட்டாங்க”
“எங்கட மிஸ் அரட்டையடிச்சே காலத்த ஓட்டுறாங்க. ஹும்… ம்! எப்படியோ ‘சிலபஸ் கவர்’ பண்ணிட்டா சரிதான்.”
“உங்க மிஸ்ஸா? அவங்க என்னைக்கு ‘சிலபஸ்கவர்’ பண்ணினாங்க? சும்மா கனவு காணாத! போன வருஷம் நாங்க பட்டபாடு அப்பப்பா!”
“எங்க மிஸ்னா, ரொம்ப நல்லவங்கடி. வம்பு தும்புக்கே போகமாட்டாங்க… எங்களுக்காக ரொம்ப கஷ்டப்படுறாங்கடி.”
“சாரதா மிஸ் தானே? ஷா அவங்கள போல வருமா?”
இதற்கிடையில் அதிபரின் வரவை ஒரு மாணவி கண்டுவிட, அடுத்தகணம் அவர்கள் திசைக்கொருவராய் நழுவி விட்டனர். சிந்தனையில் ஆழ்ந்தபடி, அவ்விடத்தை விட்டகன்றபோது கண்ட காட்சி அவரை சினங்கொள்ள வைத்தது.
இரண்டு சிறுமிகள் கல்லூரி வளாகத்திலிருந்த பூஞ்செடிகளை ஒடித்துக் கொண்டிருந்தனர். தம்முன் பிரம்புடன் வந்து நின்ற அதிபரைக் கண்டு ‘திருதிரு’ வென விழித்தனர்.
“ஏய் உங்கள யாரு பூஞ்செடிகள ஒடிக்கச் சொன்னது?”
“…”
“என்ன பதிலைக் காணோம்? ஏய் நீ குமரேசன் பொண்ணுதானே? நீ தானே போனவாரம் மாணவர் மன்றத்துல ‘பொதுச்சொத்தைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்புல பேசினே?”
“அ…ஆமா மெடம்!”
“அப்போ! இப்படி பூஞ்செடிகள் ஒடிக்கலாமா? இதுவும் பொதுச் சொத்துதானே!”
“இ… இது… பொதுச்சொத்துன்னு தெ… தெரியாது மெடம்”
“என்னது! தெரியாதா, பொய்யா சொல்றே? உன்ன…”
“அ… அடிக்காதீங்க மெடம்.. நா…நான் உண்மையைத்தான் சொல்றேன். நேத்து சுகன்யா டீச்சரும் பஸ்னா டீச்சரும் அதோ அங்கிருக்கிற ரோஜாச் செடியில இருந்து ரெண்டு கொப்புகள ஒடிச்சாங்க மெடம்! அதான் நாமளும் ஒடிச்சா பரவாயில்லைன்னு நெனச்சி… த… தப்புப் பண்ணிட்டனே மெடம்! தெரியாம செஞ்சிட்டேன் மெடம்! அப்பாகிட்ட சொல்லிடாதீங்க மெடம்!”
“உம், உம்! இனி இப்படி செய்யக்கூடாது என்ன, ம்., ஓடுங்க வகுப்புக்கு!”
தப்பினோம்… பிழைத்தோம்! என ஓடும் மாணவியரைப் பார்த்தவாறு நின்றிருந்த அதிபருக்கு, தன் தலையில் யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்தது போன்றதொரு வேதனை தோன்றியது. தன் காரியாலயத்தை அடைந்தவர் பிரதி அதிபர் திருமதி கனகசபையை அழைத்து, அன்றைய தினம் அதிபர் ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டத்தை ஒழுங்கு செய்யுமாறு பணித்தார்.
இரைச்சல் மிகுந்திருந்த அந்தக் கலந்துரையாடல் மண்டபம், அதிபரின் வரவையடுத்து நிசப்பதமானது. தனக்குரிய இடத்தை அடைந்த அதிபர், அங்கு குழுமியிருந்த ஆசிரியர்களை ஒரு தரம் கூர்ந்துநோக்கினார்: பின் தொண்டையைச் செருமிக்கொண்டு நிதானமாகப் பேசத் தொடங்கினார்.
“எனது அன்புக்குரிய ஆசிரிய சகோதர சகோதரிகளே! அவசரமாக இன்று இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தது பற்றி உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இன்று குறிப்பிட்ட சில விடயங்களை அறிவுறுத்தக் கடமைப்- பட்டுள்ளேன். நான் அதில் நின்றும் தவறினால் இக்கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்பட நானும் காரணமாகி விடுவேன் என நான் அஞ்சுகிறேன்.
ஆசிரியர்களாகிய உங்கள் பணியின் புனிதம் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வழிகாட்டிகளான நாமே வழிதவறி நடந்தால், விளைவு பாரதூரமானதாயிருக்கும். வருங்கால சமுதாயமே சீர்கெட்டுவிடும் என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இன்று நான் கண்டேன் உங்களில் சிலர் சிற்றுண்டிச் சாலையிலிருந்து வெளியேறும் போது கைகளைத் துடைத்த காகிதத் துண்டுகளை பாதையில் போட்டு விட்டு நடக்கிறீர்கள். பக்கத்திலேயே குப்பைத் தொட்டியும் இருந்தது, இதைக் காணும் மாணவிகளும் நாளை இதே அலட்சியத்தைக் காட்டமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
“அடுத்தது, எமது கல்லூரி வளவிலுள்ள பூஞ்செடிகளை நேற்று உங்களில் இருவர் ஒடித்துக் கொண்டு சென்று இருக்கிறீர்கள். அதைக் கண்ட இரு மாணவிகள் தாம் செய்வது செய்ய தவறான செயல் என்றுணராமல், இன்று அதே தவறை முனைந்தது கண்டு, மிக வருந்தினேன். தவறுகளைத் திருத்த வேண்டிய நீங்களே தவறிழைத்தால் விளைவு இதுதான். எனவே, இனியேனும் நீங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
“மேலும் நீங்கள் உங்கள் தனிப்பட்ட விடயங்களைத் தயவு செய்து மாணவர்கள் முன்னிலையில் அலச வேண்டாம் என உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அது ஆரோக்கியமானதொரு விடயமன்று என்பதை நீங்கள் உணர வேண்டும்.
“கற்பித்தலை பொறுத்தவரையில் நீங்கள் உங்களது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முனைய வேண்டும். வெறுமனே பாடங்களை வாசித்துவிட்டால் போதாது. விளங்கிக் கொள்ளும் ஆற்றல் மாணவர்கள் மத்தியில் ஆளுக்காள் வேறுபடும். எனவே, இயன்றவரை. பாடங்களை சிறப்பாக விளங்கப்படுத்தி, வினாக்களை இடையிடையே தொடுத்து, மாணவர்களை பாடத்தோடு ஒன்றச் செய்வதோடு, பயிற்சிகள் கொடுத்து அவர்களின் நிலையை மட்டிட வேண்டும்.
“இறுதியாக, மீளவும் நான் கூறிக்கொள்ள விழைவது என்னவென்றால், மாணவர்கள் குறிப்பாக சிறிய வகுப்பு மாணவர்கள் முழுக்க முழுக்க தம் ஆசிரியர்களை சார்ந்திருக்கிறார்கள். அதாவது, தமது ஆசிரியர்கள் செய்வது எல்லாம் சரியாகத்தான் இருக்குமென்று ஆழ்ந்த நம்பிக்கை. அதுபோல் தாமும் செய்வோம் என்ற வேகம் அவர்களின் ஆழ்மனதில் வேரூன்றி இருக்கிறது. எனவே, ஆசிரியர்களான நீங்களே… வழிகாட்டிகளான நீங்களே… பகிரங்கமாகத் தவறிழைக்கும்போது… அதுவே பல மாணவர்களை வழிகெடச் செய்து, கல்லூரிக்கும் அபகீர்த்தி ஏற்படும். இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதை தடுக்குமுகமாக எம்மால் இயன்றவரை முயற்சிப்பது எம் கடமை. இது குறித்து கருத்துரைக்க விரும்பினால் கூறலாம்.” சற்று நேரத்தில் கூட்டம் மெதுவாகக் கலையத் தொடங்கியது. “ஏய், என்ன பெரிசு இன்னைக்கு ஓவரா அறுத்துத் தள்ளிவிட்டது?”
“நீ வேணும்னா பாரேன்! பெரிசு இன்னும் ரொம்ப நாளைக்கு இங்கே தாக்குப்பிடிக்காது. முந்தினவைக்கு நடந்தமாதிரி, நாளைக்கே இவவுக்கும் பெட்டிசன்கள் பறக்கும் பாரு!”
பேசிக்கொண்டே சிலர் கலைந்தனர். இவற்றை அறியாமல், தன் பணியை செவ்வனே நிறைவு செய்த மனநிலையில், திருமதி பத்மநாதன் புன்முறுவல் பூத்தபடி நின்றிருந்தார்.
– மித்திரன், 4.10.1998.
– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.