வர்க்கம்





(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு கவளம் போதுமா?
போதும். அதுகிடைத்தால் இஸ்ராயிலுடன் போராடிக்கொண்டிருக்கும் உயிரை ஒரு நாளைக்காவது இழுத்துப் பிடித்து நிறுத்தலாம்.
பஞ்சத்தின் கோரம் ஜாபீரைப் பிடுங்கித் தின்று கொண்டிருக்கிறது. அணு அணுவாக, தண்ணீர், அது எத்தனை நாளைக்கு ஒரு நோஞ்சான் நோயாளியின் உயிரை உடலில் வைத்துக் கொண்டிருக்கும்.
சூடான நீர்த்துளிகள் எனது குழிவிழுந்த கண்களிலிருந்து துளிர்ந்தன. சேலைத் தலைப்பால் கண்களைத் துடைதுக் கொள்ள முயன்றேன் முடியவில்லை. அழுதேன. ஆசை தீர அழுதேன். அழுவதால் என்ன ஆகிவிடப் போகிறது.
கணவனைக் கார் விபத்தொன்றில் இழந்த நான், கைக்குழந்தையுடனும் மூத்தவள் ஜாபீருடனும் இளையவன் நிஸாருடனும் ஒருவாறு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன்;
கூலிவேலைதான். மாவிடிப்பேன்; பாத்திரம் தேய்ப்பேன். ‘மார்க்கட்டு’ க்குப்போய் பொருட்கள் வாங்கி வருவேன். எடுபிடி வேலை எல்லாம் செய்வேன்.
இரண்டொரு கவளம் கிடைக்கும், எனக்கும் என் குழந்தைகளுக்கும். அதுபோதும். இடைக்கிடையே வரும் விசேட தினங்களில் எஜமானிகள் உடுத்தி ஒதுக்கிய பழஞ் சீலைகள், பழுப்பேறிய பட்டாடைகள். இரண்டொரு ரூபாய்கள் இப்படி எதாவது…
ஜாபீர் மீண்டும் முனகினான். நோயின் தோரத்தை விடப் பசியின் கோரம் அவனைப் ‘ப்யாப்ஃரா’ குழந்தை யாக்கி விட்டிருந்தது. குண்டூசி உடல் குண்டுத்தலை, பாசி படர்ந்த கண்கள், பசி நிறைந்த வயிறு, பார்க்கச் சகிக்க வில்லை. குமுறிக் குமுறி அழுவதா? கோவெனக் கதறுவதா? பயன்?
கிடைக்கும் கூலி போதாது. கொழுத்த இடம், பெரிய இடம் இப்படியான இடங்களில் போயப் பாத்திரம் தோய்த்தாலாவது பலனுண்டு; வேளா வேளைக்குச் சோறும் வேண்டியவரை உதவியும் கிடைக்கும். ஆனால் வீட்டு எஜமானனின் ஒட்டுதல்களையும் உரசல்களையும் சகித்துக் கொண்டால் போதும், அவ்வளவு தான். இன்னும் பல சலுகைகள் பெறலாம், ஏன்? எஜமானின் பள்ளியறைப் பஞ்சனையில்கூடப் படுத்துப் புரளலாம். எதற்கும் துணிவு வேண்டும். துணிவு தான – எஜமானியின் செருப்படியை ஏற்றுக் கொள்ளும் துணிவல்ல. அது என்னிடம் நிறைய உண்டு. ஆனால் நான் சொல்லுவது வேறு துணிவு. மானத்தை இழக்கும் துணிவு. அந்தத் துணிவு எத்தனையோ பெண் வந்தாலும் எனக்கு மட்டும் வரமாட்டேன் என்கிறதே: என்ன செய்வது? வெட்கங்கெட்ட சீ இழவே! இந்த சிந்தனை வேண்டாம். ஆண்டவனே இந்தத் துணிவை மட்டும் எனக்குத் தராதே!
வியர்வையிலும் அழுக்கிலும் புழுங்கி நாறும் சேலை இடையைச் சுற்றியிருக்க அங்கமெங்கும் அழுக்கும் கரியும் படை படையாக அப்பியிருக்க காலில் காயங்களும் சிரங்கும் கோரம் காட்ட எண்ணெய் காணாமல் காய்ந்த தலை மயிர் காற்றில் படபடக்க… வாந்தி வரச் செய்யும தோற்றம் இந்தத் தோற்றத்திற்கே, இவர்களுக்கு இத்தனை மறியேன்றால் இன்னும் கொஞ்சம் மினுக்கி, மினுக்குவ தென்ன சுத்தமாக உடை அணிந்திருந்தாலே போதும். சோரம் போய்விட வேண்டியது தான் மாற்றிவிடுவார்கள். இல்லாவிட்டால் தந்தையும் மகனுமாகச் சேர்ந்து தவளையைக் குறிவைத்த பாம்பின் கொடூரத்துடன் கண்களில் வெறிபளிச்சிட என்னையே நோக்குவார்களா?
அட ஆண்டவனே! தன் மகன்தான் ஒரு விதவையைச் சுற்றி வட்டமிடுகிறானென்றாவது தந்தை கொஞ்சங் கூட வெட்கப்படவோ வேதனைப்படவோ வேண்டாம். சே… வெட்கக்கேடு.
எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபமா? தந்தைக்குத் தெரியாமல் மகனும் மகனுக்கு தெரியாமல் தந்தையும் என்னைக் கசக்கி எறிய எடுத்த முயற்சிகள். எத்தனங்கள் பட்ட சிரமங்கள்.
எப்போதோ அவர்களது வீட்டைவிட்டு ஓடியிருப்பேன் எஜமானி உம்மா… அந்த நோஞ்சான் நோயாளி மனுசியின அரவணைப்புத்தான் என்னைத் தடுத்து நிறுத்தியது. ஆனால். அதுவும் வெகு விரைவிலேயே தகர்ந்து விட்டதே.
அச்சம்பவம் மட்டும் நடக்காதிருந்தால்…
மகன் பிதற்றினான். உடல் தணலாய்க் கொதித்தது. “உம்மா சோறு சோறு… சோறுதாம்மா…” அதைத்தவிர வேறு வார்த்தைகள் வரவேண்டாம் அவன் வாயிலிருந்து.
மகன் ஒரு கவளமாவது உண்ண முடியாத நிலை. அதற்கெலலாம் காரணம் அந்தச் சம்பவம்தான். நாக்கூசுகிறது.
பெரிய மனிதர்கள் செய்யும் செயலா இது. அதுவும் ஆலிம் மார்க்கம் கற்றவர். நீதி நேர்மைகளைப் பற்றி வீதியிலே விமர்சிப்பவர் ஒரு சமூக ஊழியர். அவரா இப்படி?
பென்னம் பெரிய பங்களா வெறிச்சோடி விடும் எஜமானி உம்மா வெளியே சென்றாலென்றால் ‘குமர’னில் ‘ஷோ’ பார்க்க சென்றிருந்தாள். அவள் கூடவே குழந்தைகளும். இரவுச் சாப்பாட்டிற்கான சகல சுமைகளும் என் தலையில்தான். அந்தப் பெரிய பங்களாவுக்குள் இருந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு அலறிய வானொலியிலிருந்து தந்தையோ, மகனோ வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். எனக்குப் பிடித்த ஒரு பாட்டுத்தான்… அரைகுறையாக ரசித்தவாறு யப்பத்திற்கு மா பிசைந்து கொண்டிருந்தேன். நெருப்புச் சுவாலை முகத்தை வேறு தீய்த்துக் கொண்டிருந்தது. வேலையில் மூழ்கிவிடடேன்.
தீடீரென்று –
சர்ப்பந் தீண்டியது போன்ற உணர்ச்சி. திடுக்கிட்டுத் தீமிறியவாறு திரும்பினேன். அந்தப் பரபரப்பில்… என்னை அணைத்துக் கொள்ள முயன்ற எஜமானின் மகன் தள்ளுண்டான்.
‘எஜமான்… இது என்ன வேலை’ கொஞ்சமாவ வெட்கம் மானம், சீச்சீ!
அது அவர்களுக்குப் பழக்கம் போலும். வெறி தலைக் கேற கழுதை போல சிரித்தான்.
என் தோற்றம். அழுக்குப் படர்ந்த என் நிலை: எனக்கே குமட்டியது. அவனுககோ…
ஐந்து ரூபாய் நோட்டொன்றை நீட்டினான் ‘ஏய் இந்தா பிடி… பைஸகோப்புக்குப்போ. அதற்குள் ஒரு முறை….’
குடிததிருக்கிறானோ,
என் உடம்பு ஏன் இப்படி நடுங்குகிறது. டை போ யிட் கண்டவனைப் போல. என்னைச் சுவரோடு சாய்த்து… பலங்கொண்ட மட்டும் அவனை விலக்கித் தள்ளினேன். காறி உமிழ்ந்தேன். வெறிகொண்ட நாய் போல் அவனது கையைக் கடித்தேன்.
‘ஆ’ என்றலறினான்; பின்பு தன்னைச் சுதாரித்துக் கொண்டு மீண்டும் நெருங்கினான் அடியுன்ட புலியைப் போல.
‘அடியே! வேலைக்கார வேசை, என்ன செய்றேன் பாரடி’.
வாசலடியில் ஏதோ நொருங்கி விழும் ஓசை தொடர்ந்து ஒரு கனைப்புக் குரல்.
‘ஐயையோ வாப்பா வருவதுபோல இருக்கே அல்லா என்ன செய்வேன்’
எஜமான் வாசலை நெருங்கிவிட்டார்.
‘ஐயோ ஆண்டவனே! என்னைக் காப்பாத்து’.
பதறி துடிததபடி பெரிய அலுமாரி ஒன்றின் பின்னால் ஒளித்துக் கொண்டான்.
குசினிக் கதவைத் தள்ளித் திறந்தபடி வெறியுடன் என்னை நோக்கினார் எஜமான். முன்னெச்சரிக்கையுடன் கதவைப் பூட்டிக் கொண்டு என்னை நெருங்கினார் அவர்.
புலியிடமிருந்து தப்பியாகிவிட்டது. இனிக் கரடியுடன் போராட வேண்டுமே.
கண்களில் போதை வெறி உடலின் தள்ளாட்டம் புரிந்தது. இப்போது ஒரே அறைக்குள் ஒருத்தியிடம வாப்பாவும் மகனும். அதுவும் பெரிய பரமபரை… தூ! வெட்கக் கேடு.
சொல்ல நாக் கூசுகிறது…
அப்பன் கொஞ்சம் தாராளம். அவன் 10 ரூபாய்த் தாளை நீட்டினான், நான் அதைக் கிழித்து எறிந்தேன். வெகுண்டான் ‘வேச… ஒன் தொழிலே இதுதாண்டி. இன்டைக்கு மட்டும் என்னாடி பவுசு’.
மிருகத்தின் பிடியிலிருந்த நான் தப்புவதற்குப் பட்ட பாடு…
ஆகவே அப்படித்தான் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்திருக்காவிட்டால் என் கற்பு பரிதாபமாக அழிக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டு நிற்கும் மகனும் பங்கு கேட்டிருப்பான்.
ஆகவேதான் அப்படிச் செய்தேன் அது ஒன்றேதான் வழி.
எரிந்து கொண்டிருந்த கொள்ளிக் கட்டை ஒன்றை எடுத்து,
எங்கெல்லாம் அவனின் அங்கங்கள் தட்டுப்படுகிறதோ அங்கெல்லாம் கொள்ளியால் பதித்து…
உடலைப் பொசுக்கி…
‘ஐயோ அல்லா… ஆண்டவனே உம்மா!…’ என்ற அலறல்கள்.
கட்டிச் சதையின் கருகல் நாற்றம்.
எடுத்தேன் ஓட்டம், வேறு சிந்தனை யென்ன தப்பித்தேன் பிழைத்தேன் என்று இருளில் விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன்.
நாட்கள் அழிந்துவிட்டன. எஜமரனி உம்மாவைக் கூடப் போய்ப் பார்க்கவில்லை. அவளது நன்மைக்காகத்தான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நான் வீட்டை விட்டு ஓடியதைப பற்றி எஜமானி உம்மா மிகவும் வருந்தியிருப்பாள். கணவனைத் திட்டித்தீர்த்திருப்பாள்.
எஜமானின் நிலை யென்ன? அங்கமெல்லாம் அழுகிம் புழுப்பிடித்து சேச்சே… அப்படி யிருக்காது அவர்களிடம் பணமிருக்கிறதல்லவா?
இன்று அவர்கள் வீட்டில்தான் மௌலூது..
சே! அங்கே போவதா.
மகன் ஜாபீரின் புலம்மல் தீனமாக ஒலித்தது. கடைசியில் வற்றிப் போய்விடுமோ?
மனம் சஞ்சலமடைந்தது. துணிவு மெல்ல மெல்ல உடலை ஆட்கொண்டது.
இடத்தை விட்டு எழுந்தேன். ‘மகனே, பயப்படாதே உனக்குச் சோறு கொண்டு வாரேன்’
மௌலூது நடக்கும் வீட்டை நோக்கி விடு விடுவென நடந்தேன்.
பின்புற வழியாக வீட்டினுள் சென்றேன்.
ஒரே கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமும் கூத்தும் பாட்டும் அப்பப்பா சகிக்கவில்லை.
பெரிய ஹோலொன்றினுள் ஆண்களின் அட்டகாசம். மற்றொரு ஹோலில் மினி நங்கையர்களின் அட்டகாசம். பெரும் பெரும் சகனில் எல்லாம் நெய்ச் சோறு மிஞ்சிச் சீரழிந்து கிடந்தது – நிச்சயமாக அது வெளியே கொட்டப்படும்.
குசுனியை நெருங்கிவிட்டேன். ‘நில்லடி…’
கடூரமான குரல் விக்கித்து… நின்றேன். யாரது? எஜமானியமமாவா. நம்பவே முடியவில்லை.
‘எங்கடி வந்தே! பற வேச…’ காதில் நாராசம் பாச்சியதுபோல் இருந்தது.
‘உம்மா’
‘வேச… கேடு கெட்ட தட்டுவாணி தேவடியாள். என்ன உம்மான்னு சொல்ல உனக்கு வெட்கமா இல்லை. உன் நாக்கு அழுகிப் போகும்டி. போடி இங்கே யிருந்து…’
‘ஆண்டவனே. இது என்ன சோதனை, ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இப்படி ஒரு தண்டனையா?’
அவள் பன்றியைக் கண்ட வெறுப்புடன் என்னை நோக்கி முகத்தில் காறி உமிழ்ந்தாள்.
‘ஏண்டி ஒன்னைத் தெரியும்டி. ரெம்ப நல்லவள்லுன்னு நெனச்சிருந்தேன். கடைசியிலே என புருஷனையும் புள்ளையையும் வலை வசிப் புடிச்சி எங்க வம்சத்திற்கே களங்கம் உண்டாக்கப் பாத்தியேடி. சீ என் முகத்திலே முளிக்காதே போடி இங்கிருந்து…’
புரிந்தது. நன்றாகப் புரிந்தது எஜமான் நல்ல கதை கட்டியிருக்கிறான்.
‘வெளக்கு மாத்தால அடிச்சு வெரட்டுறதுக்கு முன்னாலே ஒடடி இங்கிருந்து’
நான் விறைத்துப் போய் நின்றேன்.
வர்க்கம் வர்க்கத்தோடுதானா?
– 29-11-1968, இன்ஸான் முஸ்லீம் வாரப் பத்திரிகை.
– ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: செப்டம்பர் 1982, மன்னார் வாசகர் வட்டம் வெளியீடு, இலங்கை.