வருஷம் 2040

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: April 14, 2025
பார்வையிட்டோர்: 2,511 
 
 

ஊடக நிருபர்களுடன் அந்த கலைஅரங்கில் கீழே முதல்வரிசை நாற்காலியில் நானும் உட்கார்ந்திருந்தேன்.மேடையில் இருவர் அமர்ந்திருந்தனர். ஒரு நபர் இன்னொருவரை இண்டர்வ்யூ செய்துகொண்டிருந்தார். அவை மேடைக்குகீழே இருந்த நபரால் வீடியோ எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆரம்பமே என் நாவலின் முதல் அத்தியாயம் போலவே இருந்தது. இண்டர்வ்யூ செய்யப்பட்ட நபர் நான் கதையில் வர்ணித்து எழுதியதுபோலவே உருவத்திலும் கொடுத்தபதில்களின் புத்திசாலித்தனத்திலும் அச்சு அசலாய்காணப்பட்டார்.சரியான விடையை அவர் அளிக்குமுன்பாகவே அவரைக்கிண்டலும் கேலியும் செய்து குறுக்கு கேள்விகள் பலகேட்டு நான் எழுதியபடியே அவரை முட்டாளாக சித்தரித்து அவரை நிராகரிப்பதையே குறியாகக்கொண்டு ஃபைலை அவரிடம் திருப்பிக்கொடுத்து ‘நீபோகலாம்’என்கின்றார் இண்டர்வ்யூ செய்தவர்.அவர்தான் ரவீந்தர், வளரும் விஞ்ஞானம் எனும் அறிவியல் பத்திரிகையின் ஆசிரியர். அந்தப்பத்திரிகை அறிவித்த சிறுகதைப்போட்டிக்குத்தான் நானும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை வைத்து ஒரு சிறுகதை அனுப்பியிருந்தேன். இன்று ’கலாம் கலை அரங்கி;ல் ஒரு புதுமை நிகழ்ச்சி போட்டியில் பங்கேற்றவர்களை வரசொல்லி அழைப்பிதழ் வந்திருக்கவும் நானும் வந்திருக்கிறேன்.

பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது.அப்படியே இது என்கதையாகவே இருக்கிறதே..அடுத்தடுத்து மேடையில் நடிக்கும் நபர்கள் எல்லோரும் என் கதைமாந்தர்கள் நான் எழுதியதையே அட்சரம் பிசகாமல் பேசுகிறார்கள். இதன் முழு படப்பிடிப்பும் முடிகிறது.

இண்டர்வ்யூ செய்த ரவீந்தர் சட்டென எழுந்திருக்கிறார்.மைக்கை கையில் பிடித்து, “அனைவர்க்கும் ஒரு நற்செய்தி.எதிர்பாராத காரணங்களால் சிறுகதைப்போட்டி அறிவிப்பாக ஒருவாரம் முன்பாக இன்றே கதையினை ஒரு காட்சியாய் இங்கு காட்டிவிட்டோம். இதை எழுதிய மகிழ்மாறனுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல்பரிசு என்பதை தெரிவிக்கிறோம்” என்றார்.

என்னது மகிழ்மாறனா! எழுதியது அத்துழாய் என்கிற நான் கதையை எழுதி இருக்க மகிழ்மாறனாமே!

அதிர்ச்சியுடன், “இந்தக்கதையை எழுதியது அத்துழாய் என்னும் நான்..இதோ கதை அனுப்பியவிவரம் மின் அஞ்சலில் இருக்கிறது பார்த்துக்கொள்ளுங்கள்” என்று என் செல்போனில் மெயில் சாட்சியைக்காட்டினேன்.

ரவீந்தர் திகைத்து நின்றார்.

“பகல்கொள்ளையாக இருக்கிறதே..என் மனசில் உதித்த கதைக்கரு அதை மூளை செயல்படுத்தி தட்டச்சி உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.அதற்கான பரிசினை வேறு ஒருத்தருக்கு கொடுப்பது என்ன நியாயம்” சீறினேன்.

அப்போது என் அருகில் அமர்ந்திருந்தவன் என் காதருகே கிசுகிசுத்தான்.

“கூல் கூல் அத்துழாய் மேடம்… அன்று ஒருநாள் உங்கள் வீட்டிற்கு நான் கொரியர் ஒன்று கொடுக்க வந்தேன். விஞ்ஞானத்தில் மேற்படிப்பு படித்தும் வேலையில்லாப்பட்டதாரி நான் .. டைம் பாஸுக்கு கொரியர் சர்வீசில் பணிபுரிகிறேன்.. செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டின்மூலம் மூளையின் துருவல்கள் அதாவது ப்ரெயின் சிப்ஸ் மூலம் உங்கள் மனதில் உதித்ததைக்ரஹித்து டெலி ப்ரிண்டரில் ப்ரிண்ட் எடுத்து இந்த சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை நாந்தான் அனுப்பினேன்.. 2040ல் விஞ்ஞானம் எங்கோ பறக்கிறது இதுகூடத்தெரியாத பெயருக்கேற்ற பழங்காலமாய் இருக்கீங்க! அன்று உங்க மன ஓட்டத்தை க்ரஹித்து கதை எழுதி அதுவும் உங்களுக்கு ஒருவாரம் முன்னதாக அனுப்பிட்டேன்.. அதனால் எனக்குத்தான் பரிசு.” என்றான் நக்கலான சிரிப்புடன்.

சட்டென அவனை ஏறிட்டேன்…ஒருநிமிஷம் கொரியர் பார்சல் கொண்டுவந்து கொடுத்துப்போனவனின் முகம் யாருக்கு நினைவில் இருக்கும் அதுவும் என்னைப்போல சதா கற்பனை உலகிலேயே சஞ்சரிப்பவர்களுக்கு!

எனக்கு திகைப்பாகிவிட்டது. இப்படியும் நடக்குமா?

அப்போது தடதடவென நாலைந்து போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்தனர்.

அதில் ஒருவர் மேடையை நோக்கி, “மகிழ்மாறன் என்பவர் புத்திசாலியா இருக்கலாம் ஆனா அவரையும் மிஞ்சும் அதிபுத்திசாலிகள் எங்களிடமும் உண்டு. அன்று விஞ்ஞான மேதை ஐன்ஸ்டின் e=mc2 கண்டுபிடித்தபோது அதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் இரண்டு உபயோகங்கள் உடனுக்குடன் இருந்தன. சக்தியை பன்மடங்கு வேகமாக நற்செயலுக்கு உற்பத்தி செய்யவும் அதே சமயம் அதையே உபயோகித்து இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு போட்டு அழிக்கவும் பாதகமாகவும் ஆனது. AI யின் ஒருபுறம் ப்ரெயின் சிப்ஸ் முலம்மற்றவர் மனதில் ஓடுவதைக் கண்டுபிடிக்க உபயோகப்படுத்த முடிகிறது. அதே போல அத்துழாய்க்கு முதலில் தோன்றிய கதையை மகிழ்மாறன் தான் எழுதியதாக அனுப்பி பரிசுபெறப்போவதையும் அதே AI எங்களுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது

ஆக எங்களுக்கும் செயற்கை நுண்ணறிவு என்கிற Artificial intelligence லிருந்து ப்ரெயின் சிப்ஸ் இந்த திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்திவிட்டது. மகிழ்மாறனுக்குப் பரிசு கிடைத்து விட்டதாக விவரம் சொல்லிக் கொண்டிருந்தபோதே நாங்க வந்துவிட்டோம். எல்லாம் போனில் பதிவாகிவிட்டது… சைபர் க்ரைம்போல இதுவும் கள்ளத்தனம். ஆகவே மகிழ்மாறனை….” என்று மகிழ்மாறனை நெருங்கினார். அவன் திருட்டுமுழி முழித்தான்.

”கங்கிராட்ஸ் அத்துழாய் மேடம் … பரிசு கதைக்கருவை முதலில் கொண்டு வந்த மூளைக்குரிய உங்களுக்குத்தான் தகுதியானது …” என்று என்னிடம் பலர் அருகில் வந்து கைகுலுக்க ஆரம்பிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *