வண்ணங்கள்.. வடிவங்கள்..

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 23, 2025
பார்வையிட்டோர்: 3,273 
 
 

(கதைப்பாடல்)

அன்று சித்ரா பவுர்ணமி
அடுக்கு மாடி வீட்டிலே
அழகு தாரா வசிக்கிறாள்
அன்பு ஆச்சி யோடவள்

மாடி ஏறிப் போகிறாள்
இரவு ஒளிரும் நிலவிலே
இரண்டு பேரும் இனிமையாய்
கதைகள் பேசி சிரித்திட

இருட்டில் நிலவு ஒளிவிட
இருவருக்கும் பசித்ததாம்
எடுத்து வந்த உணவினை
எடுத்து ஊட்ட ஆச்சியும்

எடுத்து எடுத்து வைக்கிறாள்
எத்தனை எத்தனை பண்டங்கள்??
மஞ்சள் வண்ண நிறத்திலே
காணும் வான நிலவைப்போல்

உருட்டி வைத்த உருண்டையாய்
உண்ண லட்டு இருக்குது
அரைத்துப் பூசும் சந்தன
அழகு வெளிர் மஞ்சளாய்

அறுத்து வைத்த செவ்வக
அழகு மைசூர் பாகுகள்
சிறுத்த சின்ன கோளத்தில்
மரத்தின் பட்டை நிறத்திலே

மண்டிக் கிடக்கும் ஜாமுன்கள்
சின்னச் சின்ன சதுரமாய்
செதுக்கி வைத்த பர்பிகள்
தின்னத் தின்ன இனித்திடும்

திகட்டி இன்பம் கொடுத்திடும்
கருப்புக் கருப்பட்டி ஜிலேபியும்
கைமுறுக்கு தேங்குழல்
கடிக்க உருண்டை சீடைகள்

நட்சத்திரங்கள் போலவே
அறுங்கோணத்தில் துக்கடா
மொறுமொறுக்கும் வாசனை
முந்திரியும் இருக்குது!

கையிலெடுத்து ஆச்சியும்
கனிவுடனே கொடுக்கிறாள்
உண்டு வந்த பின்னரே
ஒன்று சேர்ட்ந்து ஆடலாம்

ஆச்சியோடுமாடலாம்
அன்பரோடுமாடலாம்
ஆடி விட்டு அயர்ந்ததும்
அழகு நிலவை ரசிக்கலாம்

பசிக்கும் வரை ரசிக்கலாம்
பசிக்கும்வரை ரசிக்கலாம்!

மஞ்சள் எலுமிச்சி சாதமும்
மணக்கும் தக்காளிச் சாதமும்
பச்சைப் புதினா சாதமும்
பாத்திரத்தில் இருக்குது!

பகிர்ந்து உண்ண விரும்பினால்
படிகள் ஏறி வாருங்கள்
நிலவை ரசிச்ச படியேநாம்
நிலாச் சோறு உண்ணலாம்!

சுட்டு வச்ச அப்பளம்
சுண்டைக் காயின் வத்தலும்
கொத்தவரை வத்தலும்
கூட இங்கே இருக்குது!

நெய் வழியும் தயிருடன்
நறுக்கு வடுமாங்காயும்
அறுத்து வச்ச நாரத்தை
அழகு ஊறு காயுமே!

தின்ன இருக்கு தோழரே
திகட்ட நாமும் உண்ணலாம்!
வண்ண நிலா வடிவிலே
வானில் சிவப்பாய்த் தெரியுது

ஒன்று கூடி சித்திரா
பவுர்ணமிக்கு வாருங்கள்!
அன்னம் உண்டு களிக்கலாய்
அழகு நிலா ரசிக்கலாம்.

அந்தக் கால கட்டத்தில்
ஆற்றங் கரையின் ஓரத்தில்
பொங்கல் சோறை இப்படி
போட்டி போட்டு உண்ணுவர்

ஆற்றில் குளித்து வந்ததும்
அரும்பசிக்கு அன்னத்தை
அடுக்கிலெடுத்து போனது
அகிலம் மறந்து போனது!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *