வண்டிக்காரர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 20, 2025
பார்வையிட்டோர்: 222 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இப்பொழுது உலகத்திலே பொய், ஏமாற்றம் இவைகள் அதிகமென்று சொல்கிறார்கள். இது உண்மையானால் ஏமாற்றம் என்ற அத்வைத தரிசனத்தைப்பற்றி சந்தேகிக்க இனி இடமே இல்லை. ஆனால் உலகில் நிறைந்திருப்பது ஆச்சர்யம், வினோதம் என்று நான் நினைக்கிறேன். 

மளிகைக் கடையில் ஐந்து பலம் மிளகு கேட்டால் நான்கு பலத்தை மாயாவித்தனமாக ஐந்து பலமாய் நிறுத்துப் பொட்லம் கட்டிக் கொடுக்கிறாரே அந்த செட்டியார். அவர் மார்க் கெட்டுக்குப் போன கதை தெரியுமா? பத்து பலம் வெண்டைக்காய் வேணுமென்று வெள்ளை ரவிக் கைக்காரி வேணுவைக் கேட்டார். கட்டியிருந்த தலை மயிரை ஒரு தரம் அவிழ்த்துக் கட்டிக் கொண்டு நெகிழ்ந்திருந்த மேல் சேலையை இருக்கிக் கொண்டு அவள் வெண்டைக்காய் நிறுத்துக் கொடுத்தாள். செட்டியார் கைகள் அங்க வஸ்தி ரத்தை நீட்டி வெண்டைக்காயை வாங்கினவே ஒழிய அவர் கண்கள் சில நிமிஷங்களாகவே சிட்டுக் குருவி போல் கொண்டையிலும் சேலையிலும் மாறி மாறி தத்தித் திரிந்துகொண்டிருந்தது. நான் மட்டும் நிறுப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படிக் கல்லு போட்டதட்டை இடது முழங்கால் சில்லு தாங்கிக்கொண்டிருந்தது. பின் ஏன் எட்டுப் பலம் வெண்டைக் காயைப் பத்து பலமாகவோ இருபது பலமாகவோ நிறுக்க முடியாது? அதாவது ஒருவனை ஒருவன் ஏமாற்றினால் அவனை ஒருத்தியோ (ஒரு வனே) நிச்சயம் ஏமாற்றிவிடுவார்கள். 

செட்டியார் சமாச்சாரம் எதற்காகச் சென்னே னென்றால் ஒரு பாலத்தைத் தாண்டும் பொழுது இக் கரைக்குப்போய் அக்கரை போகிறோமல்லவா, அது மாதிரி அதிலிருந்து என் சமாசாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான். கூர்ந்து படித்திருந்தால் நான் ரகசிய போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவன் என்று ஊகித்திருக்கலாம். ஊகிக்கா விட்டாலும் தெரியும்படி இப்பொழுது சொல்லி விட்டேன். திருடனை ஏமாற்றுகிறவனை வண்டிக் காரன் ஏமாற்றிவிட்டான் என்றால், உலகத்தில் நிறைந்திருப்பது என்ன என்று பாருங்களேன். 

நான் திருச்சிக்குச் சென்றிருந்தேன், தெப்பக் குளத்தில் இருந்து மார்க்கெட்டுக்குப் போகவேண்டியவன். ஜட்காவைக் கூப்பிட்டேன். மறு நிமிஷம் ஏன் கூப்பிட்டோ மென்றாகிவிட்டது. இரண்டு ஜட்காக்கள் என்னை நோக்கிப் பாய்ந்தன. வண்டி வாடகை சம்பாதிக்கும் ஆத்திரத்தில் இரண்டு வண்டிச் சக்கரங்களும் சிக்கிக்கொண்டன. அது வரையில் நடந்ததை நான் கவனிக்கவே இல்லை. சூரிய கிரணத்தின் ஒற்றை ஈட்டி மாதா கோவில் சிகரத்தின் சிலுவையின் நெஞ்சில் பாய்வதைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டேன். சக்கரம் ஒன்றுக்கொன்று மோதிய பிறகுதான் பார்த்தேன். 

வண்டிக்காரர்கள் ஒருவருக்கொருவர் என் பக்கம் கை நீட்டி சாக்கடைபாஷையை அளவிட்டு வைது கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்த வண்டிக்காரர்கள் சிரித்து ரஸித்துக் கொண்டே இருந்தார்கள்! நல்ல வேளை! கை கலக்கவில்லை. இவ்வளவுக்கும் இடையிலே ஒரு வண்டிக்காரன் மட்டும் காரியத்தில் கண்ணாக இருந்து சிக்கலிலிருந்து வண்டியை விடுவித்து என் பக்கம் வேகமாய் ஓட்டி வந்தான். 

‘மார்க்கெட்டு என்ன வாடகை?’ 

அவன் பதில் சொல்லவில்லை. திரும்பி அந்த வண்டியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் செவுடு என்று நினைத்துக்கொண்டு உரத்த குரலில் மறுபடியும் ‘வாடகை என்ன?’ என்றேன். 

அவன் அந்த வண்டியின் திக்கை நோக்கிக் கொண்டே பதில் கேள்வி போட்டான். 

‘நமக்கு எந்த ஊருங்க?’ 

‘தஞ்சவூர்.’ 

‘அப்படிங்களா, நம்ப மாப்பிள்ளை மகர்நோம் புச் சாவடி வீதியிலேதான் இருக்கான். ஓங்களுக்கு மகர் நோம்புச்சாவடிங்களா?’ 

நான் பதில் சொல்வதற்குள் அந்த வண்டி எங்கள் வண்டிக்கு ஐந்து கஜ தூரத்தில் வந்து விட்டது. 

என் பதிலை அவன் எதிர்பார்க்காமலே அப்பொழுது பேசினான். 

‘மார்க்கெட்டுக்குங்களா? போகவரவா?’ 

‘ஆமாம்.. 

‘ஒரு ரூபாய் கொடுங்கோ’ 

அதற்குள்ளே அந்த வண்டி பக்கத்தில் வந்து விட்டது. தண்ணீர்ப் பாம்பு மாதிரி கழுத்தை நீட்டி அந்த வண்டிக்காரன் ‘எங்கே போகணும்?’ என்றான். 

‘மார்க்கெட்டுக்கு’ 

‘டே பேமானி! நான் வடகை பேசறேன். நா மாதிரி நடுவிலே வந்து ஏண்டா உளரே?’ என்றான் முதல் வண்டிக்காரன். 

“கேட்டா என்னடா. ஒங்க அப்பன் ஊட்டு காணியாச்சியா? பேசினியோ பல்லை பல் டாக்டருக்கு அனுப்பிச்சு போடுவேன்.’ 

‘சண்டை போடாதிங்கோ, நீ போ அப்பா. முதல்லே வந்த வண்டியிலேயே போரேன். ஒன்னோடே பேரம் பேசறது நியாயமில்லை.’ 

‘நாயம் கீயங்கரேளே’ என்றான் இரண்டாவது வண்டிக்காரன். ‘சண்டை வந்தாலும் வந்துச்சு, ஒரு ரூபாய் அரிசியை இரண்டு ரூபாய்க்கு வாங்கறேன். காலணா வெண்டைக்காய் அரைப்பணத்துக்கு வாங்கறேன். சண்டைக்குப் போவுதாம் இதுங்களெல்லாம். அவன் ஒரு ரூபாய் கேட்டானா பதினாலு அணாக்கு வாரிங்களா?’ 

‘ஒன் வண்டிலே வல்லேடா.’ 

‘பண்னெண்டு அணா.’ 

‘இனாமா ஏத்திக்கொண்டாலும் வரல்லே.’

‘அந்த வண்டியிலேயே போங்க தர்மபுத்திரரே’ என்று சொல்லி கண்ணைசிமிட்டிவிட்டு குதிரையைத் தட்டிவிட்டான். 

‘வாடகை சொல்லு’ என்று முதல் வண்டிக்காரனை நோக்கித் திரும்பினேன். 

‘என் சொல்றதுங்க. அவன் பேமானிப் பயலுங்க. போட்டிக்காக பன்னெண்டணாங்கறான். பன்னெண்டணாவுக்கு அஞ்சு புல்லு வாங்கலாம். அஞ்சு ஊருலே கொட்டைபோட்டவன். என் கிட்டே அவனாலே  முடியுமா? நான் அடிக்கமாட்டேன். வண்டிக்கு வண்டி மோதவிட்டு டணார் டணார்.’ என் வண்டி வர்ணங்கூட பேராது. அவன் வண்டி அச்சு வளஞ்சுபோகும் சாமி, அவ்வளவு வேலைக்காரப்பிள்ளை.’ 

‘அது கிடக்கட்டும், வாடகை?’ 

‘கஷ்டத்தைப்பார்த்து நீங்க சொல்லுங்கோ.’

‘பன்னிரண்டு அணாவுக்கு மேலே நாகூர் சல்லி  கூட தரமாட்டேன்.’ 

‘கட்டாதுங்க. முதுகிலே அடியுங்க, வவுத்திலே அடிக்காதீங்க.’ 

‘அதெல்லாம் இல்லே.’ 

‘சரி, ஏறு சாமி. நீங்க கூப்பிட்டப்போ அவசரமா வந்ததிலே கூண்டு பிஞ்சு போச்சே அதான் லாவம் ஏறுங்க, ஏறுங்க.’ 

போட்டி இல்லாவிட்டாலே உலகம்  குட்டிச் சுவராகிவிடும். ருஜு வேண்டுமா? அமெரிக்காவைப் பாருங்கள். மண்ணெண்ணை ராஜா, மோட்டார் ராஜா, அவர்கள் வைத்த விலைதான் சட்டம். போட்டியிருந்தால் இரண்டாவது வண்டிக்காரன் குறுக்கேர் ஓட்டியதன் லாபம் என்று வண்டியில் ஏறினேன். புது ஊரில் வண்டி. வாடகையில் ஏமாறவில்லை என்ற எண்ணம் மனதில் அமைதியை நிரப்பிற்று. 

மார்க்கெட்டுக்குப் போய் சாமான்கள் வாங் கிக்கொண்டு வந்து ஒரு கடையில் வைத்துவிட்டு காபிக் கிளப்பில் நுழைந்து காபி சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்குக் கடையில் உல்லாஸமாய் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தேன். 

ஐந்து நிமிஷத்திற்குப்பிறகு பின்புறமிருந்த டீக்கடையில் ‘நான்தான் கொடுப்பேன், நான்தான் கொடுப்பேன்’ என்று வற்புறுத்தும் குரல் கேட்டது. குரல் பழகியதைப் போலிருந்தது திரும்பிப் பார்த்தேன். நம்ப குதிரை வண்டிக்காரன்! ஒரு கையில் டீ கோப்பை! எதிர்த்தாப் போல் இரண்டாம் வண்டிக்காரன்! அவன் கையிலும் ஒரு டீ கோப்பை! 

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. மார்க் கெட்டுக்கு தெப்பகுளத்திலிருந்து போகவர வண்டிச் சத்தம் எவ்வளவு கொடுக்கிற வழக்கம் என்று கேட்டேன் வெற்றிலை பாக்குக் கடைக்காரரை. 

‘ஆறணா’ என்றார். 

திருடனைக் கண்டுபிடிக்கும் திருடனை ஏமாற்ற வண்டி மோதல், போட்டி வாடகை இப்படி எவ்வளவு நாடகம் நடந்துவிட்டது! 

நாடகத்தின் வெற்றிகரமான வசூலைக் கொண்டாட தேக்கச்சேரி! 

பின் ஏன் ஹாஸ்யம் நிறைந்தது உலகு என்று சொல்லக்கூடாது?

– ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு: 1947, கஸ்தூரிப்‌ பதிப்பகம்‌, திருத்துறைப்பூண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *