வக்கிரம்

“ஜெயிச்சுட்டானே…பாவி….! – தன்னை மறந்து, எல்லை மீறி இப்படிச் சொல்லிவிட்ட கல்யாணம் சட்டென்று திரும்பி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டார். அடுப்படிக்குக் கேட்டிருக்குமோ என்று ஒரு ஐயம். கேட்டாலும் பாதகமில்லைதான் பயமா என்ன அவருக்கு!
யாரு பாவி…காலங்கார்த்தாலே…? சத்தம் கொடுத்த பங்கஜம் அதற்கு பதில் வராதது கண்டு வேலையைத் தொடர்ந்தாள். அவளுக்குப் புரியும்…யாரைச் சொல்கிறேன் என்று. இருக்கட்டும்…பகவான் அருள் இருக்கு….கிடைச்சிருக்கு….- அவள் சொல்வதுபோல் நினைத்துக் கொண்டார். அவளால் சுலபமாக அப்படி சமாதானமாகிவிட முடிகிறது. தன் மனதுதான் அடங்கமாட்டேனென்கிறது. எதானாலும் உடும்புப் பிடியாப் பிடிச்சிடறானே? மனதில் ஆறாத ரணம்…! அந்த ஊக்கம் எனக்கு ஏன் வரலை? கூடப்பொறந்தவனுக்கு இருக்கிற வேகம் எனக்கு ஏன் இல்லாமப் போச்சு? போனாப் போகுதுன்னு என்னை மாதிரி அவனுக்கு ஏன் விடத் தோணலை?
சுவற்றில் ஒரு பல்லி. இவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. நான் எதை நினைச்சாலும், பேசினாலும் இது கேட்ரும் போலிருக்கு? சனியன் எங்கேயிருந்து வந்தது? அடிச்சித் துரத்தினாலும் போக மாட்டேங்கிறதே? – உட்கார்ந்த இடத்திலிருந்தே கைத்- துண்டை எடுத்து ச்சூ….ச்சூ….என்று விரட்டினார். பல்லின்னா சின்னதா இருக்கும்னு கண்டிருக்கு…இதென்ன முதலை கணக்கா….சொர சொரன்னு…அருவருப்பா…? – விலுக்கென்று வழுக்கினதுபோல் அது உத்திரத்தில் புகுந்து ஒளிந்து கொண்டது. இருக்கிற வயித்தெரிச்சல் போறாதுன்னு இதுவேறே….!
நான் கேட்டேனா…இவன்ட்ட.?..மொத மொதல்ல அண்ணாட்டதான் சொல்லணும்னு, உங்க ஆசீர்வாதம்தான் வேணும்னு கேட்கிறானாம்……அத்தனையும் நடிப்பு….! அவன் பெருமையை எனக்குச் சொல்லி அப்டி சந்தோஷப் பட்டுக்கிறான். அதன் மூலமா எனக்கு இல்லாததை, என்னால் முடியாததை மறைமுகமா சுட்டிக் காட்டறான்….நீ எந்த லெவலுக்கும் கீழே இறங்கிப் போவே…நானும் அப்டியே இருக்கணுமா? எனக்குன்னு ஒரு கௌரவமில்லே? எனக்குன்னு ஒரு மதிப்பில்லே…ஃபூல்….! உலகத்துல குழந்தை பெத்துக்கிறது ஒண்ணுதான் சாதனையா? இட்டியட்…..
அப்டிச் சொல்லணும்னா நேர்லேல்ல வரணும்? அதுதானே மரியாதை… வாட்ஸப்பாம்…வாட்ஸப்….யாருக்கு வேணும் இந்தக் கருமாந்திரமெல்லாம்….? உள்ளூர்லயே இருந்துண்டு இதென்ன ஃபோன் தகவல்…?
அதான் பத்தாம் நாள் புண்யாஜனத்துக்கு நேர்ல வந்து கூப்பிட்டானே…இன்னும் என்ன உங்களுக்கு? – பங்கஜம் கேட்பதுபோல இவர் தனக்குத்தானே கேட்டுக் கொண்டார்.
அந்த முதல் செய்தியைக் கூட பங்கஜம்தான் காண்பித்தாள். அவருக்கு இதெல்லாம் பார்க்கத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆர்வமில்லை. ஃபோன் வந்தால் இணுக்கிப் பேசத் தெரியும்…அவ்வளவே….அவராக எண்ணிட்டுப் பேசவும் சரியாக வந்ததில்லை. பல சமயங்களில் தப்பாகி விடுகிறது. படபடப்பில் விரல் தப்பி விடுகிறது.
உறலோ….சன் ஷைன் லுங்கிஸ்…அப்டீங்கிறான்..எவனோ…..பங்கஜம்தான் போட்டுத் தருவாள். பேசுவார். நாம சொல்றத எவனாவது பொறுமையா காது கொடுத்துக் கேட்கிறானா…குறுக்க குறுக்க பேசினா? முழுசாக் கேட்டுட்டில்ல பதில் சொல்லணும்….எல்லாப் பயலுகளுக்கும் அவசரமாப் போச்சு இந்த லோகத்துல….என்று எரிந்து விழுவார். அந்த ஃபோனைக் கையால் தொடுவதென்றாலே அவருக்கு ஆகாது. எத்தனை தரம் மணியடித்தாலும் அல்லது ஓய்ந்தாலும் அவள்தான் வந்து எடுத்துப் பேசுவாள். இதுல பிடிச்ச ஒரே விஷயம்…நாதஸ்வரம் வச்சிருக்க பார் ரிங் டோனா…அதான்…என்பார்.
மனசை என்னவோ வதைக்கிறது. எழுந்து போக மனமில்லை. இதென்ன அவ்வளவு பெரிய விசேஷமா…? எல்லா எடத்துலயும்தான் குழந்தை பிறக்கிறது…அதிசயமா? ஊர் உலகத்துல யாருமே கொண்டாடாததா என்ன? நான் போய்த்தான் பிரதானமா உட்கார்ந்திருக்கணுமா? இல்ல நான் பிரசன்னமாகித்தான் ஆரம்பிக்கணுமா? என்னவோ ரொம்ப அக்கறை போலத்தான்……மனசுக்குள்ள சிரிச்சிண்டிருப்பான்…உன்னை மாதிரி சோம்பேறி இல்ல நான்…எப்டி சக்சஸ் பண்ணிக் காண்பிச்சேன் பார்த்தியான்னு? அவனுக்கு அந்த நினைப்பைத் தவிர வேறென்ன மனசுல? சதா பொண்டாட்டியத் தடவிண்டே இருக்கணும்…வேறென்ன தெரியும்? காமாந்தகன்… ஒரு பூஜையா, புனஸ்காரமா? காலம்பற எந்திரிச்சா குளியல், சந்தியாவந்தனம், ஒரு ஜெபதபம், மந்திரம், மாயம் இப்டி எதாச்சும் நியமம் உண்டா அவனுக்கு? என்னை மாதிரி தெய்வீகமா, தேஜஸா நிக்க முடியமா அவனால…?
கைலியக் கட்டிண்டு, காப்பியோட உட்கார்ந்து சீப்பிச் சீப்பிக் குடிச்சிண்டு….ஒரு சுத்த பத்தம் இல்லாம… எச்சிப் பண்ணாம குடிக்கிறானா முதல்ல? இது கூடவா சொல்லித் தரணும்..நாலு கழுத வயசாச்சு…..இந்த லட்சணத்துல குழந்தை வேறே….அது பெரிசாகி இவன் முன்னாடி நிக்கிற போது அதுவும் இதைப் படிச்சிக்கும்….சர்ரு…சர்ருன்னு உறிஞ்சும்….மணிக் கணக்கா உட்கார்ந்து .பேப்பர் படிக்க வேண்டியது….கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அது இதுன்னு ….வேறென்ன இருக்கப் போறது….? இல்லன்னா டி.வி.கூத்தடிக்க வேண்டிது… பெரிஸ்ஸா ஆபீசுக்குப் போயிட்டாப்ல எல்லாம் ஆச்சா…? சம்பாரிச்சா எல்லாம் வந்திடுத்துன்னு அர்த்தமா? நானும்தான் வேலைக்கிப் போயி ஓய்ஞ்சிருக்கேன்…இவன மாதிரியா? அட்டச் சோம்பேறி…! இங்க மாதிரி வீட்டைச் சுத்தமா வச்சிருக்கானா? ஸ்வாமி படம் அடுக்கி ஒரு பூஜா ரூம் தனிய்யா உண்டா அவன் வீட்டுல. பூஜை மணிச் சத்தம் என்னிக்காவது கேட்டிருக்குமா அவன் வீட்ல? ..படிக்கிறதுக்கு என்னை மாதிரிப் புஸ்தகங்கள் வாங்கி வச்சிருக்கானா? காலம் பூரா படிச்சாலும் தீராதே…அத்தனை பொக்கிஷம்னா நா சேகரிச்சு வச்சிருக்கேன்…ஒண்ணு படிச்சிருப்பானா? சினிமாவத் தவிர வேறென்ன தெரியும் அவனுக்கு? வெறும் பணம் இதுக்கு ஈடாயிடுமா…? அவனவன்ட்ட இருக்கிற காசு அவனவனுக்கு. யார்ட்டப் போய் யார் நிக்கணும்? என்ன அவசியம்?
புலம்ப ஆரம்பிச்சாச்சா…? குளிக்கப் போகலையா நீங்க…?- இன்னிக்குக் குழந்தைக்குப் புண்யாஜனம்னு தெரியும்தானே? சந்தோஷமாப் போலாமே…! – சொல்லிக் கொண்டே வந்தாள் பங்கஜம். எதுக்கு உங்களுக்கு உடம்பெல்லாம் இப்படி வியர்த்திருக்கு…? என்று துண்டை எடுத்து
நீட்டினாள். நீர் உடம்பு கல்யாணத்திற்கு. எப்போதும் கட்டிய வேட்டியும் போட்ட சட்டையும் ஈரக் கசம்தான்…ஒரு மாதிரி வாடை கூட வீசும் நெருங்கினால்….!
அட நீ வேறே….துண்டு எங்கிட்ட இல்லியா என்ன? …..இடுப்புலதானே கட்டிண்டிருக்கேன்…பெரிஸ்ஸா எடுத்துத் தர்ற….? நானென்ன முடமாயிட்டனா? நகராமக் கெடக்கனா..போ…போ…
இல்ல…ஃபேனுக்கடிலதானே உக்காந்திண்டிருக்கேள்…இப்டி தொப்பலா வியர்க்கிறதேன்னு தந்தேன்….
மனசு புழுங்கறதுடி….உனக்கென்ன தெரியும்? வேளா வேளைக்கு சாப்டாப் போரும் உனக்கு. ஜீவனோபாயம் கழிஞ்சாச் சரி… நேக்கு அப்டியா? உன் ஜோலியப் பார்த்திண்டு. கிட….குழந்தை பிறப்பு ..தள்ளிப் போறதே…தள்ளிப் போறதேன்னு வருத்தப்பட்டான்..அம்புட்டு அவசரம் அவனுக்கு. ராத்திரியும் பகலுமா இதையே நினைச்சிண்டிருப்பான் போல்ருக்கு…..கடைசில சக்சஸ் பண்ணிட்டானே….? ஒண்ணைப் பிடிச்சா…உடும்புப் பிடியா விடமாட்டான்….பாட்டன் முப்பாட்டன் புத்தியாக்கும் அது. அவனோட சின்ன வயசுலேர்ந்து உண்டான பழக்கம்….வெட்கங்கெட்ட பய……இது ஆயிட்டாப்ல ஆச்சா…புண்ணியம் பண்ணியிருக்கான்னு அர்த்தமா? அப்பா அம்மா இருந்தபோது நானில்ல அவாள வச்சிக் காப்பாத்தியிருக்கேன்…விழுந்து விழுந்து கவனிச்சிருக்கேன்…அந்தப் புண்ணியம் எனக்குத்தானே கிடைக்கணும்? வெளியூர்ல இருந்திண்டு இந்தோ வந்திட்டேன்…அந்தோ வந்திட்டேன்னு பரபரன்னு ஒடி வர்றது….ரெண்டு நாளைக்கு இருக்கிறது…அப்புறம் போயிடறது…ஆச்சா எல்லாம்? அப்பப்போ வந்து தாயார் தகப்பனாரைப் பார்த்திட்டுப் போனாப் போதுமா? ஃப்ளையிங் விசிட்…கூடவே இருந்து வயசான அவாளைப் பராமரிக்கிற மாதிரி வருமா? ஊரிலேர்ந்து வந்தவுடனே என்னவோ ரொம்பப் பாசமுள்ள மாதிரி பக்கத்துல போய் முத்தம் கொஞ்சாத குறையா அவாள்ட்ட உட்கார்ந்துக்க வேண்டியது…ஆசையாப் பேசுற மாதிரி நடிக்க வேண்டியது…கையைப் பிடிச்சிண்டமேனிக்கு நெருங்கிப் பேசினா ஆயிடுத்தா எல்லாம்? திடீர் திடீர்னு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போற மாதிரி வருதே…அப்பல்லாம் நானில்ல ஓடியிருக்கேன்.? தனியாக் கிடந்து தவிச்சிருக்கேன்? எவ்வளவு லீவு போட்டிருப்பேன்….அதெல்லாம் எவனுக்குத் தெரியும்? ஆபீசுக்கு சொல்லிட்டு, கெட்ட பெயர் வாங்கிண்டு, எவ்வளவு அலைஞ்சிருக்கேன்? இன்னைக்கு வீட்டுல அக்கடான்னு உட்கார்ந்திருக்கேன்ங்கிறதுக்காக அன்னைக்குச் செஞ்சதெல்லாம் இல்லைன்னு ஆயிடுமா? பாடு பட்டது அத்தனையும் நானு….பந்தயப் புறா மாதிரிப் பறந்தேன்…விழுந்தேன்…எழுந்தேன்…யாருக்குத் தெரியும் என் கஷ்டம்?என்னோட உழைப்பை வாயைத் திறந்து யார்ட்டயாச்சும் சொல்லியிருப்பனா? பெத்தவாளுக்குச் செய்யறதுக்குக் கூலியா கேட்க முடியும்?
பங்கஜத்திற்குப் புரிந்தது அவரது மனநிலை. பெரும்பாலும் அவள் வாயைத் திறப்பதில்லை. கண்டமேனிக்குப் பல சமயங்களில் அர்த்தம் பொருத்தமில்லாமல் கத்துவார். தனக்குக் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் கோபமாக வெடித்து, ஆறாத வடுவாக அவர் மனதில் நிலைத்து விட்டது. வெறுமே புலம்பிக்கொண்டேயிருந்தால் போதுமா? அதற்கான முயற்சி என்பது பேண்டாமா? உடற்கூறுபற்றி நாமென்ன அறிவோம்? அதுபற்றிய சிந்தனையே இருந்தால்தானே?
ஒரு முறை ஐயப்பன் கோயிலுக்கு நேர்ந்துண்டு போயிட்டு வாங்கோ….எல்லாம் நல்லபடியா நடக்கும்….- அர்ச்சகர் அம்பிநாதனும் சொல்லித்தான் பார்த்தார். குலதெய்வம் கோயிலுக்கு வேண்டிக்குங்கோ….வருஷா வருஷம் தை வெள்ளிக்கிழமை நேரடியாப் போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்து சேருங்கோ….நடக்கிறதா இல்லையா பாருங்கோ…..வயசு காலத்தில் யார் யாரோ என்னென்னவோ சொல்லித்தான் பார்த்தார்கள். இவர் எதற்கும் அசைவதாயில்லை.
இந்த வேண்டுதல்லெல்லாம் எனக்கு அவ்வளவா நம்பிக்கையில்லை. பிராப்தி உண்டானா உண்டு…தானா நடக்கும்…அவ்வளவுதான்….
அப்போ டாக்டர்ட்டயாவது போய் செக்கப் பண்ணிக்கலாமில்ல….? – இது பங்கஜத்தின் கேள்வி. கேள்வியென்ன ஏக்கம் என்றே சொல்லலாம். இந்த மனுஷனை எப்படி சம்மதிக்க வைப்பது, எப்படி இழுத்துக் கொண்டு போவது என்று தெரியாமல் தவித்தாள் அவள். அது எனக்குத் தெரியும்டீ….நீ சொல்லித் தறியோ….? நீ வேணும்னா போய்ப் பண்ணிக்கோ…நான் ஏன் வரணும்…என்கிட்டே எந்தக் குறையுமில்லே…? பேச்செடுத்தாலே எரிந்து விழுந்தார். எதுக்கு யார்ட்டப் போய் நிக்கிறதுங்கிற விவஸ்தையில்லையா?
குறையில்லேன்னா தைரியமா வர வேண்டிதானே…எதுக்கு பயப்படணும்? நம்ப ரெண்டு பேருக்கும் நல்லதுதானே அது? எதாச்சும் மருந்து கொடுக்கப் போறா…சாப்பிடப் போறோம்…இதுக்கென்ன கூச்சம்…? காய்ச்சல் கரப்புன்னா டாக்டர்ட்டப் போக மாட்டமா? அதுபோல போய் நிக்க வேண்டிதானே? மாத்திரை மருந்து சாப்பிடாமயே ஆயுசு கழிஞ்சிடப் போறதா என்ன?
அதென்னகூச்சம்னு ஒரு வார்த்தை சொல்றே? உன்கிட்டே நான் சொன்னேனா? இல்ல சொன்னேனான்னு கேட்கிறேன்…நீயா எதையாச்சும் பேசுவியா? உனக்கென்னடீ தெரியும்? உனக்கென்ன தெரியும்ங்கிறேன்….அந்த மாதிரிப் போய் நின்னா…வெறும் செக்கப்போட போகாது…மருந்து மாத்திரையோட திரும்ப முடியாது…அந்த அசிங்கத்த வேறே என் வாயால சொல்லணுமா…என்னால முடியாது….அவ்வளவுதான்…..அவன் டாக்டரே ஆனாலும் மனுஷனுக்கு ஒரு சங்கடம் வேணாம்? உடனே திறந்து காண்பிச்சிற முடியுமா? அநாகரீகமில்ல? கீழ இழுத்து இழுத்துப் பார்ப்பான்டி அவன்…கேள்விப்பட்டிருக்கேன்…படிச்சிருக்கேன்..- என்ன ஒரு கேடு கெட்ட ஜென்மம்…அப்டியா விதிச்சிருக்கு எனக்கு? நானென்ன தொங்கிப் போயிக் கெடக்கனா? ஆகிருதி அழிஞ்சி போச்சா? . – சொல்லிவிட்டு அவிழ்ந்து இறங்கிய கூந்தலை அள்ளிக் கட்டிக் கொண்டார். ஒரு அசப்பில் பார்ப்பதற்கு சரித்திர கால சாணக்யன் போலிருந்தது. முடி வளர்ப்பதிலும் ஜடை போடுவதிலும் இருந்த உற்சாகமும் கவனமும் அதில் இல்லையே?
இதுதான் மிச்சம். அள்ளி முடிஞ்சிண்டாச்சு…ஆகிருதியெல்லாம் பிரமாதமாய்த்தான் இருக்கு. என்ன புண்ணியம்….கதையாகலயே…இதோ பாருங்கோ…தன்னோட முப்பத்தஞ்சாவது வயசுலதான் கல்யாணம் பண்ணின்டிருக்கார் உங்க தம்பி கோபாலன்…அப்புறமும்…நாலு வருஷங்கழிச்சித்தான் இந்த ஜனனம். ….அவா சோர்ந்து போய்ட்டாளா? நம்பிக்கையோடதானே இருந்தா? எவ்வளவு அலைஞ்சிருப்பா டாக்டர்கிட்டே….அந்த ஊக்கம் இருந்ததே அவாகிட்டே….விடாமப் போனாளே? யார் பார்க்கிறா, யார் சிரிக்கிறான்னா நினைச்சிண்டிருந்தா? அவா கவலை அவாளுக்கு…அதானே உலகம்? உங்க நடுவாந்திர தம்பி ஊர்லேர்ந்து வந்திருக்காராம் விசேஷத்துக்கு….நீங்க போகாம இருக்கலாமா? நன்னாயிருக்குமா? எதுலதான் ஊக்கமும் உற்சாகமும் இருக்கு உங்களுக்கு?
என்ன ஊக்கம் பெரிய ஊக்கம்? நீதான் மெச்சிக்கணும்… எனக்குத்தான் தெரியும் அவன் என்கிட்டே புலம்பினது…உங்கள மாதிரியே எனக்கும் ஆயிடும் போல்ருக்கேண்ணான்னான். மனசுக்குள்ள சிரிச்சிண்டேன்..நமக்குத் துணை ஒத்தன் வர்றான்னு…..நம்ப தாய் தகப்பனோட செல்ஸ் எப்டியிருந்திருக்குங்கிறதைப் பொறுத்ததுப்பான்னு அவனுக்கு சமாதானம் சொன்னேன். நான் மட்டும்தான் குழந்தையில்லாமத் தவிக்கணுமான்னு அப்ப நினைச்சேன்…ஒரே தாய் வயித்துல பிறந்த குழந்தேளுக்கு அப்படியென்ன வெவ்வேறு யோகம்? இது தகுமா? ஒருத்தனுக்கு குழந்தையுண்டு, ஒருத்தனுக்கு இல்லை….ஒரு பொண்ணு டைவர்சாகி தனியாக் கெடக்கு…இன்னொண்ணு…புருஷன இழந்து ஒத்த மரமா நிக்குது….இதெல்லாம் என்ன தலைவிதி? நினைக்கவே எரிச்சலாயில்லே? வேதனையாயில்லே? இத்தனைக்கும் போன வருஷம் ஜாண்டிஸ்னு கிடந்தான் அவன்….அது தெரியுமோ நோக்கு…? மறுபிழைப்பாக்கும் அவனுக்கு….
தெரியாம என்ன? நன்னாத் தெரியுமே….யாரோ நாட்டு வைத்தியர்னு போனாராமே…….
நாட்டு வைத்தியருமில்லே…பாட்டு வைத்தியருமில்லே….பாம்புக்கடி வைத்தியன் அந்தாளு….அவர்ட்டப் போய் வேளைக்கு மூணு முட்டைன்னு கோழி முட்டையை உடைச்சு உடைச்சு ஊத்தியிருக்கான்….நம்பள மாதிரியிருக்கிறவா…அதெல்லாம் செய்வாளா…? அநாச்சாரமில்லே…அது…..? முதல்ல முட்டையைக் கையாலே தொட முடியுமோ? அதுவே அருவருப்பா இருக்காது? எல்லாத்துக்கும் துணிஞ்சவனுக்குத்தான் இப்டி புத்தி போகும்…..
என்ன அநாச்சாரம்ங்கிறேள்.?…உயிர் போயிடும்ங்கிறபோது அதுக்கு மருந்தா அதைச் சாப்பிட்டா என்னங்கிறேன்….வெள்ளைக்கருவை மட்டும் பிரிச்சு எடுத்து ஏதோ மருந்துப் பொடில கலந்து கலந்து கொடுப்பாராம்…அங்கயே குடிச்சி்ட்டு வரவேண்டிதான் வைத்தியம்……..
அது மட்டுமில்லேடி….ஒரு நாளைக்கு பத்து முட்டைன்னு வேளைக்கு மூணா கலந்து கலந்து ஊத்தியிருக்கான்…….அந்த வைத்தியன் கேட்டானாம்….கவுச்சி வாடையே தெரிலயா உங்களுக்குன்னு….ஒரே மடக்கா குடிச்சிடறீங்களேன்னானாம்….அதிசயிச்சிப் போயிருக்கார்…அவர்…
மருந்துன்னா குடிச்சித்தானே ஆகணும்னானாம் இவன்…போதாக் குறைக்கு நாளைக்கு நாலஞ்சு குளியல். .தேகச் சூடு இறங்க…..இத்தனை தண்ணிக் கஷ்டத்துல….இதுதான் பாம்புக் கடி டாக்டர் வைத்தியம்…..சொல்லி வச்சாப்ல பதினைஞ்சு நாள்ல சரியாயிட்டானே….வந்த ஜான்டிஸ்
எங்க போச்சுன்னே தெரிலயே…மஞ்சக் காமாலை மிரண்டு ஓடிடுத்தே…பச்ச ரத்தமாப் போனவன் சிவப்பு ரத்தமா திரும்பி வந்துட்டான்….உயிர் தப்பிச்சதே பெரிசுன்னு நினைச்சிண்டிருக்கைல.. கையோடு கையா .இப்டி குழந்தையை வேறே பெத்து இறக்கிட்டானே. பூமில..? என்ன அநியாயம்? சாப்பிட்ட மருந்துகளோட வீரியம் உடம்புலேர்ந்து வெளியேறுவதற்கு முன்னமே ஒரு ஜனனம்….அந்தக் குழந்தை என்னமா இருக்குமோ? அநியாயம்…அநியாயம்…!!
எதாச்சும் அச்சான்யமாச் சொல்லாதீங்கோ… நல்லதாவே பேசுங்கோளேன்…இதிலென்ன அநியாயமிருக்கு….முயற்சிதான்…விடா முயற்சிதான்….நம்பிக்கையோட செய்தார்….விஞ்ஞான உலகத்துல இதெல்லாம் இன்னைக்கு சாதாரணம்….பயந்து விலகினா நமக்குத்தான் நஷ்டமாக்கும்….உங்களுக்குப் பிடிக்கல்லே…இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிண்டு திரிஞ்சிண்டிருந்தேள்…பிராப்தம் போல இருக்குன்னு நானும் விட்டுட்டேன்…குழந்தையில்லாட்டா இப்ப என்ன…நீங்க எனக்குக் குழந்தை…நான் உங்களுக்குக் குழந்தை…போறாதா? குழந்தையில்லாதவா இந்த உலகத்துல வாழாமயா போயிட்டா…?ன்னு சமாதானம் பண்ணின்டுட்டேன்….
போடீ…போடீ…போக்கத்தவளே..ஏதோ அரையும் குறையுமா தெரிஞ்சிண்டு என்னத்தையாவது பேசாதே…..உயிரணுக்கள் பர்சன்டேஜ் ரொம்பக் கம்மியா இருக்குன்னு அதுக்கு வேறே டாக்டர்ட்டப் போயி தனி செக்கப் நடந்திருக்காக்கும்..அதுதான் அந்த ஜான்டிஸோட பாதிப்பு. அதத் தெரிஞ்சிக்கோ….சும்மாவொண்ணும் இல்லே….அவனும் பாடுதான் பட்டிருக்கான்….இதே வேலையா அலைஞ்சிருப்பான் போல்ருக்கு….மூச்சு விடுறதே இதுக்காகத்தானா? என்ன கிரகம் இது? உலகத்துலே மனுஷாள் கல்யாணம் பண்ணிக்கிறதே குழந்தை பெறத்தானா? வேறே ஒண்ணுமே கிடையாதா? மனுஷன் தன் ஆத்ம சக்தியை உணர்றது எப்போ? உடம்பையும் தன்னையும் பிரிச்சிப் பார்க்கிறது எப்போ? அதெல்லாம் எத்தனை உயர்வானது? எவ்வளவு மேன்மையானது? இதையெல்லாம் என்னைக்காவது, வாழ்க்கைல ஒரு நாளாவது, ஒரு பொழுதாவது யோசிச்சிருப்பானா அவன்? தெய்வ சிந்தனை இருந்தாத்தானே இதெல்லாம் தேடச் சொல்லும்?
ஏன் லௌகீகக் கடமைகளை ஒழுங்கா நிறைவேற்றிண்டு அந்த நிலையை எட்ட முடியாதா? அதுலேர்ந்து விலகியிருந்தாத்தான் இதெல்லாம் சாத்தியமா? தெய்வம்… தெய்வம்ங்கிறேள்…வாயைத் திறந்தா விஷமா கக்கறேள். தேளாக் கொட்றேள்…பக்திமான்னு வேறே சொல்லிக்கிறேள்….
அப்போ நான் விலகியிருக்கேன்னு சொல்றியா நீ? சொல்லாமச் சொல்றே…அதானே? அவ்வளவுதாண்டி என்னால முடியும்? இதுக்கு மேலே உன்னோட சம்போகம் பண்ண முடியாது… நீ என் கூட இருக்கிறதானா இரு…இல்லையா நீயும் உன் வழியப் பார்த்துண்டு போகலாம். கதவு திறந்தேதான் இருக்கு…. எந்த ஆட்சேபணையும் இல்லை…..
என்னண்ணா..பட்டுன்னு இப்டிப் பேசறேள்? .எதையோ எதுக்கோ பொருத்திப் பேசறேளே? இது நன்னாயிருக்கா? உங்கள விட்டா எனக்கு வேறே யார் இருக்கா? நீங்களே சதம்னு வாழ்ற என்னை, சட்டுன்னு இப்டி ஒரு வார்த்தை கேட்டுப்புட்டேளே…உங்க மனசாட்சிக்கே சம்மதமா இருந்தாச் சரி…. இனிமே நான் உங்க கூடப் பேசவே வரல்லை….-
அன்றொரு நாள் பேச்சு முற்றி இப்படித்தான் முடிந்தது கடைசியில். அதற்குப் பிறகு ஒரு வாரம் பங்கஜத்தோடு பேசவேயில்லை கல்யாணம். முகத்தைத் திருப்பிக் கொண்டுதான் கிடந்தார். அது கோபத்தினாலா அல்லது இப்படி வாய் தவறிப் பேசி விட்டோமே என்கிற உறுத்தலினாலா?
குழந்தை பேச்செடுத்தாலே இப்படி எதாவது விபரீதத்தில்தான் போய் முடிகிறது. தன் தாயாரையே என்ன பாடு படுத்தியிருக்கிறார்? இப்படியா பெரியவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வது? எனக்காக மனமுருகி என்னிக்காவது சாமிட்ட வேண்டின்டிருக்கியா நீ? என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டிருக்கிறாரே…? நோகடித்திருக்கிறாரே ஒரு தாயார் அப்படியிருப்பாளா? தன் எல்லாச் செல்வங்களும் எல்லாமும் பெற்று சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்றுதானே ஒருத்தி விரும்புவாள்? நீ அப்டி இருந்திருக்கியா?
அம்மா அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாய் ரூமிலேயே அடைந்து கிடந்தாளே? உறாலுக்கு அவர் வந்தாலே அறையினுள் தன்னை ஒளித்துக் கொள்வாளே….! இவர் கண்ணில் பட்டால் ஏதாச்சும் ஆரம்பித்து விடுவான்…பிறகு நாள் பூராவும் சண்டையில்தான் கழியும் என்று பம்மிப் பதுங்குவாளே…! இத்தனை அழிச்சாட்டியம் பண்ணுவதற்கு சிவனே என்று என்னதான்
ஆகுதுன்னு ஒரு முறை பார்த்திடுவோமேன்னு டாக்டர்ட்டப் போகக் கூடாதா? முயற்சி எதையும் மேற்கொள்ளாமல் புழுங்கிக் கொண்டேயிருந்தால்? அதிசயமா நடக்கும்? மாய மந்திர ஜாலமா இது?
டானிக்கும் மாத்திரையுமா முழுங்கி…. இப்போ குழந்தையும் பிறந்தாச்சு…அதுவும் ஆண் குழந்தை…பெண் பிறந்திருந்தாலும் செலவுக்கு வந்திருக்குன்னு சொல்லுவா… சிங்கக் குட்டியான்னா பெத்திருக்கார்….நன்னாயிருக்கட்டும்னு ஆசீர்வாதம் பண்ணுங்கோ மனசார….ஒரு விஷயத்தை ஒருத்தர் சக்ஸஸ் பண்ணினா பாராட்டுற பரந்த மனசு வேணும்…பெருந்தன்மை வேணும்…
சரிதாண்டி நிறுத்து. இதெல்லாம் ஒரு சாதனையா? வெட்கங்கெட்ட உலகம்…..
இப்டித்தான் ஏதாவது பாஷாண்டித்தனமா பேசிண்டு, அடுத்தவாளைக் குறை சொல்லிண்டு அலைவேள்….கன்ஸ்ட்ரக்டிவ்வா ஒண்ணும் செய்யமாட்டேள்…..வெறும் வாய்ச் சவடால்தான்….வயித்தெறிச்சல் வேறே…..வாழ்த்தாட்டாலும் பரவால்ல….வயிற்றெரிச்சல் படாதீங்கோ….உங்க தம்பிதானே…நன்னாயிருக்கட்டும்…அவா குழந்தையை நம்ப குழந்தையா நினைச்சிக்குங்கோ…அது பெரிய மனசு….
ஸ்டாப் இட் ஐ ஸே…..ஐம் நாட் எ லோஃபர்….ஒரு பொறுக்கிதான் அந்தக் காரியம் செய்ய முடியும். அப்டிச் செய்துதான் சக்ஸஸ் பண்ணனும்னா அது எனக்கு வேண்டவே வேண்டாம்…… – திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவர் போல அலறினார் கல்யாணம். அந்தச் சத்தம் கேட்டு அப்படியே அதிர்ந்து போனாள் பங்கஜம். கல்யாணத்தின் உடம்பு ஆடிக் கொண்டிருந்தது. அங்கும் இங்குமாய் நிலை கொள்ளாமல் அலைந்தார். பற்களைக் கடிக்கும் சத்தம். புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது வீடு..மயான அமைதி.
கத்திய கத்தலில் அவரது ஜடா முடி அவிழ்ந்து கொண்டது. சந்நதம் வந்தவர் போலிருந்தார் கல்யாணம். நெற்றிச் சந்தனமும் குங்குமமும் வழிந்தோடி மூக்கில் இறங்கியிருந்தது. கண்கள் ஜிவு ஜிவுவென்று ரத்தச் சிவப்பில் தெறித்து விழுந்து விடுவதுபோல் முண்டிக் கொண்டு பளபளத்தது. அவரை அறிவாள் பங்கஜம். அப்படியே தன்னை ஓட்டுக்குள் ஒடுக்கிக் கொண்டாள்.
நேரம் சென்று கொண்டிருந்தது. குழந்தைக்கான பத்தாம் நாள் புண்யாவஜனம் விசேடத்திற்கு எப்பொழுது கிளம்புவார் என்று தெரியாமல் அவரின் அசைவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள் பங்கஜம்.
நீங்களும் உங்க ஒய்ஃப்பும் அந்த பாத்ரூமுக்குள்ள போயி இந்த பாட்டில்ல செமன் எடுத்திட்டு வாங்க….-டெஸ்ட் பண்ணனும்…அப்புறம்தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கணும்…வெறுமே மாத்திரை மருந்தெல்லாம் எழுதித் தர முடியாது…..
நகரிலேயே புகழ்பெற்ற அந்த மகப்பேறு மருத்துவர் இவரைப் பார்த்து ஒரு சிறிய புன்னகையோடு நிதானமாக இப்படிச் சொன்னதும் சடாரென்று வெளியேறினார் கல்யாணம்.
ஐம் நாட் எ லோஃபர்…ஐ கான்ட் டு திஸ்…..வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்….? வாடீ போகலாம்…-இரைந்தார் கல்யாணம். வெளியே உட்கார்ந்திருந்த பலரது பார்வையும் இவர் பக்கம் சடாரென்று திரும்பியது. தன்னைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு அந்த மருத்துவ மனையை விட்டுத் தன் கணவர் வெளியேறிய அந்தக் காட்சி பங்கஜத்தின் கண் முன்னே விரிந்தது இப்போது.
எவ்வளவு பெரிய விஷயம் அது? பரஸ்பரம் மனம் கனிஞ்சு, இணைஞ்சு, இழைஞ்சு ஒன்று கூடி, தன்னெழுச்சியா, தெய்வீகமா நிகழக் கூடிய ஒண்ணை இயந்திரத்தனமா எப்படிச் சீப்பா சொல்லிட்டான் இந்த டாக்டர்? என்ன நினைச்சிட்டிருக்கான் இந்த ஆளு? பாத்ரூமுக்குள்ள போயிட்டு வாங்கோன்னு சர்வ சாதாரணமாச் சொல்றான்? இவனுக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? குறைஞ்ச பட்சம் என் நெற்றிப் பட்டையையும், சந்தனம் குங்குமத்தையுமாவது இவனுக்கு மதிக்கத் தெரியாது? என் தேஜஸ் எதையுமே உணர்த்தலயா இவனுக்கு? சர்வ சாதாரணமாச் சொல்லிப்புட்டானே? எதுக்கு எந்த எடம்ங்கிற விவஸ்தையில்லை? அவ்வளவு கீழ்த்தரமானவனா நான்? ஒரு பெண்ணையும் ஆணையும் கூட்டி அடைக்கிற வேலையா இது? அதுக்கா ஆஸ்பத்திரி…? வாட் எ ப்ளடி டர்ட்டி ப்ளேஸ்….வாட் கைன்ட் ஆஃப் ட்ரீட்மென்ட் உறி ப்ரபோஸ்டு….ப்ளடி நான்சென்ஸ்….”- பெருமூச்சுதான் மிச்சம் அவளுக்கு.
எவ்வளவு நேரம் கல்யாணம் அப்படி உட்கார்ந்திருந்தார் தெரியாது. இனி தாமதிப்பதற்கில்லை என்று நெருங்கினாள் பங்கஜம்.
அன்னா….முகூர்த்தத்துக்கு நேரமாச்சு…எல்லாரும் வந்திருப்பா…வாத்தியார் உள்பட…நாம கிளம்பலாமா….?- போய் குழந்தையை ஆசீர்வாதம் பண்ணிட்டு வருவோம்…புறப்படுங்கோ…. – தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பக்கவாட்டில் போய் நின்று பணிவாய் மெல்லக் கேட்டாள்.
நான் வரலடி….எனக்கு மனசு ஒப்பலை…மீறி வந்தேன்னா… குழந்தையை ஆசீர்வாதம் பண்றதுக்குப் பதிலா வாய் தவறி எதாச்சும் சொல்லித் தொலைச்சிடுவேன்… அடக்க முடியாமே வந்து தொலைச்சிடும்…அது வேண்டாம்…நீ போய்ட்டு வா…..! இந்தா…இந்தப் பணத்தை குழந்தைக்கு மணமா ஒதி வச்சுடு…. உடம்பு சரியில்லாம, எழுந்திரிக்க முடியாமே படுத்துண்டிருக்கேன்னு அவாள்ட்டச் சொல்லிடு….நீ கிளம்பு சீக்கிரம்….. – கூறிவிட்டு இருந்த இடத்திலேயே அப்படியே துண்டை விரித்து நெடுஞ்சாண் கி்டையாய்ச் சாய்ந்தார் கல்யாணம். அருள் வந்து அடங்கியவர் போல் தென்பட்டார்.
போவதா, வேண்டாமா என்று புரியாமல், அங்கிருந்து நகரத் தோன்றாமல், அழுது கண்ணீர் விட்டவளாய், புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் பங்கஜம்.
வாசலில், அண்ணா…ஆட்டோ கொண்டு வந்திருக்கேன் புறப்படுங்கோ… நேரமாயிடுத்து….நீங்க வந்துதான் ஆரம்பிக்கணும்னு வாத்தியார்ட்டச் சொல்லிட்டு வந்திருக்கேன்… – உற்சாகமாய்ச் சொல்லிக் கொண்டே தம்பி கைலாசம் உள்ளே வேகமாய் நுழையும் அரவம் கேட்டது.
![]() |
1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க... |