லண்டன் வீதியில் சிவப்புப் பொட்டுக்கள்




டேவிட்டுக்குத் தெரியும்,தன் நடையில் உள்ள துள்ளலும் முகத்திற் தோன்றும் மகிழ்சியும் அவனுக்கே அசாதாரணமானவை என்று.ஆனாலும் தன் மகிழ்ச்சியை ரசிக்க அவன் தயங்கவில்லை. இன்னும் சில வினாடிகளில் அவனின் காதலி வரோணிக்காவுடன் சேர்ந்து ரசிக்கப் போகிறான்.
வரோணிக்கா!
அவளின் நினைவின் இனிமையில் அவன் முகம் குறுகுறுக்கிறது.அவன் அவளிடம் இன்று கேட்கப்போகும் கேள்வியை தனது மனதுக்குள்; கேட்டுப் பார்க்கிறான்.
அவள் அவளது மனம் திறந்து சொல்லாமல் மறுத்ததெல்லாம் அவனுக்குத் தெரியும்.அவளின் மறுப்பு அவனில் அவனுக்கு அன்பு இல்லை என்பதற்கு அர்த்தமில்லை.அவனுக்கு மனம் புண்படுமே என்று எத்தனையோதரம் அவள் குறுக்குவழிச் சமாதானங்களைக் கூறியதை நினைக்க டேவிட்டுக்கு வரோணிக்காவில் இனமறியாத பரிதாபம் பிறக்கிறது.
வலிமையற்ற குழந்தை வாய் திறந்து பொய் சொல்லத் தெரியாமல் வளவளவென்று ஏதொ சொல்வதுபோலிருக்கும் வரோணிக்கா ஏதும் ஒளித்து மறைத்துச் சொல்ல முயன்றால்.
அவள் அவனுடைய அன்பான வரோணிக்கா!.
அவளை நினைத்ததுமே அவனின் நடையில் ஒருவேகம். லண்டனை இருள் கவ்வத் தொடங்க,இந்த இனிய நகரம் எப்படிப் பளபளக்கும் என்பதுபோல் நாலா பக்கங்களிலிலுமிருந்தும் கோடிக்கணக்கான வெளிச்சங்கள்.
நெருக்கமான அந்த கிழக்கு லண்டன் தெருவில் இடித்துப் பிடித்துக் கொண்டு டேவிட் நடக்கிறான். வரோணிக்கா வீட்டை விட்டுப் புறப்படமுதல் அவளைச் சந்திக்க வேண்டுமென்ற பரபரப்பு அவன் நடையில் தெரிகிறது. தூரத்தில் தெரியும் ஒரு நைட் கிளப்பைக் கண்டதும் அவன் நடையில் மேலும் பரபரப்பு.
இதுபோன்ற நைட் கிளப்பில் ஒன்றிற்தான் வரோணிக்கா பாடுகிறாள்.அதுதான் அவளின் உழைப்பு.’கலை’ என்ற பெயரில் அதை அவள் ஒளித்து,மறைத்து வைக்கப்பார்ப்பது அவனுக்குத் தெரியும்.
அவள் தனது ‘கலையை’ மூட்டை கட்டிவிட்டு,ஒருகிழமை அவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து,இருவரும் ஒருத்தர் அணைப்பில் அன்புடன் தழுவிக்கொண்டு ஒருகிழமையிருந்து முடிய, அறையைச் சூடாக்கவும்,அத்துடன்,பாணுக்கும் பட்டருக்கும் பணமில்லாமல் திணறியதும் அவர்கள் திணறியதும்..
வரோணிக்கா நைட்கிளப்பில் பாடுவதில் அவனுக்கு ஆட்சேபணையா?
டேவிட்டிடம் வரோணிக்கா குரல் தளும்பக் கேட்டாள்.
எப்படி அவளுக்குப் பதில் சொல்வது? அவள் அந்தக் கிளப்பில் பாடும்போது,வரோணிக்காவின் இளமை ததும்பும் கட்டுடலைச் சில காம வெறியர்கள் கண்களால் உரித்துப் பார்ப்பதை அவள் காதலனான டேவிட் வெறுத்தான்.
‘உங்களுக்கு ஒரு உருப்படியான வேலையிருந்தால் நான் ஏன் உழைப்புக்காகப் பாடுபடுகிறேன்?’ அவள்,அவனின் ஆர்ப்பாட்டத்தில் துக்கமடைந்து தனது கண்களைக் கசக்கிக்கொண்டு விம்மினாள்.
உழைப்பு? டேவிட் யோசித்தான். இங்கிலாந்தில் இரண்டு கோடி மேலானவர்களுக்கு இல்லா உழைப்பு அவனுக்கு என்னவென்று கிடைக்கும்? ஆங்கிலேய வெள்ளைக்காரர்களுக்குக் கிடைக்காத உழைப்பு, கறுப்பனான அவனுக்கு எப்படிக் கிடைக்கும்?
கடந்த இருவருடங்களாக ஏதும் ‘கசுவல்’வேலை கிடைப்பதும்,அதனால் சில கிழமைகள் நிம்மதியாகக் கழிவதும்,பின்னர் பழையகுருடி கதவைத்திறடி என்று வேலை தேடி ஏறி இறங்குவதும் பழகிவிட்டது. நிம்மதியற்ற வாழ்க்கையும், நீண்ட இரவுகளும்,வரோணிக்காவின் நச்சரிப்புக்களும்-?
யாரை நொந்துகொள்வது? இந்தப் பிரச்சினைக்கு எதை முன்வைத்து காரணம் காட்டுவது? மேல் நாடுகளின் நிலை ஆட்டம் கண்டதற்கு,அராபிய எண்ணெய் வளர்ச்சியும், ஜப்பானியரின் டெக்னோலோஜியும் காரணமோ என்னவோ? டேவிட்டுக்கத் தெரியும் தனக்கு வேலை கிடைக்காததற்குத் தனது ‘நிறமும்’ ஒரு காரணம என்று.
டேவிட்டின் மனதில் நினைவுகள் தடுமாறப் பெருமூச்சுடன்,நிமிர்ந்து நிற்கும் பெரிய கட்டிடங்களை ஏறிட்டுப் பார்க்கிறான்.
‘நீண்ட காலத்திற்கு முன்,மேற்கிந்திய நாடுகளிலிருந்து, லண்டனுக்கு வரும்போது என் பெற்றோர்கள் என்ன நினைத்துக் கொண்டு வந்திருப்பார்கள்? டேவிட் இந்தக் கேள்வியைத் தனக்குள் பல தடவைகள் வாய்விட்டுக் கேட்டிருக்கிறான். ஆங்கிலேயர்களால் அவமானப்பட்டு,மனம் உடைந்தபோதெல்லாம் தாயிடம் எரிந்து விழுவான்.’ஏன்வந்து சேர்ந்தீர்கள் லண்டனுக்கு?’.அவன் குரலின் அதிர்ச்சியால் தாய் அவனைப் பெருமூச்சுடன் பார்ப்பாள்.
அவள் பார்வை வெறுமையாகவிருக்கும்.அவனின் கேள்விகளுக்குப் பதில்களை எத்தனையோதரம் சொல்லி அவள் அலுத்து விட்டாள். மூத்த மகனான டேவிட் பிறந்த பின் அதைத் தொடர்ந்து ஒன்றுக்குப் பின் ஒன்றாக ஏழு குழந்தைகள் பிறந்த பின்,அவர்களுக்காக மிகக் கஷ்டப்பட்டு உழைத்த அவனின் தந்தை மிஸ்டர் ஹார்ட் ஒரு நாள், சட்டென்ற வந்த மார்பு வலியில் மறைந்துவிட்டார்.
டேவிட்டின் கண்களில் நீர் பனிக்கிறது. தகப்பனின் மரணத்தைத் தாங்காத அவனது தாய் அன்று அலறிய காட்சியை நினைத்தபோது.
குடும்பத்தைக் காப்பாற்ற ஓய்வு ஒழிவில்லாமல்,இரவு பகல் என்று ஒவர்டைம் செய்து,அதனால் இருதய அடைப்பு வந்து,வேலை செய்து கொண்டிருக்கும்போது குனிந்த அவனின் தந்தையின் வாழ்க்கை சட்டென்று முடிந்தது.
அந்த அதிர்ச்சி, குழந்தைகளைக் காப்பாற்ற அவனுடைய தாய் பட்டபாடு..
எல்லாக் கஷ்டங்களுக்கும் என்ன விடிவு வந்தது? அவன் தனது எதிர்காலம் பிரகாசமாகவிருக்கும் என்று மனதில் கட்டிய கற்பனைகள் எத்தனை?
படிப்பு முடிந்த வெளியேறியபின் ஒருநாள், நொட்டிங்காம் என்ற இடத்தில் நடந்த பிரமாண்டான கார்ணிவெல் பார்க்கப் போயிருந்தான்.அங்கு அவன் எதிர்பாராத வித்தில் போலிசார் அவனைப் பிடித்து,அவனை ஒரு ‘பிக்பொக்கெட்காரன்;’என்று குற்றம் சாட்டி, பிளக் பாஸ்ரட்’ என்று உதைத்தபோதுதான்,பதினாறு வயது நிரம்பிய டேவிட்டுக்கு, இங்கிலாந்தில் பிறந்தாலும் அவன் ஒரு ‘பிரிட்டிஷ்;’ இல்iயென்பது புரிந்தது.
ஆங்கிலப் போலிசாரிடம் காட்டமுடியாத தனது ஆத்திரத்தையெல்லாம் தனது தாயிடம் காட்டிக் கோபத்தில் அலறியபோது அவள் அவனுக்காகத் தன் மனதில் பொங்கும் வேதனையை அடக்கிகொண்டு,போலிசாரின் அடியால் மகனின் மூக்கிலிருந்து வடியும் குருதியைத் துடைத்து விட்டாள்.
அந்த முதல் கைதுதான் ஆரம்பம். அதன்பின் பல நிகழ்வுகள்.அதன்பின் லண்டன் தெருக்களில்,சாதாரணமாகக் கறுப்பு இளைஞர்களை,வெள்ளையினப் போலிசார் ஏதோ ஒரு விதத்தில் ‘ஸஸ்பெக்ட்’ என்ற சாட்டில் கைது செய்வார்கள்.
அது,’ஸஸ்;’ என்றழைக்கப்பட்டது. ‘ஸஸ்’ என்ற சட்டத்தைப் (ஸஸ் லா) பாவிப்புக்கு எதிராகப் பிரித்தானியாவில் பல இடங்களில் முற்போக்குவாதிகளின் குரல்கள் எழுந்தாலும்,போலிசார் கறுப்பு வாலிபர்களைக் கண்ட இடத்திலெல்லாம் நிறுத்திச் சோதனை செய்வது தொடர்ந்தது.
டேவிட் விரைந்து நடக்கிறான். வரோணிக்கா அவளின்,கிளப்புக்கு வேலை செய்யப் புறப்படமுதல் அவளைக் காணவேண்டும் என்பது அவனின் அவசரத்துக்குக் காரணமாகும்.
அடுத்த காரணம், கறுப்பு வாலிபர்களைத் தேடியலையும் இனவெறி பிடித்த எந்தப் போலிசாரிடமும் அகப்பட்டுக் கொள்ள அவன் விரும்பவில்லை. அத்துடன், தற்போதைய வேலையில்லாத் திண்டாட்டத்தால்,பெரு கட்டிடங்கள் நிறைந்த தெருமூலைகளில் மறைந்திருந்து கறுப்பர்களை ஆத்திரத்துடன் ‘அடிக்கும்’ வெள்ளையினவாதச் சண்டியர்களையும்; அவன் சந்திக்கத் தயாரில்லை.
டேவிட் ஒருதரம், வெள்ளை இpனவாதிகளான,’நாஷனல் ப்ரண்ட்’ என்றழைக்கப்படும் வெறியர்களிடம் அடிவாங்கி குருதிவடிய வீட்டுக்குச் சென்றபோது, தலையுடைந்து வந்த அவனின் கோலத்தைக் கண்டு வரோணிக்கா மயக்கம்போட்டு விழுந்து விட்டாள்.
‘போலிசாரிடம் ஏன் சொல்லவில்லை?’ அப்படி அவள் கேட்டபோது அவனுக்கு அது ஒரு பைத்தியத் தனமான கேள்வியாகப் பட்டது. ஏதோ காரணம் காட்டிக் கறுப்பு வாலிபர்களை வேட்டையாடும் வெள்ளையினப் போலிசாரிடம் உதவி கேட்பதா?
வரோணிக்கா,இந்த உலகம் உண்மையானது நேர்மையானது என்று எவ்வளவு நாளைக்கு நம்பிக் கொண்டிருக்கப் போகிறாள்?
உலகத்தின் கொடுமைகள் வரோணிக்காவைக் கெடுக்கமுதல்,அவளை,’கிளப்’ வேலையிலிருந்து நிறுத்த வேண்டும்.
டேவிட்டின் இதழ்களில் மெல்லிய மலர்ச்சி.எவ்வளவோ காலமாகக் கேட்கத் தயங்கியதை இன்று கேட்கப்போகிறான்.
அவளிடம் கேட்கவேண்டிய கேள்வியை தனது மனதுக்குள் சொல்லிப் பார்த்தவன் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு,மெல்ல முணுமுணுத்துக் கொள்கிறான்.
‘டார்லிங் வரோணிக்கா, வில் யு மரி மீ (அன்பான வரோணிக்கா,என்னைக் கலயாணம் செய்து கொள்வாயா?)’. அவளிடம் கேட்கவேண்டிய கேள்வியை,வாய் விட்டுச் சொன்னபின் அதன் அர்த்தம் அவன் இருதயத்தை அழுத்துகிறது.
அவனுக்கு இன்று வேலை கிடைத்து விட்டது என்று சொன்னால் அவள் முகம் எப்படி மலரும்?.
அதுவும் ஒரு ஆறுமாத வேலையென்றுதான் வேலை தந்த கிழவன் சொன்னான்.
சாமான்களைத் தூக்கிவைப்பதும் கழுவித் துடைப்புதமான எடுபிடி வேலைதான்.ஒரு பிரமாண்டமான மரத்தளபாடக் கம்பனியில் ஆறுமாதத்திற்கான கூலிவேலை.
கறுப்பு நீக்ரோக்கள் பலசாலிகள் என்று மரத் தளபாடக்கடையில் வெள்ளையினக் கிழவன் வேலை தந்திருக்கிறான் என்று அவனுக்குத் தெரியும்.வேலை தந்தவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, எப்படி நடத்தினாலும் சரி,ஒரு நல்ல Nலை கிடைக்கும் வரைக்கும் இந்த Nலையில் இருக்கவேண்டும்,ஒரு நல்ல அறை பார்க்க வேண்டும்.
வரோணிக்காவுக்கு ஒரு நல்ல கிறிஸ்மஸ் பரிசு கொடுக்க வேண்டும்.
அவர்கள் வாழும் லண்டனில் நிறைய இளம் சோடிகள் திருமணமாக முதலே ஒன்றாக வாழ்கிறார்கள். அந்தக் கலாச்சாரத்தைப் பிடிக்காத டேவிட்டின் தாய் முணுமுணுப்பதுபோல் வரோணிக்காவின் தாயும் முணுமுணுக்கிறாள்.
காதலைப் பற்றி வயதானவர்களின் கணிப்ப வித்தியாசமானது என்று டேவிட்டுக்குத் தெரியும்.தற்காலப் ‘புதுமுறைக்’ குடித்தனம் வயதுபோனவர்களால் தர்ம சங்கடமாகப் பார்க்கப் படுகிறது என்பது இளம் தலைமுறையினரால் எதிர்பார்க்கப் படவேண்டியதே என்று டேவிட் தனக்குள் நினைத்துக் கொளகிறான்.
‘என்ன வரோணிக்காவுக்குக் குழந்தை பிறந்தபின்தான் அவளைத் திருமணம் செய்வாயா?’ டேவிட்டின் தாய் இப்படிக் கேட்டபோது அவளின் குரலில் ஒலித்தசோகம் அவனை வருத்தியது. ஒரு நல்ல வேலை.உருப்படியான சம்பளம்.குடியிருக்க ஒரு நல்ல இடம் என்று பல யோசனைகளுக்கு இன்று ஒரு முடிவு கிடைத்திருக்கிறது.
அவன் விரைகிறான்.கிழக்கு லண்டன் பொல்லாத இடம்.அவனின் திடமான மனநிலையை ஊடுருவிக் கொண்டு பயம் எட்டிப் பார்க்கிறது.நகரின் மத்தியைக் கடந்த எல்லைக்கு வந்து விட்டான்.பஸ்சுக்குக் காத்திருக்கவேண்டுமெ?
இந்த நேரத்தின் நெருக்கடியில் பஸ்கள் ஊர்ந்த தவழ்ந்து சென்று கொண்டிருக்கும். பெரும்பாலும் ஏழை ஆங்கிலேயர்களால் நிறைந்த இடத்தில் இந்த நேரத்தில் அதிக சன நடமாடமற்றமில்லை,இரண்டாம் உலக யுத்தத்தில் உடைபட்ட கட்டிடங்களின் வடுக்கள் ஆங்காங்கே தெரிகின்றன.நகரின் எல்லைப் பகுதியில் ஓரு கறுப்பு இளைஞன் தனியாக நிற்பது அபாயம் என்று அவனுக்குத் தெரியும்.
அவன் சிந்தித்தபடி நடக்கிறான்.எனக்கு அபாயம் என்பது நான் ஒரு கறுப்பன் எனபதாலா அல்லது இந்த இடம் வறுமை நிறைந்த மக்கள் வாழும் என்பதாலா,அல்லது இந்த நாட்டைக் கொடுமைப் படுத்தும் வேலையில்லாத் திண்டாட்டக் கொடுமையாலா?.நாட்டுப் பிரச்சினை ஒருத்தனை இன்னொருத்தனுக்கு எதிரியாக்கி வைத்திருக்கிறதா? மனதில் எழும் பல கேள்விகளுக்கு டேவிட்டால் பதில்களைத் தேட முடியவில்லை.
அவன் விரைகிறான்..மழைதூறத் தொடங்கி விட்டது.கழுத்துக் காலரைத்தூகிக் கழுத்தை மறைத்துக்கொள்கிறான்.காதுகளுக்குள் ஈட்டிகள் நுழைவதுபோல் கொடிய குளிர்காற்ற உல்லாசமாகப் போய்வருகிறது.
இப்படி மழையில் நனைவதைவிட் பஸ் ஸ்டாப்பில் நின்றிருக்காமல் குறுக்கு வழியால் வருவது முட்டாள்த்தனமென்று என்று தனக்குள் தானே யோசித்துக் கொள்கிறான்.
கடந்தவாரம்,இபபடியான ஓரு தனி இடத்தில்,பன்னிரண்டு வயதான ஒரு இந்திய மாணவன் கழுத்து நெரிபட்டுக் கிடந்தைக் கண்டு பிடித்தார்கள்;. யார் செய்தார்கள்? என்ன காரணம்? பதில்?
எத்தனையென்று பயப்படுவது? இருள்.பனி,குளிர்,இல்லாமை,வறுமை,’எதிரிகள்’..,தனிமையான அந்த இடத்தில் அவன் நினைவுகளெ அவனுக்குப் பயத்தையுண்டாக்குகிறது. அவன் அவசரமாக ஓடத் தொடங்கவும் மழை கனமாகப் பொழியவும் சரியாக இருக்கிறது.
எப்படியும் இன்று வரோணிக்கா புறப்படமுதல் போகவேண்டும். அவளுடன் வேலை செய்யும் ஒரு பெண் இன்று வேலையை விடப் போகிறாள்.அதனால் அந்த இடத்தை நிரப்ப சில மணித்தியாலங்கள்,வரோணிக்கா, பாடவும் ஆடவும் கூடிய நேரம் வேலை செய்யலாம் என்று கிளப் சொந்தக்காரன் சொன்னதாக வரோணிக்கா சொன்னாள்.
அவள் கிளப்பில் வேலை செய்வதே டேவிட்டுக்குப் பிடிக்காது.அவன் தனது அதிருப்தியைக் காட்டியபோது,’உங்களுக்கு வேலையில்லதபோது எனக்கு வரும் வேலையை நழுவ விடுவது சரியில்லை’ என்றாள்.
இவனுக்கு ஒரு உழைப்ப கிடைக்கும் வரைக்கும் அவள் ‘எப்படியும’; உழைக்கப் போகிறாள் என்பது அவளின் குரலிற் தெளிவாகத் தெரிந்தது.
அவளின் நினைவு அவன் மனதில் படர்ந்தது,’வரோணிக்கா,நான் உன்னில் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன்.உனக்காக எவ்வளவு தூரம் வேலை தேடி அலைந்தேன்; என்று தெரியுமா?’
மழையில் நனைந்த அவன் கண்களில் நீர் துளிக்கிறது.
அவன் அந்தச் சந்தியில் திரும்பியபோது,நான்குபேர் நின்றிருப்பது தெரிந்தது. அவர்களைக் கவனிக்காததுபோல் அவர்களைக் கடந்து செல்ல யோசித்தான். அவர்களைக் கடந்தபோது அங்கு நின்றிருந்த இனவாத வெள்ளையன் ஒருத்தன் டேவிட்டின் முகத்தில் காறித் துப்பினான். இன்னொருத்தன் தனது காலை டேவிட் போகும் வழியை மறித்து நீட்டினான்.இன்னொருத்தன்,’ பிளக் பாஸ்ரட்’ என்று கத்தினான்.இன்னொருத்தன்,இமை வெட்டும் நேரத்தில் தனத கையிலிருந்த கத்தியை நீட்டினான்.
டேவிட் பலமானவன்தான்.மிருகத்தனமான நால்வர்களுடன் அவனால் ஈடு கொடுக்க முடியுமா?.அவன் வேகமாக ஓடினான்.அவர்கள் இவனைத் துரத்திக் கொண்டு ஓடிவரும் வரும் சப்தம் பின்னாற் கேட்டது.இவர்களைத் தாண்டி ஒன்றிரண்டுபேர் போய்க் கொண்டிருந்தார்கள்.
மழையில் நனைந்து கொண்டு போகும் அவர்கள்,இவர்களைப் பற்றி எந்த அக்கறையும் காட்ட வில்லை.
டேவிட்டுக்கு மூச்சு வாங்கியது. நீண்டதூரம் நடந்தபோதே களைத்தவன் இப்போது ஓடத் தொடங்கியபோது உயிரே போவது போலிருந்தது. இப்போது. ஓரு பஸ்ஸோ அல்லது டாக்சியோ கிடைத்தாற் தவிர இவர்களிடமிருந்து தப்ப முடியாதென்று அவனுக்குப் புரிந்து. அதற்கு, குறுக்குவழியால் ஓடிப்போய் மெயின் றோட்டில் ஏறியாகவேண்டும்.
உயிரைப் பிடித்துக் கொண்டு அவன் ஒடியபோது, வாழ்க்கையில் தனது குடும்பத்திற்காக மிகவும் கடினமாக உழைத்த அவனின் தகப்பனின் சோகமான முகம்,அவர் இறந்தபோத துடித்த தாயின் கலங்கிய கண்கள், அத்துடன் இவனில் உயிரையே வைத்திருக்கும் வரோணிக்காவின் நினைவு..
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் நைட் கிளப்புக்குப் போய்விடுவாள். நைட்கிளப்காரனிடம் அவள் இன்னும் சில மணித்தியாலங்கள் கூடவேலை செய்வதைச் சொல்லப் போகிறாள்.
‘ஓ,நோ,அவள் அப்படிக் கஷ்டப்பட்டு வேலை செய்வதை டேவிட் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை’. அவன் தனக்குள்ச் சொல்லிக் கொண்டு அவசரமாக ஓடிப்போய் மெயின் றோட்டில் காலடி எடுத்து வைத்த சமயம்..!
எதிரில் வந்த ஒரு வெள்ளையின மூதாட்டி டேவிட்டில் மோதியபோது, இருவரும் நிலை தடுமாறி றோட்டில் விழுந்துவிடுகிறார்கள். கிழவி, கறுப்பு இளைஞனான டேவிட்டின் முகத்தைப் பார்த்ததும் அலறுகிறாள்.’என்னைப் பிக்பொக்கெட் அடித்து விட்டான்’. மூதாட்டியின் அலறல் தொடர்கிறது. கண்மூடித் திறப்பதற்குள் எப்படி ஒரு கூட்டம் சேர்ந்தது என்று அவனால் கிரகிக்க முடியவில்லை.
சேர்ந்;து நின்ற வெள்ளையினக் கூட்டம் டேவிட்டை,ஆத்திரமும்,அருவருப்பும் நிறைந்த வெறியுடன் பார்க்கிறது. இந்தக் கறுப்பனில் யார் முதலில் கைவைப்பது என்பதுபோல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்கிறார்கள்.
டேவிட்டின் கண்கள் அவர்களின் பார்வையின் அர்த்தத்தை ஒருநொடியில் அளவிட்டது. அவனைத் துரத்தி வந்தவர்கள், தங்களுக்கு ஒன்றும் தெரியாத பாவனையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்து டேவிட்டைக் கேலியாகப் பார்க்கிறார்கள்.
எப்படித்தான் .போலிசார் இத்தனை விரைவாக அவ்விடம் வந்தார்களோ தெரியாது. அவர்களைக் கண்டதுடம் கிழவி பெரிதாக ஓலம் போடத் தொடங்கியது. டேவிட், தன்னைத் துரத்தியவர்களிடமிருந்து தப்பி ஓடிவரும்போது கிழவியில் மோதி வீழுந்ததைச் சொல்லவேண்டும். அதற்கு முதல் தன்னைத் துரத்தியவர்களைப் போலிசாரிடம் அடையாளம் காட்டவேண்டும். அவன் அந்த நான்குபேரும் நின்ற இடத்திற்கு நகர்கிறான்.
‘ஓடப் பார்க்கிறான்,விடாதீர்கள்’ கிழவி பெரிய குரலில் கத்துகிறாள்.
போலிசாரைக் கண்டதும் கூட்டம் கலையத் தொடங்குகிறது. பட படவென்ற குரலில் அவசரமாக டேவிட் தான் பிக் பொக்கெட் அடிக்கவில்லை, தன்னைத் துரத்தியவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்தபோது கிழவியில் மோதி விட்டேன் என்கிறான்.
‘சரி போலிஸ் ஸ்ரேசனுக்க வாரும், அங்கு வந்து நடந்ததைச் சொல்லும்’ அவனைத் தள்ளாத குறையாக அவனை இடித்தார்கள்.
‘ஸ்ரேசனுக்கா? நான் என்ன செய்தேன் ஸ்ரேசனுக்கு வர?’அவனின் கேள்வி போலிசாரை அவமானம் செய்வதாகப் பட்டதோ என்னவோ, ஒரு போலிஸ் டேவிட்டின் கழுத்தில் தனது கையை அழுத்திப் போட்டான். டேவிட் திமிறினான். ஓரு கறுப்பு இளைஞனைப் போலிஸ் ஸ்ரேசனுக்குக் கொண்டுபோனால் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியும்.அவன் என்ன சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை.அவனிடம் ‘உண்மையை’ எடுக்க என்னவெல்லாம் செய்வார்கள் என்று அவனுக்னுத் தெரியும்.
டேவிட் அவர்களின் பிடியிலிருந்து திமிறினான். அவனின் பிடரியில் ஒரு அடி பலமாக விழுந்தது. எதிர்த்தோ எதிர்க்காமலோ,பொலிசாரிடமிருந்து தனக்குக் ‘கிடைக்கப்’போவதை ஏன் ஒரு கோழைமாதிரி வாங்கிக் கட்டவேண்டும் என்று நினைத்தானோ அல்லது அவசரமாக வரோணிக்காவிடம் போகவேண்டும் என்ற நினைத்தானோ அவன் தனது பலத்தைக் காட்டித் திமிறியது அவனுக்கு ஞாபகமிருக்கிருக்கிறது.
அடுத்த கணம், அவனின் தலையை என்ன தாக்கியது என்ற தெரியாது. அவன் தலை சரிகிறது,லண்டன் தெருக்களில் டேவிட்டின் தலையிலிருந்து பாய்ந்த குருதியின் சிவப்புப் பொட்டுகள் மழைத்துளியுடன் கலந்து பதிவிடுகின்றன.
(யாவும் கற்பனையே)
– சிந்தாமணி பிரசுரம் – 1981