ரோடு ரேஜ்




அந்தோணி இத்தாலியில் தாமதங்கள் நிறைய பார்த்துளேன் என்றான். பஸ் பத்து பதினைந்து நிமிடங்கள் லேட்டாக வருவது சகஜம் அதை பற்றி யாரும் கவலை பட மாட்டார்கள், ஆபிசுக்கு ஒரு பதினைந்து நிமிடம் லேட்டாக போனால் குடி முழுகிவிடாது ஆனால் இந்திய தாமதங்கள் வேற லெவலில் இருக்கிறது என்றான்.

“நீங்கள் அரசை கேள்வி கேட்க மாட்டீர்களா?” என்றான்.
“இங்கே கேள்விகளை தவிர்ப்பது நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்” என்றேன், அவன் சிரித்தான். ரோட்டிற்கு நடுவில் முப்பதடி ஆழத்திற்கு ஒரு பெரும் குழியை வழிநீள தோண்டி பதினைந்தடி பைப்பை சுமார் ஏழு மாதங்காக புதைத்து கொண்டிருந்தது தண்ணீர் வாரியம். மழை பெய்தால் குழி ரொம்பி வழிந்து வேலை நிறுத்தப்படும். ராட்சச பம்பின் மூலம் ஒரு முறை நீரை வெளியேற்ற முயன்று அக்கம் பக்கம் வீட்டிலெல்லாம் நீர் நுழைந்து அவர்கள் சண்டைக்கு வர முடிவில் அடிதடியில் முடிந்தது. இப்போதெல்லாம் மழை பெய்தால் தானாக வடியும் வரை காத்திருக்கிறார்கள் கான்ட்ராக்டர்கள். நாட்டின் முன்னேற்றத்திற்காக குடிமகன்களாகிய நாம் சில தியாகங்கள் செய்தாக வேண்டும் அல்லவா? என் தியாகம் தினமும் என் வாழ்க்கை நேரத்திலிருந்து முப்பது நிமிடங்கள் ஊறிற்காக , நாட்டிற்காக , நாட்டு மக்களின் நலனிற்காக ஒதுக்குவது. இதற்காக தினமும் முப்பது நிமிடங்கள் சீக்கிரம் எழுகிறேன், முப்பது நிமிடம் முன்னமே ஆபிசுக்கு கிளம்புகிறேன். நிஜ பெங்களூரு வாசிகள் இத்தகைய இடைஞ்சல்களுக்கு அவ்வளவாக கவலை படமாட்டார்கள். இருபத்தி நாலு மணி நேரத்தில் ட்ராபிக் நெரிசல்களுக்கு போதுமான அளவு கொடுத்துவிட்டு மீதம் இருக்கும் நேரத்தில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள கற்றுக்கொண்டுவிட்டார்கள்.
“எதற்காக இந்த குழி தோண்டுகிறார்கள்” என்றான்.
“இரண்டாம் உலக போரின் போது லார்ட் அட்வுட் துரை பெங்களூரில் தான் முகாமிட்டு இருந்தார். ஒரு முறை ஜெர்மானிய போர் விமானங்கள் பெங்களூரின் மேல் தாக்குதல் நடத்த வந்த போது, லார்ட் அட்வுட் துரை தன் விமானத்தில் ஏறி அவர்களை விரட்டி அடித்தார். ஆனால் துரதிட்ட வசமாக அவர் பறந்த விமானம் விபத்துக்குளாகி தரையில் விழுந்து நொறுங்கி இறந்து போனார். விமானம் நொறுங்கியது இந்த ரோட்டில்தான் என நிரூபிக்கும் சில ஆவணங்கள் லண்டனில் கிடைத்திருக்கிறது. அப்போதைய ரோட்டின் மேல் சுமார் பத்து முறை தார் காய்ச்சி கொட்டி நிரப்பி புது ரோடுகள் அமைத்து விட்டார்கள். இருப்பினும் அவர் பறந்த அந்த இதிகாச முக்கியமான விமானத்தை ஆங்கிலேய அரசு கர்நாடக அரசிடம் கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் தான் பூமிக்குள் தேடுகிறார்கள்” என்றேன்.
ஒரு நிமிடம் அப்படியே என்னை பார்த்த பின் மெல்லிதாய் புன்னகைத்து ” நீ புளுகுகிறாய்” என்றான்.
“சரி அது பிடிக்கவில்லையா இன்னொறு விளக்கம் சொல்கிறேன். முஹம்மது சாபி கான் என்பவர் திப்பு சுல்தானின் படைத் தளபதி. ஆங்கிலேயர்கள் ஸ்ரீரங்கபட்டினத்திற்கு முற்றுகை இட்ட போது, தன் வைரங்கள், தங்க நாணயங்கள், பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் முஹம்மது சாபி கானிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு திப்பு சுல்தான் ரகசியமாக கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த விஷயம் எப்படியோ ஆங்கிலேயர்களுக்கு தெரிந்து விட்டது. திப்பு சுல்தானை முற்றுகை இட்ட ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பி ஓடிய கானின் பின்னால் ஒரு படைப் பிரிவை அனுப்பினர். எங்கேயாவது ஆங்கிலேயர்களின் கையில் பொக்கிஷங்கள் சிக்கிவிட போகிறதே என்ற பயத்தில் இந்த ரோட்டில் ஏதோ ஒரு பகுதியில் தான் முஹம்மது சாபி கான் அவற்றை புதைத்ததாக புரளி. இப்போது கர்நாடக தொல்லியல் துறைக்கு இந்த விஷயம் தெரிந்து அந்த பொக்கிஷங்களை குழி தோண்டி தேடுகிறார்கள்” என்றேன்.
“ஓ அப்படியா?” என்றான் சிரித்து கொண்டே.
இதை போல ஏதாவது பேசிக்கொண்டே வருவது வழக்கம். ஒரு முறை கேந்திரிய வித்யாலயா சுவரில் ” Voice of the voiceless, speak the truth ” என்ற குறிப்பு கருப்பு ஸ்ப்ரே பெயின்டால் எழுதப்பட்டிருந்தது. நான் சும்மா இல்லாமல் “இதை பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டுவிட்டேன். அந்தோணி ஒரு அரை மணிநேரம் இத்தாலியின் இதிகாசத்தில் கம்யூனிச இயக்கத்தின் கதைகளை சொன்னான். வர்கங்களுக்கிடையே நடக்கும் போராட்டம் உண்மையானது, இந்தியாவில் அத்தகைய வர்க வித்யாசங்கள் இல்லையா என கேட்டான். “அட என்ன இப்படி கேட்டுட்டே? ஏன் இல்ல நிறையவே இருக்கு. ஆனா இந்த க்ராபிடியை வரஞ்சவன் பக்கத்துல இருக்குற ஆர்ட்ஸ் காலேஜ் தறுதலை” னு சொல்ல நினைத்து எதுக்கு இதெல்லாம் என்று “இருக்கலாம்” என்று மட்டும் சுருக்கமாக சொல்லிவிட்டு நிறுத்திவிட்டேன்.
அந்தோணிக்கு இந்தியா மிகவும் பிடித்து விட்டது. ஏன் என்று எனக்கு புரியவில்லை. ஒரு முறை அவனை பிஸ்சா தின்ன கூட்டிபோனேன். கடையில் அவன் இத்தாலியன் என தெரிந்தவுடன் அவனுக்கு ராஜ உபச்சாரம்.
“எங்கள் பிஸ்சா ஒரிஜினல் இத்தாலியன் முறையில் தயாரிக்க படுகிறது” என்று வாய் கூசாமல் சொன்னார்கள்.
“இத்தாலியில் பிஸ்சாவின் மேல் கத்திரிக்காயை போட்டால் கொன்றுவிடுவார்கள்” என வெளியில் வந்ததும் சிரித்து கொண்டே சொன்னான். எதனால் இந்தியா இவ்வளவு பிடித்திருக்கிறது என்பதற்கு “உங்களிடம் ஐரோப்பாவில் இருக்கும் அளவிற்கு எந்த வசதிகளும் இல்லை. ஆனாலும் கவலைப் படாமல் நிறைவுடன் வாழ்க்கையை கழிக்கிறீர்கள்” என்றான். அடப் பாவி! யார் சொன்னது நாங்கள் நிறைவோடு இருக்கிறோம் என்று? இங்கிருப்பவர்களில் பத்தில் ஒன்பது பேர் வாய்ப்பு கிடைத்தால் தாவி ஓடி விடுவார்கள் என மனதினுள் நினைத்து கொண்டேன்.
தினமும் அவன் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து அவனை அழைத்துக்கொண்டு ஆபீசுக்கு கூட்டி வரவேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட மேலாணை. அப்படி ஒரு நாள் ஒட்டகத்தின் குலுக்கலுடன் லார்ட் அட்வுட் (அல்லது முஹம்மது சாபி கான்) ரோட்டை கடந்து கங்கம்மா சர்க்கிள் அருகே காரில் சென்றுகொண்டிருந்த போது ஒரே பைக்கில் மூன்று நபர் பயணித்ததை பார்த்தோம். ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டரில் நான்கு நபர்கள் பயணிப்பதை பார்த்த எனக்கு எந்த வியப்பும் இல்லை என்றாலும் அவனுக்கு வியப்பாக இருந்தது. ஓட்டுநர் சற்று பெருமானாக இருந்ததால் சீட்டில் பாதி டேங்கில் பாதி என உட்கார்ந்திருந்தார், நடுவில் ஒல்லியான ஒருவன். அவன் பின்னல் ஓட்டுநர் சைசிற்கு ஒருத்தி சீட்டில் பாதி கேரியரில் பாதி என உட்கார்ந்திருந்தாள். பெண்ணின் கையில் ஒரு பெரிய பை வேறு.
காரிலிருந்து வியப்பாக பார்த்துக் கொண்டிருந்த அந்தோணியிடம் ,
“அவர்களில் நடுவில் இருப்பவனும் அந்த பெண்ணும் கணவன் பெண்டாட்டி” என்றேன்.
“அது எப்படி உனக்கு தெரியும்?” என்றான்.
“அது அப்படித்தான் பா. உங்க ஊர் மாதிரி எல்லாம் இங்க உக்கார மாட்டாங்க” என்று சொல்லாமல் “எனக்கு தெரியும்” என்று மட்டும் சொன்னேன்.
“அவர்கள் ஒரு கார் வாங்க முடியாதா?” என்றான்.
“இந்த ஒரு ட்ரிப்பிற்காக மட்டும் கார் வாங்க வேண்டுமா?. இது ஒரு தற்காலிக ஏற்பாடு” என்றேன்,
“ஓ அப்படியா? அதுவும் சரிதான். வெரி பிரேக்டிகல்” என்றான்.
பார்த்துக்கொண்டிரும் போதே சந்திப்பில் நின்றிருந்த வெள்ளை போலீஸ் ஒருவர் அந்த மூவரை முறைத்து பார்த்தார். தலையில் ஹெல்மெட் இல்லாதது ஒன்று , ஒரு பைக்கில் மூன்று நபர் போவது இரண்டு , டேன்ஜீரேஸ் டிரைவிங் மூன்று என்று மொத்தமாக அரசுக்கு மூவாயிரம் அல்லது தனக்கு ஐநூறு ருபாய் வசூலித்து கொடுக்க கூடிய வாய்ப்பு அவர் கண்களில் தெரிந்தது. இரையை கண்ட புலி பதுங்குவதை போல அசைவுகள் செய்தார். அதை பார்த்தவுடனேயே பைக் ஓட்டுநர் முன்னிருக்கும் பேரூந்தின் பின் பதுங்கினார். சிக்னல் விழுந்தவுடன் பஸ் பின்னாலேயே பதுங்கி பதுங்கி பைக்கை ஓட்டினார். வெள்ளை போலீஸ் அவர்களை பிடிப்பதற்கு வந்த போது எப்படியோ வளைத்து நெளித்து தப்பி ஓடிவிட்டனர். “நீ எப்படி என்கிட்டேருந்து தாபிக்கறன்னு பார்க்கறேன்” என்பது போல கையிலிருந்த மொபைலை எடுத்து தப்பி ஓடும் பைக்கின் பின் புற நம்பர் ப்லேட்டை போட்டோ எடுத்தார் வெள்ளை போலீஸ். பெங்களூரு ட்ராபிக் போலீஸ் வளையதளத்தில் அபாரதத்திற்கு சாட்சியாக இப்படிப்பட்ட புகைப்படங்களை மேலேற்றுவது வழக்கம். அந்த பைக்கில் பயணித்தவர்கள் மூவரும் வேற்று மாநிலத்தவர் என்பது எனக்கு தெரிந்தது.
“என்ன செய்கிறார்?” என்றான் அந்தோணி. அப்போது பார்த்து குறுக்கில் வந்த ஒரு சைக்கிளை பார்த்து முறைத்து கொண்டிருந்த எனக்கு பதில் சொல்ல தாமதமானது. கொஞ்ச தூரம் பைக்கை ஓடிச் சென்ற ஓட்டுனரின் தோளில் லேசாக தட்டி எதையோ காதில் சொன்னான் நடுவில் இருப்பவன். கேட்டவுடன் பைக்கை சைடில் நிற்கவைத்துவிட்டு மூவரும் இறங்கி வெள்ளை போலீசிடம் வந்தனர்.
“டேய் என்ன டா என் பொண்டாட்டியை போட்டோ எடுக்கிறியா?” என்றான் நடுவில் உட்கார்ந்தவன்.
“டேய் என்ன வம்பு பண்ண வந்தீங்களா?. ஒழுங்கா அபராதத்தை கட்டிட்டு போங்க இல்லேன்னா வண்டியை ஜப்தி பண்ணிடுவேன்” என்றார் போலீசார்.
எற்கனவே குறுகிய பாதையில் நெரிசல் அதிகமாய் இருந்தது. அதற்க்கு மேல் சண்டையை பார்க்க நின்ற வண்டிக்காரர்களினால் இன்னும் நெரிசல் அதிகமானது. மூன்றிற்கு ஒன்று என்ற நிலையிலும் போலீஸ்காரர் சளைக்கவில்லை. வாக்கு வாதம் அதிகமாகிக்கொண்டே போனதில் டிராபிக் நின்றே போனது. போட்டோவை டேலீட் செய்ய சொன்ன நபரை பார்த்து சும்மா இல்லாமல் அந்த போலீசார் ” உன் பொண்டாட்டி பெரிய பிலிம் ஸ்டார் பாரு, அவளோட போட்டோவை எடுக்க” என்ற போது நிலைமை மோசமாகி விட்டது.
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அந்தோணி,
“என்ன நடக்கிறது?” என்றான்.
நான் நேர் முகத்துடன், “அந்த ஆள் பர்மிஷன் இல்லாமல் அவன் பொண்டாட்டியை போட்டோ எடுத்துட்டான் அந்த போலீஸ்காரன்” என்றேன்.
ஆனால் இந்த முறை நிஜமாகவே நம்பி விட்டான்.