ரெட் லெட்டர் டே





“பொழுது விடிந்தால் ‘கிறிஸ்மஸ்’ பண்டிகை.”
சீகன் பால்கு தேவாலயத்தில் ‘மிட்நைட் மாஸ்’ களைக் கட்டியிருந்தது.
கோட் சூட் என வித்தியாசமாக உடுத்திக் கொண்டு மிடுக்காக, தேவாலய வளாகத்திற்கு வரும் இளைஞர்களையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்தார் மைக்கேல்.
அருகே உட்கார்ந்திருந்த மகள் எஸ்தர், முகநூல் மூலம் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
“அப்பா.”
எந்நேரமும், எஸ்தரின் சிறப்பான மணவாழ்வு பற்றியேச் சிந்தித்துக் கொண்டிருந்த மைக்கேல் சுயநினைவுக்கு வந்தார்.
“சொல்லு எஸ்தர்.”.

“நாளைக்குத் தங்கச்சிங்களை அழைச்சிக்கிட்டு அவங்க வீட்டுக்கு கிறிஸ்மஸ் கொண்டாடப் போகப் போறதா அம்மாச் சொன்னாங்கதானே?”
“ஆமாம். அதுக்கென்ன இப்ப? அந்தச் சைத்தான் எங்கே போனா எனக்கென்ன?” கடுப்பானார் மைக்கேல்.
பொது இடம் என்று கூடப் பார்க்காமல் குரல் வெடித்து வெளிவந்துவிட்டது மைக்கேலுக்கு.
“அம்மாவை சைத்தான்னு திட்டாதீங்கப்பா.!”
அப்பாவைச் சமாதானப்படுத்தினாள் எஸ்தர்.
உன்னைச் சொல்லாலயும், செயலாலயும் கொடுமைப்படுத்தி, சித்ரவதை செய்துக்கிட்டிருக்கற அந்தப் பொம்பளையப் போயி அம்மானு சொல்லாதேனு எத்தனை முறை சொல்லியிருக்கேன்?”
“அப்படியெல்லாம் பேசாதீங்கப்பா. என்னோட அம்மா இறந்துக் கல்லரைத்தோட்டத்தில் விதைத்த பிறகு, முறைப்படி உங்களை மறுமணம் செஞ்சிக்கிட்டவங்கதானே அவங்க. அவங்க எனக்கு அம்மா ஸ்தானம்தானே..?”
‘இவ்வளவு மிருதுவான, நேர்மையான, பண்பாடான மனசுள்ள பெண்ணை ‘முதல் தாரத்து மகள்’ என ஒதுக்கி வைத்துக் கொடுமைப்படுத்த எப்படி அவளால் முடிகிறது?;
அவளும் அவள் வயிற்றில் பிறந்த இரண்டை பெண்களும் சினிமா, டிவி எனப் பொழுது போக்கிக்கொண்டு, துணி துவைத்தல், சமைத்தல் என அனைத்து வீட்டு வேலைகளையும் எஸ்தரிடம் வாங்கிக்கொள்ள எப்படி மனம் வருகிறது?
இத்தனை வேலைகளையும் ஒரு சின்ன முகச்சுழிப்புக் கூட இல்லாம் செய்துவரும் எஸ்தர் மேல் கோபப்பட்டு கரண்டிக் காம்பை காய்ச்சிக் புறங் கையிலும் பின் காலிலும் எப்படிச் சூடு போட முடிகிறது?;
பார்க்கப்போனால் எஸ்தரை ஆதாரமாக வைத்துத்தானே என்னைத் திருமணம் செய்து கொண்டாள் அவள்.
ஏதேதோ சிந்தனைகள் அவர் மனதை ஆக்ரமித்தன.
எஸ்தருக்கு நான்கு வயதாக இருந்தபோது அம்மா மாரடமைப்பாள் காலமானாள்.
அரசு அலுவலகத்தில் பல்வேறுப் பொறுப்புகளைச் சுமந்து, உயர்ப் பதவி வகிக்கும் மைக்கேலுக்கு, எஸ்தரைக் கண்ணும் கருத்துமாய் வளர்ப்பது பெரியச் சவாலாகவே இருந்தது.
அலுவலகத்திலும் சரி, சொந்தப் பந்தங்களும் எஸ்தரைக் காட்டி, ‘அவளோட நன்மைக்காக இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள்.
மற்றவர்கள் எல்லோரும் வற்புறுத்தியபோது கூட ‘இன்னொரு திருமணம் வேண்டாம்’ என்பதில் உறுதியாகத்தான் இருந்தார் மைக்கேல்.
பதினெட்டு வருஷங்களுக்கு முன் இப்படி ஒரு கிறிஸ்மஸ் நாளில் எலீசா மைக்கேலைச் சந்தித்தாள்.
“எஸ்தர் நம்ப பொண்ணுங்க. ஒரு சிற்றன்னையா அவளைக் கொடுமைப் படுத்திடுவேனோனு என்னைச் சந்தேகப் படாதீங்க.” என்று பேசிய பிறகுத்தான் முடிவுக்கு வந்தார்.
வார்த்தை தவறிவிட்டாள் எலீசா.
எஸ்தரிடம் அன்பு காட்டாவிட்டால் கூடப் பரவாயில்லை. தீப் போல வார்த்தைகளை உமிழ்கிறாள்;
தீக்கோலால் சுடுகிறாள்; அடுப்புத் தீயில் வேக விடுகிறாள்.
ரிடையர்மெண்ட் பெனிஃபிட்டாக வந்த க்ராஜுடி, பி எஃப் அனைத்தையும் அவள் வயிற்றில் பிறந்த பெண்கள் பெயரில்தான் போட வேண்டும் என்று வாயாடி, தர்ணா செய்து, ஊர் கூட்டி வற்புறுத்திப் போட வைத்துவிட்டாள். எஸ்தருக்கு ஒரு நயாபைசா கூடத் தரவில்லை அவள்.
அத்தனையும் இழந்து, கையறு நிலையில் எஸ்தர் முன் நிற்பதைப் போல் உணர்ந்தார் மைக்கல். கழிவிரக்கத்தில் குமைந்தார்.
“அப்பா எனக்கு பதில் சொல்லாம என்னப்பா அப்படி யோசனை? எஸ்தர் புன்னகைத்துக் கொண்டே கேட்டாள்.
“வேற என்னடா எனக்கு யோசனை இருக்க முடியும். உனக்கு ஒரு நல்ல இடமா பார்த்துக் கலியாணம் பண்ணிவைக்கற ஆசைதான்.
முறுவலித்தாள் எஸ்தர்
“ எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு.” ங்கற பைபிள் வசனம் தெரியும்தானேப்பா. எல்லாமே கைகூடி வரும். கவலைப்படாதீங்கப்பா.”
அப்பாவைத் தேற்றினாள்.
அந்த நேரம் பார்த்து தேவாலயத்தின் ஒலி பெருக்கியின் மூலமாக திருப்பலி நேர வசனம் ஒலித்தது.
மைக்கேல்’ க்காகவே மைக் முன் பேசுவது போல இருந்தது வசனம்.
பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும்
ஒரு சரியான காலமுண்டு.
பிறப்பதற்கு ஒரு காலமுண்டு,
மரிப்பதற்கு ஒரு காலமுண்டு,
நடுவதற்கு ஒரு காலமுண்டு,
பிடுங்குவதற்கும் ஒரு காலமுண்டு.
கொல்வதற்கு ஒரு காலமுண்டு,
குணப்படுத்தவும் ஒரு காலமுண்டு,
அழிப்பதற்கு ஒரு காலமுண்டு,
கட்டுவதற்கும் ஒரு காலமுண்டு.
அழுவதற்கு ஒரு காலமுண்டு,
சிரிப்பதற்கும் ஒரு காலமுண்டு,
வருத்தப்படுவதற்கு ஒரு காலமுண்டு,
மகிழ்ச்சியால் நடனமாடுவதற்கும் ஒரு காலமுண்டு.
ஆயுதங்களை எறிவதற்கு ஒரு காலமுண்டு,
ஆயுதங்களை எடுப்பதற்கு ஒரு காலமுண்டு.
தழுவிக்கொள்ள ஒரு காலமுண்டு,
தழுவிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு காலமுண்டு.
சிலவற்றைத் தேட ஒரு காலமுண்டு,
இழந்துவிட்டதாகக் கருதவும் ஒரு காலமுண்டு,
பொருட்களைப் பாதுகாக்க ஒரு காலமுண்டு,
பொருட்களைத் தூக்கி எறியவும் ஒரு காலமுண்டு.
துணிகளைக் கிழிப்பதற்கு ஒரு காலமுண்டு,
அதனைத் தைப்பதற்கும் ஒரு காலமுண்டு,
அமைதியாக இருப்பதற்கு ஒரு காலமுண்டு,
பேசுவதற்கும் ஒரு காலமுண்டு.
அன்பு செய்ய ஒரு காலமுண்டு,
வெறுக்கவும் ஒரு காலமுண்டு,
சண்டையிடுவதற்கு ஒரு காலமுண்டு,
சமாதானம் கொள்வதற்கும் ஒரு காலமுண்டு.
காலம் கனிந்து வரும் வரை
காத்திருத்தலே உத்தமம்.
என்று முடித்தார் பேச்சாளர்.
கிறிஸ்மஸ் நாள்.
வீட்டில் எஸ்தரும் மைக்கேலும் மட்டுமே இருந்தனர்.
“அப்பா நாம வெளீல கிளம்பறோம் அரை மணி நேரத்துல ரெடியா இருங்கப்பா..” என்றாள் எஸ்தர்.
இவ்வளவு மகிழ்ச்சியாக எஸ்தர் பேசுவது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
எங்கே எதற்கு என எதுவும் கேட்டவில்லை மைக்கேல். உடனடியாகக் கிளம்பிவிட்டார்.
அப்பாவும் மகளுமாக ஆட்டோவில் பயணித்தார்கள்.
“வாங்க அங்க்கிள். வாங்க எஸ்தர்” வரவேற்றார் அந்த நடு வயதுக்காரர்.
“அப்பா, இவரோட கிட்டத்தட்ட ஆறுமாசமா ஃபேஸ் புக் மூலம் தொடர்புல இருக்கேன்ப்பா இன்னிக்குத்தான் நேர்ல சந்திக்கறோம்.” என்றாள் எஸ்தர் புன்னகையுடன்.
உள்ளே சென்று உட்கார்ந்தார்கள்.
ஆறேழு வயது மதிக்கத்தக்கப் பெண் தண்ணீர் டம்ளர்களை தட்டில் வைத்துக் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்தாள்.
“விக்டோரியா! அம்மாவுக்கும், அங்க்கிளுக்கும் வணக்கம் சொல்லு…” என்றார் அவர்.
“ஆமாம்ப்பா. விக்டோரியாவுக்கு அம்மாவா இருக்க முடிவு பண்ணிட்டேன்பா. என்னோட சித்தி மாதிரி யாராவது இவருக்கு அமைஞ்சி என்னோட நிலை இந்த விக்டோரியாவுக்கு வந்துடக்கூடாதுப்பா. நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவெடுத்துருக்கோம். எங்களை வாழ்த்துங்கப்பா…” என்றாள் எஸ்தர்.
மைக்கேலுக்குத் தன் மகளைப் பற்றிய பயத்திலிருந்து;
எஸ்தருக்குத் தன் சித்தியிடமிருந்து;
விக்டோரியாவிற்குத் தாயில்லையே என்ற ஏக்கத்திலிருந்து;
இப்படிப் பலப்பலத் தீர்வுகளை கொடுத்து, அவர்களுக்கு உண்மையான ரெட் லெட்டர் டே யாக அமைந்தது இந்த கிறிஸ்துமஸ்.
– 25 -12-2022, விகடன்