ராம தர்மம்




(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஏதோ அந்த சமயத்தின் உள்ள நெகிழ்ச்சியில் அவளாக அளித்த வரத்தின் விளைவு, அந்தப் பிராமணர் இன்றுவரை கால்நடையாகவே பூதலத்தைச் சுற்றி வந்திருக்கும் தூரமும் நேரமும்,தடவைகளும், அதனதன் லக்கம் தாண்டி, கணக்கும் தன்னில் மூழ்கிவிட்டது.

தற்சமயம் – ஏன், எச்சமயமும் அவர் அறிந்த பூமி, அவன் பாதம்பட்ட பூமி. அயோத்தியிலிருந்து தண்ட காரண்யம், தண்டகாரண்யத்திலிருந்து இலங்கை வரை ஜபித்து ஜபித்து ராமநாம் நாமகோடி கோடி நாம கோடி கோடி ராமகோடி நாம் கோடி நாமமும் மூச்சும் இரண்டறக் கலந்தபின், எது நாமம் எது ஸ்மரணை என தனக்கே தெரியாது, தனக்கே புரியாது, தன்னில் இருக்கும் தனி, நாமஸ்மரணையாகவே ஆகிவிட்ட நிலையில்,
இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறார்–ராம ராம ராம ராம ராம்…!
அவர்தான் அனுமன். சிரஞ்சீவி வரத்தால் யுகங்களைத் தாண்டி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். பிரம்ம ஞானங் களை ராம நாமத்தினாலேயே தெரிந்துகொண்ட பிராம் மணனாக வயதைக் கடந்த கிழவராக..
எதிர்ப்பட்ட ஒரு பாறாங்கல் மீது கிழவர் அமர்ந்தார். அசதிகூட சொல்லும்படி இல்லை. வாய்க்கால் வழி பாசன நீர்போல் பாயும் எண்ண ஓட்டத்தின் சுவாரஸ்யம். கங்கையிலிருந்து காவிரி, தாமிரபரணி -ஜீவநதிகளின் ஜலம் வாய்க் கால் வழி பயிர்களுக்குப் பாயும் கிளுகிளுப்பில்,குளுகுளுவில், சலசலவில், ஜிலுஜிலுவில், தளதள நெளி நெளி – இத்தனை யும் சேர்ந்த கொலுஸில்தானே, தேவியின் தண்டை யோசை யைக் காப்பாற்றித் தருகிறது!
அள்ளிச் சுற்றிப் போர்த்திக்கொண்ட சால்வைபோலும். வாடை கிளம்பி, சுழன்று வந்து, நெற்றியை ஒற்றிற்று, தந்தைக்கு மகன் மேல் பரிவு – வாயுவுக்கு புத்ரனான ஆஞ்ச நேயன் மீது. “எனக்கு ஒதுக்கியிருக்கும் பணியால் எனக்கு வயதில்லை. உனக்கு வரத்தால் வயதில்லை. ஆனால் எவ்வளவு வயதாகிவிட்டாய்!”- பெருமூச்செறிந்தது.
எங்கோ செடியினின்று கழன்று மாருதவாக்கில், அந்தரத்தில் அலைந்து, புல்லிலும் முள்ளிலும் கல்லிலும் தரையிலும் புரண்டு உருண்டு, மறுபடியும் காற்றின் ஏற்றலில் தத்தித் தத்தி அலைந்து வந்த ஒரு மலர், கிழவரின் கால் விரல்களுக்கிடையில் சிக்குண்டது.
நீலச் சங்கு புஷ்பம்… ராமன் நிறம்!
பிராட்டியின் பாத மலர்கள் செந்தாமரை, நினைவின் இவ்வளவு தூரத்திலும் ஒளி கண்ணைப் பறித்தது. பாதமே இப்படியெனில் முகம் எப்படி? தேவி முகம்தான் பார்த்த தில்லை என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் அது அசோக வனத்தில் கண்ட முகம், அமுதமுகம், ஆர்யபுத்ரனுக்கு ஏங்கி ஏங்கிச் சுண்டிய முகம். அதைச் சுயமுகம் என்று சொல்வ தெங்கனம்? ஆகையால் தானும் ஸௌமித்ரி போலத்தான், நேரில் சுயமுகத்தை நிமிர்ந்து பார்க்க இஷ்டமுமில்லை. ஏன்?
“ராமா?”
கிழவர் திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் நோக்கினார்.. நினைவின் எதிரொலிதான் என்று தெளிந்ததும் மீண்டும் அலர்ந்தார். அது அக்னி பகவானின் பழைய குரல்…
“ராமா, இவள் மாசற்றவள்…”
கோதண்டத்தின் மணி தானாகவே அலறிற்று. கபந்தங் கள் கூத்தாடும் அந்த யுத்த பயங்கரத்தில் உயிர்களைக் குடித்துக் குடித்து மாளாமல், காலதேவன் வயிறு திணறும் அந்த நாசகளத்தில், ‘இன்றுபோய் நாளை வா’ என்று சொல்லவல்ல அமைதி காக்கும் சாந்தபிரான் வலது புருவம் வியப்பில் உயர்ந்தது. கோதண்டத்துக்குப் பயமா? ஆம்! இது பயம்; வேறு பயம். அக்னி தேவன் தரும் பிரமாணிக்கம் அல்லவா?
“இவளுடைய கற்பின் தகிப்பு என்னால் தாளவில்லை” -ஏந்தமுடியாத தழலை எப்படியோ அவனிடம் சேர்த்து விட்டான்.
அவர் பார்வை, கண்ணுக்கெட்டியவரை நீலமலரைத் தொடர்ந்தது. அப்படிப்பட்டவளை, பாவம் ஓரிட பழி ஓரிடமாக மீண்டும் கானகம் அனுப்பியதற்குப் பிராயச்சித்த மாக, இதோ, இப்படி, அங்கப்ரதட்சணம் செய்துகொண்டிருக்கிறான்.
லீலா, அப்போது இழைத்த தவறுக்கு அப்போதே தண்டனை இல்லை; இழைக்கும் முன்னரே தவறும் – தீர்ப்பும் சேர்ந்து தாமே பதிவாகிவிடும் ரகசிய ஏடுகள். மேல்வரும் வரை அந்த நியதியை வகுத்த ஆண்டவனுக்கும் எட்டாமல், அவனும் தவறுக்கும் – தீர்ப்புக்கும் விலக்கு இல்லை என்ப தால், அவனுக்கும் அப்பாற்பட்டு எந்தப் பேழையில் பூட்டிக் கொள்கின்றன? அந்தப் பேழையும் எங்கே? இதுதான் யாரையும் ஆளும் விதி.
“அண்ணன் இல்லாத சமயத்தில் என்னைப் பெண்டாளப் பார்க்கிறாயா?”
அனுமன் செவிகளைப் பொத்திக் கொண்டார். உடல் குலுங்கிற்று.
இதற்கு அனுபவிக்கத்தான், வண்ணான் வண்ணாத்தி சாக்கில், வட்டியும் முதலும்போல் பிள்ளைத்தாச்சியாக பிராட்டி மீண்டும் கானகம் –
கொழுந்தனைச் சீறட்டும். அலுத்துக் கொள்ளட்டும். திட்டட்டும். ஆனால் இப்படி வக்ரமாக, இவ்வளவு ஈன பாஷை எப்படி ராஜரிஷி மகள் வாயில் வந்தது? அதுதான் விந்தை, திகைப்பு. வாயை எத்துணை முறையேனும் அலம்பல் வேண்டும்.
அன்றொரு நாள் மாலை-
வழக்கம்போல் கிஷ்கிந்தையிலிருந்து ராகவனைத் தரிசிக்க வந்திருந்தபோது,
நந்தவனத்தில் அமைத்திருந்த வேனில் பந்தலின் இதமான இருளில் இருவரும் அமர்ந்து அளவளாவிக் கொண் டிருக்கையில், எட்ட நந்தவனத்தின் மற்றொரு மூலையில், தேவி தோழிகளுடன் பந்து ஆடிக்கொண்டிருக்கையில், ராகவனுக்கு அன்று மனமிருந்தநிலை. ஏதோ பேச்சுவாக்கில்,
“ஆஞ்சனேயா, இவளைப்பற்றி நாம் ஏதறிவோம் உண்மையில், மண்ணிலே கிடைத்தாள் என்பதன்றி?”
வாய்விட்டு இவ்வாறு சொல்லவில்லை. பாஷையென்பது வாய்ச்சொல்லுக்கு அடங்கியதல்ல. கண்ணோக்கு, வேறு சைகைகளுக்கும் கட்டுப்பட்டதல்ல. பாஷையென்பது இவை களே அல்ல. வாய் தாண்டி, கண் தாண்டி, சைகை தாண்டி, மனம் தாண்டி, மூலத்தின் தியானக்கடலில் அங்கும் அதற் குரிய தொடுவானம் விளிம்பைத் தொட்ட அமைதியில் கடலிலேயே எழுந்து, கடலிலேயே விழும் துள்ளு மீன்- எழுகையில் கேள்வி, விழுகையில் பதில்-பரஸ்பர நிலை, நெஞ்சோடு நெஞ்சு கிளத்தல் எனும் தாதுபாஷை இருக் கிறது; இதனினும் நுண்ணிய அடுத்த நிலை தெரியும் வரை.
அனுமனின் அதரங்கள் அவரையும் அறியாமல், புன்ன கையில் இளகிற்று.
யாவும் விதிக்கப்பட்டவை; ஆதலின், நிகழ்வதென்பது ஒருமுறை; ஒரே முறைதான். இன்னும் நெருக்கிச் சொல்லின் நிகழ்ந்தது நிகழ்ந்ததோடு சரி; மறுமுறை என்பது அதற் கில்லை. முதல்போலும் நிழல்கள், நீழல்கள், அவைகளின் ஆட்டம் உண்டேயன்றி, முதல் மீண்டும் வருவதில்லை. அது சன்னிதானமாகிவிட்டது. அதன் முகூர்த்தத்தினின்று இனி அது இறங்கி வராது. அல்லேல் மகிமையேது, மானமேது, சத்யமேது? நேர்ந்தது சரித்திரம்; மற்றவை கதை.
ஆகவே அவரவர் பக்குவத்துக்கேற்ப, தியானமும் பக்தியும், கற்பனையும், ஞானமும், சாமர்த்தியமும் சமத் காரமும் காட்டியவையை வடித்தவர்களேயல்லாது, காவியர் கள் ராமாயண ரகசியங்களைப் பூராவும் என்ன கண்டார்கள்? கண்டவர்கள் ராமசரிதத்தில் பங்கு கொண்ட நாங்கள். விண்டதையே விண்டுகொண்டிருப்பவர் இவர். இந்தச் சிதைவே, காவியங்கள் இழைக்கும் முதல் பாபம். இதைச் சுற்றி நெய்த பாஷ்யங்கள், அர்த்தங்கள், அனர்த்தங்கள் இத்தியாதி வடிகால்கள் மூலம் மறு பாவங்கள், பிற பாபங்கள் இழைக்கப்படுகின்றன. கர்மாவை யாராலும் தடுக்க முடியாது.
ஆகவே, அன்று ராகவனும் அனுமனும் – (இங்கு நான் என்று என்னை பாஷை பற்றாமையில் நேரும் பாபத்தில், தனிப்படக் குறிக்க அஞ்சுகிறேன்.) இருந்த அந்தரங்க நிலையை நூல்களில் காணமுடியாது. நூல் தாங்காத அத்துணை நுட்பம், இன்பம், சத்யம். தவிர எல்லாமே எல்லார்க்குமல்ல. இதுதான் தியானத்தின் முதல் உபதேசம்:
“வாயுபுத்ர, நான் விஷ்ணு, அவள் லக்ஷ்மி, ராவண சம்ஹார நிமித்தம் ராமாவதாரம், ஈதெல்லாம் சுயநலம்; சொக்கட்டானில் சோழி குலுக்கல் வேணும்போது அவ தாரம், மிச்சத்துக்கு நரன் எனப் பேசுவது நீசம். நேர்மை யற்ற தர்க்கம்.
“நான் கேட்கிறேன் – யார் அவதாரமில்லை? நீ யார் மாதிரி. என் பலத்தை நான் ராவணனிடம் நிரூபிக்கவில்லை. இவளிடம்தான் இன்னமும் நிரூபித்துக்கொண்டிருக்கிறேன். இதுவே என் பாடு.”
ராகவன் குரலில் தொனித்தது கவலையா? விரக்தியா அதையும் தாண்டிய விசனமா? பிறவியின் விசனம் பிறவி விசனம் பிறவியே விசனம் – ஸத் ஸரிக் கமக பமகா-
ஸங்கீத கூடத்தில் இசைக்கும் ஏதோ ஒரு யாழ் சிந்தனாஸ்வரத்தை எடுத்துக்கொள்கிறது.
“அவதாரமாம்! என்ன அவதாரம்? பலப்பரீட்சையில் தோளைத் தட்டிக்கொள்வதற்குத்தானா அவதாரம்? என் பிறவியின் எல்லைகள் என்னை அவ்வப்போது மட்டம் தட்டிதான் வைத்திருந்தன. ‘ஆயிரம் ராமர்களும் உனக்கு ஈடாவரோ?’ என்று குஹன் பரதனைச் சிலாகித்தபோதே நான் மட்டுப்பட்டுவிட்டேன். பெண்புத்தி பின்புத்தியில் மயங்கி மானைத் தொடர்ந்து ஏமாந்தேன். அதன் விளை வாக எத்தனையோபேர் வினைகளுக்கு இடம் கொடுத்தேன்.
“வாலியை நான் மறைந்து கொன்ற பழி, நான் மறைந்த பின்னரும் என்னைக் கருவறுத்துக் கொண்டிருக்கப்போகிறது. இவ்வுலகம் உள்ளளவும் அதில் தெய்வ நம்பிக்கைகளும் இதிஹாஸ புராணங்கள் பேசப்படும் வரையிலும், துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் என்று என் அவதார மஹிமைக் குள், வாதங்கள் என்னை ஒளித்து வைத்தாலும், மனிதப் பிறவியின் சுயநலம், அதனால் செய்த கொலை அது இல்லை யென்று சொல்ல முடியுமா? ஸீதை மயக்கம் அப்பா, ஸீதை முயக்கம்!”
ஸ்ரீராமன் தற்கேலியில் சிரித்தான்.
“மற்றும், வாலி அரசைப் பிடுங்கி சுக்ரீவனுக்குக் கொடுக்க நான் யார்? அதேபோல், ராவணன் இருக்கையி லேயே ‘இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்யம்’ என்று வாரி வழங்கிவிட்டேன். இதுதான் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தல். இதில் இன்னொரு வேடிக்கை பார். என் அரசே எனக்கில்லை. இன்னும்தான் அது எனக்குச் சொந்தமில்லை. என்ன விழிக்கிறாய்? இது பரத ராஜ்யம்தான். ராமராஜ்யமில்லை. ‘என் மகன் நாடாளணும், ராமன் காட்டுக்குப் போக வேண்டும்’ என்று என் மாற்றாந்தாய் என்று எண்ணினாயா? நீ ஸாக்ஷாத் பரமேசுவரனின் அவதாரம். முன், பின், நடுவற்று, ஏற் கெனவே அழிவற்ற உனக்கு அவள் வழங்கியிருக்கும் சிரஞ்சீவி வரம் இந்த ஜன்மாவை நீ அலங்கரித்துக் கொண்டிருப்பதற்கு உன் காதில் தொங்கும் குண்டலம் ஒன்று தவிர அதற்குத் தனிப் பலிதம் இல்லை என்றே சொல்வேன். நிமித்தமாகப் பிறந்தோ, அல்ல பிறந்த பின் நிமித்தத்தைத் தேடியோ முனைவதில் ஈடுபடும் எந்தப் பிறவியும் அவதாரமே.
“அசுரர்களை ஏமாற்றி அவர்களும் சேர்ந்து கடைந் தெடுத்த அமிர்தத்தைக் குடித்துவிட்டு, மந்தர்களாகிய தேவர்களைக் காட்டிலும், சுயமுயற்சியில், விடாமுயற்சியில் பிறவியின் அர்த்தத்தைத் தேடும் மனித ஜன்மம் மாண் புடைத்து. நரனை நிரூபிக்கவே நான் வந்தேன்.
“என் பிறவியின் நிமித்தம் ராவணஸம்ஹாரம் அல்ல அது இடை வந்தது. அதற்கென்றே, அவன் குலத்தை வேருடன் அறுக்கவே அவள் தோன்றினாள். சீதை பிறக்க. லங்கை அழிய – நந்தவனத்தின் மற்றோரத்தினின்று சிரிப்புக் கொத்துக்களிடையே. அந்தரத்தில் எழும்பி அங்கு நேரத்துக்குமேல் சோம்பினாற்போல் நொடியிலும் நொடி கூட நின்ற பந்தின்மேல் ராகவனின் நாட்டம் லேசாய்ச் சாய்ந்தது.
ராமன் முகத்தில் சட்டென்று புன்னகை தவழ்ந்தது.
“இதுபோல், கன்னி மாடத்தில் இவள் பந்தாடுகையில் சிவதனுசடியில் ஓடிவிட்ட பந்தையெடுக்க, வில்லை ஒரு கை யால் தூக்கியதைத் தற்செயலாகப் பார்த்துவிட்ட என் மாமனார், எப்படி அரண்டுபோயிருப்பார் என்பதை நினைத் துக்கொண்டேன். கலப்பையில் தட்டுப்பட்ட பெட்டியில் நான் கண்டெடுத்தது பேயா, ராக்ஷஸியா? இவளிடமிருந்து முன்னால் நம்மைக் கழற்றிக்கொள்ள வேண்டும்’ என்கிற தீவிர பயம் அப்போதுதான் அவருக்குத் தோன்றியிருக்கும். ஆனால் இவளைச் சமாளிக்கத் தக்கனாய் ஆண் இருக்க வேணும் என்பதற்காகத்தான் வில்லை முறிக்கும் நிபந்தனை யைக் கொணர்ந்தார். உண்மையில் அது சுயம்வரமா? நிபந்தனை வரம். ஒரு தினுசில் கட்டாய வரம். விதி வரம்.”
“மாருதி, இவள் மண். யாவும் விளைவதும் இவளில் தான். வளம் பெறுவதும் இவளில்தான். ஆனால் அத்தனையையும் விழுங்குபவளும் இவள்தான். இவள் பயங்கரி. நான் கருவில் வளர்ந்து ஜனித்தேன். இவள் கர்ப்பவாஸமே அற்றவள். காலவரையே அற்ற வயதைக் கடந்து இப்பிறவி யில் எனக்கு தாரம் சீதையென்று உருக்கொண்டிருக்கிறாள். இவள் என்னிலும் மிக, மிக மூத்தவள். இவள் உறவை என்னென்று நிர்ணயிப்பது? நெருப்புக் குளியல் இவளுக்கு நிலாக் குளியல் கேட்ட இரு வரங்களில் வனவாச வரம் நிஜமானால் மற்ற வரம் பொய்யாகிவிடுமா? என் தம்பி நல்லவன். எனக்கு நாட்டைக் கொடுத்துவிட்டான் என்பதால் நாடு எனக்குச் சொந்தமாகிவிடுமா? அப்போது எனக்காக அவன் பாதுகாத்தான். இப்போது அவன் தருமத் தில் நான் அவன் சிம்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்.
“ராஜதர்மத்தில் உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று என் தந்தையே முன்வந்து கேட்ட அன்றே வரங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. விவரங்கள் அப்போதே தெரி விக்கப்படவில்லை; அவ்வளவுதான் உண்மையில் அவை பிறகு வரங்களேயில்லை, என் தாய், என் தந்தையிடம் விட்டு வைத்திருந்த கடன்.
“சேதுபந்தனத்துக்கு அனுமதிக்கு மூன்று நாள் தவம் கிடந்தேனே, ஸமுத்ர ராஜன் மதித்தானா? வில்லைக் காட்டின பின்னர்தானே வழிக்கு வந்தான்!
“ராவணஸம்ஹாரம் என்று பிரும்ம ஹத்தி இழைத்தேன். ராமேசுவரத்தில் லிங்கத்துக்குப் பூஜை செய்து விட்டால் தோஷம் போய்விடாது. பச்சாத்தாபத்துக்குப் பூஜை ஒரு வடிகால், அவ்வளவே. இந்த ராவண ஸம்ஹாரம், சுந்தர, நீயல்லால் சாத்தியமா?”
‘அது காரணம் ராகவதரிசனம் எங்கள் பாக்கியம்’ கைகள் ராமனின் பாதங்களைத் தேடின.
இரண்டு மைனாக்கள், ஒன்றையொன்று துரத்தி விளையாடும் வெறியில் பந்தலுள் நுழைந்து அவர்கள் தலை மீது வட்டமிட்டுவிட்டு மீண்டும் வெளியே பறந்துபோயின.
“கிர்ச் கிர் கிர்ச் கிர்ச்…”
“இந்த ராவண ஸம்ஹாரத்துக்கு அணிலிலிருந்து ஆஞ்சனேயன் வரை போதாதென எதிரியின் மர்மங்களை வெளியிட எதிரியின் பாசறையிலிருந்து அவன் தம்பி என்ன பெருமை வேண்டியிருக்கிறது. செத்த பாம்பை அடித்து, வாகை சூடுவதில்? ராமா ராவணனை அழித்தது பெரிதல்ல. அதைவிட இந்திரஜித்தின் ஸம்ஹாரம்தான் மகத்தானது” இது என் வார்த்தையல்ல. அஹஸ்திய முனிவரின் வார்த்தைகள்.
“ஆம்; அவர் சரியாகத்தான் சொன்னார். இந்த ராவணன் ஏற்கெனவே பல இடங்களில் அடிபட்டவன் தானே ? அங்கதன் தொட்டிலில் பொம்மையாகத் தொங்கி யவன்தானே? நினைத்தால் வாலி அவனை அப்பவே நசுக்கி யிருக்க முடியாதா? ஸீதை இவனை ஒரு பார்வையாலேயே எரித்திருக்க முடியாதா? என், உன் முன் அவன் எம்மாத்திரம் வாயுபுத்ர, உன் பெருந்தன்மையில், ராமாயணத்துக்காக அவனை விட்டுவைத்தாய். இப்போது உன்னை நான் வணங்குகிறேன்.”
“ராமா…ராமா!”- கிழவர் செவிகளைப் பொத்திக் கொண்டார்.
மனிதப் பிறவியின் சுமை என்னென்று கண்டாயா? வெளியில் காட்டிக்கொள்ள முடியாத புழுக்கங்கள். இ களைத் தாங்கிக்கொள்ளத் தன்னைக்காட்டிலும் பெரும் பாரத்தை ஒண்டியாக இழுக்கும் எறும்பின் பலம் வேண்டியிருக்கிறது.
அனுமன் ஆறுதலாக அவர் பாதங்களைத் தொட்டு வருடினான். அது இல்லாமல் அவனால் முடியாது.
“ரகு வீரா, ஒன்று கேட்கிறேன். ராவண ஸம்ஹாரம் இல்லையெனில், உங்கள் பிறவியின் நிமித்தம்தான் என்ன?”
பிதுர்வாக்ய பரிபாலனம் – வார்த்தைகள் அமைதி யாகத்தான் வந்தன. ஆனால் அக்ஷரத்துக்கு அக்ஷரம் ஒரு முழுமை, உருண்டை வடிவம் பெற்று, என்ன அழுத்தம், தீர்மானம், கம்பீரம்!
“அப்பா!”
அனுமனுக்கு ரோமங்கள் குத்திட்டன.
தென்றலா? தசரதனின் ஆசிமூச்சா?
ததாஸ்து.
தரிசனம் என்று தனியாக இல்லை. நித்யத்துவத்தினின்று சொட்டென ஒரு தருணம் உதிர்ந்து தொட்டுவிட்டு நகர் கின்றதே அதுதான் தரிசனம். ததாஸ்து.
அந்தக் காலப்ரமாணம் ஸீதையையும் கவ்விற்று, பந்தாட்டத்தின் நடுவில் திடீரென்று பந்தைத் தேடிக் கொண்டு தோழிகள் அனைவரும் மூலைக்கொருவராய்ப் போய்விட தான் தனித்து நிற்பதை உணர்ந்தாள். இது பழக்கமான தனிமையில்லை. அவள் தனிமையாகயில்லை. வயிற்றில் திடீரென ஒரு முத்துப் பொறி வைத்தாற் போன்ற உணர்ச்சி.
“ஓ!”
மனம் சட்டென ஆர்யபுத்திரனை நாடிற்று, தனக்குத் திடீரெனப் புரிந்ததைக் கணவனிடம் சொல்லிக்கொள்ள ஓடிவந்தாள்.
பந்தலுள் தம்மை மறந்த இரண்டு சிலைகளைக் கண்டாள்.
– நேசம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1989, வானதி பதிப்பகம், சென்னை.