ரஸகுண்டில், ஊரும் நெளியும், சில பிம்பங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2025
பார்வையிட்டோர்: 220 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எங்கள் ஊரை வளைத்து ஒரு வாய்க்கால் ஓடுகிறது. வடக்கு எல்லையில் ஜலம் ஸ்படிகம். உன் நெஞ்சின் பிம்பத் தையே பார்க்கலாம். ஆனால், மற்ற திக்குகளில் அந்தத் தூய்மை இல்லை. கீழண்டை ரொம்ப கரைசல். இது ஏன்? ஒருநாள் வாய்க்காலின் வடக்கு நூலைப் பிடித்துக்கொண்டு கரையோரம் நடந்துகொண்டே போனேன். அப்போ நானும் சின்னப் பையல்தானே! அன்றையப் பொழுது அப்படி போச்சு, அது ஒரு வேடிக்கை. 

குரங்கு நியாயம் குப்புசாமிப் பிள்ளைப் பண்ணை. ஒரே இடமாக அத்தனை வயலையும் எப்படித்தான் வளைச்சுப் போட்டானோ? இந்தப் பக்கம் ஆற்றங்கால், அந்தப் பக்கம் ஏரிப்பாய்ச்சல். நடுவே கண்ணுக்கெட்டியவரை கண்ணுக்குக் குளுமையா பயிர்ப் பச்சை காற்றோட்டத்தில், ஒரே ரஹஸ்யம் பூத்துக் கிளுகிளுக்குது. அங்கங்கே ஏத்தக்கால் வேறே. ஊரில் கறுப்பு ஓடினாலும், பிள்ளைவாள் காட்டில் என்னிக்கும் வெள்ளம்தான்! அதுதான் குரங்குநியாயம் போலும்… இத்தனைக்கும் பிள்ளை குட்டி இல்லே செட்டித் தெருவில் வீடு மூணடுக்கு மாடி. மூணாவது மாடிக்கு வேலையே இல்லை. ஆனால் காரணம், தன் கட்டடம் ஒரு முழமேனும் உசந்து காட்டணுமாம்… நாட்டுப்புறத்தில், பிள்ளையென்ன – எல்லாருக்கும்தான் இதுமாதிரி ஒரு வீம்பு! 

வீட்டுக்கு வீடு கோர்ட்டுக்குப் போகிற மாதிரி ஒரு வியாஜ்ய மேனும் இருந்தால்தான்… பெருமை…அதுக்கொரு தஸ்ஜா வேஜுக்கட்டு – அதை அழகாப் பட்டுத்துணியில் சுற்றி. கோர்ட்டுக்கு அலைச்சல். வாயிதா வாங்கிக்கிட்டுப் போகப் போக சாக்ஷிக்காரன் பாடு கொண்டாட்டம்! 

நாலு மைல் ஒற்றை மாட்டு வில் வண்டியில் லொடக் லொடக்… ஆனால் மாடு, ஜாதிக்கன்று; குதிரையா ஓடும். …..ரரரரரர் டேய்!” கோர்ட்டுக்கு எதிரே கோகுல் பவனில் ‘நாஷ்டா.”ஐயரே இன்னும் ஒரு வடையை சாம்பாரைத் தாராளமாத்தான் ஊத்தேன்… ஓ, முதலாளியே நீதானா? அதான் கஞ்சனாயிருக்கே! விடு ஐயா விடு. புளியங்கொட்டை விழுதே. இதுகூட கஷ்டமர்கிட்டே வசூல்தானே! உன் கையை விட்டு என்ன தட்டுக்கெட்டுப் போவுது? ஊத்து ஐயா! சாம்பாரிலே வெங்காயம்தானும் காணோம்! பருப்பும் இல்லே. என்னவோ இலை இலையா, புளித்தண்ணிலே உசிரைப் பிடிச்சுக்கிட்டு, உசிருக்கு நீஞ்சுது. இதுக்கு சாம்பார்னு பேரு! இல்வளவு சுகுர். மதுரை, நீயும் ஒரு வடை வச்சுக்க. சாம்பார் வடை நல்லா யிருக்குதய்யா! வவுத்துக்கு வஞ்சனை செய்யாதே… நல்லா சாப்பிடு. இத்தனையும் பிரதிவாதிட்டத்தானே பில்! எப்படியானால் நமக்கென்ன?’ 

இத்தனைக்கும் முழங்காலுக்கு மேல்தான் கட்டை வேட்டி. சொக்காய் கிடையாது. சவுக்கம்தான். கைகட்டி கஷ்கு முஷ்கு கட்டை உடம்பு. கெட்டித் தொந்தியில் விண்ணுனு தேங்காய் உடையும். மெய்சாக்ஷி, பொய் சாக்ஷி. கக்ஷிக்காரனுக்கு சாக்ஷி! 

யாரு குப்புசாமிப் பிள்ளையா? ஐயையோ! குரங்கு நியாயம்னு முன்னாலேயே ஏன்ய்யா சொல்லல்லே? அந்தத் தரப்புலே அந்த ஆள்னா, அப்புறம் அப்பீலேயில்லே. உன் கப்பலை அடகுவெச்சு அப்பீல் பண்ணினாலும் நீதான் கவிழ்ந்து போவே! என்னா சர்வீஸ்ஸு, என்ன சட்ட அறிவு. என்னா கோட்பாடுக் களஞ்சியம்… அத்தினியும் விரல்நுனி யில் அத்துப்படி! வக்கீலும் ஜட்ஜும் அவன் வாக்குமூலத்தை வாயைப் பிளந்துகிட்டு கேட்டுக்கிட்டு இருப்போம். எங்கள் அத்தனை பேரையும் அவன் முழங்காலில் போட்டு, கண் ணுக்கு எண்ணெய் கட்டி விடுவான்ய்யா! வத்தல்மிளகாய் இல்லே. பச்சைமிளகாய் போட்டுக் காய்ச்சின எண்ணெய்! நாங்கள் அப்புறம் கண்ணையே திறக்க முடியாது, அந்தக் கேஸ்வரை. அந்தக் கேஸ் என்று. அந்தந்தக் கேஸாய், கடவுளே போட்ட தாயம் ஆனாலும் அவரும் கண்ணைக் கசக்கிட்டுத்தான் பார்க்கணும்.” 

தாயம் அவருதா, குப்புசாமிப் பிள்ளைப் போட்டதா? பைத்தியாரா நீ ஆடிக்கிட்டேயிரு, தாயம் போட்டுக்கிட்டே யிரு…பந்தயம் அத்தனாச்சியும் என்னுதுதான். குரங்கு நியாயம் குப்புசாமிப் பிள்ளை, கஷ்கு முஷ்கு கட்டை உடம்பை தாயக்கட்டான் மேலேயே கவிழ்ந்து படுத்துக் கிட்டு, குட்டைக் கையால் கட்டான் சுட்டானா, அத்தனை வயலையும் அணைச்சுப் போட்ட சொத்தல்லவா இது? 

இப்போ ஸ்பஷ்டமாக அதற்குரிய பாஷையில் புரிகிறது. ஆனால் அப்போ கண் கண்டதைக் கண்ணால் பார்த்துக் கொண்டு, வாய்க்கால் கரையோரம் அது போகும் வழி வளைந்து ஓடுகிறேன். 

திடீரெனப் புளிச்ச கஞ்சியின் வெடிப்பு நாற்றம் மூக்கைப் பொசுக்கறது. குடலைக் குமட்டறது. திருப்பத் தில் ஜலத்தைப் பாம்பு தீண்டினாற்போல், கரும்பச்சையாய் மலைப்பாம்பு தடுமனுக்கு ஒரு சாயம் நீளமாகக் கரையி லிருந்து புரண்டு வந்து கலந்தது. ஓ ! இதுதானா கலங்கல்- நான் ஓடி ஓடித் தேடிப் பிடித்த காரணம்? 

இத்தனையும் ஏன் எதற்கு, இவ்வளவு விஸ்தாரமா மனசில் கோலமோ கிறுக்கலோ போட்டுக்கொண்டு வந்தது- ஆ, ஞாபகம் வந்துவிட்டது. 

ஒருநாள் – ரொம்ப ரொம்ப ஒருநாள் சொல்கிறேனோ என்னவோ, எனக்கு ஆறு வயசு இருக்குமோ என்னவோ. ஏழு வயசு இருக்குமோ என்னவோ – காமுப்பாட்டி சொன் னாளே, என் தாய் – தகப்பன் செத்ததும் என்னைக் காலும் கையுமா அள்ளிப் போட்டுக்கொண்டு வந்ததாக… அப்பவோ என்னவோ? சே! ஒரு தடவை உடம்பு குலுங்கி, கண்ணி லிருந்து தூசி உதிர்ந்தது. 

என்மேல் அனுதாபத்தில் மரங்கள் பெருமூச்செறிகின்றன. 

நான் இப்போது படுத்தியிருக்கும் நிலையில் எழுந்திருக்க மனமேயில்லை. 

ஒரு கழுகு, கழுகா, பருந்தா? என்ன வித்தியாசம் எனக்குத் தெரியும்? ஆனால் ஒரு சிறிய கன்றுக்குட்டியளவு பெரிதிருக்கும். சிறகடித்துக்கொண்டு தோப்பில் எந்த மரத் திலிருந்தோ கிளம்பிற்று. 

அதோ. மோகாம்பரி மலையை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது, அங்கே எந்த உச்சாணிப் பாறை மீது அதன் கூடோ, கூட்டினுள் குஞ்சோ? குஞ்சுகளோ? 

மலைமேல் மோகாம்பரி. வெள்ளியும், அமாவாசையும் சேர்ந்த அன்று அங்கு ரொம்ப விசேஷம். அன்று, இன்று வரை அடக்கியும், ஒளித்தும் வைத்திருந்ததெல்லாம், சன்னி தானம் அடைந்ததும் தலைகால் தெரியாது ஆடும்! கூந்தல் கள், ஓயாத சாமரங்கள் ஆகிவிடும். இடுப்புக்கள் ம மத்தாய்க் கடையும். நரம்புக்கு நரம்பு, நரம்பு தனித்தனி அடை யாளங்களுடன் துடிக்கும்… 

பூசாரி கிடையாது. அவரவர் கொணர்ந்த பலிகளை அவரவரே கொடுத்து, அவரவரே பூசை செய்துகொள்வது தான், அந்த இடத்து ஐதீகம். பொங்கல் வேகும் தீக்கள், கசக்கிய கண்கள்போல் மலைஉச்சியில் – சரிவில், அடிவாரத்தில் ஆங்காங்கே விழித்துக்கொள்ளும். இரவுபூரா தன்னைச் சூழச் சிந்தும் ரத்தத்தைப் பார்த்துக்கொண்டு, பக்தர்கள் அவ்வப்போது தீற்றும் ரத்ததிலகம் நெற்றியில் பளபளக்க ஒழுக, ஜே மோகாம்பரி தேவி, தன் வண்டை விழிகளில் கருணை பொழிய வீற்றிருப்பாள். 

எல்லாம் சொல்லக் கேள்விதான். 

மலைமேல் அவள் பெயரைச் சொல்லி கொலை நடந் தாலும் கேள்வியில்லை. 

அவள் பலி அவளுக்கு அர்ப்பணம். 

கொலைகள் நடந்திருக்கின்றன. 

சொல்லக் கேள்விதான். 

நான் அவ்வளவு தூரம் போனதில்லை. 

ஆசைதான். 

ஆனால்,காமுப்பாட்டி காலை ஒடித்து விடுவாளே! 

ஆனால், காமுப்பாட்டிக்குப் பயந்து பயந்தே, செத்துச் செத்துப்போய்க்கொண்டிருக்க எத்தனை உசிர் இருக்கு? ஒரு ரு ஆளுக்கு ஒண்ணுதானே! அதுவும் ஒரு வழியா சாகமாட் டேன்கிறதே! 

இந்தப் பரந்த உலகம். என்னுடைய உலகம். இவளுடைய நாலு சுவர்களுக்குள்ளேயேதான் அடங்கிப் போயிடணுமா? நான் வாழமாட்டேன்; உன்னையும் வாழ விட மாட்டேன். இதுதானே இவளுடைய வீம்புவகம் அதில் எதிரும் புதிருமா நாங்கள் இருவர்தானே, அவளைப் பொறுத்தவரை, அதன் பிரஜைகள்! 

ஆனால், 

ஒருதடவை கால் முளைத்த பிறகு, அதனால் எத்தனை நாள் காத்திருக்க முடியும்? ஒரு மாதம், இரண்டு மாதம், ஆறு – ஒரு வருடம் இரண்டு வருடம்- அட, என் கடவுளே!” 

நான் முதன் முறையாக ஓடிப்போய் இன்றைக்கு இரண்டு வருடங்கள் ஓடிப்போச்சா? அட எனக்கு வயசு பதினேழா? இன்னும் முதல் முகக்ஷவரம்கூடப் பண்ணிக்கல்லே. அதுக்குக் காமுப்பாட்டியைன்னா காசு கேக்கணும்! மீசையில் பொன் னரும்பு பளபளக்கிறது 

ஒருசமயம் யுகம் ஒருசமயம் நிமிஷம். நிமிஷமா இரண்டு வருடங்கள்… ஹூம்) இத்தனை நாள் இங்கே நான் என்ன வெட்டி முறிச்சிண்டிருந்தேன்? ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேனா? ஊசலாடிக் கொண்டிருந்தேனா? 

உதறிக்கொண்டு எழுந்தேன். ஊஞ்சலை, ஊஞ்சல் சங்கிலியை, சங்கிலியின் உச்சியில் சொருகின புல்லாங் குழலை ஒருமுறை பார்த்தேன். தோப்பை ஒருமுறை சுற்றிப் பார்த்துக்கொண்டேன். சட்டையுரிப்பில் ஒரு விடுதலை. பழஞ்சட்டை. ஒரு விசனம். பழகிய சட்டை. 

வீட்டுள் நுழைந்தபோது, காமுப்பாட்டி கூடத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தாள். அவள் நினைப்பும் இங்கு ல்லை. வாயில் குஞ்சிரிப்பு. தரையிலும் லேசா மிதப்ப லாகிவிட்ட அந்த நிலையில், அந்த முகம் அழகிட்டாற் போலக்கூட எனக்குத் தோன்றிற்று. அதற்கு முடிந்தால்… 

நான் நேரே இருட்டறைக்குப் போய், பானையில் திணித்து வைத்திருந்த சொக்காய், துண்டு, வேட்டி என்கிற பெயரில் இருக்கும் ஒன்றிரண்டு கந்தலைப் பையில் திணித் துக்கொண்டு புறப்பட்டேன். 

காமுப்பாட்டி..ஏனென்று தெரியவில்லை. 

வெறும் ‘காமு வென்று அழைத்துப் பார்த்துக்கொண் டால், அவள் வயதுக்கு மிகவும் சிறியவளாக த்வனிக்கிறாள். 

வெறும் “பாட்டி”யாக நினைத்துக்கொண்டாலும் பொருந்தவில்லை. அவ்வளவு வயசு அவளுக்கு ஆகவில்லை. 

ஆகாது. 

காமுப் பாட்டியென்றால்தான் முழு நாமமாய் முழு ரூபம் கிடைக்கிறாள்! நிமிர்ந்தாள். 

இருவர் கண்களிலும் வினாவுக்கு வினா உராய்ந்தது.

“எங்கேடா பயணம், சொல்லிக்காமே?”

“….” 

“அட, ஊமையாப் போற அளவுக்குப் பெரியமனுஷனா எப்போ ஆனே? காலையில்கூட சரியா இருந்தியே!’ 

“போறேன்…போயிண்டேயிருக்கேன்.” 

“விளங்கத்தான் சொல்லேன்! நீ சொல்லாமலே அறிஞ்சுக்கிற அளவுக்கு எனக்குப் புத்திகூர்மை இருக்குமா?” 

“சொல்லிண்டு போனால் திரும்பி வரலாம்… சொல்லிக் காமப்போனால்?” 

உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தேன். ‘டயலாக் பிரமாதமா அமைஞ்சுட்டாப்போல் எனக்கு அப்பவே தோணித்து. ஆனால், அதேசமயம் துடைப்பம் என்மேல் இறங்கத் தலைப்படுவதை உடனே உணர்ந்தேன். அந்தக் கையை அப்படியே பிடித்துக்கொண்டு, லேசா – ரொம்ப லேசா முறுக்கினதும், விளக்குமாறு கீழே விழுந்த இசை கேடில் கட்டவிழ்ந்து, அத்தனைக் குச்சிகளும் புலுபுலு பஞ்சு மிட்டாய் படர்ந்தாப்போல், துக்கத்துக்கு அவிழ்த்துவிட்ட கூந்தல்போல், பாம்புப் படம் அசதியில் படுத்தாற்போல – 

துவண்டன. 

“விடுடா! கையை விடுடா நாயே!” 

எகிறினாள். தவித்தாள். எகிறித் தவித்தாள். பூ! இவ்வளவுதானா? இவ்வளவு சோப்ளாங்கியா இருந்துண்டா இத்தனை அமுல் நடத்தியிருக்காள் இதுவரை? இரண்டு கைகளும். என் ஒரு கையுள் அகப்பட்டுக்கொண்டன. என் தோளில் என் பை தொங்கிற்று. 

“விடுன்னா விடு… உன்னைப் பலி போட்டுடுவேன்!”

“பலியா, பொலியா, பாட்டி?” 

“என்னடா கழுதை உளர்றே?” அவள் உதட்டில் ரத்தம் கசிந்தது. 

“பாட்டி, என்னைப் பெற்றவர்கள் போனவழி என்னையும் போகப் பேசாமல் நீ விட்டிருக்கலாம்”. 

“உன்னை வளர்த்து ஆளாக்கினப்பறம், உன்னிடம் இப்படியெல்லாம் வாங்கிப் பின் எப்படி கட்டிக்கறது? அதுக்காகத்தான்!” 

“இல்லே பாட்டி! நீ எவ்வளவோ நல்ல பண்டமா ஆகி யிருக்க முடியும், உனக்கு மறு விவாகம் ஆகியிருந்தால்… பாவம், உன்னை இளவயதிலேயே கோரணி வேறே பண்ணிக் கோலம் பண்ணி- நம் சமூகம் என்ன சமூகமோ?” நெற்றியில் மறுகையால் பளாரென்று அறைந்துகொண்டேன், ‘முறை வழியில் வாழ்வை நிறைவு காணவிடாத சமூகம்!’ 

அவள் கைகளை சட்டென விட்டேன். என் உணர்ச்சி எனக்குப் பெரிதாகிவிட்டது. இனி என்னைத் தொட மாட்டாள். அப்படியே அடித்தாலும், அடித்துவிட்டுப் போகிறாள்… பாவம்! ஆனால், இதென்ன என் பேச்சு திடீரென நாடகபாணியில் போகிறது? எனக்கே உடல் குறு குறுத்தது. 

வாழ்க்கையில் அப்பட்டமான், இதுமாதிரி தோல் வயண்ட சமயங்களை நேருக்கு நேர் பேச்சு வாயிலாகச் சந்திக்க- சமாளிக்க நேர்கையில் இதுமாதிரிதான், நம்மை அறியாமலே அவைகளில் பொய்மை புகுந்துகொள்ளுமோ? 

அவள் இடது மணிக்கட்டை வலது கையால் தேய்த்துக் கொண்டு நின்றாள். என்மேல் வைத்த விழி கொட்ட வில்லை. என் வாயின் புறப்பாடுகளை அவள் விழிகள் விழுங்கிக்கொண்டிருந்தன. 

இவன் என் குட்டுக்களை என்ன கண்டுவிட்டான்? 

என்ன உடைக்கப் போகிறான்? 

என்கிற… 

அழ்-ழுக்-க்கு வெள்ளைப் புடைவை. 

சலவை காணாமலே, தோய்த்துத் தோய்த்து செங்காவி ஏறிப்போய், அழியாத சமையல் கறைகள் படிந்துபோன புடைவை. 

“பாட்டி!” 

“நான் உன் பாட்டியில்லை!”

”சரி, இந்த மறுப்பை கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்துப் போச்சு! உன் விஷயத்தில் உன் வீட்டார், இவ்வளவு கொடுமையாக இருந்திருக்க வேண்டாம். உன் புருஷன் செத்தான். செத்தவன் தலைவிதி. செத்தவனுக்குப் போட்ட முழுக்கோடு அவனை மறந்துவிட்டு, உன்னை இன் னொரு இடத்தில் கட்டிக்கொடுத்து, நீ நிறைவு கண்டு- நீயும் நிறைஞ்சு, உன் குழந்தைகளை நீ பெற்றெடுத்துக் கொண்டு – அந்த நிலையில் திக்கற்ற என்னை நீ தூக்கிண்டு வந்திருந்தாலும், நீயும் இப்படி இருந்திருப்பாயா? நானும் இப்படியிருப்பேனா?” 

என் கழிவிரக்கத்தில் எனக்கே அழுகை வந்துவிட்டது. 

“என்னடா, நூத்துக்கிழவா! என்ன பிரசங்கம் பண்ண வந்துட்டே?” 

“எல்லாம் உனக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுதான்… பாட்டி. உன்னுடைய ஆதங்கங்களுக்கு என்னைப் பயன் படுத்திக் கொள்ளத்தானே என்னைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தே?” 

“எச்சக்கலைஎன்னடா சொல்றே?” 

“சின்னப்பிள்ளைக்கு என்ன ஞாபகம் இருக்கப்போற துன்னு உன்னைப்போல வயசு காலத்தில் வேகம் தணியாத பெரியவாள் நெனைச்சுண்டுடறேள்… சின்னப் பையனுக்குத் தூக்கக் கலக்கம்… கனவென்று கண்டானா, நனவென்று கண் டானான் னு ஒரு நினைப்பு வேறே… எதுவாயிருந்தாலும் நாக்கில் பல்லைப் போட்டு நம்மைத் தைரியமாக் கேட்டுடு என்னைக் வானா என்று துணிச்சல் வேறே…ஆனால், கணக்கு வெச்சுண்டு சொல்றேன். குழந்தைகளுக்கு மூணு வயசிலேயே ஞாபகம் படிஞ்சுடறது. நல்ல சூழ்நிலையில், நல்ல நினைப்புக்கள் நல்ல பயிரா வளர்றது. என்போல் ஆரம்பத்திலேயே ஏறுமாறாகப் போய்விட்டால், அதிலேயே மனம் புழுங்கிப் புழுங்கி… முதலில் திகைப்பு, பிறகு ஏமாந்த. உணர்வு, பிறகு துரோக உணர்வு, அடுத்துக் களங்கம்- அதன் விளைவாய் ஆத்திரம்,கோபம்,புத்திக் கேடு எல்லாத் துக்கும் உங்களாலேயே அஸ்திவாரம் நட்டாறது… இதெல் லாம் பொது, என்னை ஆறு வயதில் உன் ளையாட்டுப் பொம்மையாய் தூக்கிண்டு வந்துட்டே… எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு, நீ பண்ணினதெல்லாம் பளிச்சினு சொல்லவா? இதுக்குமேல் வாய்விட்டுச் சொன்னால் ஒரு வருக்கொருவர் முகம் பார்க்கவே வெட்கக் கேடு! வாய்க் காலின் ஊற்று ஜலத்தில், சாயக்கால் கலந்த மாதிரி…பாட்டி ஆண்டவன்…அவன் சித்தம் நம்மிருவரையும் எப்படியானும் வைக்கட்டும். ஆனால், இப்படி ஞானோதயத்தை ஏன் திடீர்னு கொடுத்துக் கட்டடத்தையே இடிக்கிறான்?” 

நான் பேசப் பேச அந்த முகத்தில் வரட்டிபோல் கண கணப்பு ஏறிக்கொண்டே போயிற்று… காமுப் பாட்டி சந்தன நிறம் – அவளைக் கோலம் பண்ணாமலிருந்தால், அவளுடைய பாலிய வயதில், அப்படியும் அவளுக்கு ஆபத்துத்தான் (ஆனால் அந்த நியாயம் வேறு) அப்படிக் காய்ந்த வெறும் சட்டிபோல் அந்தக் காங்கை அதன் முழுச்சிவப்பை அடைந்த பின் முகம் படிப்படியாக மங்கத் தலைப்பட்டது. அப்படியே குமுங்கி பஸ்பமா உதிர்ந்துவிடுமோ? 

என் கண்ணெதிரே ஓர் அதிசயம் நிகழ்ந்துகொண் டிருந்தது. பயங்கர அதிசயம்…காமுப்பாட்டி, அவளுள் நேர்ந்து கொண்டிருக்கும் கடையலில் காமுவாகவும் – பாட்டி யாகவும் பிளந்து பிரிந்து, காமு கருகிப்போய், பாட்டி மட்டும் தள்ளாடித் தள்ளாடித் தள்…ள்..ளா…ஆ…ஆ… 

முகத்தைப் பொத்திக் கொண்டு ஓடினேன். 

ஓடிக்கொண்டேயிருக்கிறேன்… 

– சிறுகதைக் களஞ்சியம். 

– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *