ரவை உருண்டை





(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சமயலுக்குள்ளும் இத்தனை வித நுட்பங்களா…? சரியான முறையில் அளவான பதத்தில் தேங்காய்ப்பூவை வறுக்க வேண்டுமாம். மஞ்சளையும் சிவப்பையும் கலக்கும் போது ஒருவித நிறம்வருமே…! அப்படியொரு பொன்நிறத்தில்தான் இருந்தது வறுபட்ட அந்த தேங்காய்ப்பூ. அதை அப்படியே ரவையுடன் கலந்து இன்னும் ஏலம் முந்திரி என வகைவகையாய் சேர்த்து. அதற்குள் காய்ச்சிய சீனிப்பாகை விட்டு சுடச்சுட உருண்டைகள் பிடித்துக்கொண்டிருந்தாள் அம்மா.
எங்கள் வீடுகளிலெல்லாம் பலகாரம் செய்வதென்றால் ஒன்று தீபாவளியாயிருக்கும் அல்லது வருடப்பிறப்பாகத்தான் இருக்கும். இடைப்பட்ட காலங்களில் அவற்றைக் காண்பதென்பது பெரிய அதிசயம். அதுதான் அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்தேன். என் ஊகம் பிழைக்கவில்லை. கீழ்வீட்டு கோமதி வயசுக்கு வந்துடிச்சாம். சோறுகட்டி போகத்தான் அம்மா இந்தப்பாடு படுகிறாள். எனக்கும் பெரிய சந்தோசம். ஒவ்வொரு மாதமும் யாராவது வயசுக்குவந்தால் நன்றாயிருக்குமே என்று தோன்றியது.
இந்த ரவை உருண்டைகள் ஒன்றும் அத்தனை சாதாரணமான விஷயமல்ல. பழசாகத்தான் சுவையும் அதிகமாகும். கண்களை மூடிக்கொண்டே கஷ்டப்பட்டு கடித்து மெதுவாய் மெல்லும் பொழுது. அதற்குள் இருக்கும் இனிப்புச்சுவை எச்சிலுடன் கலந்து… ரவைமா உதிர்ந்து… நினைக்கும்போதே எனக்கு நா ஊறுகிறது.
அம்மா செய்யும் பலகாரங்கள் நாட்பட்டதும் இறுகி கடிக்கவே முடியாது போய்விடும். அப்பாவும் அண்ணனும் சேர்ந்து சிலநேரம் அம்மாவைக் கிண்டலடிப்பதுண்டு. உங்கம்மா செய்த பலகாரத்தை இரும்பாலாதான் உடைக்கணுன்னு அப்பா சொல்லிச் சொல்லி சிரிப்பார். அம்மாவுக்கு கோபம் வருமாவென தெரியவில்லை. சிரித்துக்கொண்டே அமைதியாகிவிடுவாள்.
எத்தனை இறுக்கமாக இருந்தாலென்ன ஒன்றையும் வீணாக்காமல் சாப்பிடுவதில் நான் பலே கெட்டிக்காரி.
ஏனோ தெரியவில்லை ஒரு சில பொருள்களை பார்க்கும்போது தவிர்க்கமுடியாமல் சில ஞாபகங்கள் வந்து விடுகின்றன. இந்த உருண்டைகளை கடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனதிற்குள்ளும் இனிக்கத்தவறுவதேயில்லை.
குட்டைப்பாவைடையுடன், மண்ணுக்குள்ளும் கல்லுக்குள்ளும் ஓடித்திரிந்த என் பெதும்பைப் பருவமது. அந்தத் தோற்றத்தை நினைக்கும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது. நெற்றியில் ஒரு பெரிய கறுப்புப் பொட்டு, எண்ணெய் வைத்து வாரிய தலைமுடி, எப்பொழுதும் உதட்டில் ஒரு சிரிப்பு… ஓ! எத்தனை இன்பமான காலமது. தாயம் விளையாடுவதிலும் நொண்டி விளையாடுவதிலும் நான் சூரப்புலி. எத்தனை கஷ்டப்பட்டாவது நொண்டிப்பெட்டியில் ஒரு பழம் போட்டுவிடுவேன். எண்ணிய நேரமெல்லாம் விளையாடி… சண்டைபிடித்து… ஆடி… பாடி… ஏன் நான் பெரியவளானேன் என்றுகூட சிலசமயம் தோன்றுகிறது.
அப்போது எனக்கு காதல் தெரியாது. காமம் தெரியாது பொய்சொல்லத் தெரியாது எல்லோரும் குழந்தைகளாகவே இருந்துவிட்டால் உலகில் குற்றங்களே நடக்காது போய்விடுமோ…!
நானென்றால் அப்பொழுதே குறும்புக்காரிதான். எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது அந்தச் சம்பவம். யாரோ தூரத்து வழியில் மச்சானாம். அண்ணனுடன் தங்கிப்படிப்பதற்காய் வந்திருந்தான். பார்ப்பதற்கு என்னைப்போலவே இருப்பான். கொஞ்சம் உயரம் அதிகம். முடி வளர்ந்திருக்கவில்லை மற்றப்படி என் சட்டையை போட்டுப்பார்த்தால் என்னைப் போலவேதான் இருந்திருப்பான். அப்படியொரு உருவ ஒற்றுமை.
இந்திராணி டீச்சர் ஒருதடவை
“உங்க மகள்தான் கால்சட்டை போட்டிருக்குன்னு நினைச்சேன்” என்று அம்மாவிடம் சொல்லியிருக்கிறார்.
எப்படியோ எனக்கு அவனைப் பிடித்துப்போயிற்று. எது சாப்பிட்டாலும் பாதி பிய்த்து எனக்கு கொடுத்து விடுவான். நான் எத்தனை சண்டைபோட்டாலும் என்னை அடிக்க எத்தனிக்க மாட்டான். அப்போது ‘மின்டி’ என்றொரு பபள்கம் பாவனையில் இருந்தது. தோடம்பழச் சுவையுடன் பச்சை வண்ணத்தில் இருக்கும். விலையும் ஐந்துரூபாவிற்கு அதிகம்தான். அப்போதெல்லாம் ஐந்துரூபாயென்பது எங்களுக்கு பெரியகாசாய் தெரியும். ஆனாலும் எப்படியாவது ஒன்றை வாங்கி பொக்கட்டுக்குள் ஒளிய வைத்திருந்து எனக்குமட்டும் தெரியாமல் கொடுப்பான். அவன் ஏன் அப்படிக் கொடுத்தான் நானும் ஏன் அதை களவாய் சாப்பிட்டேன் என்று இப்போதுவரை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
யாரும் உரத்துக்கதைத்தாலே பயந்துபோய், அம்மாவின் சேலைக்குள் ஒளியும் அந்த வயதிலேயே எனக்குள் காதல்….! சிரிக்காமல் வேறென்ன செய்வது…?
இப்படியிருக்கும் போதுதான் தீபாவளிப்பண்டிகை வந்தது. எல்லோரும் மருத்துநீர்வைத்து குளித்து, பட்டாசு வெடித்து ஒரே கும்மாளம். அம்மா வகைவகையாய் பலகாரம் செய்து வைத்திருந்தாள். பயத்தம் பணியாரம். அரிசிப் பணியாரம், முறுக்கு, வடை… இவைகளுடன் எனக்கு ரொம்பவும் பிடித்த ரவை உருண்டையும் இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கும் ரவை உருண்டைதான் நிறையப்பிடிக்குமாம்.
எனக்கு ஒரே அவஸ்த்தையாய் இருந்தது. சாமி கும்பிட்டு முடியும்வரை எதையும் எச்சில் படுத்தக் கூடாதென்பது அப்பாவின் உத்தரவு. உருண்டை தின்பதற்காய் மனம் அலைந்துக்கொண்டே இருந்தது. அந்த நேரம்தான் பேக்கையும் தூக்கிக்கொண்டு வந்து நின்றான். வீட்டுக்கு போகிறானாம். அப்பா வரச்சொன்னாராம். எனக்குள் ஏமாற்றமாய் இருந்தாலும் நான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
அவன் போய்மறையும் வளைவு முடியும் வரை கைகாட்டிக்கொண்டே நின்றேன். பிறகெப்படி உருண்டை சாப்பிடுவது…? ஆனாலும் சிறிது நேரத்தில் எல்லாம் மறந்து விளையாட ஓடிப்போகும் குழந்தைப் பருவமது.
தீபாவளியும் முடிந்தது. ஒருநாள்… இருநாள்… மூன்றாம்நாள்… நாட்கள் நகர நகர பலகாரங்கள் கொஞ்சம் கொஞ்சம்மாய் குறையத்தொடங்கின. அவனும் வந்தபாடாயில்லை. என்ன நினைத்தேனோ தெரியவில்லை ஒரு பத்து ரவை உருண்டைகளை தெரியாமல் திருடி என் உடுப்புக்களுடன் ஒளியவைத்துவிட்டேன்.
அப்பாடா…! இனி அவன் வந்ததும் தெரியாமல் கொடுக்கலாம்.
எல்லா உருண்டைகளும் தீர்ந்தபின், அண்ணன் கேட்டான்.
“ரவை உருண்டை முடிஞ்சிட்டதோம்மா…?”
“உன் தங்கச்சிதான் முடிச்சிருப்பாள்”
எனக்கு திகீர் என்றது. மாட்டினேனென்றால் கதை கச்சேரிதான். அண்ணன் கிண்டி கிண்டி தேடி உருண்டைகள் தீர்ந்துபோனதாய் நம்பிவிட்டான். எல்லோரும் பலகார விஷயத்தை மறந்துபோன ஒருநாளில்தான் அவனும் வரலானான்.
அப்பா வேலிச்செடி வெட்டிக்கொண்டிருந்தார். அம்மாவும் சமயலுக்குள் மூழ்கியவளாய். இதுதான் சமயமென்று தோன்ற…… அவனது கையை பிடித்து தரதரவென இழுத்துச்சென்று பீரோவுக்குள் இருந்த உருண்டைகளை ரகசியமாய் அவனிடம் நீட்டுகிறேன். அவன் அதை வாங்குவதற்கு முன்னமே எங்கிருந்தோ ஓடி வந்தவனாய் அண்ணன் என்மீது முட்டி மோத, பீரோ கதவு தடாரென அடிப்பட்டு உருண்டைகளெல்லாம் திசைக்கொன்றாய் உருள….. அந்த நேரத்தில் என் முகத்தை பார்த்திருக்க வேண்டுமே…..! அசடு வழிந்தது.
எப்போது நினைத்தாலும் சிரிப்புவரும் ஒரு நிகழ்வுதான் இது. ஆனால் இதற்குப் பின்னால் எங்கோ ஒரு இடத்தில் வலிப்பது ஏனென்றுதான் சத்தியமாய் புரியவில்லை. அவன் இப்போது எங்கிருக்கிறான் எப்படியிருக்கிறான் எதுவுமே எனக்கு தெரியவில்லை. தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் நான் நினைத்ததுமில்லை. ஆனால் நிச்சயமாய் எனக்குத்தெரியும் ரவையுருண்டைகளைப் பார்க்கும் தருணங்களில் அவனும் என்னை நினைப்பானாயிருக்கும்.
இப்போது, அம்மா ஒரு உருண்டையை எடுத்து என்னிடத்தில் நீட்டுகிறாள்.
சுவை பார்க்க வேண்டுமாம்.
– தினகரன்
– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.
![]() |
பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க... |