ரவி வர்மா பாராட்டிய ரவி வர்மா

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 4,736 
 
 

கால இயந்திரத்திலிருந்து வெளியேறி, 2034-ஆம் ஆண்டில் நான் காலடி வைத்த போது சென்னையின் பரபரப்பான தெருக்கள் என்னை வரவேற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த என் புலன்களுக்கு அந்த காட்சிகளும் ஒலிகளும் புதுமையாக இருந்தன. ஆனால் அத்தனை குழப்பத்திற்கிடையே அங்கிருந்த ஒரு கட்டிட வாயிலின் அறிவுப்பு பலகை என்னை ஈர்த்தது – ராஜா ரவி வர்மாவின் ஓவியக் கண்காட்சி. இத்தனை வருடங்கள் கழித்து என் படைப்புகளுக்கு ஒரு கண்காட்சியா! மனம் குதூகலிக்க நான் கட்டிடத்திற்குள் நுழைந்தேன்.

கேலரி வழியே நான் நடந்து சென்றபோது, என் ஓவியங்கள் எந்த அளவுக்கு எதிர்காலத்தில் மதிக்கப்படுகின்றன என்பதைக் கண்டு வியந்தேன். என் படைப்புகளைச் சுற்றி கூட்டம் திரண்டிருந்தது. அவர்களின் பாராட்டு முணுமுணுப்புகள் கேலரி முழுவதும் எதிரொலித்தன. என் கலை காலத்தின் எல்லைகளைக் கடந்து இத்தனை தூரம் கொண்டாடப்படுவதை அறிந்த என் மனம் பெருமிதத்தில் நிறைந்தது.

1898ல் நான் வடித்த சகுந்தலா என்னும் ஓவியத்திற்கு முன்பு மக்கள் திரண்டிருந்தினர் – சகுந்தலா தன் உடலைத் திருப்பி காலிலிருந்து முள்ளை எடுப்பது போல் நடித்துக்கொண்டே உண்மையில் தன் அன்பிற்குரிய துஷ்யந்தனைத் தேடுகிறாள். அருகில் நின்று கொண்டிருக்கும் தோழிகள் அவளை கிண்டல் செய்து, அவளின் போலித்தனத்தை அம்பலப்படுத்தி, புன்னகைக்கிறார்கள். அன்பு மற்றும் ஏக்கத்தின் கூறப்படாத உணர்வுகள் ததும்பும் தருணத்தை ஓவியம் அழகாக படம் பிடித்திருந்தது.

சகுந்தலா ஓவியத்தை என்னால் நெருங்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம். எதிர்காலத்தில் எனக்கு இவ்வளவு ரசிகர்களா என்று மலைத்தேன். அங்கிருந்த சில தீவிர ரசிகர்கள் என்னைப் போலவே பத்தொன்பதாம் நூற்றாண்டு உடைகளை அணிந்து என் மரபுக்கு மரியாதை செலுத்தினர். ஒரு ரசிகர் என் முதுகில் தட்டி, “ரவி வர்மாவே நேரில் வந்தது போல இருக்க, ப்ரோ!” என்று என் உடை அலங்காரத்தைப் பாராட்டினார்.

ரவி வர்மா பிரதிகள் என்று ஒரு அறையின் முன் எழுதியிருக்க, நான் ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை பிரமிக்க வைத்தது. வரிசை வரிசையாக நூற்றுக்கணக்கான ஓவியங்கள் சுவர்களை அலங்கரித்தன – ஒவ்வொன்றும் என் பாணியில். ஆனால் அவை என் படைப்புகள் அல்ல, என் பாணியைப் பின்பற்றி வடிக்கப்பட்ட நவீன சித்திரங்கள். என்னுடைய திறமைக்கு ஈடு கொடுத்து வரையப்பட்ட கலைநயம் மிக்க படைப்புகள் அவை. அவற்றைப் பார்க்கும் போது என்னில் ஒரு சிறிய தாழ் உணர்வு பரவியது. என் கலை இன்னொருவரை நான் கற்பனை கூட செய்யாத வகையில் என் தரிசனத்தைப் பின்பற்ற ஊக்குவித்திருக்கிறது.

இந்த குறிப்பிடத்தக்க படைப்புகளுக்குப் பின்னால் இருக்கும் அந்தக் கலைஞர் யார்? அங்கிருந்த அளப்பரிய திறமையைக் கண்டு வியந்து கொண்டே நான் யோசித்தேன். ஒரு பெரிய ஓவியத்தின் அருகில் சென்று, அதன் வலது மூலையில் மங்கலான பொடி எழுத்தில் இருந்த கலைஞரின் பெயரைப் கஷ்டப்பட்டு படித்தேன்.

யார் இந்த chatGPT?

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *