ரயிலேறிய மாமா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 120 
வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்

(2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாண்டியன் என்ற துரைபாண்டியன் நான்கு மூத்த சகோதரிகள், மூன்று இளைய சகோதரர்களோடு நடுவே பிறந்திருந்தான். மொத்தம் எட்டு பேர். சகோதரிகளுக்கு திருமணம் ஆகிவிட்டிருந்தாலும், தந்தையின் மரணத்திற்குப் பின் தன் இளைய சகோதரர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்புணர்வால் பாண்டியன் தன் படிப்பைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம். அவன் எதிர்காலக்கனவு அப்போதைய மெட்ரிக்குலேஷனோடு கலைந்து போனது. பள்ளிக்கூடத்தில் தன்னோடு பயணித்த தோழர்கள், மிடுக்காய் கல்லூரி செல்லும் காட்சியைப் பார்க்கையில் உலகம் தன்னை நிராகரித்து விட்டது போல் உணர்ந்தான். இவன் படிக்காதவன், இவனுக்கென்ன தெரியும் என்ற கேள்வி எழுந்து விடக்கூடாது என்பதே அவன் வைராக்கியத்தை வளர்ந்தது. அதுவே எதையாவது கற்றுக்கொள்ள வேண்டுமென்ற வேட்கையைத் தூண்டியது. 

பெரும்பாலும் ஊருக்குள் அப்போதைய நகராட்சி நூலகம் இரண்டும் முதியோர்களுக்கான போக்கிடமாகவே இருந்து வந்தது. அங்கு தனித்தே துணையின்றி பாண்டியன் மட்டும் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் யாருக்கும் அது விநோதமாகத்தான் தெரியும். அவன் வரும் வரை அவன் ஓட்டைச் சைக்கிள் வெளியே காத்துக்கிடக்கும். அவனை எங்கே காணோம் என்று தேடுபவர்கள் பல நாட்கள் அவனைக் கண்டுகொள்வதும் இங்கேதான். 

சில நேரங்களில் நான் கொஞ்சம் வெளியே போகிறேன் நீ பார்த்துக் கொள் என்று பாண்டியிடம் ஒப்படைத்து விட்டு நூலகர் செல்வதுண்டு. அப்படி அவன் பொழுதுகள் புத்தகத்திற்குள் முடங்கிக் கிடந்தன. 

இன்னது என்று இல்லை, எது கண்ணில் பட்டாலும் அவனுக்கு அந்தப் புத்தகத்தை ஒரு முறையேனும் வாசித்துவிடத் தோன்றும். யாரோ எழுதிய பழைய சரித்திர நாவல்களும், வயதை மீறிய தத்துவம் சார்ந்த நூல்களும்தான் பெரும்பாலும் அவன் தேடுதல்களில் இருக்கும். இது போக எங்காவது கிடைத்த பழைய புத்தகங்களை வாங்கிப் படித்து விட்டு வீட்டில் தன் பெட்டிக்குள் பத்திரப் படுத்திக் கொள்வான். நாளுக்கு நாள் அவன் வாசிப்பின் உலகம் விரிந்து வந்தது. சுற்றங்கள் தராத ஆறுதலை பல நேரங்களில் புத்தகங்கள் தரும் என்ற நிதர்சனத்தை அவன் உணர்ந்திருந்தான். 

அக்காள் மரகதமும், அவள் குடும்பமும் அவனைத் தழுவி நிற்கும் உறவுகள். சொல்லிக் கொள்ள சொந்தங்கள் எவ்வளவு இருந்தாலும், அது என்னவோ சிலரோடு மட்டுமே பாசமும், அன்பும் உன்னதமாய் நீடித்திருக்கின்றன. 

மரகதத்திற்கும் பாண்டியனுக்கும் அன்பைத் தாண்டிய ஒரு பிணைப்பு வாசிப்பின் மூலமாய் நிகழ்ந்தது. அவள் வீட்டில் படித்து விட்டு போட்ட புத்தகத்தை அவளிடம் சொல்லாமலே எடுத்துச் சென்று விடுவான். ஆனால் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. எடுத்துச் சென்றது வார இதழாய் இருந்தால், அக்கா படிக்கும் தொடர்களைத் இணைத்து நேர்த்தியாய் அட்டை போட்டு பைண்ட் பண்ணிக் கொடுத்துவிடுவான். 

குமாருக்கு எது தேவை என்றாகினும் “பாண்டி இந்தா குமார கூட்டிட்டுப்போயி இத வாங்கி கொடு” என்று சொல்லி காசைக் கொடுத்து மரகதம் பாண்டியனுடன் அனுப்பிவிடுவாள். சில நேரங்களில் அக்காவிற்காக பஜார் கடைகளுக்குப் போய் சமையல் சாமான்கள் முதற்கொண்டு வாங்கி கொடுத்து விட்டுச் செல்வதுமே பாண்டியனுக்குப் பிடித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்தங்களோடு வீடே அலப்பறையாகி விடும். பாண்டியனில்லாது எந்த விடுமுறையும் களைகட்டாது. மரகதம் இந்த வாண்டுகளுக்காகவே அதிகப்படியாய் பலகாரங்கள் செய்து வைத்து விடுவாள். 

இருட்டிவிட்டால் ஊருக்கு வெளியே இருக்கும் மொட்டை ஊரணிக் கிணறில் பேய் நடமாடும் என்று எல்லோரும் பயந்து கிடப்பார்கள். பாண்டியனுக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை. குமாருக்கும் மற்ற அக்கா பசங்களுக்கும் அந்த மொட்டைக் கிணற்றில்தான் பாண்டியன் நீந்த கற்றுக்கொடுத்தான். வயது வித்தியாசம் அதிகமாயினும் பாண்டியனுக்கும் குமாருக்குமான நெருக்கம் வியக்கும்படியாய் இருக்கும். குமார் பல நேரங்களில் மாமா பாண்டியனின் நிழலாய் தொடர்ந்திருந்தான். எங்கு போனாலும் அவன் கையைப் பிடித்தே நடந்திருக்கிறான். இன்னும் சொல்லப் போனால், அவனோடயேதான் வளர்ந்து வந்திருக்கிறான். 

ஊர் எவ்வளவு விரிந்திருந்தாலும், மக்களுடைய வாழ்க்கை என்னவோ ஊரின் நடுவேயிருந்த அந்த தெப்பக்குளத்தையே மையம் கொண்டிருந்தது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாய் சுற்று வட்டாரங்களில் விளைந்து வந்த காய்கறிகள், தானியங்கள் என்று சந்தை வணிகம் அங்கு விரிந்திருந்து. வாடிக்கையாளர்கள் கூடும் ஒரு வணிகத்தளமாகவே அது மாறியிருந்தது. 

அதன் அருகே, வடக்குப் படித்துறையின் ஓரமாய் வளர்ந்து நிற்கும் அரசமரம், பல ஆண்டுகளாய் முப்பாட்டனார்களின் கதைகளை அதன் நிழல் வழியே சொல்லிக் கொண்டிருப்பது போல் இருக்கும். உலகில் மனிதனின் உண்மையான வரலாற்றைத் தெரிந்து வைத்திருப்பது மரங்கள்தானோ என்று எண்ணத்தோன்றும். காலகாலமாய் பஜார் தரகர்கள் சரக்கிற்கு விலை பேசுவதும், வெட்டி அரட்டைக்கும் அதுவே ஒரு சந்திப்பாய் அமைந்திருந்தது. மொத்தத்தில் ஊர் நடப்பு முழுவதும் அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும். 

தனக்கானது இல்லை என்று எப்போதும் படித்துறையைப் பார்த்து விலகிப்போகின்ற பாண்டியனுக்கு, அன்றைக்கு வா, சிறிது நேரம் இருந்து விட்டுப் போ என்று அதுவே அழைப்பதாய் தோன்றியது. மல்லாக்கப் படுத்து வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டியனோட சிந்தனை, தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றியே சுற்றி வந்தது. ‘கீச் கீச்’ யென்று ஒலியெழுப்பி அந்த அரசமரமே கதியென்று குடும்பமாய் தங்கள் வாழ்க்கையைக் கொண்டாடிய குருவிகளைக் கவனித்த பாண்டியனுக்கு, “இத்தனோன்டு குருவிக எத்தன அழகா தன்னோட வாழ்கைய வாழ்ந்துக்கிட்டுயிருக்கு…. அதுக்குனு படைச்சவே ஒரு வாழ்க்கைய அமைச்சி கொடுக்கலையா? நமக்கும் அதுபோல ஒரு வாழ்க்க வாழமுடியாமலா போகும்” என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டான். நிழல் கொடுக்கும் அந்த அரசமரம், பாண்டியனுக்கு அன்று வெளிச்சத்தைக் கொடுத்து, அவன் வாழ்கையின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்ற போதிமரமானது. 

‘நீ நினைக்கிறது சரிதான் பாண்டினு’ சொல்லுவது போல் சரியான நேரத்தில் அங்கு வந்த பாக்குத் தரகு தனபால் மகன் சுந்தரம், “என்ன பாண்டி இப்படி தெப்பத்து வரப்புல கிடந்து யோசிச்சுக்கிட்டிருக்க, இப்படியேயிருந்தா பைத்தியம் பிடிச்சிரும். இந்த ஊர்லெல்லாம் எவெகிட்டயும் வேல செஞ்சி பிழச்சிக்க முடியாது. குண்டாஞ்சட்டிக்குள்ள குதிரை ஓட்டமுடியுமா. பேசாம என்கூட வந்திரு. ரயிலேறி வடக்க போயிருவோம். அங்கேயே தங்கி வடக்க விளஞ்சி வர்ற உளுந்து, துவர, பாசிபருப்பு இப்படி சரக்குகளுக்கு வில பேசி நம் ஊருக்காரெங்களுக்கு காமிச்சா போதும், கைமேல கமிஷன் கிடச்சிரும். பேசனுபடி சரியா சரக்க டெலிவரி கொடுக்கணும். இல்லாட்டி இவெங்ககிட்ட ஜெயிக்க முடியாது. 

என்ன இந்த சேட்டுப் பசங்கல நம்பித்தான் செய்யணும். கொஞ்சம் வைராக்கியமும் வேணும். அப்படிலாம் நாலுகாசு பாத்தாதான் நம் சொந்தக்காரெங்க நம்பள மதிப்பாங்கே.. போயி எல்லாருடையும் கேட்டேனா ஆளாளுக்கு ஒரு யோசன சொல்லுவாங்கே… நீயா யோசிச்சி சொல்லு.” 

பாண்டியனுக்கு சுந்தரம் சொல்வதும் சரி என்றுதான் பட்டது. சுந்தரம் பாண்டியனை விட இரண்டு வயது மூத்தவன். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன் தந்தையோடு கூடவே தரகு வேலை பார்த்து வந்தான். சுந்தரத்தோட தாத்தாவும் பாண்டியனோட தாத்தாவும் இளமையில் வெகுகாலம் நண்பர்களாய் சுத்தித்திரிந்ததாகச் சொல்வார்கள். 

“அதெல்லாம் சரிடா. கையில ஏதுகாசு. நாலு சட்டதுணிமணி எடுத்து வச்சிக்கணும், டிக்கெட் எடுத்துக்கனும், போற இடத்துல வேல கிடைக்கிற வர சாப்பிடக் கையில காசு வேணும்… சொல்லு என்ன செய்ய” தன் நிலமையைச் சொன்ன பாண்டியனிடம், “டிக்கெட்டுக்கு காசு போட்டு உனக்கும் சேத்து நான் எடுத்துக்கிடறேன். சட்ட துணிமணி பெட்டிபடுக்க கொஞ்சம் கையில காசு எல்லா நீதான் பாத்துக்கணும். போயி அங்க ஆட்ட பிடிச்சிருச்சினா கொஞ்ச நாள்ல நா திரும்பிருவே. அதுக்கப்புறம் நீ பிக்கப் பண்ணிக்கோ” எந்த ஊருக்கு போகிறோம் என்ற விவரங்கள் எதுவும் சொல்லாது சுந்தரம் இதை மட்டும் சொல்லி விட்டுச் சென்றான். 

பாண்டியன் படிப்பை பாதியில் விட்டு இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. நாலு காசு சம்பாதிக்க வக்கில்லாம ஊர சுத்திக்கிட்டுயிருக்கானு எவனும் வக்கனயடிக்கிறதுக்கு முன்னால ஊரவிட்டு போயி ஜெயிச்சிக் காண்பிக்கனும்னு பாண்டியன் மனதில் வைராக்கியமாக இருந்தான். சுந்தரம் பேசியதைக் கேட்ட பிறகு அவனை அறியாமலேயே மனதினுள் தெம்பும் உற்சாகமும் கரைபுரண்டது. 

பாண்டியனோட பிரச்சனையெல்லாம் ‘அம்மாகிட்ட இத எப்படி சொல்றது? இல்ல. சொல்லாம போயிறலாமா? அப்படி செய்யறது தப்பாச்சே..’ அவனுக்குப் பெரும் குழப்பம். அக்காள் மரகதத்திடம் ஒரு வார்த்தை கேட்கலாம் என்றால் அவள் வேண்டாமென்று சொல்லிவிடுவாளோ என்ற தயக்கம். 

“இந்தாடி மரகதம்….என்னடி இந்த பாண்டி பய இப்படி குண்டத்தூக்கி போட்றான். இந்தப் பசங்க ஒருத்தனும் நா சொல்றத கேக்க மாட்டிங்கிறாங்கெடி. வடக்க போயி சம்பாதிக்கிற வயசாயிது அவே சொன்னதயே தான் திரும்பத்திரும்பச் சொல்றான் பக்கி. பாக்கு தரகு தன்பாலு மவே கூட கூட்டிட்டுப் போறானாம். நா என்னடி செய்ய.. இந்த மனுசனும் என்னய தனியா தவிக்க விட்டுட்டுப் போய் சேந்துட்டாரு. வயசான காலத்துல இதென்னடி சோதன. பட்டு தெரு சொர்ணாக்கா பேரன் இப்படித்தான் வடக்க போறே போறேனு போய்ட்டு பணத்தெல்லாம் தொலச்சிட்டு சல்லிக்காசில்லாம கழுவா தேஞ்சி போயி ஆறுமாசம் கழிச்சி ஊரு வந்து சேந்தான். சொன்னடி கேக்காம போனா(ன்) உருப்புடாம போயிட்டான். ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ அது கிடக்கட்டும் சாயங்காலம் செத்த வந்துரு மரகதம். அவே கிட்ட நீ வந்து பேசிப்பாரு” தேனம்மாள் அழுகாத குறையா மூக்கைச் சிந்தினாள். 

“அது சரிமா.. நல்ல நாளு அதுவுமா ஒப்பாரி வைக்காதிங்க. தோளுக்கு மேல்  வளந்த பசங்கள விட்டுத்தான பிடிக்கணும். இப்ப எதுக்கு சொர்ணாக்கா பேரனப்பத்தி பேசுறீங்க. அவே சரியில்லாதவேனு ஊருக்கே தெரியும். நம்ம தம்பி பாண்டி ரொம்ப கெட்டிக்காரே (ன்). கெட்டபழக்கம் எதுவு இல்லாதவே. ரொம்ப விவரமானவே. நல்லா முன்னுக்கு வருவான். நிறகுடம் தளும்பாதுமா….. குறை குடந்தான் கூத்தாடும். போயிட்டு வரட்டும். வடக்க போனவங்கல்லாம் நல்லாதான் வாழ்ந்திருக்காங்க. கூட தனபாலு மவன் சுந்தரமும் போறான்ல. புலம்பிக்கிட்டே கிடக்காதிங்க. சாயங்காலமா வந்து பாண்டிகிட்ட பேசி பாக்குறேன். அதுவர சும்மா கிடங்க.” “என்னமோ, நீ சொல்ற. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. சாயங்காலம் வந்திரு தாயி. என்னய தவிக்கவிட்றாத.” தேனம்மாள் அரை மனதோடு போனாள். 

இத்தனையும் கேட்டுக் கொண்டு, “ஏம்மா அப்ப மாமா ரயிலேறிப் போனா திரும்ப வர மாட்டாரா” என்றான் குமார், மரகதத்திடம். “ஏன்டா நீ வேற சீவன வாங்குற…. எனக்கே இன்னும் அது சரியா விளங்கல…. வாய பொத்திக்கிட்டு கிட. பாண்டியனும் என்கிட்ட எதுவும் சொல்லிக்கிடல… ரெண்டு நாளா இந்தப் பக்கம் அவன ஆளயே காணும். சாயங்காலமா என்னென்னு அவெகிட்டயே கேப்போம்” மரகதமே அது பற்றி முழுதாய் தெரிந்திருக்கவில்லை. குமார் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது. எல்லோருமா மாமா ஊருக்குப் போறாருனு ரொம்ப வருத்தப்படுவதைப் பார்த்தால் போறவர் வரமாட்டாரோனு நினைத்து விட்டான். 

மரகதத்திற்கு அது ஒரு போராட்டமாய் இருந்தது. எப்படியோ ஒரு வழியாக அன்று மாலை தேனம்மாவோடு பேசி பாண்டியனை ஊருக்கு அனுப்ப சம்மதிக்க வைத்தாள். 

ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடமே இருந்தது. அன்று, பாண்டியனையும், சுந்தரத்தையும் வழியனுப்ப ஸ்டேஷனுக்கு சொந்தங்கள் எல்லாம் பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்தனர். அந்தக் காலங்களில் சொந்தங்களை ஊருக்கு வழியனுப்புவது ஒரு திருவிழா கோலமாகத்தான் இருக்கும். அதிலும் வட நாட்டிற்குப் போவதென்பதே மிக ஆபூர்வமானது. போனவர்கள் திரும்பி வர வருடங்கள் கூட ஆகிவிடும். 

“பாண்டி பத்திரமா போயிட்டுவா தங்கம். வேளா வேளைக்கி நல்லா சாப்பிட்டுக்கோ. வெயிலுக்குள்ள ரொம்ப அலையாத… போயி சேந்ததும் எனக்கு வேல செய்ற இடத்தோட விலாசத்த அனுப்பு. அம்மாவுக்கு எழுதுற கடிதாசியையும் எனக்கே அனுப்பிரு. அவங்களுக்கு படிக்கத் தெரியாது. முதல் மாசமே நூறு ரூபாயாவது கண்டிப்பா மணியாடர் பண்ணிரு சரியா தம்பி.. இந்தா இந்த பையில அதிரசமும், முறுக்கும் உனக்கும், சுந்தரத்துக்கும் அக்கா தனித்தனியா வச்சிருக்கேன். ரெண்டுபேருமா சாப்பிட்டுக் கொங்க.. அந்த ஊர் பலகாரங்கல்லாம் வாய்க்கி விளங்காது. இந்தா.. படிக்கிறதுக்குனு கல்கி, ஆனந்த விகடன் தீபாவளி மலர். போகும்போத படிச்சுக்கோ” இதைச் சொல்லி மரகதம் பாண்டியனோட கையில் தனியாக இருநூறு ரூபாயையும் கொடுத்தாள். 

இனி மாமாவின் துணையின்றி வரப்போகும் வெறிச்சோடிய நாட்களை எண்ணிய குமாரின் சோகம் அவன் முகத்தில் குதூகலத்தைப் பறித்து விட்டது. அவன் ரயில் ஜன்னல் கம்பியில் முகம் சாய்த்து பாண்டியனைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். சொல்லத் தெரியாத வலி அவன் கண்களைக் கலங்கச் செய்திருந்தது. டாட்டா சொல்லும் நேரம் நெருங்கியது. 

“நல்லா படி மாப்பிளே….மாமா சீக்கிரமா வந்துருவே” என்று பாண்டியன் சொல்லிய கடைசி வார்த்தைகளைத் தொடர்ந்து, இன்ஜின் உறுமியது. மறுவினாடி ரயில் நகரத்தொடங்கியது. 


கிழிந்த சாக்கின் துவாரத்தின் வழியே சிற்றருவிபோல் சிந்திக் கொண்டிருந்தது துவரம்பருப்பு. சாக்கு மூட்டையில் ஓட்டைகளை பாண்டியன் கோணி ஊசி கொண்டு தைத்துக் கொண்டிருந்தான். 

இதற்கு முன் அவன் வாழ்வில் கோணி ஊசியைக் கையில் ஒருபோதும் பிடித்ததே இல்லை. அதனாலேயே கோணி ஊசி அவன் கைகளில் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்தது. 

அவன் நெற்றி வேர்வை வழிந்தோடி கைகளின் வழியே விரல்களுக்குள் பிசுபிசுத்து ஊசி நழுவிக் கொண்டேயிருந்தது. 

“கொண்டா பாண்டி, நா தைக்கிறேன். இதெல்லாம் உனக்கு சரிப்படாது” என்று சொல்லி சுந்தரம் அவன் கையிலிருந்த சணல் கோர்த்த கோணி ஊசியை வாங்கிக் கொண்டான். பாண்டியனோடு கோணி ஊசியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. 

ரயில்வே குட்செட் எங்கும் இது போல் தரம் இல்லையென்று ஒதுக்கப்பட்ட சரக்குகள் கடத்திவரப்பட்ட அடிமைகள் போல் அடைந்துகிடந்தன. ஊருக்குள் பதுங்கித் திரிந்த எலிகள் அத்தனையும் இங்கு முற்றுகையிட்டு, திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்தன. 

சுந்தரத்திரமும், பாண்டியனும் விடாமல் கோணி ஊசியால் தைத்துக் கொண்டே வருவதும், எலிகளின் சேட்டை தொடருவதுமாய் அங்கு மௌனமாய் ஒரு போராட்டம் நடந்தபடியே இருந்தது. 

இதற்கிடையில் ரயிவே குடவுன் கண்காணி ஒருவன் சீற்றத்தோடு “கா …ம் கதம் கரோ.. சிக்காராம்” சீக்கிரம் வேலையை முடி என்று இவர்களை விரட்டினான். பதிலுக்கு “டிக் ஹை…, சிந்த மாட்கரோ” சரி… நீ கவலைப்படாதே என்று தன் கொச்சை இந்தியில் சுந்தரம் கோபமாய் பதிலுக்குக் கத்தினான். 

“நம்ப கஷ்டம் அவனுக்குத் தெரியுமா…. கத்தி தொலைச்சி காரியத்த கெடுத்துறாத” பாண்டி அவனைப் பணியச் சொல்லி எச்சரித்தான். 

எலிகளின் விரட்டல் ஒருபுறம், கண்காணியின் மிரட்டல் மற்றொருபுறம். அதற்கிடையில் இருவருமாய் குறைந்தது ஐம்பது மூட்டைகளையாவது தைத்து வைத்தியம் பார்த்திருந்தனர். அடுக்கியிருந்த மூடையின் அட்டியில் பாரம் தாங்காது சில சிப்பங்கள் சரிந்து கொண்டு நின்றன. அவற்றை பாண்டியன் தோளில் முட்டுக் கொடுத்து சரி செய்து நிறுத்தி வைத்தபடியிருந்தான். 

“கொஞ்சம் ரெஸ்ட் எடு… நான் போய் எதையாச்சும் திங்க வாங்கிட்டு வர்றேன்” என்று சுந்தரம் சொல்லிவிட்டு வெளியில் போனான். குட்செட் மேற்கூரை வழியே ஊடுருவி கோடை வெயில் முழுவதுமாய் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. சோர்வும், வெக்கையும் அவன் உடல் முழுவதும் விண்விண்ணென்று தாங்க முடியாது தகதகத்தது. அவனுக்கே அவன் வேர்வை நாற்றம் சகித்துக் கொள்ள முடியாது வெறுப்பேற்றியது. தரை தட்டி வற்றியகுளம் போல், பானைக்குள் மண்டி நின்ற நீரை மொண்டு எடுத்துக் குடித்தான். பிறகு உக்கடா என்று சுண்ணாம்பு இழுவிய குட்செட் சுவரில் முதுகைச் சாய்த்தான். 

வெளியில் போன சுந்தரம் வாங்கி வந்த காய்ந்துபோன சப்பாத்தியை வாயில் வைக்கும் தருணத்தில் அம்மாவின் பருப்புச்சோறும், ரசமும் கண்ணுக்கு எட்டாமல் போய்விட்ட ஏக்கத்தால் பாண்டியனுக்கு அழுகையே வந்து விட்டது. இப்படியெல்லாம் சிரமம் இருக்கும் என்பதைத் துளியும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. வாடிய முகமும், வற்றிய வயிறும் அவன் ஆற்றாமையைக் கூறிபடியிருந்தது. ஆனால் சுந்தரமோ கொஞ்சம் தாக்குப் பிடிப்பவனாய் இருந்தான். பல நாட்கள் ஏற்கனவே வெளியூர் சுற்றித்திரிந்த அனுபவம் அவனை அப்படி மாற்றியிருந்தது. 

பாண்டியனும், சுந்தரமும் ஆக்ரா வந்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. வந்தவுடன், மாதம் பதினைந்து ரூபாய் வாடகைக்கு ஆக்ராவின் கிரானி மார்க்கட்டை அடுத்த ஒடுங்கிய முட்டுச் சந்துக்குள் ஒரு அறையில் தங்க இடம் தேடிக் கொண்டனர். இன்னும் இது போல் இவர்களைப் போன்றவர்கள் தங்குவதற்கு அங்கு அடுத்தடுத்து இரண்டு அறைகள் காத்துக்கிடந்தன. 

கமிஷனுக்கு சரக்கைப்பேசி தெற்கே அனுப்பும் ‘கேன்வாசிங் ஏஜெண்ட்’ வேலை அது. முதலீடில்லை, ஆனாலும் இரண்டு பக்கமும், விற்பவர் வாங்குபவர் இருவரையும் திருப்திபடுத்துவது பெரும் போராட்டமாக இருக்கும். பணப்பட்டுவாடா ஓடியடைந்தால்தான் கமிஷன், அதுவரை மதில் மேல் நடப்பது போன்றதுதான் இந்த ஆட்டம். கணக்கை முடித்துக் கமிஷனை வாங்கி விடுவதே சாதனையாகத்தான் இருக்கும். அவர்கள் இருவரின் ராசி, பேசிய முதல் லாட் முழுவதுமே தரமில்லையென்று ரிஜக்ட் செய்யப்பட்டு ரயில்வே குட் செட்டில் அடைக்கலம் அடைந்து கிடந்தன. அப்போது அதன் மதிப்பு ஐம்பதாயிரம் ரூபாய். அது பாண்டியன் அதுவரை கண்ணில் காணாத ஒரு தொகை. 

சுந்தரம் எவ்வளவோ பேசியும் சரக்கு ரயிலில் ஏற்றிய மூடைகள் அத்தனையும் கீழே இறக்கித் தள்ளப்பட்டு இப்படி அனாதையாகக் குமிந்து கிடந்தன. போனுக்கும் தந்திக்குமாய் இருவரும் கையில் கொண்டு வந்த பணத்தில் பாதி தீர்ந்து போயிருந்தது. 

பாண்டியனுக்கு  மனம் தாங்க முடியாது கலவரப்பட்டுக்கிடந்தது. புதிய ஊர், புதிய சூழல் அத்தோடு ஏமாற்றமும், பயமும் கை கோர்த்துக் கொண்டன. எப்படியாவது கள்ள டிக்கெட்டிலாவது ரயிலேறி ஊருக்கு ஓடிப்போய் விடலாமா என்றுகூட மனம் சதி செய்யத் தொடங்கியது. இதற்கிடையில், மாதிரிபடி சரக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்ளாது, சரக்கை அனுப்பிய மார்வாடி பணத்திற்கு விரட்டிக் கொண்டிருந்தான். சொல்லப் போனால், இந்த இக்கட்டில் இருவருமாய் வந்த நாள் முதல் சரியாகச் சாப்பிடக்கூட இல்லை. அதையும்விட, உலக அதிசயமாம் தாஜ் மஹால் இங்குதான் இருக்கிறது என்பதை நினைக்கக்கூட நேரமின்றி நாட்கள் நகர்ந்தன. 

அன்று அறைக்கு வந்த பின், பாண்டியனுக்கு இரவு பீதியுடன் விழித்துக் கொண்டது. எதையாவது பேசித் தொலைக்கலாமென்றால் சுந்தரத்தின் குறட்டை முந்திக் கொண்டது. அவன் சட்டையைக்கூடக் கழட்டிக் கொள்ளாமல் தலையணைக்குள் முகம் தொலைத்து முடங்கிக் கிடந்தான். பாண்டியனுக்கோ களைப்பு உடலோடு உச்சம் கொண்டிருந்தது. அவன் அவயங்கள் ஒவ்வொன்றும், தங்கள் இயலாமையை ஓசையின்றி அறிவித்தபடி இருந்தன. 

இமைகளுக்குள் தேங்கி நின்ற தூக்கத்தை, ஊரின் ஞாபகம் தொல்லை செய்து தடுத்துக் கொண்டேயிருந்தது. சரி, விளக்கைப் போட்டு ஊருக்குக் கடிதமாவது எழுதலாமென்றால் எதை எழுதவென்ற விரக்தி அவனைச் சுருட்டிக் கொண்டது. ஊரிலிருந்து கிளம்பும் போது பாண்டியன் எண்ணற்ற கனவுகளைச் சுமந்தபடி வந்திருந்தான். ஆனால் பாவம், அத்தனையும் நிர்மூலமாகி விட்டது. 

காலை விடிதலில் நல்ல செய்தி காத்திருந்தது. ஹேமந்த் லால் அன்கோவிலிருந்து வந்த ஒரு நபர் சுந்தரத்திடம் காலையில் 10 மணிக்கு ஆபீஸுக்கு வரும்படி செய்தி சொல்லிச் சென்றான். நான்கு நாட்களாக எதுவும் பேசத் தயாராக இல்லையென்ற பார்ட்டி இப்போது அழைப்பு விட்டிருக்கிறார் என்பது சுந்தரத்திற்கு நல்லதாகப்பட்டது. அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கையும் வந்தது. 

ஆக்ராவின் தெருக்கள் இத்தனை ஒடுக்கமாயும், நெருக்கமாயும் இருப்பதைப் பார்த்த பாண்டியனின் தலை கிறுகிறுத்தது. குண்டும், குழியுமான குறுகிய சந்திற்குள் தூசியும், பலசரக்குகளின் தாங்க முடியாத நெடியும் நாசியில் புகுந்து விரட்டிக் கொண்டே வந்தது. பாண்டியன் நிமிடத்திற்கு ஒரு தடவை தும்மல் போட்டுக் கொண்டே வந்தான். 

சுந்தரம் “பாத்து ஓரமா நட… ரிக்ஷாகாரனும் வண்டிக்காரனும் உன்ன இடிச்சி தள்ளிருவான்…” பாண்டியனிடம் எச்சரித்தபடியே வந்தான் சுந்தரம். ஆக்ராவில் சிக்கந்தரா மிக நெருக்கமான ஜனங்கள் மிகுந்த மார்க்கெட் ஏரியா. பல வருடங்களாக பரம்பரையாக கூட்டுக் குடும்பமாக வணிகம் செய்யும் கொழுத்த வட நாட்டு சேட்டுகளுக்கு இதுதான் வணிகத்தளமாக இருந்தது. மேல் மாடியில் வீடுகளும் கீழே கடையுமாய் இணைந்தே அவர்கள் பயணித்தது அப்போதைய வணிக நாகரிகமாக அமைந்திருந்தது. 

ஹேமந்த் லாலின் கமிஷன் மண்டியும் அப்படியானதுதான். அதே சந்தின் நடுவே வலது பக்கமாகத் தாழ்வான வாசலில் கடை இருப்பதாக வந்தவன் சொல்லிவிட்டுப் போனான். சொன்ன அடையாளங்களைத் தேடிக்கொண்டு, பிரச்சனையை இழுத்தடிக்கும் ஹேமந்த்லாலை வழி நெடுகிலும் திட்டிக் கொண்டே சுந்தரம் நடந்தான். 

சுந்தரம், பாண்டியன் இருவரையும் பார்த்த அந்த சேட் இத்தனை சிறு வயதில் பல ஆயிரம் மைல்கள் கடந்து கமிஷன் வியாபாரம் பார்க்க வந்திருக்கும் துணிச்சலைப் பாராட்டினான். சரக்குகளை வாபஸ் பெற்றுத் தரமானதாக மாற்றித்தர சம்மதித்தான். 

தொடர்ந்து பத்து கூலியாட்களை குட்செட்டுக்கு அனுப்பி சரக்கு முழுவதும் கை பார்த்து நல்ல விதமாய் மாற்றிக் கொடுத்தான். இரண்டு நாட்கள் இருவரும் தூக்கமே இல்லாது அத்தனை மூடைகளையும் சரிபார்த்து சரக்கு ரயிலில் ஏற்றினர். அன்று எல்லாம் முடியும்போது அதிகாலையாகிவிட்டது. மிகப்பெரிய பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியினால் இருவருக்கும் இருந்த களைப்பு காணாமல் போனது. ரூமுக்குப் போகும் முன் தந்தி ஆபிஸுக்குப் போய் எல்லா பார்ட்டிகளுக்கும் சரக்கை ஏற்றிய விவரத்திற்கு செய்தி அனுப்பி விட்டுச் சென்றனர். 

அந்த ஞாயிற்றுக்கிழமைதான் இருவருக்கும் நிம்மதியான நாளாக இருந்தது. பாண்டியன் அடித்துப்போட்டது போல் அன்று பகல் முழுவதும் தூங்கினான். பாவம், வந்த நாளிலிருந்து இப்படியொரு தூக்கம் அவன் தூங்கியிருக்க மாட்டான். 

இருவருமாய் அன்றைக்கு மாலை நடந்தே ஊரைச் சுற்றி விட்டு அப்படியே பின் தாஜ்மஹாலைப் பார்க்கலாம் என்று கிளம்பினர். 

ஊருக்குள் சற்று உயரமான இடத்திலிருந்து பார்த்தால், தாஜ்மஹால் அங்கிருந்தபடி ஊரை எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது போன்றே தோன்றும். மேகங்கள் உரசிச் செல்லும் உயரத்தில் எழும்பி நிற்கிறதோ என்றும் பிரமிப்பூட்டும். 

பல நூற்றாண்டுகளாய் தாஜ்மஹாலுக்கு வந்து செல்லும் சுற்றுலா மனிதர்களின் பார்வையில் அது வெவ்வேறு பரிமாணத்தைக் காட்சிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. ஆத்மார்த்த உணர்வுள்ள இசைக்கலைஞன் வந்தால் அதன் முன் அமர்ந்து சாதகம் பண்ணத் தொடங்கி விடுவான். கட்டிடக்கலை வல்லுனர்கள் எப்போதும் அதன் நிபுணத்துவம் குறித்தே பேசி மகிழ்வர். எதிலும் கலைத்துவமே காணும் மனிதர்கள் மட்டுமே இதன் அழகியலில் இன்பம் காண முடியும். சாமானியர்கள் வாழ்வில், தாஜ்மஹால் என்பது ஒரு சாதாரண சுற்றுலாத்தளமாக மட்டுமே காட்சி தரும். 

நுழைவாயிலில் சில நொடிகள் நின்ற நிலையில், தாஜ் மஹால் இத்தனை சிறியதா என்று தோன்றிய பாண்டியனுக்கு அதைத்தாண்டி நடக்க நடக்க அதன் காட்சி விரிந்து கொண்டே சென்றது. எட்ட முடியாத தூரத்தில் அதை ஏன் வைத்தார்கள் என்று எண்ணி சலிப்படைந்தான். அது என்ன மனிதர்கள்தானா இல்லை ஊர்ந்து செல்லும் எறும்புகளா, தாஜ்மஹால் ஒரு கேக்கின் வடிவம் போலும் அதைத் தாங்கி நிற்கும் மேடையில் நடமாடும் மனிதர்கள் எறும்புகள் போலும் பாண்டியனின் கற்பனை விரிந்தது. 

சுந்தரமோ ஒரே இடத்தில் அமர்ந்தபடி, அங்கும் இங்குமாய் நடமாடும் மனிதர்களையும், வடதேசத்து நங்கையற்களின் அழகையும், முன் தேங்கி நின்ற தடாகத்தில் தாஜ்மஹால் முகம் பார்த்து சிரிப்பதுமான காட்சிகளை எல்லாம் ரசித்துக் கொண்டிருந்தான். 

அப்போது ஒரு படம் ஒரு ரூபாய் என்று புகைப்படம் எடுத்துக் கொடுக்கும் கிழவனைக் கண்டனர். இவனுக கையில காசிருக்காது என்பது போல் அவன் கண்டு கொள்ளாமல் போனான். சுந்தரம் அவனை விடாது கைதட்டி அழைத்தான். இருவரையும் உட்காரச் சொன்னான். பிறகு, நிற்கச் சொன்னான். அப்படியாக படங்களை எடுத்தான் கிழவன். பாண்டியன் தனியாக நின்று ஒன்று எடுத்துக் கொண்டான். இப்போதெல்லாம் கிமி நுட்பத்தால் எந்தக் காட்சியுடனும் தன்னை பொய்யாய் ஒட்டி மகிழ்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அப்போதைய கருப்பு வெள்ளைப் படத்திலிருந்த சிலிர்ப்பான அனுபவம் இன்றைய வண்ணங்களில் இல்லை. 

கிழவன் மறுநாள் உங்களிடத்திலேயே பிரிண்ட்களை கொண்டு வந்து கொடுத்து விடுவேன் என்றான். மொத்தம் பத்து பிரிண்ட்கள். அதில் ஆறு பாண்டியனுடையது. 

மீண்டும் பத்து நாட்கள் ஆகியும் கமிஷன் முழுவதுமாய் கைக்கு வந்து சேரவில்லை. கடனில்தான் இருவருடைய நாட்களும் நகர்ந்து கொண்டிருந்தன. பாண்டியனுக்கு பயம் கொடுத்தது. 

சுந்தரம் இன்னிக்கி கண்டிப்பாய் கமிஷனை வாங்காமல் ரூமுக்குத் திரும்பி வர மாட்டேன் என்று சொல்லிவிட்டுச் சென்றான். சொன்னது போல் சாயங்காலமாய் இருட்டிய பிறகு வந்த அவன் கையில் மொத்த கமிஷன் பணம் 1200 ரூபாய் இருந்தது. சாப்பாட்டுப் பாக்கி இடத்து வாடகைப் பாக்கிக்கு எடுத்து வைத்தது போக, மீதமாய் இருவர் பங்கிற்கும் 450 ரூபாய் மிஞ்சியது. அதுதான் பாண்டியன் தன் வாழ்வில் காணும் முதல் வருமானம். அதன் மதிப்பு பணமல்ல, சிந்திய வேர்வை. சுந்தரம் அதைக் கொடுத்த போது பாண்டியன் தன் எதிர்காலத்தின் தொடக்கமே அதிலிருப்பதாய் உணர்ந்தான். 

உணர்ந்தான். அன்றிரவு பாண்டியன் அதைத் தன் தலையணைக்குக் கீழ் பத்திரமாய் திணித்து வைத்துக் கொண்டு தூங்கிப் போனான். 

விடிந்தவுடன் அக்கா மரகதம் விலாசத்திற்கு, குறிப்பில் அம்மா தேனம்மாளுக்கு என்று எழுதி 300 ரூபாய் மணியாடர் அனுப்பிவிட்டு, தனியாக அக்காள் மரகதத்திற்கும் குமாருக்கும் கடிதம் ஒன்று எழுதி தாஜ்மஹாலின் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் கவருக்குள் வைத்து அனுப்பினான். 


“இந்த பாண்டிப்பய வடக்க போயி ஒரு மாசத்துக்கு மேல ஆயிருச்சிடி மரகதம். இன்னும் தாக்கல் எதுவுமில்ல…. என்ன ஆச்சோ ஏதாச்சோ லவலவங்குது மனசு. யாருகிட்டையாவது போறவங்ககிட்ட கை தபாலு கொடுக்கலாமுனா விலாசமு தெரியல” இப்படியே தினமும் மரகதத்திடம் தேனம்மாள் புலம்பிக் கொண்டேயிருந்தாள். அதனாலயே மரகதம் முதல்வேலையாக வந்த மணியாடர் பணத்தை எடுத்துக் கொண்டு அம்மா தேனம்மாளிடம் கொடுக்கச் சென்றாள். 

குமார் தனக்கு வந்த மாமாவின் கடிதத்தைத் திரும்ப திரும்பப் படித்துக் கொண்டிருந்தான். “குமார், நீ எப்படியிருக்கிறாய்” என்று மாமா பாண்டியன் எழுதிய வரிகளின் வழியே பிரிவின் ஏக்கம் தொற்றி நின்றது. 

கடிதத்தின் இடையே எட்டிப்பார்த்த பாண்டியனின் கருப்பு வெள்ளை படத்தைக் கையில் எடுத்த குமாருக்கு, அதற்குள்ளே குதித்து விட மாட்டோமா என்று ஏங்கியது மனம். 

என்றோ, அய்யா ராமநாதன் ‘நீ வளர்ந்ததும் நம்பளும் ஒரு நாளைக்கி தாஜ்மஹால் போவோம்’ என்று சொல்லியிருந்தார். அது பல நாட்கள் கற்பனையால் சஞ் சரித்த பயணம். இன்று வரை அது நிஜமாகவில்லை. அதற்காகவே காத்திருப்பவன்போல் ‘நான் எப்ப வளர்வேன்’ என்று அய்யாவிடம் கேட்டுக் கொண்டேயிருக்கிறான். ஆனாலும் என்றாவது ஒரு நாள் அது நிகழாமலா போகும். இப்போது சுற்றிக் காண்பிக்க மாமாவே அங்கு இருக்கிறாரே. 

அன்றைக்கு மரகதம் இஸ்திரி போட்ட சட்டைகளை அடுக்க குமாரின் அலமாரியைத் திறந்தாள். கதவின் உள்பக்கமாய் பாண்டியன் தாஜ்மஹால் முன் நின்று எடுத்துக் கொண்ட படம். குமார் மாமாவைத் தன்னோடு வைத்துக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறான். திறந்து மூடும் போது அதைப் பார்த்துக் கொள்ள விரும்பியிருக்கிறான். எங்கிருந்து இவனுக்கு இப்படியொரு யோசனை வந்தது என்று மரகதம் வியந்தாள். 

தேனம்மாள் அந்த முன்னூறு ரூபாய் மணியார்டரை மரகதத்திடமிருந்து கையில் வாங்கியபோது கோடி ரூபாய் கிடைத்த மகிழ்ச்சியில் பூரித்துப்போனாள். தன் மகனிடமிருந்து வந்த முதல் பணம் தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாய் நம்பினாள். 

இறுதியாய் தனக்கான பக்கத்தை மரகதம் படித்தாள். அதில் அன்பும், பாசத்தையும் தவிர வேறு என்ன இருந்துவிட முடியும். வெகு தூரத்திலிருந்து வரும் கடிதங்கள் பெரும்பாலும் ஏக்கத்தோடே முடிகின்றன. பாண்டியன் எதையோ தவறவிட்டவன் போல் கடிதத்தை முடித்திருந்தான். இப்படியே பாண்டியனின் கடிதத்தின் வழியே பரிவர்த்தனை பல மாதங்கள் தொடர்ந்தன. இடையே குமாருக்கென்று குட்டியாய் ஒரு பக்கம் இருக்கும். இனி வரும் நாட்களில் பாண்டியன் எல்லோருக்குமாய் ஆக்ரா மாமாவாகியிருந்தான். 

ஆறு மாதத்தில், தனக்கு இங்கு வேலையிருப்பதாய் சொல்லி சுந்தரம் ஊருக்குத் திரும்பி விட்டான். பாண்டியனுக்கு ஆட்டைப் பிடித்து சம்பாதிக்க ஆரம்பித்ததும், ஹேமத்பந்த்தோடு சேர்ந்து கூட்டாகப் பக்கத்து ஊர்களுக்குப் போய் தானிய வகைகள் கொள்முதல் செய்யும் முக்கிய பொறுப்பில் இருப்பதால் இப்போது அவன் ஊருக்குத் திரும்ப முடியாது என்றும் சொன்னான். மரகதம் பாண்டியை நினைத்துப் பெருமைப்பட்டாள். சுந்தரம் மூலம் பாண்டியன் கொடுத்தனுப்பிய பத்தாயிரம் ரூபாயை தேனம்மாள் வாங்க மறுத்தாள். ‘நீயே வைச்சிரு. பாண்டிக்கி கல்யாணம் காச்சினு வந்தா அப்ப வேணும்.’ மரகதத்திடமே அதைத் திரும்பிக் கொடுத்து விட்டாள். தேனம்மாள் மகன் ஆக்ராவில் கொடி கட்டிப் பறப்பதாய் அடுத்த வீடு, எதிர் வீடு என்று தெருவெல்லாம் சொல்லித் திரிந்தாள். 

ஒரு நாள், ராமநாதன் தந்தி ஆபீஸிலிருந்து பாண்டியனோடு போன் போட்டுப் பேசியபோது இந்த வருஷ கண்டிப்பாக வந்துருவே மச்சான், எல்லார்கிட்டயும் சொல்லிருங்க என்று சொன்னான். அதையடுத்து மரகதம் அவன் வரவை எதிர்பார்த்தபடியிருந்தாள். 


நடுச்சாமத்தில் கதவு தட்டிய சத்தம் கேட்டு, தேனம்மாளின் தூக்கம் கலைந்தது. விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்தாள். ஆச்சரியம். பாண்டியன் பெட்டியோடு நின்று கொண்டிருந்தான். 

“தம்பி  வந்துட்டியா என்.. ராசா” பார்த்தவுடன் தேனம்மாள் பூரிப்படைந்தாள். பாண்டியனின் முதுகிற்குப் பின் மறைந்து நின்ற வசுந்தரா மெல்ல நகன்றாள். மங்கிய விளக்கொளியில் மேகம் விலகிய முழுநிலவென அவள் பிரகாசித்தாள். 

தேனம்மாள் அவளைப் பார்த்தவுடன் அதிர்ந்து போனாள். “யார்டா இவா, இவள எங்க பிடிச்சிட்டு வந்த? இப்படி மோசம் பண்ணிட்டியேடா பாவி.” 

“அம்மா கத்தித் தொலைக்காத விடிஞ்சதும் விவரமா சொல்றேன். அதுவர கொஞ்ச சும்மா கிட” பாண்டியன், மிரண்டு நின்ற வசுந்தராவை உள்ளே அழைத்துக் கொண்டான். 

தேனம்மாள் இருவருக்கும் தண்ணீர் எடுத்துக் கொடுத்து விட்டு, எதுவுமே பேசாமல் இருவருக்கும் பாயும் தலையணையையும் எடுத்துப் போட்டாள். நல்லவேளை, யாரும் அந்தநேரம் விழித்துக் கொள்ளவில்லை. 

மரகதம் இத்தனை அழகான ஒரு வட நாட்டுப் பெண்ணைப் பார்த்தவள் இல்லை. பக்கத்தில் உட்கார்ந்து வசுந்தராவை ரசித்துக்கொண்டிருந்தாள். வடக்கே வாழும் பெண்கள் எல்லாம் இப்படித்தான் அழகாய் இருப்பார்களோ என்று வியந்தாள். வசுந்தராவின் முகத்தில் பயமும் மிரட்சியும் அப்படியே அகலாதிருந்தது. மொழி தெரியாத அவளோடு மரகதம் கண்களால் பேசிக் கொண்டிருந்தாள். அவள் வடநாட்டுப் பெண்ணின் அடையாளமாய் பைஜாமாவிற்குள் இருந்தாள். பாண்டியன் கட்டிய தாலி கழுத்தில் ஒளிந்து கொண்டிருந்தது. அவளைப் பார்க்கையில் தோற்றத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்தின் சாயல் தெரிந்தது. பாண்டியன் எது செய்தாலும் சரியாகத்தான் செய்வான் என்ற நம்பிக்கையில் மரகதம் அவனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. மௌனமாகவே இருந்து விட்டாள். 

பாண்டியன் நிறைய மாறியிருந்தான். குமார் பாண்டியனை வேற்றொரு மனிதனாய் பார்த்தான். அவன் பார்வையில், நினைவில் நின்றிருந்த அன்றைய பாண்டியனைத் தொலைத்திருந்தான். இன்னும் சொல்லப்போனால், ரயிலேறிய மாமாவைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனாலும் இந்த மாமாவையும் அவனுக்குப் பிடிக்காமல் இல்லை. எப்போதும் சிறுவர்கள் உலகில் அத்தை என்பது நீடித்த அன்பின் அடையாளம். அதற்கு சாதி, மதம் என்று எதுவும் தடையாய் இருந்ததில்லை. பெரியவர்கள் அடித்துக் கொள்ளுவது ஏன் என்பது இன்றுவரை அவர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

எதைச் சொன்னாலும் சமாதானமாகாத தேனம்மாள் அடுப்பந்திண்ணையை விட்டு வெளியே வரவேயில்லை. “அவே என்ன தப்பு செச்சிட்டான்…. மா அய்யா செத்தப்புறம் குடும்பமே நாதியில்லாம கிடந்திச்சி. மூத்தவனா பொறுப்பா தா படிப்பயும் விட்டுட்டு தம்பிகள வளக்கணுமேனு அவனே வடக்க போயி சம்பாதிச்சி பணம் அனுப்பும்போது அது இனிச்சது. இப்ப அவனுக்குப் பிடிச்சவளக் கூட்டிட்டு வந்துட்டானு இந்த குதி குதிக்கிற.” மரகதத்தின் ஆத்திரம் வார்த்தைகளில் தெரித்தது. 

பாண்டியன் எதையும் கண்டுகொள்ளவில்லை. தன் பெட்டியைத் திறந்து ஊரிலிருந்து கொண்டு வந்த கணக்கு வழக்குகளை, வந்திருந்த சுந்தரிடம் கொடுத்து விவரம் சொல்லிக் கொண்டிருந்தான். உள்ளூர் பார்ட்டிகளுக்குக் கொடுக்க வேண்டிய ஹேமந்த்லால் அன் கோவின் பில் காப்பிகளையும் கணக்கு ஸ்டேட்மெண்ட்களையும் தனித்தனியாகக் கவர் போட்டு கொடுத்தான். அதுபோக கமிஷனில் சுந்தரத்தின் பங்கு ரூபாயை எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தான். பேசிக் கொண்டபடி எது செய்தாலும் கமிஷனில் சரி பங்கு என்ற பட்டுவாடா இருவருக்குள்ளும் நீடித்தது. 

இதற்கிடையே அந்தத் தெரு மக்களில் சிலர் இதைக் கேள்விப்பட்டதும் ஏதோ காணாததைக் கண்டது போல், வீட்டிற்குள் வந்து வசுந்தராவைக் காட்சிப் பொருள் போல் எட்டி எட்டிப் பார்த்தபடியே இருந்தனர். வீட்டிலிருந்த மற்ற அக்காள் தம்பிகள் யாருமே சுந்தரத்தை ஆமோதிக்கவில்லை. அவர்கள் ஏதும் பேசாதிருந்தாலும், அவர்கள் உடல் மொழி வெறுப்பை உணர்த்தியது. 

மரகதம் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். சுந்தரம் கைத் தபால் ஒன்றைக் கொடுத்து விட்டு அதிகாலை விடியும் முன்பே பாண்டியும், வசுந்தராவும் ரயிலேறி ஊருக்குப் போயிட்டாங்க. இந்தக் கடிதாசிய அக்கா மரகத்திடம் கொடுத்துருன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போனான் என்றான். 

கடிதத்தில் “அக்கா, நான் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளவில்லை. அம்மா சம்மதிக்கவில்லை என்கின்ற போது இங்கு இருப்பதில் அர்த்தம் இல்லை. கொஞ்ச நாளில் அம்மா சரியாகிவிடலாம். அதன் பின் இருவருமாய் வருகிறோம். வசுந்தரா நான் சாப்பிடும் மெஸ் முதலாளியின் மகள். தாயை சிறு வயதிலேயே இழந்தவள். ஒற்றை மகளாய் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவள். 

அவள் பிறந்ததுமுதலே அவளின் கால் ஊனம் அவள் தந்தையை துன்புறுத்திக் கொண்டிருந்தது. அதை நினைத்து பாவம் அவர் புலம்பாத நாளில்லை. சொந்தங்கள் யாரும் அவளை ஏற்க முன்வரவில்லை. அவள் நிலை கண்டு, மெல்லமெல்ல என் இளகிய மனம் அவள்மீது சாய்ந்தது. வசுந்தராவின் அழகு அவள் ஊனத்தை மறைத்திருந்தது. நீகூட அதை உணர்ந்திருக்கக் கூடும். உன்னிடம் எல்லாவற்றையும் விவரிக்க அவகாசம் இல்லை. காலம் மாறும் என்று காத்திருக்கிறேன். மாதாமாதம் அம்மாவிற்கு மணியாடரும், தம்பிகளின் படிப்புக்கு பணமும் தேவைப்படுவதை அனுப்பி வைக்கிறேன். எல்லோரையும் போல் நீயும் என்னை நிராகரித்து விடாதே. என் கடிதத்திற்குப் பதில் எழுது. கடிதம் எழுதுவதை நிறுத்திவிடாதே’ என்று முடித்திருந்தான். 

கனவில் வந்து போனது போல், ஒரே நாளில் திரும்பிச் சென்ற பாண்டியனின் பிரிவு வேதனையளித்தாலும், செயற்கரிய செயலைச் செய்த அவனை நினைத்து மரகதம் பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. 

‘ரயிலேறிய மாமா எப்ப…மா வருவாரு’ என்று கேட்டுக் கொண்டிருந்த குமாருக்குப் பதிலேதுமின்றி மரகதம் விழித்தாள். காலத்தின் கருணைதான் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க முடியும். 

– காலச்சித்திரங்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 2025, மழைமான் பதிப்பகம், சென்னை.

அம்பாள் ஆர்.முத்துமணி விருதையில் 'அம்பாள்' என்று அழைக்கப்படும், பிரபல வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை அம்பாள் ராமசாமி அவர்களின் வழியில் வாழ்ந்து தொழிலும், தன் வாழ்விலும் உயர்வு பெற்றவர்.  தன் தந்தை வழி இலவச யோகா பயிற்சி மையப் புரவலர், யோகா பயிற்றுனர், ஆரோக்கிய விழிப்புணர்வுப் பேச்சாளர், தந்தை நிறுவிய அறக்கட்டளை மூலம் நல்ல பல இலவச சேவைகள் செய்து, விருதை மக்கள் போற்றும் சமூக ஆர்வலர் என்று இப்படி பன்முக ஆளுமை கொண்டவராய்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *