யுகங்களை விழுங்கிய கணங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2025
பார்வையிட்டோர்: 387 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மாஸ்ரர், உங்கட பிரச்சாரம எல்லாம் எப்பிடிப் போகுது?” 

யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடு தீவை நோக்கி ஓடிவந்த பஸ், அராலிச் சந்தி யில் திடுதிப்பென்று தலையை முன்னால் குத்துவது போல் எகிறிவிழுந்து நின்றது. அதன் யந்திரஒலி அடங்குவதற்கு முன்னரே, அப் பிரதேசத்தையே நிசப்தமாக்கி உள்ளதிர வைப்பதுபோல் அவனை நோக்கி எழுந்தது அந்தக் குரல். 

“மாஸ்ரர், உங்கட பிரச்சாரம் எல்லாம் எப்பிடிப் போகுது?” 

அவனுடல் சில்லிட்டு பனிக்கட்டி யாய் உறைவது போல் இருந்தது. 

பஸ்ஸின் முன்னால் இருவர் ஏ.கே.துப்பாக்கிகளுடன் கொலைகாரர் போல் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் பஸ் முன்னிருக்கையில் இருந்த ‘மாஸ்ரரை’ நோக்கி இடப்புற முன் ஜன்னலருகே வந்து மீண்டும் பலத்த குரலில் “என்ன மாஸ்ரர், என்னைத் தெரியுதா? உங்கட பிரச்சார மெல்லாம் எப்பிடிப் போகுது?’ என்றான் அதே குரூரமும் கேலியும் கலந்த குரலில். 

அந்தக் கேள்விக்கு இலக்கான ‘மாஸ்ரரை’ நோக்கி பஸ்சுக்குள் இருந்த சகல பிரயாணிகள் மட்டுமல்ல சதா காற்றோடு கதைப்பறையும் அந்த வல்லை வெளியே ஒருக்கால் ஸ்தம்பித்து அவனை நோக்கி தன் பார்வையைக் குவிப்பதுபோல் இருக்க, அவனது உடல் வெலவெலத்து வேர்க்கத் தொடங்கியது. 

மாஸ்ரரை நோக்கி கேள்வியை எறிந்து அதட்டியவன் தனக்குச் சற்று தள்ளி எதிர்ப்பக்கமாக நின்ற தனது சகாவின் பக்கம் பார்வையைத் திருப்பினான். ஆனால், அவனது சகாவோ இவனைப் பாராது பஸ்ஸின் பின்னால் இருப்பவர்கள் மேல் நோட்டம் விட்டுக்கொண்டு நின்றான். 

இனி நான் தப்பிக்கொள்ள வழியில்லை. பஸ்சை விட்டு இறக்கப்பட்டு இந்தச் சந்தியில் வைத்துச் சுடப்படப் போகிறேன். அது நிச்சயம். 

மாஸ்ரரின் எண்ணங்கள் தறிகெட்டுப் பாய்ந்தன. 

கணப்பொழுதுகள் யுகங்களாக நீளும் பிரமை. 

திகிலும் பீதியும் அவதியும் அவனுக்குள் அரக்கர்போல் ஒன்றை யொன்று கட்டிப்பிடித்து புரள்கின்ற அந்தரம். அந்த உணர்வுகளின் மற்போர் அங்கிருப்போருக்கும் காட்சிப்படுத்தப்படுவது போன்ற அவஸ்தை. 

மாஸ்ரரின் பக்கம் அந்தக் கொலைகாரன் போல் நின்றவனின் பார்வை மீண்டும் திரும்புகிறது. 

மாஸ்ரர் அசட்டுத்தனமான புன்சிரிப்புடன் அவனை வெறித்துப் பார்க்கிறார். அந்தப் பார்வையில் சிகரட் புகைபோல சாவின்களை மிதந்து பஸ்சுக்குள் நெளிவது எல்லோருக்கும் தெரிகிறது. 

மாஸ்ரரின் பார்வையை வாங்கிய அவன். ஒருமுறை தன் உதட்டால் பற்களைக் கடித்துவிட்டு ‘ஹா ஹா’ வெனப் பலமாகச் சிரித்தான். அவன் சிரிப்பினால் மாஸ்ரரின் நடுக்கம் வெளியெடுக்கப்பட்டு எல்லார் முன்னிலையிலும் காட்சிக்கு வைக்கப்படுவதுபோல் இருந்தது. 

இதுவரை பஸ்சின் பின்னால் தன் நோட்டத்தை எறிந்து கொண்டிருந்த அவன் சகா, அவன் சிரிப்பினால் தட்டிவிடப்பட்டு இவன் பக்கம் திரும்பி ‘என்ன விஷயம்’ என்பது போல் பார்த்தான். 

உடனே தன் சைகையால் தன் சகாவை அருகே அழைத்த அவன் மாஸ்ரரைச் சுட்டிக்காட்டி “சுபாஸ், இவர்தான் அவங்கட பிரச்சாரப் பீரங்கி, ஆளைக் கவனி’ என்றான். மேலும் சத்தம் போட்டு. பின்னர் ரகசியமாக ஏதோ சொன்னான். 

மாஸ்ரரின் உயிர் ஊசலாடத் தொடங்கியது. 

‘ஆளைத் தட்டுவமா?’ என்று அவன் சகாவிடம் சொல்லுகிறான் போலவே அவருக்குப்பட்டது. 

இனி மாஸ்ரரை பஸ்ஸைவிட்டு இறக்குவதற்கு கட்டளையிடுவது தான் பாக்கி. 

அவன் சகா மீண்டும் தன் பார்வையை மிக அக்கறையாக பஸ்ஸின் பின்னால் ஓடவிட்டுக் கொண்டிருந்தான். அப்படி அவனை ஈர்ப்பது என்ன என்றறியும் ஆவல் அந்நிலையிலும் மாஸ்ரருக்குத் தோன்றியது. இருந்தாலும் அவர் திரும்பவில்லை. நேரே வெறித்துப் பார்த்தபடி இருந்தார். 

தோளில் தொங்கிய துப்பாக்கியை கைக்கு மாற்றியவாறே மாஸ்ரருக்குக் குரல் கொடுத்தவன் பஸ்ஸின் முன்னால் நின்று அக்கம்பக்கம் சுற்றி நோட்டம் விட்டான். 

வழமையாக பஸ்சுக்குள் ஏறி யாராவது சந்தேகநபர்கள் இருக்கிறார்களா என்று பார்த்து ‘செக்’ பண்ணி விட்டு பஸ்ஸை அனுப்ப வேண்டியவன் அதற்கு மாறாக இன்று மாஸ்ரரைக் கண்ட மாத்திரத்தே அவற்றையெல்லாம் மறந்து ‘பெரிய காய்’ ஒன்று அகப்பட்ட களிப்பில் முகம் மகிழ்ச்சியால் பொங்க, அங்குமிங்கும் பார்ப்பதிலிருந்தே அவர் ஆயுள் இன்றோடு முடியப்போகின்றதென்பதுதானே அர்த்தம்? 

அவன் பார்வை திடீரென்று மாஸ்ரர் மேல் வந்து குத்திட்டது. அவன் குரல் கொடுக்கப் போகிறான். 

ஓய் மாஸ்ரர்; இஞ்சால இறங்கி வாரும்! 

அவன் இன்னும் கட்டளை பிறப்பிக்கவில்லை. அதற்குள் மாஸ்ரரின் மனம் முந்திக் கொண்டு. அவன் குரலை குத்தகைக்கு வாங்கி ஒத்திகை பார்த்து. 

ஓய் பிரச்சாரப் பீரங்கி, இப்படி இறங்கி வாரும்! 

அவர் தன் மனதை எவ்வளவு கட்டுப்படுத்தியும் அது கட்டறுத்துக்கொண்டு முந்தியது. அவரை ஓர் நிலையில் இருக்கவிடாது மனம் அலை பாய்ந்தது. கடைசியில் அவரை அவராலேயே கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமோ என்ற ஓர் அந்தரநிலை. மனம் போடும் ‘கலை’ ஆட்டத்தின் வேகத்தைப் பார்த்தால் இன்னும் கொஞ்சநேரத்தில் அவன் கட்டளை பிறப்பிக்காமலேயே தானாகவே அவர் அவனிடம் போய்த் தலையைக் கொடுத்துவிடுவாரோ என்பது போன்ற பீதியின் அமர்க்களம். 

‘ஐயோ. என்னை யாராவது இறுக்கிப் பிடித்துக் கொள்ள மாட்டார்களா?’ என்று அவர் மேல்மனம் ஓலமிட, உள்மனத்தின் கொந்தளிப்பைத் தாங்கமுடியாத அவர் தனக்கருகில் இருப்பவரை ‘வளர்த்த நாய் எஜமானரைப் பார்ப்பதுபோல்’ பார்த்தார். அருகில் இருப்பவர் அப்படி ஒரு அந்நியரல்ல. மாறாக அவருக்கு நல்ல பழக்கமுள்ள, அவரில் அன்புடைய ஒரு நண்பர் தான். ஆனால் அவர் இவரைப் பார்ப்பதாய் இல்லை. அவர் முகத்திலும் ஈயாடவில்லை. மேற்கில் வீழும் மாலைச்சூரியனின் கதிர்களால் அவர் கறுத்த முகம் காமாலைக்காரனது போல் வெளிறிப்போக, அவர் தூர வெறித்த பார்வையோடு அசையாதிருந்தார். 

அவர் மட்டுமல்ல. பஸ்ஸில் இருந்த அனைவரும் இப்படித்தான் இருந்தனர். திடீரென யாரோ ஒரு முனிவர் போட்ட சாபத்திற்கு இலக்கானவர்கள் போல் வெறித்த பார்வையும் அசையாத உடல்களுமாய் அப்படியே விறைத்துப் போயிருந்தனர். நிற்பாட்டப்படாத பஸ் என்ஜினின் ‘கிர் கிர்’ என்ற கரகரப்பைத் தவிர எங்கும் ஜட அமைதி. 

ஆனால் அந்த அமைதி அதிகநேரம் நீடிக்காது போல் பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில், பஸ்ஸில் உள்ள அனைவரும் ஏககாலத்தில் பீதியால் பெருங்குரலெடுத்துக் கத்தி விடுவார்கள் போல் மாஸ்ரருக்குப்பட்டது. இல்லாவிட்டால் மாஸ்ரரே அப்படிச் செய்து விடுவார் போல் அவர் நாக்கின் நுனி துடித்தது. வாயை அவர் மென்று மென்று விழுகினார். இருந்தாலும் அவரால் முடியாமற் போகவே எல்லோருக்கும் வழிகாட்டுவதுபோல் அவரே குரலை வெளிவரவிடாது தனக்குள்ளேயே கத்தினார். எங்கோ ஆழக்கணற்றின் அடியிலிருந்து அது வெளிவந்து மீண்டும் அதன் தொண்டைக் குழிக்குள் திரும்பிப்போகும் ஓசை. 

“ஐயோ கொலைகாரர்! ஐயோ கொலைகாரர்! என்னைக் காப்பாற்றுங்கள்!! யார் யாரைக் காப்பாற்றுவது? 

‘சீ கத்தாதே! ஏன் இப்படிப் பயந்து சாகிறாய்? சாகப்போகும் நேரத்திலாவது அதைத் தைரியமாக எதிர்கொள்’ 

மனதின் மேல்முனை எதிர்க்குரல் கொடுத்தது. 

இதுகாலவரை உயிரோடு வாழ்ந்தும் உயிரென்பது எதுவென்று தெரியாது வாழ்ந்த அவருக்கு முதன்முதலாக ஒரு அனுபவம் கிட்டியது. அவருக்குள் இருக்கும் உயிரைக் கையில் எடுத்துத் தடவிப்பார்த்து, அதன் கனதியையும் கையில் வைத்து எறிந்து எறிந்து எடை பார்க்கும் புதிய அனுபவத்தளம் அவருக்குக் கிட்டியதுபோல. 

உயிர் இப்படிக் கனக்குமா? 

வைத்து விளையாடும் பொருளை யாராவது பறிக்கப்போகும்போது குழந்தைப் பிள்ளைகள் அந்தப் பொருளைப் பறிக்கவிடாது தன்னுடல் முழுவதாலும் அணைத்து கூனிக்குறுகிக் கொள்வது போல், மாஸ்ரர் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளக் கூனிக்குறுகினார். அது பெரும் பறாங்கல்லொன்று கழுத்தில் தொங்குவதுமாதிரிக் கனத்தது. 

மாஸ்ரருக்கு நினைவு வந்தது. சில கிழடுகள் சாகாது கனநேரம் கிடந்து ‘சேடம்’ இழுப்பதை அவர் பார்த்திருக்கிறார். உயிர் இருப்பதே பெரும்பாரமாக அவர்கள் உயிரோடு போராடும் அவஸ்தை, மாஸ்ரரும் அப்படியா? 

அவர் உயிர் பாறாங்கல் மாதிரி கனக்க அவர் மேலும் கூனிக் கூனிக் குறுகிக் குறுகி…. அவருக்கு இனிமேலும் தாங்கமுடியாது, இனிமேலும் தாங்க முடியாது. அவர் மனம் தன்பாட்டில் கத்தியது. 

ஐயோ இறைவா, இந்த அவலம் ஏன் எனக்கு? 

என்னைக் காப்பாற்றமாட்டாயா, நான் தப்ப வழி இல்லையா? 

அவர் மனம் பெருங்குரலெடுத்துக் கத்தியது. 

ஆனால் அதற்கு நேர்மாறாய் அவருக்கு வெளியே – பஸ்சுக்குள்ளும் அதற்கு அப்பாலும் – எல்லாம் ஸ்தம்பித்தது போல் மயான அமைதி நிலவியது. திடீரென அந்த அமைதியைக் கிழிப்பதுபோல் “ஏய் சுபாஸ்’ என அந்தக் கொலைகாரன் போல் நின்றவன் தன் துப்பாக்கியின் அடிப்புறத்தை நிலத்தில் ஊன்றியவனாய் தன் சகாவை நோக்கி கத்தினான். 

மாஸ்ரருக்கு சன்னமொன்று அவர் காதோடு ஒட்டிய கன்னத்தைக் கிழித்துக்கொண்டு போவது போல் இருந்தது. 

ஆனால் அவனது சகா திரும்பிப் பார்க்கவில்லை. 

அவன் இன்னும் பஸ்ஸின் பின்புற நோட்டத்திலிருந்து மீளவில்லை. கூடவே இப்போ நகத்தை வேறு கடித்து கொண்டிருந்தான். அவனை அப்படி பின்னால் இழுப்பது என்ன? 

மாஸ்ரர் அந்நிலையிலும் தன்நிலையை மறந்து ஒரு மின்வெட்டுப் பொழுதில் தன் முகத்தைப் பின்னால் திருப்பிப் பார்த்துவிட்டு மீண்டார். அந்தக் கணப்பொழுதில் நகத்தைக் கடித்தவாறு பார்வையை மேயவிட்டவனுக்கு பதில் அளிப்பது போல் ஓர் அழகி பின்னால் இருந்து முறுவலித்துக் கொண்டிருந்தாள். கத்தியவனுக்கு அவனது சகா பதிலளிக்காமல் போகவே தன் திட்டத்திற்கு ஆதரவு தர ஆளில்லாது போன நிலையில் அவன் தொண்டையைக் கனைத்துப் பலமாகச் செருமினான். ஆனால் பலனில்லை. பஸ்ஸின் என்ஜின் மட்டும் இன்னும் ‘கர் கர் கர்’ என்ற இரைந்து ஓர் அவலச் சுருதி கூட்டியது. 

பெண் மோப்பத்தில் ஈடுபட்டிருந்தவனும் தன் மயக்கம் தெளிந்து “அப்படியா சங்கதி, இவர் அவங்கட ஆளா?” என்று கூப்பிட்டவனோடு சேர்ந்து மாஸ்ரரை ஒரு பார்வை பார்த்திருந்தால் போதும், அவர் பஸ்ஸைவிட்டு இறக்கப்பட்டு அவ்விடத்திலேயே வைத்து சுடப்பட்டிருக்கலாம். 

இருந்தாலும் இன்னும் நிலைமை சுமுகமாகவில்லை. 

அவர் உயிர் மயிரிழையில் தொங்கிக் கொண்டிருந்தது.

அதட்டியவனின் சகாவின் மோகம் இன்னும் முற்றுப்பெறவில்லை. அவன் மோப்பத்திற்கு ஏற்றவாறு அவள் ‘தீனி’ போட்டுக் கொண்டிருந்தாள்.

குதியுயர்ந்த செருப்பும் ஆளுமாய் தளுக்குமினுக்கோடு அவள் பஸ்ஸில் ஏறியபோது இவருக்கு ஏற்பட்ட எரிச்சல் இன்னும் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அந்த எரிச்சலை ஏற்படுத்தியவளால் தான் அவர் உயிர் இன்னும் இழுத்துப் பிடிக்கப்பட்டிருப்பதுபோல். என்முன்னே விஸ்வாமித்திரரைக் கலக்கிய மேனகை. இந்திரனைக் கீழிறக்கிய அகலிகை ஆகியோரின் கற்பனை முகங்கள் ஓடிவந்தன…. எது நன்மை? எது தீமை? ஒருவரின் நல்லியக்கம் மற்றவருக்குத் தீமையாகவும் இன்னொருவரின் தீய இயக்கம் அடுத்தவருக்கு நன்மையாகவும் மாறி மாறி முடிவில் எல்லாம் நன்மையும் தீமையுமற்ற ஒன்றாய் முடிவதாய் அவருக்கு அந்நேரத்தில் ஓர் மின்வெட்டு ஞானோதயம். 

மாஸ்ரர் ஒரு முடிவுக்கு வருகிறார். 

அந்தத் துப்பாக்கிக்காரர் பஸ்ஸுக்குள் வந்து தன்னை வலிந்திழுத்துக்கொண்டு போய் நாய் போல் சுட்டுத்தள்ளுவதை நினைக்கவே அவர் மனம் அருவருத்தது. சாகமுன்னர் தலை நிமிர்ந்து செல்ல வேண்டும். அந்த அற்பர்களோடு எந்த வித சமரசக் குழைவும் இல்லாமல் அவர்கள் முகத்தில் காறித்துப்பாத குறையாக சாவை வரவேற்க வேண்டும். 

அவர் பொறுமையிழந்த அந்த நிலையில் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இருந்தும் ஏனோ மனம் அலைபாய்ந்தது. 

துப்பாக்கியைக் குத்தவைத்தவாறு குரல் கொடுத்தவன் மீண்டும் அதைத் தூக்கிக் கொண்டு பஸ்ஸைச் சுற்றிவரத் தொடங்கினான். அவன் பெரிதாகக் கத்தி, பறைசாற்றி பஸ்ஸில் இருந்தவர் விறைக்க, அவர்களைப் பயமுறுத்த எதையோ ஹீரோ பணியில் செய்யும் வேட்கையில் நடந்தான். ஆனால் அதை அவனாலே செயல்படுத்த முடியாத பதற்றம், அதை வெளிப்படுத்த முடியாது நாக்கு உள்விழுந்து போய்விட்டது போல் வெறும் வாயைச் சப்பும் உதட்டசைவு. 

துவக்கைத் தூக்கிக்கொண்டு பஸ்ஸை வலம்வந்தவன் மாஸ்ரர் இருந்த ஜன்னல் அருகே வந்ததும் துவக்கை தோளிலிருந்து சுழற்றி கையில் எடுத்தான். 

இனி சரி, அவன் பெரிதாகக் கத்தி என்னை கீழிறக்கப் போகிறான். ‘நான் அதற்குத் தயாராக வேண்டும்’ -மாஸ்ரர் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவரது இதயம் அடிக்கும் ஓசை பஸ்ஸில் உள்ள எவர்க்கும் கேட்பது போல் உலக்கை போட்டு இடித்தது. 

இரண்டு நாட்களுக்கு முந்தி இவர்களின் கூட்டத்தால் கொல்லப்பட்டு மாஸ்ரரின் வீட்டுக்கு அருகில் நூறு யாருக்கு ஒருவராக போடப்பட்டிருந்த மூவரின் முகங்கள் அவர் கண்முன் விரிந்தது. சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்த அவர்களின் முகங்கள், புதுவீடுகளின் முன் தோஷ நிவர்த்திக்காக மாட்டப்பட்டிருக்கும் “கீர்த்தி முகங்கள்’ மாதிரி வீங்கி பருத்து அகோரமாகக் காட்சியளித்தன. 

இவற்றோடு ஒன்றாய் மாஸ்ரரின் முகமும் அராலிச் சந்தியில் கிடக்கப் போகிறது. புதிய ‘கீர்த்தி முகம்’.. 

அவர் ஜன்னலின் கண்ணாடிக்கருகே வந்தவன் அவரை குரோத வெறியோடு பார்த்துக் கொண்டிருப்பது போல் பட்டது. 

அவர் அவனைப் பார்க்கவில்லை. 

மாஸ்ரரின் பார்வை, அவர் அருகில் இருக்கும் நபரைப் போல் வலுவிழந்து வரவழைத்த சாந்த முறுவலோடு மறைந்து கொண்டிருக்கும் மாலைச் சூரியனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. பென்னம் பெரிய தீப்பந்து, அரக்கனொருவன் வாய்க்குள் போவதும் பின்னர் வெளிவருவதும் போல் அந்தரப்படும் சூரியப்பந்து. 

மாஸ்ரரின் நண்பருக்கு அருகிலிருந்த பஸ்சாரதி ஸ்ரியரிங்கில் தலைவைத்தவனாய் பீதியை மறைத்தபடி தன் இடக்கையில் இருந்த நேரத்தைப் பார்க்கிறான். ஐந்து நிமிடத்திற்குள் திணிக்கப்படும் ஆயிரம் நிகழ்வுகள் ஆயிரம் நிமிடம் போன்ற நேரச் சுமையில் இழுபட… 

மாஸ்ரர் அருகில் நின்றவன் தொண்டையைக் கனைக்கிறான்.

சரி இனி அவன் கத்தியவாறே அவரை வந்து வெளியே இழுத்தெறியப்போகிறான். 

மாஸ்ரர் இருந்தது போதும் இறங்கி வெளியே வாரும்!

அப்படிச் சொல்லியவாறு அவரை வந்து பிடரியில் தள்ளிவிடப் போகிறான். 

இப்போ எல்லோர் பார்வையும் அவரையே நோக்கிக் குவிவது போன்ற உணர்வு. 

ஆனால் இன்னும் அவன் தொண்டையைவிட்டு எந்த வார்த்தையும் வந்ததாக இல்லை. 

அவன் தொண்டைக்குள்தான் அந்தச் சூரியப்பந்து போய் அடைத்துக் கொண்டது போன்ற ஒரு உறுத்தலின் வெளிக்காட்டலாய் ‘கோர்க்’ என்று பெரிதாக உள்ளிழுத்து ஒரு காறல் காறினான். அதைத் தொடர்ந்து வந்த ஒரு கண இடைப்பொழுதின் பின் ‘தூ…..1″ வென்று பெரும் வெறுப்பை உமிழ்ந்த ஒரு துப்பல். 

இனி? 

அவன் அவரை ஜன்னல் வழியாக ஒரே அலக்காகத் தூக்கி வெளியே எடுக்கப் போகிறான் போலும். 

மாஸ்ரரின் அந்தரமும் ஆற்றாமையும் தம் எல்லைக்கோடுகளுக்கே சென்றுவிடுகின்றன. இனிமேலும் பஸ்ஸுக்குள் இருக்க முடியாது. வெளியே எழுந்து போவது தான் புத்தி. அவன் எதுவானாலும் செய்து கொள்ளட்டும். மாஸ்ரர் தயாரானார். 

அவர் கண்கள் மங்குகின்றனவா அல்லது அவர் பார்வை விழும் வெளியிடங்கள் தான் மங்கிக் கரைந்து கொண்டு போகின்றனவா? 

அவர் பார்வை விழும் அந்த மங்கல் வெளியிலே அவர் மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் அனைவரும் வந்து வந்து போகின்றனர். அவர்கள் கண்களில் கண்ணீர்… இன்னும் சிறிதுநேரத்தில் அவர் கண்ட ‘கீர்த்தி முகங்களில் ஒன்றாய் அவரது தலையும் அராலிச் சந்தியில் கிடப்பதை இந்த பஸ்ஸில் போகிறவர்கள் வீட்டாருக்கு அறிவித்துவிட்டுப் போக, அங்கே…. 

வேர்வையால் மாஸ்ரரின் உடல் தெப்பமாக, கண்கள் இருண்டு கொண்டு வந்தன. அவர் தலையை மெதுவாக சீற்றின் பின்னால் சாய்த்தார். ஆனால் அந்த நேரந்தான் அவனின் குரல் படுபயங்கரமாக ஒலித்தது. 

“மாஸ்ரர்!” 

அவர் நெஞ்சில் யாரோ பலமாக அடித்தது போல தாக்கம். அவர் இதயம் துடிக்காமல் நின்றுவிட்டது போல் ஸ்தம்பித்து மீண்டும் படுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது. 

மாஸ்ரர் சமாளித்துக் கொண்டு, செத்துக் கொண்டு போன தன் முகத்தை கூப்பிட்டவன் பக்கம் திரும்பி நேர்பார்வை எறிந்தார். அவன் பார்வை மாஸ்ரரின் பார்வையைச் சந்தித்த போது, அவன் வாய் ஏதோ கொடூரமாகச் சொல்லத் துடிப்பதும் அவன் கைகள் ஏதோ செயலில் இறங்க பதறுவதும் போல் தெரிந்தன. 

மாஸ்ரர் அவன் பஸ்ஸுக்குள் நுழைந்து விடுவானோ என்ற ஐயத்தில் இருக்கையை விட்டு எழுவதற்கு நுனிக்கால் பாதங்களை உயர்த்தினார். 

ஓர் கணந்தான். 

இதுவரை ‘காதல்’ சமிக்கைகளில் கட்டுண்டு கிடந்த அவனது சகா திடீரென உஷார் பெற்றவனாய் “ஏய் திலீப், அவங்கள் வாறாங்கள்ளடா” என்று பலமாகக் குரல்கொடுத்து தன் முன்னால் வந்து கொண்டிருப்பவர்களைக் காட்டினான். 

தூரத்தே இருவர் அருகருகே துப்பாக்கிகளைக் காவிக் கொண்டு தாடி மீசை தலைப்பாகையோடு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வரமுன்னரே சப்பாத்தி வாடை வீசுகிறது. 

“தொலைவான்கள் வந்தா உபத்திரவம். அதை இதைக் கேட்டண்டு நிற்பாங்கள் கெதியா வெளிக்கிடு” என்றான். திரும்பவும் அழகியில் ஐக்கியமாகியிருந்த அவனே. 

குத்தவைத்திருந்த துவக்கை மீண்டும் தூக்கினான் மற்றவன். 

‘என்னைப் பஸ்ஸுக்குள் வைத்தே சுடப்போகிறான் போல’ என்று எண்ணி இறங்க ஆயத்தமாகி மாஸ்ரர் அவக்கென சீற்றை விட்டெழுந்த அதேநேரத்தில், அவரது காற்சட்டையை பலமாக இழுத்து அமரவைத்தார் அருகேயிருந்த நண்பர். 

“மாஸ்ரர், இனிமேலாவது உங்கட பிரச்சாரங்களை வீட்டிட்டு ஒழுங்காக இருக்கப் பாருங்க” என்று கூறியவன் “உம் பஸ்ஸை எடும்” என்றான் சாரதியைப் பார்த்து. 

பஸ் புறப்பட்ட போது இதுவரை பாறாங்கல்லாக கனத்துத் தொங்கிய மாஸ்ரரின் உயிர், இப்போ எங்கே போயிற்று என்றே தெரியாத நிலையில் அவர் காற்றில் மிதப்பது போல் இருந்தார். 

– 1989

– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *