மௌனங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 14, 2025
பார்வையிட்டோர்: 393 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸமீரா கூரைமுகட்டை வெறித்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். தன் கட்டுப் பாட்டையும் மீறிப் பிரவாகிக்கும் கண்ணீரை நிறுத்தும் வழி அவளுக்குத் தெரியவில்லை. உலகில் தாண்டவமாடும் அக்கிரமங்களைச் சுட்டுப் பொசுக்கக் கிளம்பியது போன்ற வெப்பத்துடன் அவளின் நாசியிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாகப் பெருமூச்சுக்கள் வெளிப்பட்டன. அதைத் தவிர அவளால் வேறு என்னதான் செய்யமுடியும்? இருபத்தெட்டு வயதான ஸமீராவின் மனக்குமுறல்கள் அவளுக்குள்ளேயே அடங்கி, அமிழ்ந்து, அழிந்து போகவேண்டுமென்றுதான் சமூகமும் சுற்றமும் எதிர்பார்க்கின்றன. ஏனென்றால், அவள் பெண்! தனக்கெதிராய் இழைக்கப்படும் எந்தவோர் அத்துமீறலையும் பொறுத்துப் போக வேண்டுமென்று சமூகம் பெண்களுக்கு விதித்துள்ள எழுதப்படாத சட்டத்துக்கு, அவள் மட்டும் விதிவிலக்காகிட முடியுமா? 

வறுமையில் உழன்ற ஒரு குடும்பத்தின் இரண்டாவது மகள் ஸமீரா, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த அகதிகளின் பட்டியலில் அவள் குடும்பமும் ஒன்று. கண்ணிவெடியில் சிக்கிக் காலொன்றை இழந்த தந்தை, பார்வையும் பறிபோன நிலையில் பரிதவித்து நின்றபோது. நெருப்போடு போராடித் தானுமொரு விறகாய் எரிந்து, குடும்பத்தைக் கரையேற்ற அவளின் தாய் ஆமினா பட்ட துன்பத்தை எண்ணவே மெய்பதறும் அவளுக்கு. தன் குடும்பத்தின் உயர்வுக்கு உழைப்பதே வாழ்வின் ஒரே குறிக்கோள் என்று வாயோயாமல் புலம்பிய தமையன். பல்கலைக்கழகத்தில் கற்கும்போது, தான் காதலித்த பெண்ணையே கரம்பற்றித் தனிக்குடித்தனம் போன பின்புதான், அந்த ஏழைக்குடும்பத்தின் ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் வெடிகுண்டு வைத்த கட்டிடமாய் சுக்கலாக்கிப் போயின. 

நோயாளிகளாகிவிட்ட பெற்றோர், இல்லறம் பற்றிய இனிய கனவுகளில் ஆழ்ந்திருக்கும் பருவ வயதை எட்டிநிற்கும் இரண்டு தங்கைகள் ஓ.எல். எடுக்கவிருக்கும் தம்பி ஆகியோர் இருக்கும் குடும்பத்தின் சுமையை அவளின் சின்னத்தோள்கள் எப்படித் தாங்கும்? ஆனால், இரக்கமேயின்றி லட்சக்கணக்கில் சீதனங் கேட்டபடி வரன்கள் வந்து அவள் வீட்டுக் கதவு தட்டின. 

ஸமீரா சிந்தித்தாள். ஆடைத்தொழிற்சாலையில் ‘ஓவர்டைம்’ அது இதுவென்று கிடைக்கும் இரண்டாயிரத்து முந்நூறு ரூபாவோடு வீட்டில் தங்கைகள் செய்யும் சிறுகைத்தொழில் வருமானமுமாக மாதம் மூவாயிரம் ரூபாவை வைத்துக்கொண்டு தன் குடும்பம் விமோசனம் காண முடியாது என்றுணர்ந்தே அவள் வெளிநாடு போனாள். சொந்த பந்தங்களைப் பிரிந்த சோகத்தைத் தாங்கிக் கொண்டு, பிரச்சினைகளின்றி ஒரு வருடத்தை ஓட்டியவளின் வாழ்வில் நிஜாமில் குறுக்கிட்டான். 

அவள் வேலைபார்த்த வீட்டின் டிரைவராகத் தனதே ஊரைச் சேர்ந்தவனான நிஜாமில் வேலையில் சேர்ந்தபோது, ஸமீரா அகமகிழ்ந்து போனாள். தன் தமையனின் நண்பன் என்பதால், சொந்தச் சகோதரன் போல் பக்கபலமாக இருப்பான் என்ற எதிர்பார்ப்பில், மண் விழுந்தது. தன்னையே சுற்றி வருவதும் பல்லிளிப்பதுமாக இருந்தவனிடம் இயன்றளவு ஒதுங்கியே இருந்தாள் ஸமீரா. ஒருநாள் சாப்பாடு கொண்டு போய்க் கொடுக்கும்போது, தான் அவளை விரும்புவதாக அவன் . உரைத்தபோதும், அவள் அதிர்ச்சியுறவில்லை. ஓரளவு அதனை எதிர்பார்த்தே இருந்ததால், நயமாகவே தன் மறுப்பினை வெளியிட்டாள். அவனோ நாகரிகமாக ஒதுங்கிக் கொள்வதாக இல்லை. அவளை மிரட்டிப் பார்த்தான். அவள் மசியவில்லை. அதன் விளைவைத்தான் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். 

மீண்டும் கண் கலங்கியது ஸமீராவுக்கு. ஒரு பெண் வெளிநாடு போய்விட்டால், அவள் கெட்டுப்போனவள் என்ற பட்டமும் கூடவே ஒட்டிக்கொள்ளும் அவலத்தை எண்ணி, எங்குபோய் முட்டிக்கொள்வது? தான் நடத்தைகெட்டு அலைந்ததாக நிஜாமில்தான் ஊரில் கதை பரப்பினான் என்றால், உறவினர் உட்பட ஊரவர் அனைவரும் தன்னை இழிவாகப் பார்ப்பதை, பேசுவதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. 

பெண்கள் வெளிநாடு போய் உழைப்பது ஹறாம் (தடுக்கப்பட்டது) என்று பிரசங்கங்களில் முழங்குவோரும், தன் உழைப்பிலிருந்து வீடும் ரொக்கமுமென்று லட்சக்கணக்கில் சீதனம் வாங்கிக் கொண்டு தன் சகோதரிகளை மணமுடித்துவிட்டு, இன்று மானம், குடும்ப கௌரவம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டு உறவைத் துண்டித்துவிட்ட மச்சான்மார்களும்; ஏன்? வாய் ஓயாமல் அவளுடைய நடத்தைக்குக் களங்கம் கற்பிக்கும் ஊரவர்களும், அவள் வெளிநாடு செல்வதைத் தடுத்து நிறுத்தவோ, அவளுடைய குடும்பத்தைத் தூக்கி நிறுத்தவோ எப்போதேனும் முயன்று இருப்பார்களா? 

அவளுடன் பணிபுரிந்த பாத்திமாவைப் போலப் பெற்றோரின் டாம்பீக வாழ்வு மோகத்துக்காகவா, அவள் வெளிநாடு சென்றாள்? இருப்பதற்கு ஓர் இல்லிடமற்று. உண்ணஉடுக்கக்கூட வருமானம் போதாமல் பற்றாக்குறையில் வாழ்வையோட்டிக் கண்ணீரில் வாழ்ந்த தன் குடும்பத்தின் விடிவுக்காகத்தானே அவள் சென்றாள்? கண்காணாத ஒரு பாலைவனத்தேசத்தில், முன்பின் அறியாத அந்நியரின் வீட்டிலே, பாத்ரூம் கழுவுவது முதல் சகல வேலைகளையும் முதுகொடியச் செய்து தாதியாய், வேலைக்காரியாய் காலத்தையோட்டுவது அவளுக்கு மட்டும் இன்பமாகவா இருந்திருக்கும்?யாரோ ஒரு சிலர் தவறாக நடந்திருக்கக் கூடும் என்பதனால், எல்லோரும் அப்படியே இருந்து விடுவார்களா? ஏன் இந்த மனிதர்கள் இதை நினைக்க மறுக்கின்றார்களென அவளுக்குப் புரியவில்லை. 

துடைக்கத் துடைக்கப் பெருகும் கண்ணீரைப் புறங்கையால் துடைத்தபடி எழுந்திருந்த ஸமீராவை, உம்மாவின் குரல் அழைத்தது. இருமி, இருமி அவர் யாருடனோ உரையாடுவது அவள் செவியில் மெதுவாக நுழைந்தது. முகத்தைக் கழுவிக் கொண்டு முன்னறைக்கு விரைந்தாள். பக்கத்துவீட்டு ஜீனா சாச்சி வந்திருந்தார். ஸமீரா வருவதைக் கவனித்தபடி கையிலிருந்த கோப்பையின் கடைசிமிடறு கோப்பியையும் உறிஞ்சிவிட்டு, டீப்பாயில் கோப்பையை வைத்தார். 

“புள்ள ஸமீரா நான் நேரா விஷயத்துக்கே வாறன். உனக்கும் வயசு ஏறிட்டே போகுது. தங்கச்சிகள்ட கலியாணமும் முடிஞ்சிச்சுதானே? இனி, உனக்கும் ஒரு ஒழுங்கைச் செய்யணும் எண்டு உம்மா ஒரேபுடியில நிக்கிறா.” 

“என்ன புள்ள பேசாம இருக்கிற? இந்த ரபிக்காபீவிட மவன் ஆரிஃபீனுக்கு ஒரு ஒண்ணரை லட்சம் ரொக்கத்தோட பொண்ணு பேசுறாங்க.” 

“அவனுக்கா? அவனொரு குடிகாரனாச்சே! மூத்த பொஞ்சாதியும் தலாக் கேட்டுட்டு போயிட்டாளே! அவனப் போயி; என்ன தங்கச்சி இது?” இது உம்மா… “பிடிக்காட்டி விட்டுடுங்க. ஏதோ பேச்சு வந்ததால சொன்னேன். அப்ப நான் வரட்டுமா?” 

அவர் சென்று சற்றைக்கெல்லாம் கொல்லைப்புறத்தில் காயவைத்திருந்த கோப்பித் தட்டத்தை எடுக்கச் சென்ற ஸமீராவின் காதுகளில் நாராசம்போல ஜீனா சாச்சியின் வார்த்தைகள் வந்து விழுந்தன. அவளிதயம் நொந்து வெதும்பியது. “பெரீய்…ய மகாராணின்னு நெனப்பு! பேரக் கேட்டா சந்தி சிரிக்குது! இந்த லட்சணத்துல அவளுக்கு ‘டிப்டொப்’ மாப்பிள கேட்குது பாரேன்! எப்படியோ தொலையட்டும் சனியன் எண்டு நான் திரும்பி வந்துட்டேன்.” அதற்கு மேல் கேட்க முடியாமல், வீட்டுக்குள் வந்து விட்டாள். 

“ச்சே! என்ன மனிதர்கள் இவர்கள்! இவர்களுக்கு இதயமே இல்லையா? இஸ்லாம், பெண்களுக்கு உரிமையும் கண்ணியமும் கொடுத்து, அவர்களை நிர்வகித்து, குடும்பப் பொறுப்பை ஏற்பதை ஆண்கள் வசம் ஒப்பித்து இருக்க, அதனை அவர்கள் புறக்கணித்துவிட்டு சுயநலமாய் ஒதுங்கிக் கொள்வதனை இந்தச் சமூகம் கண்டுகொள்வதே இல்லை. இஸ்லாம் கூறாத சீதனம் எனும் கொடுமையைத் தடுத்து நிறுத்தும் ஆக்கபூர்வ முயற்சிகளில் ஈடுபட சமூகத்தில் அனேகர் முன்வருவதே இல்லை. ஸகாத் என்னும் செல்வ வரியை முறையாய் அறவிட்டு, வறுமையில் சிக்கித் தத்தளிக்கும் குடும்பங்களைச் சீர்திருத்தி முன்னேற்றும் பணியில் பள்ளிவாசல்கள் பாராமுகமாய் இருக்கின்றன. வீண் பழிசுமத்தி படுதூறு சொல்வதை, மதுவருந்துவதை விடவும் கடுமையான குற்றமெனக் கருதும் ஓர் உன்னத மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரு சமூகம், இறைமறையிலிருந்து ஒளிபெற விரும்பாமல் இருட்டுக்குள் இருக்க முரண்டு பிடிக்கின்றது. 

வீண் ஆடம்பரத்துக்காக வெளிநாடு போகின்ற பெண்களின் நிலை எப்படியிருப்பினும், ஹறாமென்று தெரிந்தும் தன்னைப்போல் நிர்ப்பந்தம் காரணமாக உழைக்க வெளியில் போன பெண்களுக்கு இந்தச் சமூகமும் ஏன் இப்படி நிர்த்தாட்சண்ணியமாய் அநீதி இழைத்து தமது வாழ்க்கையோடு விளையாடுகின்றது?” 

அவள் தனக்குள் எண்ணியெண்ணிக் குமுறினாள். அவளின் உள்ளம் தன் அவலநிலை என்று நீங்கி விடிவு கிடைக்கும் என்று ஏங்கித் தவித்தது. நாக்கில் நரம்பின்றி நாலுவிதமாய்ப் பேசுவோரின் பேச்சுக்களை… ஏளனங்களைக் கேட்க நேரும்போது, பாரதியுடைய கவிதையின் உணர்வலைபோல் ஆவேசம் பொங்கும்; நறுக்கென்று நாலுவார்த்தை கேட்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். ஆனால், அவள் பேசவில்லை. 

அவள் எவ்வளவுதான் கத்தினாலும் கதறினாலும் ஏழையின் சொல், அதிலும் ஒரு ஏந்திழையான அவள் சொல் ஒருபோதும் அம்பலமேறப் போவதில்லை. மனித உள்ளங்கள் அவளுக்காக உருகக்கூடும். ஆனால், மனித உருவில் நடமாடும் நடைப்பிணங்களுக்கு அவளுடைய உணர்வுகளின் நியாயம் புரியப்போவதில்லை. எனவே, அவள் மௌனமாக இருப்பதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டாள். நிச்சயமாக அவள் கோழை அல்ல; யதார்த்தம் என்ற சூழலில் சிக்கித் திணறுகின்ற ஓர் ஏழை. அவளின் மௌனத்தின் பின்னால், ஒரு சராசரிப் பெண்ணின் ஊனமாக்கப்பட்ட உணர்வுகளின் கண்ணீர் புதைந்து கிடக்கும். இந்த மௌனங்கள் என்றாவது ஒருநாள் நல்ல முடிவு கிடைக்கக்கூடும் என்ற அற்ப எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன.. நாளையாவது? 

– அல்-இன்ஷிராஹ், 98-99 (பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஆண்டுச் சஞ்சிகை) 

– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *