கதையாசிரியர்:
தின/வார இதழ்: இன்ஸான்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2025
பார்வையிட்டோர்: 640 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அலியார் மௌத்தாகி விட்டார். சில வினாடிகள் வரை துடித்துக்கொண்டிருந்த இந்தப் பொய்யுடல் இப்போது வெறும் கட்டையாகிவிட்டது. 

மரக்கட்டையாவது இறந்த பின்பும் பயன்படும். மனிதக்கட்டையோ… 

அதுவும் இந்தக் கிழட்டுக்கட்டை, குறுகிக் கூன் விழுந்து விழி பிதுங்கி. பீளை தள்ளி, சீழ் பிடித்து, வீணி வடித்து துருத்திய எலும்புகளுக்கு நடுவே சிக்குண்டு திணற ஈயும் எறும்பும் மொய்க்க சாக்கடையின் நாற்றத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் இந்த உடலா – அலியாரின் உடலா – பயன் படப் போகிறது! 

மையித்து மல்லாந்து கிடந்திருந்தது. கழுத்துவரை இழுத்து மூடப்பட்டிருந்த போர்வையின் நீளம் ஒரு சின்ன வயதுச் சிறுவனைப் போர்த்தப் போதும். அவ்வளவு குறுகி விட்டது அலியாரின் உடல். 

விழிகள் மூடியிருக்க வாய்மட்டும் திறந்திருந்தது. இன்னும் ஏதாவது தேவையிருக்கிறதா அதற்கு- பூரணத்துவம் பெற்ற அந்த அறுபத்திநாலு வயது உடலுக்கு இன்னும் என்னதான் தேவைப்படுகிறது? 

சூடான நீர்த்துளிகள் என் மார்பின்மேல் விழுந்து, புழுவின் நெளிவுடன் கீழ் நோக்கி இறங்கியது. 

நான் அழுகிறேனா? 

அட்டா! நான் ஏன் அழவேண்டும்? மெளத்தைக்கண்டு பயந்துவிட்டேனா? இருக்கலாம். 

மௌத்தின் பயங்கரம் – என் கண்ணெதிரே அந்தப் பஞ்சை உடல் துடித்த இளம் துடிப்பு – மெல்லிய முனலுகலுடன் இமைகள் மூடிக்கொண்ட வேகம், இவைகளை கண்டா நான் பயந்துவிட்டேன். 

எனக்கு நிமோனியாதான். ஆனால் சீரியஸ் இல்லை என்று டீ.எம்.ஓ.வே.கூறிவிட்டார். இருந்தும் இந்தப் பாழும் மனம் இருக்கிறதே… 

என் அருகில் கிடந்த அலியாரின் உடலைப் பிரேத அறைக்குக் கொண்டு சென்றார்கள். 

சென்ற வாரம் தான் நான் மன்னார் ஜெனரல் ஹொஸ்ப்பிட்டலில் சேர்க்கப்பட்டேன். இங்கு வந்த இரண்டாம் நாள் தான் இமை திறந்தேனாம், எனது பக்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிழிந்த ஸ்கிரீனின் பினனால் – அலியார் கிடந்தார் பிணம் போல். 

ஒருகணம் துணுக்குற்றேன் மறுகணம், அவரது தோற்றம்… வயது இவையெல்லாம் என் இதயக் குழியில் நர்த்தன மாடியதால், துணுக்குற வேண்டிய தேவையில்லை என்ற நினைப்பு நிழலிட்டது. 

இறக்க வேண்டியவர்தான், இறக்கப் போகிறார். 

ஆனால்- 

என்னுடன் ஒட்டித்திரிந்து, தோளில் சுமந்து துள்ளித் திரிந்த உருவம் என் கண்முன்னே இறந்து கொண்டிருக்கிறதென்றால்…

உடலிலே கடைசிப் பலம் உள்ளவரை உழைத்தே உண்டு வந்த அந்த உருவம் என்னெதிரேயே இறந்து கொண்டிருக்கிறதென்றால் … 

எனது ஊரின் மூலைமுடுக்குகளிலெல்லாம் முகமலர்ந்து திரிந்த அந்த உருவம், அநாதையாக ஆதரவற்றவனாக இறந்து கொண்டிருக்கிறதென்றால்… 

எனக்கு அறிவு தெரிந்த காலத்திலிருந்து அலியாரைத் தெரியும். அவர் எங்கிருந்து வந்தார் என்பதோ? அவரின் வமிசம் எத்தகையது? என்பதோ எனக்குத் தேலையற்றது அவர் இந்தயாவிலிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்திருந்தேன். அவரின் சொந்த ஊர் எருக்கலம்பிட்டி என்று கூறிக் கொண்டார்கள். 

எனது வீட்டுக்குச் சீமேந்துக் கல் அரிகையில் அவரது கை நெளிவின் சுறுசுறுப்பை, என்னைத் தூக்கித் தோளில் வைத்து ‘உப்பு முட்டை’ விளையாடுகையில் உணர்வேன். 

அவரிடம் எனக்கு அன்றிலிருந்து பிடித்த பிடிப்பு அறுபடவேயில்லை. 

காரணம், அவர் ஓர் உண்மைத் தொழிலாளி. 

(பக்கம் 14 இல்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்)

போலும். என்னை முறைத்து நோக்கினார். 

நான்தான் பனங்காட்டு நரியாயிற்றே! 

மணித்தியாலங்கள் பல அழிகின்றன. டாக்டர் ஜிப்ரி என்னருகில் வந்தார். அவர் புதியவர். புத்தி மிக்கவர். அண்மைக் காலத்துள் இங்கு வந்த ஒரேயொரு முஸ்லிம் டாக்டா அவர் மட்டும்தான். அவரின் தந்தையோ ஒரு அயோக்கியன். எஹுதித் தொழில் புரியும் ஒரு கயவன். 

இவரும் அப்படியே இருப்பார் என்று எப்படிக்கூற முடியும்? 

‘டாக்டர்! அலியாரைக் கொண்டு போய் விட்டார்களா?’

நான்தான். 

அவருக்கு ஆத்திரம் வெடித்துச் சிதறுகிறது. குமுறுகிறார் “ஒரு பயல் வரக்காணோம். ஒரு முஸ்லிமின் மையித்தை எடுக்க இங்குள்ள ஒரு சோனகனுக்கும் மனம் இல்லையே! நன்றிகெட்டவர்கள்.” 

எனக்குப் பூரண திருப்தி. 

பக்கத்துக் கட்டில் மொத்த வியாபாரி முதல் இரண்டொரூ பெரிய மனுசர்களும் கூனிக்குறுகுகின்றனர். 

“பாருங்க டாக்டர் உழைத்து ஓடாய்ப்போன இந்த உருவத்தை, அடக்கம் செய்ய நாதில்லையே, அலியாரின் பணம் கூட யார் யாரிடமெல்லாமோ இருக்கிறதாம். யாராவது ஒரு ஹாஜியார் இந்த மையித்தை எடுத்து அடக்கம் செய்தாலும் அது எவ்வளவு பெரிய நன்மை.” 

-நான் தான், 

“என்ன செய்வது? இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்” டாக்டர் போய்விட்டார். 

மொத்த வியாபாரி சொல்லக்கூடாத வார்த்தைகளையெல்லாம் சொல்லி என்னை வைவதை உணர்ந்தேன். 

மீண்டும் டாக்டர் என்னருகில் வந்தார். 

“டாக்டர் விசயம் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. யார் அந்த புண்ணியாத்மா? என்று அறிய ஆவலாயிருக்கிறது. டாக்டர் கொஞ்சம சொல்லுங்கள் டாக்டர்” 

ஆனால் டாக்டர் ஜிப்ரி அடி உதட்டைப்பிதுக்கினார்.

“மன்னாரில் மீண்டும் ஒரு புயல் அடித்தாலும் மக்களின் மனம் மாறாதப்பா. மையித்து இன்னும் எடுக்கப்படவில்லை.” 

நான் விம்மிவிடத் துடித்தேன். ஆனால் மூளையில் திடீரென்று ஓர் உறைப்பு. 

“டாக்டர் ஒரு வேலை செய்தாலென்ன?” டாக்டர் ஜிப்ரியை ஆவலாய்க் கேட்டேன். 

“என்ன?” 

“இந்த மையித்தை நீங்களே – உங்கள் செலவில் – எடுத்தால் என்ன?” 

டாக்டர் ஜிப்ரி துணுக்குற்றார். 

‘எனை நான்?’ 

நான் முயற்சியை கைவிடவில்லை. “ஏன் டாக்டர் நீங்கள் செய்யப்போகும் இக்காரியம் உங்களது மதிப்பை நன்கு உயர்த்திவிடும் டாக்டர். அத்தோடு ஒரு இஸ்லாமியனது கடமையை நீங்கள் நிறைவேற்றியதாகவும் ஆகும் டாக்டர்’

‘……’ 

‘டாக்டர் அலியாரின் பணத்தில் எத்தனை பேர் டாக்டராகியிருப்பார்கள். புனிதகரமாக உங்கள் தொழில் மேலும் சிறப்புறும் நீங்கள் செய்யப் போகும் இக்காரியத்தால்’ 

‘நீங்கள் சொல்வது சரிதான்… ஆனால் என் வாப்பாவைப் பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே’

‘ஐயோ டாக்டா.. வாப்பா…அவர் செய்த பாவங்களிற் சிலதையாவது இந்தக் காரியத்தின் மூலம் கழுவிவிட முடியாதா டாக்டர்?’ 

‘பார்ப்போம்’ டாக்டர் ‘விடு விடு’ வென்று வெளியேறினார் அவ்விடத்தைவிட்டு. 

கோழை! வயது வந்த – படித்த – பட்டம் பெற்ற – பதவியில் உள்ள கோழை! 

நான் தோல்வியினால் குன்றிப் போனேன். 

காலம் கரைந்து கொண்டிருந்தது சில வினாடிகளின் பின் டீ.எம்: ஓர் என்னருகில் வந்தார். ‘டாக்டர் அலியாரின் நிலை எப்படியிருக்கிறது டாக்டர்?’ 

‘நாங்கள் அப்பிணத்தை எரிக்கப்போகிறோம்!’ 

நான் அலறினேன் ‘டாக்டர்… அவர் முஸ்லிம் டாக்டர்… அலியார் ஒரு முஸ்லிம்…’ 

‘அதற்கு நாங்கள் என்ன செய்வது? முஸ்லிம்கள் நிறைந்த இந்த ஊரில் ஒரு ஜம்பது ரூபாய் செலவு செய்ய ஆள் இல்லையே….’

– 07-06-1968, இன்ஸான் முஸ்லீம் வாரப் பத்திரிகை.

– ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: செப்டம்பர் 1982, மன்னார் வாசகர் வட்டம் வெளியீடு, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *