கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 13, 2026
பார்வையிட்டோர்: 110 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

அதிகாலை நேரம். கருப்பும் வெளுப்புமான காலம். சூரியக் குழந்தை பிறப்பதற்கான முன்னேற்பாடு. வானமகள் வலியால் வெளுத்துக் கொண்டிருந்தாள்.

மெரினாவின் கடற்கரை ஓரச் சாலையில்….கருப்பு கண்ணாடிகளை ஏற்றி விட்டுக் கொண்டு அந்த வெள்ளை நிற இன்னோவா கார் பத்துக் கிலோ மீட்டர் வேகத்திற்கும் குறைவான வேகத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.

பலப்பல பெரிய மனிதர்களிருந்து சாமான்யர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஓடிக்கொண்டும், நடந்துக் கொண்டும், இன்னும் பலப்பல யுக்தி, வித்தியாசங்களில் உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருந்தார்கள்.

உணவே விஷமாகப் போய்விட்டதால்…எல்லோருக்கும் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய அக்கறை.

ஓடுதல், நடத்தல், யோகாசனம், கைகளைத் தூக்கி இறக்கி, கால்கள் நீட்டி, மடக்கி…அப்பா! உடலுக்குத்தான் எத்தனை விதமான பயிற்சிகள்! காரின் உள்ளே உட்கார்ந்து எல்லாவற்றையும் கவனித்து வந்தவளுக்குப் பிரமிப்பாக இருந்தது.

ரூபஸ்ரீக்கு வயது 35. வெளியே சொல்லப்படும் வயது இருபது (?)! சொல்லலாம்…! காரணம்… அந்த அளவிற்கு அவள் உடல் கட்டுக்கோப்பு., இளமை.

இந்தியா முழுவதும் பேசப்படும் முதல் தர நடிகை.

அந்த பிரபலம், புகழை வைத்துக் கொண்டு நாட்டில் உள்ள பெரிய கட்சி ஒன்றில் முக்கியமானவளாகிவிட்டாள். இன்னும் சில நாட்களில் மத்திய மந்திரி ஆகப்போகின்றாள் என்கிற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது.

கட்சியின் வலது கை பெரிய சக்தியல்லவா…? அவளுக்குத் தராமல் யாருக்குத் தரப்போகிறார்கள்?!

“9.00 மணிக்குக் கட்சி கமிட்டிகே கூட்டம் இருக்கு மேடம்…!” முன்னிருக்கையில் ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணராம். இவளது அந்தரங்கச் செயலர், வயது 50. சொன்னார்.

இவள் தன் கவனத்தைக் கலைக்காமல்….

“ம்…” கொட்டினாள்.

“9.30 நம்ம மாநில முதல்வரை சொந்த விசயமா சந்திக்கிறீங்க…”

“ம்ம்ம்…”

“10.00 மணிக்கு சூப்பர் ஸ்டார் படத் தொடக்க விழாவில் குத்து விளக்கேத்தி வைக்கிறீங்க…”

“ம்ம்ம்”

“மதியம் கட்சி பிரமுகர் உங்களைச் சந்திக்கிறார்.”

“ம்ம்…”

“மாலை ஒரு வரவேற்பு விழா..!”

“ம்ம்…”

சிறிது நேரம் மௌனமாக வந்த கிருஷ்ணராம்…

“மணி ஆறரை ஆகுதும்மா…”

“ஆகட்டும்! டிரைவர் வண்டியை ஓரம் நிறுத்து…!” மெல்ல சொன்னாள்.

ஐந்து நிமிடத்தில் வண்டி சாலை ஓரத்தில் நின்றது.

ரூபஸ்ரீயின் கண்கள் அந்த ஆறரை மணி பொன் வெயிலில் ஜாகிங் செய்துகொண்டிருந்தவன் மேல் லயித்தது.

கிருஷ்ணராமின் கண்களும் கவனித்தது.

புரிந்து போயிற்று!

“ராம்!”

“மேடம்..!..”

“இன்னைக்கு அவன்..”

“சரி மேடம்!”

“வழக்கமா நம்ம வானகரம் பங்களாவுக்கு அழைச்சு வந்துடுங்க!”

“சரி மேடம்!”

“சரி. இறங்குங்க…”

அவர் இறங்கினார்.

இன்னோவா நகர்ந்தது.

சிறிது நேரத்தில் அவன் அருகில் சென்று நின்று…

“வணக்கம்!”

ஒற்றையாய் வேர்க்க விறுவிறுக்க ஜாகிங் செய்து கொண்டிருந்தவன்…

“வணக்கம்…!” சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு தொடர்ந்தான்.

“என் பேர் கிருஷ்ணராம். ரூபஸ்ரீ பி.ஏ.”

இது. காதில் விழுந்ததும் ஜாகிங் செய்து கொண்டிருந்தவன் அதி அற்புத செய்தி கேட்டது போல் சட்டென்று நின்றான். கண்களில் பளிச் மின்னல், வெளிச்சம், ஆச்சரியம்!

“ரொம்ப நாளா ஜாகிங் பண்றீங்களா…?”

“ஆமாம் சார்!”

கட்டு கட்டாக இருக்கும் அவன் உடலை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு…

“நீங்க ஜாகிங் மட்டும் செய்யல போலிருக்கு…?!”

“ஆமாம் சார். மாலை ஆனா ஜிம்முக்கும் போறேன்.”

“மிஸ்டர் சென்னை ஆகனும்ன்னு ஆசையா…?”

“அப்படியெல்லாம் இல்லே சார். படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலை. வீட்டுல சும்மா இருக்க முடியாம…இப்படி..”

“இன்னும் உங்களுக்கு வேலை கிடைக்கலையா…?”

“ஆமாம் சார்…!”

“பேரு…?”

“சந்தோஷ்!”

“வயசு…?”

“26…”

“படிப்பு…?”

“மெக்கானிக்கல் எஞ்சினியரிங்”

“என்ன சம்பளம் எதிர்பார்க்குறீங்க…?”

“..50…”

“போர்டு கார் கம்பெனியில வேலை இருக்கு போகமுடியுமா…?”

“சார்ர்ர்…!”

“வாயைப் பிளக்காதீங்க. இன்னைக்கு 7.00க்கு இந்த முகவரிக்கு வாங்க. மேடத்தை விட்டு சிபாரிசு பண்ணாச் சொல்லி உடனே கிடைக்க ஏற்பாடு பண்றேன்!” முகவரி அட்டையை அவன் கையில் திணித்து விட்டு கிருஷ்ணராம் ஆளைத் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தார்.

திடீர் மகிழ்ச்சி. சந்தோசுக்குத் தலை கால் புரியவில்லை. தற்போது நடந்தது கனவா, நனவா என்கிற தடுமாற்றத்தில் அப்படியே நின்றான்.

அத்தியாயம் – 2

கிருஷ்ணராம் சரியாய் ஏழு மணிக்கெல்லாம் அவனை பங்களா வாசலிலேயே வரவேற்றார்.

சந்தோஷ் ஆச்சரியமாக அவருடன் சென்றான்.

“மேடம் இருக்காங்களா சார்..?” பவ்வியமாகக் கேட்டான்.

“இருக்காங்க…”

அழைத்துக் கொண்டு நடுவீட்டில் மாடிப்படி ஏறினார்கள்.

அறை முன் நின்று அழைப்பு மணி அழுத்திவிட்டு காத்திருந்தார்கள்.

அதி நவீன தொழில் நுட்பக் கதவு தானாகத் திறந்தது.

பெரிய ஆடம்பரக் கட்டிலில், பளபள மெத்தை, தலையணைகளில் ஒய்யாரமாக சாய்ந்திருந்த ரூபஸ்ரீ ரிமோட் கண்ரோலைத் தலையணைக்கடியில் வைத்தாள்.

பி.ஏ. மேடத்தின் படுக்கை அறைவரை அழைத்து வந்து விட்டாரே…! சந்தோசுக்குள் சொல்லமுடியாத ஆச்சரியம். கிருஷ்ணராம் பின் பவ்வியமாக நின்றான்.

“மேடம்…!”

“எஸ்…”

“எனக்குத் தெரிஞ்ச பையன் இவன். வேலை இல்லாம கஷ்டப்படுறான்.”

“நான் யாருக்கும் அனாவசியமா சிபாரிசு பண்றதில்லே கிருஷ்ணராம்…”

“மனசு வைக்கணும். ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்…”

“வேலை….” சந்தோஷை மேலும் கீழுமாகப் பார்த்தாள்.

“போர்ட் கார் கம்பனியில இருக்கு மேடம்…”

“எல்லாம் முன்னேற்பாடாதான் ஆளை அழைச்சி வந்திருக்கீங்களா ராம்…?”

“….”

“சரி. நீங்க போங்க. நான் பையன் படிப்பு, மத்ததை நான் விசாரிச்சுக்கிறேன்.”

கிருஷ்ணராம் அறையை விட்டு வெளியேறினார் .

“படிப்பு என்ன..? என்ன பண்றே..? பேரு…..” என்று பத்துப் பதினைந்து கேள்விகள் கேட்டு கடைசியாக…

“ஏன் பயப்படுறே..? வந்து உட்கார்…” சொன்னாள்.

அத்தனை பெரிய மனுஷிக்கு அருகில் எப்படி அமர்வது…? ‘உட்காரச் சொன்னாலும் உட்காரலாமா…?’ – தயங்கி நின்றான்.

அவள் சகஜமாக எழுந்து அவன் அருகில் வந்து…

“பயப்படாதே…!” சொல்லி கையைத் தொட்டாள். வாயிலிருந்து பழவாசனை அடித்தது.

அழைத்துப் போய் மெத்தையில் அமர்ந்து அருகில் அமர்த்திக்கொண்டாள்.

“உனக்குக் கரும்பு தின்னக் கூலி தர்றேன்!” சொல்லி அணைத்தாள். சந்தோசுக்குச் சங்கடமாக இருந்தது. நெளிந்தான்.

“பயப்படாதே! கண்டிப்பா உனக்கு வேலை” சொல்லி இறுக்கினாள்.

அத்தியாயம் – 3

காலையில் கைபேசி அழைக்க… எழுந்து மாடிக்குச் சென்றார் கிருஷ்ணராம்.

சந்தோஷ் படுக்கையில் துவண்டு கிடந்தான்.

எத்தனை முறையோ…?! – மனதிற்குள் திகில் பரவியது அவருக்கு.

ரூபஸ்ரீயைப் பார்த்தார்.

அவள் அன்றலர்ந்த பூபோல குளித்து உடுத்திக் கொண்டு மலர்ச்சியாய் இருந்தாள்.

“பையனைக் கொண்டு வெளியில விடவா மேடம்..?”

“வேணாம்! கதையை முடிச்சிடு…!”

“மேடம்…!” துணுக்குற்றார், திடுக்கிட்டார்.

“ஆமாம். இவன் உயிரோடு இருந்தால் விசயத்தைச் சொல்வான். மார் தட்டுவான். பிரச்சனை. வேணாம் கொன்னுடு…!”

“பாவம் மேடம்…”

“பாவ புண்ணியம் பார்த்தால் என் இமேஜ் பாதிக்கப்படும் ராம்.”

கிருஷ்ணராமுக்கு மனமில்லை நின்றார்.

“என்ன யோசிக்கிறீங்க …? மயக்க மருந்து கொடுத்திருக்கேன். ஒரு மணி நேரம் தாங்கும். அதுக்குள்ளே ஏதாவது ஒரு மலை உச்சிலிருந்து உருட்டி காணாப்பொணமாக்கி காரியத்தை முடிச்சிடுங்க…”

தயங்கினார்.

“பயம் வேணாம். போலீஸ் கண்டுபிடிச்சாலும் தற்கொலை சொல்லி முடிச்சிடலாம்.”

இதற்கு மேல் எதிர்த்துப் பேசுவது தவறு. வேலைக்கு உளை! – உணர்ந்த…கிருஷ்ணராம்…

“சரி மேடம்!” அகன்றார்.

‘மனிதனைப் புகழ், செல்வாக்கு எப்படி எல்லாம் செயல்பட வைக்கிறது..? இப்படி செய்வதைவிட தைரியமாகத் திருமணம் செய்து கொண்டு அனுபவிக்கலாம். திருமணம்… தொழிலுக்கு மட்டும் தடை கிடையாது. எல்லாவற்றிக்குமே ஒரு முட்டுக் கட்டை. தடைக் கல். கவர்ச்சி, புகழ் எல்லாமே பாழ். அதற்காக இப்படியா அனுபவித்து சக்கையாக்கி ஆளைத் தீர்ப்பது…?’ – இப்படி எல்லாம் நினைத்து ஒரு மணி நேரத்தில் ஒற்றை ஆளாக அந்த காரியத்தை முடித்தார்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *