மூலதனம் ஒரு கத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 5,207 
 
 

கத்தியை மடக்கிப் பார்த்தேன். இலகுவாகத்தான் இருந்தது இந்தக் கத்தியைச் செயல்படுத்தும் முறை. பிடியில் ஒரு சின்ன பட்டன். அதை அழுத்தினால் மடக்கப்பட்டிருக்கும் கத்தி வெளிநீட்டிக் கொள்கிறது. நீட்டிய கத்தியை மெல்ல அழுத்தித் தள்ளினால் மீண்டும் மடங்கி பிடியின் இடைவெட்டில் ஒளிந்துகொள்கிறது. புதிதாகத் தொடங்கப் போகும் தொழிலுக்கு மூலதனமாக இந்த ஒரு கத்தி போதும்.

வாங்கிய கத்தியை பல தடவை ஒத்திகை செய்து பார்த்துப் பார்த்து நன்கு மனப்பாடமாகியிருந்தது. கால்சட்டைப் பையில் கத்தியை வைத்திருப்பேன்; சரியான சமயம் பார்த்து வயிற்றைக் குறிவைத்துக் கத்தியை வெகு நெருக்கமாக நீட்டுவேன்; பணப்பையையும் தங்க ஆபரணங்கள் ஏதாவது அணிந்திருந்தால் அதையும் கழற்றச் சொல்லி மிரட்டுவேன்; தேவை ஏற்பட்டால் வலியெடுக்கும் வரை அழுத்துவேன்; பொருள்கள் கிடைத்ததும் தப்பித்துவிடுவேன். இவைதான் நான் சமீபகாலமாக தீட்டி வைத்திருந்த திட்டத்தின் நிகழ்ச்சி நிரல்.

சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று பலர் ஊக்குவிப்பது இதற்குத்தானோ? யாரிடமும் கைக்கட்டி நிற்க வேண்டிய அவசியமில்லை. பொருளாதாரம் விழுந்தால் என்ன எழுந்தால் என்ன? யாரும் வேலை விட்டு நிறுத்த முடியாது. சதூர்யம் இருக்கும் வரை நான் திருடித்தான் தின்னவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பதும் நினைவில் உண்டு.

சுங்கை டூலாங் என்ற ஊர் ஒன்று கீழ்ப்பேராவில் சின்ன மூலையில் ஒடுங்கி கிடக்கும் ஊர். அந்த ஊரில் பொது போக்குவரத்து வசதியெல்லாம் கிடையாது. பொதுப் பேருந்து இறக்கி விட்ட இடத்திலிருந்து குடியிருப்புப் பகுதிக்குச் செல்லவேண்டுமானால், அங்கிருந்து குடும்பத்தில் உள்ளவர்களின் உதவியை நாடி வண்டியை எடுத்துவரச் சொல்லவேண்டும். அதற்கு வசதியில்லாதவர்கள் அந்த வழியே போகிறவர்களிடம் தொற்றிக்கொண்டு போனால்தான் ஆயிற்று.

ஏற்றிக்கொள்ளவும் ஏறிக்கொள்ளவும் அறிமுகம் எல்லாம் தேவையே இல்லை. மலாய்காரன் சீனன் தமிழன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது இந்த விஷயத்தில். எல்லாரும் இந்த ஊர் போக்குவரத்துக் கஷ்டத்தை உணர்ந்தவர்கள்தானோ என்னவோ.

இதைத்தான் எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன். மூன்றாண்டுகளுக்கு முன்னர் சுங்கை டூலாங்கில் திருவிழாவிற்காகச் சென்ற அனுபவத்தில் கற்றது இன்று எனக்கு வேலை பறிபோன குறையைத் தீர்த்துவைக்க உதவுகிறது.

மிகச் சாதாரண உடைதான் அணிந்துகொண்டேன். சின்னப் பையைத் தோளில் தொங்கவிட்டேன். பார்ப்பதற்கு எங்கிருந்தோ பயணப்பட்டு வந்திருக்கும் தோற்றத்தைக் கொடுக்கும் இந்தப் பை. ஆனால், இது கொள்ளையடிக்கப்போகும் பொருட்களைத் திணித்துக்கொள்ளப் பயன்படப்போகும் பை. சுங்கை டூலாங் சாலைத் தலைப்பில் நின்றுகொண்டேன். பெரிய சாலையிலிருந்து உள் சாலைக்கு நுழைவோர் எல்லாரிடமும் கைகாட்டினேன். மூன்று பேர்தான் இதுவரை கடந்தனர். மூவரும் எனக்குப் பாராமுகம் காட்டினர்.

அதிக நேரம் நின்றதால் கால் கடுக்கத் தொடங்கியது. அறைமணி நேரம் கடந்திருக்கும். இன்னும் எதுவும் வந்து வாய்க்கவில்லை. முதல் முறை என்பதால் நம்பிக்கையும் கொஞ்சம் அல்லாடியபடிதான் இருந்தது. அந்த அல்லாடலில் பயத்தின் கலவையும் உண்டு.

அதோ ஒரு கார்! கையைக் காட்டி சமிக்ஞை செய்தேன். வண்டி நின்றது. அப்பாடா… முதல் கட்டம்; வண்டியைப் பிடித்தாகிவிட்டது. வண்டியின் கதவைத் திறந்து, “சுங்கை டூலாங் போகனும்ண்ணே,” என்றேன். “நானும் அங்கதான் போறேன். ஏறிக்க,” என்றார் காருக்குச் சொந்தக்கார். ஆளைப் பார்த்தால் என்னைவிட உருவத்தில் கொஞ்சம் பெரிதாக இருந்தார். தொப்பை தள்ளியிருந்தது. அந்தப் பழைய கடமுட காரின் ஸ்டேரிங்கை ஒற்றைக் கையால் உருட்டி லாவகமாக வண்டியை எடுத்தார். இன்னொரு கையில் டன்ஹில் ரக சிகரெட் புகைந்துகொண்டிருந்தது.

“சுங்கை டூலாங்குல யாரு வீட்டுக்குப்பூ” என்று கேட்டார். என்ன பெயர் சொல்வதென்ற தடுமாற்றத்தில் உடனே அகப்பட்டது முன்பொரு தடவை திருவிழாவுக்குக் கூட்டிச்சென்றவனின் பெயர். அதை மாட்டிவிட்டேன். பெயரைக் கேட்டு முனுமுனுத்துக்கொண்டார். நெற்றியைத் தேய்த்தார். “யாருன்னு தெரியலப்பூ,” என்று ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்தினார்.

எந்த சமயத்தில் கத்தியை நீட்டலாம் என்று சரியாக முடிவெடுக்க முடியவில்லை. பயம் கலந்த தயக்கம் தொண்டையை நெரித்துக்கொண்டிருந்தது. என்னுடைய ஜீன்ஸ் சிலுவார் பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டேன். கத்தி விரைப்புடன் “தயாரா?” என்று கேட்டுக்கொண்டிருந்த வேளையில் நான்தான் தயாராய் இல்லை. சரி, ஒரு நிமிடம் கழித்து கத்தியைச் சரியாக இந்த ஆளின் தொப்பை வயிற்றை நோக்கி நீட்டுவோம் என உறுதியெடுத்துக்கொண்டு கண்களை மூடினேன். மனதை ஒருநிலைப் படுத்தினேன். மூச்சு இரைத்தது; வியர்வை வெகுவாக உதிரத்தொடங்கியது. கைகளில் நடுக்கம் அதிகரிக்க கத்தியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். மூடிய விழித்திரையில் ஒத்திகை போட்டேன்.

ஒரு நிமிடம் கழிந்திருக்குமா?

பாக்கெட்டிலிருந்து வெளியேறியது கத்தி. பட்டன் அமுங்க சுனைப்பான பகுதி விரைத்து நீட்டியது. அதன் கூரிய முனை தொப்பை தள்ளிய வயிற்றைக் கொஞ்சம் அழுத்த வலி அதிகரித்தது. சின்ன திருத்தம். நீட்டப்பட்டக் கத்தி என்னுடையதல்ல; வலியெடுத்த தொப்பை வயிறுதான் என்னுடையது!

பாக்கெட்டிலிருந்து கையை எடுத்து அந்த ஆசாமியின் கத்தி தாங்கிய கரத்தைத் தாங்கிபிடித்துக்கொண்டேன். அவர்… இன்னும் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது? அவனது பருத்தக் கரங்கள் இன்னும் கொஞ்சம் கத்தியை அழுத்த நான் வலிதாங்க முடியாமல் முரண்டுபிடித்தேன். கார் சாலையில் அல்லாடியது.

வண்டியைச் சாலையில் ஓரத்தில் நிறுத்திவைத்து என்னை நோக்கி வாட்டமாகத் திரும்பி உட்கார்ந்துகொண்டான். எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை அவனுடைய முகத்தில் இத்தனை கடுகடுப்பும் விகாரமும். அடுத்து நிகழப்போவதை நினைக்க மூளை திணரிக்கொண்டிருந்த சமயம், இருதயத்தின் லப்டப்பை உயர்த்திக்கொண்டிருந்தது. வண்டியின் சன்னல் வழியே வெளியே சாலையை எட்டிப்பார்த்தேன். ஒரு ஈ காக்காய் அந்த வழியில் போயிருக்கவில்லை.

“பேக்குல என்னா வெச்சிருக்க?” என்று கேட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் பிடுங்கி திறந்து பார்த்தான். உள்ளே என்ன இருக்கப்போகிறது? ஒரே ஒரு பனியன்தான். தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ள உதவும் என்று எடுத்து வைத்தது. அதைப் பார்த்ததில் ஏமாற்றம் நிச்சயமாக இருந்திருக்கும் அவனுக்கு. பணப்பையையும் கேட்டான். எடுத்து நீட்டினேன். உள்ளே இருந்த கடைசி நாற்பத்து மூன்று வெள்ளியையும் சுரண்டினான். எழுபது காசு சில்லரையை மட்டும் விட்டுவிட்டான். நானாக இருந்திருந்தால் அதையும் சுரண்டியிருப்பேன். செய்யும் வேலையைச் சுத்தமாகச் செய்யத் தெரியவில்லை அவனுக்கு!

என்னை ஒரு வார்த்தைகூட பேசவைக்கவில்லை. வேலை மட்டும் விறுவிறுவென நடந்தேறியது. கழுத்திலோ விரலிலோ எதுவும் இல்லை அபகரித்துக்கொள்ள. இருந்திருந்தால் நான் ஏன் இந்த வண்டியில் இப்போது?

நடப்பதெல்லாம் பிரம்மையோ என்றுகூட ஒரு கனம் தோன்றியது. நான் செய்ய நினைத்ததெல்லாம் இவன் செய்துகொண்டிருக்கிறானே? பிரமிப்பு இன்னும் தணியவில்லை.

“வண்டிய விட்டு எறங்கு!” என்று அதட்டல் சத்தம். நான் உறைந்தது உறைந்தபடியே இருந்தேன். கத்தியை மேலும் அழுத்தியபோது பனியனில் சிகப்பு நிறம் படரத் தொடங்கியது. ரத்தம் கசிந்துருக ஆரம்பித்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தேன். கதவைத் திறந்து வெளியேறினேன். என்னுடைய பையைத் தூக்கிச் சாலையில் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு வீசியெறிந்து வண்டியை எடுத்துக் கிளம்பினான்.

நான் ஓடிச் சென்று என் பையை எடுத்துக்கொண்டு மீண்டும் சாலையோரத்துக்கு வந்தேன். சாலைத் தலைப்பிலிருந்து எத்தனை கிலோமீட்டர் தாண்டி நிற்கிறேன் என்பதுகூட தெரியாது எனக்கு. வந்த திக்கை நோக்கி மொட்டை வெயிலில் நடையைக் கட்டினேன். பாக்கெட்டில் இருந்த கத்தி உறுத்திக்கொண்டிருந்தது. கையைப் பாக்கெட்டில் விட்டுத்துழாவினேன். கத்தி அகப்பட அதையெடுத்து தூர வீசியெறிந்தேன்.

போட்டிருந்த பனியனைக் கழற்றி வயிற்றிலிருந்து வழிந்திருந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டேன். அந்தப் பகுதி சுத்தமானதும் பையிலிருந்த இன்னொரு பனியனை போட்டுக்கொண்டேன். ரத்தக்கரை படித்த பனியனை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு நடக்கும் வேளையில் பின்னாலிருந்து கார் ஒன்று வரும் ஓசை கேட்டது. திரும்பி பார்த்தேன். கைகாட்டி சமிக்ஞை செய்தேன்.

சாலையின் மருங்கில் வண்டி நின்றது. “நாயிக்,” என்றான் மலாய்காரப் பெண்மணி. நானும் வண்டியில் ஏறிக்கொண்டேன். வசதியான வண்டிதான். வண்டி நகர்ந்தது. தனியாகத்தான் இருந்தாள் அவள். தூக்கியெரிந்த கத்தி ஞாபகத்திற்கு வந்தது.

– மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய 2010ஆம் ஆண்டின் சிறுகதை போட்டியில் தேர்வு பெற்ற கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *