கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2025
பார்வையிட்டோர்: 284 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உப்பு இவ்வளவு போதுமா? அம்மாவைக் கேட்டுக் கொண்டு வா, போ” என்றான் மாதவன்.

எட்டு வயது சாரு, தன் பிஞ்சுக் கைகள் இரண்டிலும் அப்பா கொடுத்த உப்பை வாங்கிக் கொண்டாள். “போப்பா! வழி பூரா சிந்திக்கொண்டே வந்திருக்கியேன்னு அம்மா திட்டப் போகிறாள்” என்று சொல்லிக் கொண்டு சென்றவள், சில வினாடிகளில் திரும்பி வந்து, ”சாம்பாருக்குத்தானே இது? எவ்வளவு தண்ணி வச்சிருக்கிறேன்னு அம்மா கேட்கிறாள்” என்றாள்.

புளி கரைத்த தண்ணீர்ப் பாத்திரத்தை அவளிடம் தந்தான் மாதவன். “தூக்குவாயா?” என்றான். சிரித்துக் கொண்டே சென்றாள் சாரு. சற்றைக்கெல்லாம் திரும்பி வந்து, “இன்னும் கொஞ்சம் தண்ணீர் வைக்கச் சொல்கிறாள் அம்மா. ராத்திரிக்கு மோர் சாதத்துக்கும், சாம்பார் தொட்டுக் கொள்ளலாமாம்.”

”ஓ.கே.!” என்றான் மாதவன். பிறகு ”நீ ரொம்பச் சாமர்த்தியக்காரிதான், ஒப்புக் கொள்கிறேன். ஆனால் சாம்பாருக்கு என்ன காய் போடட்டும் என்பதையும் தெரிந்து கொண்டு வந்திருந்தால், ஒரு நடை மிச்சமாகியிருக்குமே? அது தெரியவில்லையே?” என்றான்.

“ஹை! அதைக் கேட்காமல் வந்திருப்பேனா?” என்று பிளாஸ்டிக் கூடையை வலை பீரோவிலிருந்து எடுத்தாள் சாரு. ”நேத்து வாங்கின கத்தரிக்காயிலே நாலு காய் தனியாக எடுத்து வைக்கச் சொன்னாள் அம்மா. வைச்சிருக்கிறேன் பாருங்க” என்று காட்டினாள். “இதுதான் சாம்பாருக்கு. நான் நறுக்கித் தரட்டுமா? நீங்களே நறுக்கிக்கிறீங்களா?”

”ஆஹா! மகா பெரிய மனுஷி இவள், கறிகாய் நறுக்குகிறாளாம். அன்னைக்கு விரலை வெட்டிக் கொண்டு விட்டு, எட்டு நாள் கட்டுப் போட்டுக் கொண்டது மறந்து போச்சு போலிருக்கு.”

“அது ஓட்டை அரிவாள்மனை! கையை வெட்டிட்டுது.”

”ஓட்டை அரிவாள்மனைதான் வெட்டாது!” என்று சாருவுக்குப் பதில் தந்து விட்டு சாம்பாரை காஸ் ஸ்டவ் மீது வைத்தான் மாதவன்.

”சாதம் இன்னேரம் ஆகியிருக்கும் அப்பா” என்று ஞாபகப்படுத்தினாள் சாரு, காப்பி டம்ளர்களைக் கழுவி ஒழுங்காய் ஷெல்பில் அடுக்கிய வண்ணம்.

”ஆகியிருக்குமா? வைக்கும்போது மணி பார்த்துக் கொண்டாயோ?” என்றவாறு இன்னொரு ஸ்டவ்வின் மீதிருக்கும் சாத குக்கரை நோக்கினான் மாதவன்.

“ஓ! அப்போ மணி ஏழு அடிக்கப் பத்து நிமிஷம் ஆகியிருந்தது அப்பா. சரியாய் நாற்பத்தைந்து நிமிஷம்தான்னு அம்மா சொல்லியிருக்கிறாள்.”

“ஓ! எட்டாகப் போகிறதே?” என்றவன், “எதுக்கும் பார்த்துடலாம்” என்று குக்கரின் மேல் பாத்திரத்தை மட்டும் எடுத்தான். “ஆ!” என்று உடனே கையை உதறிக் கொண்டான். சுளீரென்று ஆவி கையில் அடித்து விட்டதே காரணம்.

“ஐயய்யோ, பட்டுடுத்தாப்பா?” என்றாள் சாரு. ‘த்ஸு த்ஸு சொல்லிக் கொண்டே, “என்னைச் சொன்னீங்களே, நீங்கக் கூட குக்கரை எடுக்கிறப்போவெல்லாம் கையிலே ஆவி அடிச்சுக்கிறீங்களே! ரொம்பச் சுட்டிட்டுதா? கொஞ்சம் எண்ணெய் தடவிக்குங்க”.

”உஷ்! சத்தம் போட்டு என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே!” என்று குழந்தையின் வாயைப் பொத்தினான் மாதவன். ”உன் அம்மா காதில் விழுந்ததோ அவ்வளவு தான்! எரிச்சல் இப்ப எப்படியிருக்கு, இப்ப எப்படி யிருக்குன்னு கேட்டு என் உயிரை எடுத்து விடுவாள். ஒரு ஸ்பூனில் இரண்டு பருக்கைகளை எடுத்துப் பெண்ணிடம் கொடுத்தான் மாதவன். “போய் அம்மாவிடம் காட்டி விட்டு வா, வெந்திருக்கிறதா, வேகவில்லையா என்று-”

ஸ்பூனுடன் சென்றாள் சாரு. ”குழைஞ்சு போச்சாம், அப்பா. பத்து நிமிஷம் முன்னாடியே இறக்கியிருக்கணுமாம்..”

“அப்படியானால் நீ சொன்ன கணக்குதான் தப்பு! நாற்பத்தைந்து நிமிஷம்னு சொன்னாயே!”

“நான் கரெக்டாய்த்தான் சொன்னேன். ஆனால் நான் சொன்னவுடனே எங்கே நீங்க இறக்கினீங்க? கையிலே ஆவி அடிச்சதிலே, எண்ணெய் தடவிட்டதிலே அதிலேயெல்லாம் பத்து நிமிஷம்…” என்றவாறு பாத்திரத்தை மோந்து பார்த்தாள் சாரு. “சாம்பாரில் கெரஸின் நாத்தம் அடிக்குது. கையைக் கழுவிக்காமலே தொட்டிருக்கிறீங்க! அம்மா! இங்கே அப்….”

வெளியே செல்லவிருந்தவளைக் கப்பென்று பிடித்து நிறுத்தினான் மாதவன். “உன்கிட்டே ரொம்பக் கெட்ட பழக்கம் சாரு! ஒவ்வொரு சின்ன சமாசாரத்தையும் அம்மாகிட்டே ரிப்போர்ட் பண்ணியாகணுமா? இல்லா விட்டால் மண்டையா வெடித்து விடும்?” தானும் மோந்து பார்த்தான் பாத்திரத்தை. “ஊகூம். எனக்கு ஒரு நாற்றமும் தெரியவில்லை.”

“உங்களுக்கு மர மூக்குன்னு அம்மா அடிக்கடி சொல்வாள். சரிதான்!” என்று சாரு சிரித்தாள்.

”ஆமாம்! அவளுக்கு மட்டும் வெள்ளி மூக்காக்கும்!”

“முதல்லே கையைக் கழுவிட்டு வாங்கப்பா! இந்தாங்க மோர்!” என்று ஒரு கரண்டியில் மோரை மொண்டு அவன் உள்ளங்கையில் ஊற்றினாள். மாதவன் கழுவிக் கொண்டான்.

அரைமணியில் சமையல் முடிந்து விட்டது.

“இலை போடலாமான்னு அம்மாவைக் கேட்கட்டுமா அப்பா?”

சமையல் மேடையைத் திரும்பவும் ஒருமுறை கண் ணோட்டம் விட்டவன், ”ஓ! எவ்ரிதிங் ரெடி!” என்றான்.

சாரு இலையும் தண்ணீரும் கொண்டு போய் அடுத்த அறை வாசலில் வைத்து விட்டுத் திரும்பினாள்.

வாசல் கதவை யாரோ தட்டினார்கள். சாரு கதவைத் திறந்து பார்த்து விட்டு, “பாட்டி வந்திருக்கிறாங்கப்பா” என்றாள்.

“வா, அம்மா” என்றான் மாதவன்.

அறை வாசலில் போடப்பட்டுள்ள இலையையும், தண்ணீரையும் பார்த்தாள் மாதவனின் அம்மா. அவள் கண் கலங்கியது. “மாது! இன்னிக்கு என்ன நாள் என்று மறந்து விட்டாயா? அவள் – லட்சுமி – இறந்து போய் இன்றைக்கு ஒரு வருடம் ஆகிறதப்பா சரியாய்!” என்றாள்.

“மறக்கவில்லை அம்மா” என்றான் மாதவன். ”அதனால்தான் அவள் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் இன்று காலையிலிருந்து. உடம்பு சரியில்லாமல் அவள் படுத்திருந்தபோது எப்படி இங்கே சமையல் வேலைகள் நடந்ததோ… அதையே நடத்திப் பார்த்தோம்.”

“ஆமாம் பாட்டி…” என்றாள் குழந்தை சாருவும்.

மறுநிமிடம் மாதவனும் சாருவும் குலுங்கக் குலுங்க அழலானார்கள்.

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *