முழுப்பார்வை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 1,104 
 
 

“ஒரு வீட்டில் எல்லாமே பக்கத்துல இருக்கு, ஆனா பசிக்கு சாப்பிட முடியல. ‘சமைக்க கேஸ் வரல, அதனால சமைக்கல. சமைக்காம சாப்பிடக்கூடாதுன்னு அம்மா சொன்னாங்க…’ என பத்து வயது சிறுமி பசியால் துடித்துக்கொண்டிருந்தாள். பசி வயிற்று வலி போல் இருந்ததால் கைகளால் வயிற்றைப்பிடித்துக்கொண்டிருந்தாள். பச்சையாக சாப்பிட்டால் வயிறு வலிக்குமென அம்மா கூறியதின் பயன், தற்போது வயிற்று வலியை விட அதிக வலி தரும் பசியை தாங்கிக்கொள்ளப்பழகிக்கொண்டாள். எல்லாமே பழக்கம் தான். ஆனால் அங்கிருந்த கோழிகளும், மாடுகளும், ஆடுகளும், பறவைகளும் இயல்பாக நன்றாக சாப்பிட்டுக்கொண்டிருந்தன. அவைகளுக்கு சமைக்கத்தெரிந்திருக்கவில்லை. சமைக்க வேண்டிய அவசியமும் இல்லை. மனிதர்களாகிய நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? இது தான் ஆறறிவின் வெளிப்பாடா? என்று தற்போதைய நிலையை, இந்த சமுதாயத்தை நோக்கிக்கேட்கும் கேள்வியாக ஒரு சிறுகதையில் அதன் ஆசிரியர்  எழுதியிருந்தார். அதப்படிச்சப்ப நானும் ரொம்பவே அப்செட்டாயிட்டேன். ஏங்க மிஸ் நாம படிக்கிறதால நம்மோட இயல்பான அறிவை இழந்திட்டோமா….?” பத்தாம் வகுப்பு மாணவி நந்தனா கேட்ட கேள்விக்கு ‘பதில் கூற முடியாது, இக்கேள்வி பாடப்புத்தகத்தில் இல்லாதது’ என்று கூறி ஆசிரியை காஞ்சனாவால் ஒதுக்கி, ஒதுங்கி கடந்து செல்ல இயலவில்லை.

“நாளைக்கு வந்து பதில் சொல்கிறேன்” என கூறிச்சென்ற ஆசிரியை நூலகத்தில் பல நூல்களைத்தேடிப்படித்த போது கற்கால மனிதர்கள் தற்காலம் போல் சமைக்காமல் சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். பிற்கால மனிதர்கள் சமைக்கும் உணவின் ருசியைக்கண்டு பிடித்ததால் இவ்வாறு பழகிவிட்டார்கள் என்பது தெளிவானது. 

“நேற்று கேட்ட கேள்விக்கான விளக்கம் பழக்கம் தான் காரணம்” என சுருக்கமாக ஆசிரியை முடித்துக்கொண்டதில் அறிவாளியான மாணவி நந்தனாவுக்கு அவ்வளவாக திருப்தி ஏற்படவில்லை.

“நாலு நாளா ஊருக்கு போயிட்டோம். அப்புறம் வந்து பார்த்தா தெனமும் அம்மா வைக்கிற சாப்பாட்ட சாப்பிட வார காக்கா பசியால மயங்கிக்கெடக்கு. அதுக்கு பச்சைய எதையும் சாப்பிடத்தெரியல” என நந்தனா சொன்னதைக்கேட்க சக மாணவர்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

“இயற்கையோட அமைப்புல நெருப்பு கண்டு பிடிச்ச பின்னாடிதான் வாழ்க்கை முறையே கஷ்டமாயிடுச்சு. கேஸ் வரலைன்னா அந்தப்பொண்ணு வெறகு வெச்சு சமைச்சிருக்கலாம். அதுவும் முடியலைன்னா பச்சையா சாப்பிட்டிருக்கலாம். சொந்தமா சிந்திக்கத்தெரியாத ரோபோட் மாதிரி, ஆல்ரெடி புரோக்கிராம் பண்ணினது மாதிரி தான் அவளும்! கற்காலத்துல பொண்ணுன்னு இருந்தா பிடிச்ச ஆணோட வாழ்ந்திருப்பா. இப்ப அப்படி இல்லை. நெறையவே எழுதப்படாத ரூல்ஸ் இருக்கு. குடும்ப முறைன்னு வந்த பின்னால அப்பாவோட அனுமதி தேவையா இருந்திருக்கும். அவருக்கு தேவையானத அவளைக்கட்டிக்கப்போற ஆண் கொடுத்துட்டு பொண்ண கூட்டிகிட்டு போயிருப்பான். அப்புறம் மாமன் வீட்ல பொண்ணு இருந்தா படிப்பு, பணம், சொத்து, அழகு, வயசுன்னு பார்க்காம கட்டி வெச்சிடுவாங்க. பொண்ணுக்கு சம்மதம்னா பெத்தவங்க மறுத்தாலும் உரிமையோட தூக்கிட்டு கூட போனாங்க. சமைக்கத்தெரியாதப்ப பசி வந்த உடனே சாப்பிட பயன்பட்ட கிழங்கு, சமைக்க பழகின பின்னால உடனே சாப்பிட முடியாம போயிருச்சு. கைக்கெட்டினது நம்ம அறிவால வாயிக்கு எட்டல. கைல வெண்ணைய வெச்சிட்டு நெய்க்கு அலைஞ்சவன் கதையா போயிடுச்சு. ஆனா இப்ப படிப்பு, பணம் தான் எல்லாத்துக்குமே தடையா இருக்கு. படிக்கப்பிடிக்காதவனால, படிக்க முடியாதவனால தான் விரும்பற படிச்ச மாமம் பொண்ணு கூட சகஜமா கூட பேசிப்பழக முடியல….” இதைக்கேட்டதும் ‘இதென்ன நம்ம கதையா இருக்கே….?’ என சற்று அதிர்ச்சியாக இருந்தது ஆசிரியை காஞ்சனாவுக்கு.

“படிக்காதது கூட ஜாதி மாதிரி தீண்டாமையா மாறிடுச்சு‌. பணம், படிப்பு இல்லாதப்ப கூட உடனே கெடைச்சது இப்ப கெடைக்கிறதில்ல. ‘பெரிய மண்டபத்துல கல்யாணம். அது தான் என்னோட லட்சியம். அதுக்கு பணம் சேத்திக்கிற வரைக்கும் எத்தன வயசானாலும் எண்ணங்கல அடக்கி வெச்சுக்குவேன்’ என சொல்வது போல. ஒரு ஆணோட பொண்ணு சேர ஆணும் பெண்ணும்ங்கிற தகுதி மாறி, கோடிக்கணக்குல செலவு பண்ணி பங்களா வீடு கட்டி, பிரீமியம் லெவல் கார் வாங்கினாத்தான் ஒன்னு சேர முடியம்ங்கிறது ஓரறிவு கூட இல்லாத உயிரிடங்களும் செய்யாத செயல். இரண்டு மனம் சேர்ந்த திருமணம் போய் இரண்டு பணம் சேருவதாகி விட்டது. எல்லாமே இருக்கு. ஆனா எதையுமே பயன்படுத்த முடியல. பாதுகாக்கப்பட்ட பகுதில பழுத்து விழற பழங்கல செக்யூரிட்டி மிரட்டுவார்னு பசிச்ச சிறுவனால பயத்துல எடுத்து சாப்பிட முடியல. செக்யூரிட்டி தூங்கின பின்னாடி எடுத்து சாப்பிட்டவன் இந்த சமுதாயத்தோட பார்வைக்கு திருடனா மாறிட்டான். அதுக்கு கூட இந்த சமுதாயத்துல இருக்கிற தவறான கட்டமைப்பு தான் காரணம்னு யாருமே யோசிக்கல”  என மாணவி நந்தனா பேசியதைக்கேட்ட முப்பது வயதாகியும் சம தகுதி மற்றும் படிப்பு, அழகுள்ள வரன் அமைந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக இருந்த ஆசிரியை காஞ்சனாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

” ஒரு பணக்காரக்குடும்பம் ஒரு கோடி செலவு பண்ணி கல்யாணம் பண்ணினாங்க. மந்திரி கூட வந்து வாழ்த்தினாரு. ரெண்டு பேருமே சம படிப்பு, சம அழகு. பெரிய மண்டபத்துல நூறு அயிட்டம் போட்டாங்க. பத்து நாள்ல பிரிஞ்சு போயிட்டாங்க. ஏழைக்குடும்பத்த சேந்தவங்க தெருக்கோடில உள்ள விநாயகர் கோயில்ல மஞ்சக்கயித்துல தாலி கட்டி ரோட்டுக்கடைல இட்லி சாப்பிட்டு வாடகை வீட்டுக்கு போயி வாழ்ந்தாங்க. அஞ்சு வருசத்துல ரெண்டு குழந்தைகளைப்பெத்துட்டாங்க. இதுல எத நாங்க ஃபாலோ பண்ணறது….?” நந்தனாவின் நறுக்கேள்வியால் இரவு தூக்கம் பறி போனது ஆசிரியைக்கு.

“நாம படிக்கிறப்ப வாத்தியார் சொல்லறத மட்டும் கேட்டுப்போம். நாம கால் பார்வையா, அரைப்பார்வையா பார்த்த விசயங்கள இப்பத்த குழந்தைங்க முழுப்பார்வையா பார்க்கிறாங்க. அதனால பல கேள்விகள கேட்கிறாங்க. அப்ப பாடம் தவிர சமுதாய விசியம், குடும்ப விசயம் பேசமாட்டோம். அவ்வளவு பயம். இப்பெல்லாம் காதல், காமம்னு எதப்பத்தி வேணுன்னாலும் கேள்வி கேட்குதுங்க. சொல்லிக்கொடுக்கிற நமக்குத்தான் பேச பயமா இருக்கு. நாம வளர்ந்த விதம் அப்படி. இப்ப வளர்ற விதம் வேற மாதிரி” தனது சக ஆசிரியையிடம் தமது ஆதங்கத்தைக்கூறினாள் ஆசிரியை காஞ்சனா.

“ஒரு வகையான கட்டமைப்புல ஊறிப்போன நம்ம பழக்கவழக்கத்த தனி ஒருத்தரால மொத்தப்பேரையும் மாத்திடறது சாத்தியமில்லை. நாம வேணும்னா நம்மள மாத்திப்போம். அதப்பார்த்து பிடிச்சிருந்தா மத்தவங்களும் மாத்திக்கட்டும். நடைமுறைல இருக்கிற பழக்கத்த முழுசா மாத்தனம்னா குறைஞ்சது நூறு வருடங்களாவது தேவைப்படும். நானும் உன்னோட கேள்வியால மாறிட்டேன். அதனால என்னோட கல்யாணத்த என்னை மாதிரி படிக்காட்டியும் என்னை உயிரா லவ் பண்ணற மாமன் பையனோட சிம்பிளா பெரிய செலவில்லாம நடத்தப்போறேன்” என ஆசிரியை காஞ்சனா மாணவி நந்தனாவிடம் கூறிய போது மொத்த மாணவ, மாணவிகளும் பலத்த கைதட்டலுடன் வரவேற்றனர்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *