முளை





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘அச்சோகம் பற்றின்மையிலே படர்ந்து, அருட் தாகப் பெருக்காக அமைந்து தது. அதுவும் ஒருவகை யோகமே’.

அமைதியின் திருக்கோலம் தவிசிருக்கும் ஆரண்யம். தபோவனவாசிகள் உபநிஷதக் கருத்துக்களை ஆராய்ந்து, பரதத்துவங்களின் திவ்விய திருகுமுடிச்சுகளை விடுவித்துக் கொண்டிகுந்தார்கள். வேதாந்தம் என்னும் சாந்தி பாட ஓதுதல் எனக் கண்ணன் களித்தனன்.
ஆரண்யத்தைக் கடந்ததும், வயல்வெளி. சோகம் பிழிந்து சிந்த விழிகளை நிலத்திலே புதைத்து ஒருவன் ஏங்குகின்றான். தனக்கு அமைந்த பொருளும் யோகமும் போதவில்லை என்ற மனக்குறையின் உபரி. அத்துயரின் நீழலில் அவனுடைய ஆண்மை நொடிந்து; அகத்தில் அஞ்ஞான இருள் கவிவதைக் கண்ணன் அவதானித் தனன். அவன் நிலைக்காக அநுதாபம் பிறக்கிறது:
ஆனாலும், அந்த வியாகூலத்தைப் போக்கவல்ல அருள் சுரக்கவில்லை.
போர்க்களம் ஒன்றில் வியாகூலமே யோகமாகச் சிந்தித்த நிகழ்ச்சி ஒன்று கண்ணன் மனத்திலே எழுகின்றது….
அதர்மம் ஏமாப்புடன் நகைத்தது. தர்மம் தாழ்ந்தது. கவறாடல் தொடர்ந்தது. துர்யோதனனின் பதிதாக விளையாடிய சகுனியின் சொற்கேட்டுப் பாச்சிகைகள் உருண்டன. இந்திரப்ரதஸ்தத்தைப் பாண்டவர் இழந்தனர். தர்ம போதம் மிகுந்த தருமன், போலி மான உணர்வின் வாய்ப்பட்டு, தர்மத்தை மறந்தனன். தம்பிமார் நால்வரையும் தோற்று, தன்னையுந் தோற்று. ஐவரின் மனையாள் திரௌபதியையுந் தோற்று, அஸ்தினாபுர இறைமாட்சி யாளரின் கேலிக்கும், அன்புள்ளங் கொண்டோரின் அநுதாபத் திற்கும் இலக்காண சோக பாத்திரமாகத் தர்மன் மனமிடிந்து. நிற்கின்றான்.
துகிலுரி படலமும்; கண்ணனின் அபயமும்! பெரியோரின் சமரசமும்; பாண்டவர் சபதமும்! வினையின் விதி வழி பாண்டவர் பயணம்…….
பன்னீராட்டை வினவாசம் முற்றியது. ஓராண்டு அஞ்ஞாத வாசத்தை விராடபுரத்தில் இயற்றி முடித்தனர். அநுபவித்த துன்பமோ நெடியது. ஏற்றல் தர்மமெனப் பொறுத்தனர். ஈற்றில், உபலாபியம் என்ற நகரத்தில் வெளிப்பட்டார்கள். கண்ணனும் வந்து சேர்ந்தான். குருவாகிய சஞ்சயர் கௌரவர் தூதாக உபலாபியம் அடைந்தார். உடனேயே தருமருக்கு வேதாந்த ஞானம் போதிக்கத் தொடங்கினார். ‘மித்தை ஆகிய மண்ணாசை தவிர். மீண்டும் காட்டுக்குச் செல். நீ புண்ணியன் தவஞ் செய்து வீடு அடைதலே மேலான செயல்….’ சஞ்சயர் கூற்றை ஒப்பும் நிலையில் தருமனின் மனம் இல்லை. இயல்பிற்கு மாருகச் சீற்றமும் வந்து குதிக்கின்றது. ‘என்னறத் தில் நின்று தெய்வரை இருவிசும்பினில் ஏற்றுதலே இப் பொழுது எதிர்நிற்கும் எனது சுவதர்மம்’ எனத் தருமன் உறுதியாக நின்றான். கண்ணன் குறுக்கிட்டு, அருமந்த வேதாந்த முத்தை இந்த அபக்குவர்கள் முன்னிலையிலா வித்துவது? என உபகார மொழிகூறிக் சஞ்சயரை வழியனுப்பி வைக்கின்றான்.
அடுத்த நாளே தர்மனுடைய உறுதியிலே சிறிது உடைவு. ‘முடியுமானால் போரைத் தவிர்ப்போம், கொல்லாமையே அகிம்சை, அதுவே தர்மம்…” என்ற நினைவு நுகும்புகிறது. கண்ணனைத் தூது அனுப்பும் யோசனையின் உதயம். ஐவருக்கும் ஐந்து வீடுகள் யாசித்து வாழும் கருத்தும் தர்மனின் வாயினின்றும் நழுவுகின்றன. இளவல்கள் சினந்தெழுகின்றனர். பாஞ்சாலி சோகக் குரல் இசைக்கின்றாள். இருப்பினும், கண்ணன் தூது நிகழ்கின்றது.
சமாதானத்திற்குரிய சகல கதவுகளையும் துரியோதனன் அடைத்துவிட்டான். அதர்மத்தின் முதிர்விளைவு.
விடுதலைப் போர் பலிக்கின்றது. கண்ணனின் எண்ண மும் அதுவே. அவதாரத்தின் சாரமும் அதுவே!
குருநிலம் அமர்க்களமாகக் குறிக்கப்படுகின்றது.
விடுதலை வெறியன் விஜயன் வீறுகொண்டு போருக் கெழுகின்றான். தேரேறுகின்றான். தீர்த்தன் சாரத்தியம் செய்கின்றான்.
தினவெடுத்த தோள்கள். சபதத்தை நிறைவேற்றும் துடிப்பு. மிதமிஞ்சிய ஊக்கம் உந்துகிறது. அம்புகள் அம்புக்கூட்டிற்குள் தங்கமாட்டாது பறக்கத் துடிக்கின்றன. காண்டீபம் கையிலே முனிவுடன் முறுகுகின்றது.
‘அச்சுதா! படை நடுவில் என் தேரை நிறுத்துக. இப் போர்த் துவக்கத்தில் யான் யாரோடு யுத்தம் செய்ய வேண் டும்; போரைக் காமித்து எதிர் நிற்பார் யார் என்பதையும் கவனிக்கிறேன்….’
தேர் அவ்வாறே நிறுத்தப்படுகின்றது. ‘பார்த்தா, கூடியுள்ள இக்கௌரவர்களைப் பார்’ எனக் கண்ணன் கூறினான்.
அங்கே இரண்டு சேனைகளிலும் இருக்கின்ற தகப்பன் மார்கள், பாட்டன்மார்கள், ஆசாரியர்கள். மாதுவர்கள் சகோதரர்கள், புத்திரர்கள், பேரன்மார்கள். தோழர்கள், அன்பர்கள் அனைவரையும் பார்த்தன் பார்த்தான். நான்கு தலைமுறையினர் தம்முயிரைத் துறக்கவும், பிறர் உயிரைப் பறிக்கவும் உறுதிபூண்டு நிற்கின்றனர். குரவரையும் இளைஞரையும் கொன்று குளிப்பதா என்ற கலக்கத்தின் சிரசுதயம்.
அவயங்கள் சோர்வடைகின்றன். சரீரத்தில் நடுக்கமும் மயிர்க்கூச்சலும் உண்டாகின்றன. காண்டீபம் நழுவு கின்றது. சர்மம் எரிகின்றது. நிற்பதற்குச் சக்தியற்றவ னாகின்றான். மனம் சுழல்கின்றது. விபரீத சகுனங்கள் தோன்றுகின்றன.
சுடலை ஞானம் வெடித்துக் கிளம்புகிறது. அவனுடைய நிச்சய புத்தி தடுமாறுகின்றது. கிளைஞரைக் கொல்வதி லுள்ள பாவத்தைப் பற்றியும், மாதர் கற்பிழக்குமிடத்து ஏற்படும் வர்ணக்கலப்புப் பற்றியும், ஜாதி தர்மங்கள், குலதர்மங்கள் தடுமாறுதல் பற்றியும், அதனால் ஏற்படும் நரகத்தின் நெடிய வாழ்க்கை பற்றியும் புலம்பி, ‘அரச சுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பாவத்தைச் செய்யத் தலைப்பட்டோம். அந்தோ!’ எனச் சொல்லி, அம்பையும் வில்லையும் அரங்கில் எறிந்து, துயரம் துய்க்கும் மனத்தினனாய் அர்ஜுனன் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்.
அர்ஜுனனின் வியாகூலம்! அச்சோகம் பற்றின்மையிலே படர்ந்து, அருட்தாகப் பெருக்காக அமைந்தது. அதுவும் ஒருவகை யோகமே எனக் கண்ணன் கணித்தனன்.
அந்நிலையில்….
அவனையே குருவாக வரித்து இவன் மாணாக்கனாகச் சரணடைகின்றான்.
அவன் கண்ணன்.
இவன் அர்ஜுனன்.
அவன் போர்முனைக்கு ஓரளவு முதுகுகாட்டி, இவனை முன்னிலை செய்கின்றான்.
கீதையின் நித்திலக் கருத்துக்கள் அருள்வயலில் முளை கொள்ளுகின்றன.
காலம் காலமாகச் செழித்த கருத்து வயலிலே கோபி கிருஷ்ண கானத்தாற் கவரப்பட்ட பசு ஒன்று மேய்கின்றது. பசியின் அகோரம், ஜீரணிக்க இயலாத அளவுக்கு வயிற் றைச் செம்மிக் கொள்ளுகின்றது. சுகமும் அவதியும். அவதி யிலே அண்டை மரநிழலில் அது படுத்துக் கொள்ளுகின்றது. அசை மீட்கும் படலத்தின் துவக்கம்.
கீதை அல்ல; கீதை நிழலில்….
அசை போடுதல் நீண்டது.
பசுவுக்கு நாளைக்குப் புதிதாகப் பசி எடுக்கும்.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.