முளி கண்ணுக் குருடன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 99 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு குடும்பத்ல ஒரு முளி கண்ணுக் குருடன் இருந்தா. அவனுக்கு கல்யாண வயசு வந்திருச்சு. எப்டியாவது, கல்யாணத்த முடிச்சு வச்சிரணும்ண்டு, பொண்ணு தேடி அலயுறாங்க. அலயயில், அப்டித்தா, நம்மள மாதிரி பொண்ணு வச்சுருக்கவங்க குடுக்குறோமண்டு சொல்ல மாட்டாங்க. குடுக்குறோம்ண்டு சொல்லிட்டாங்க. 

தாயுந் – தகப்பனும், வீட்டுக்கு வந்து, மகங்கிட்ட, நாளக்கி மாப்பிள்ள பாக்க வராங்க. நிய்யி காட்டுல போயி, பரண்ல ஒக்காந்துகிட்டு, படிக்கிறது மாதிரி பொசுத்தகத்தப் புடுச்சுக்கிட்டு, மண்டைய அலச்சுக்கிட்டு இருண்டு, சொல்லிக் காட்டுக்கு போகச் சொல்லிட்டாங்க. 

அப்ப பொண்ணுவீட்டுக்கா வராங்க. வந்து மாப்பளயப் பாக்கணும், எங்கண்டு கேக்குறாங்க. 

கேக்கவும், அவர எங்க? வீட்ல பாக்க முடியும், காட்டுல ஒக்காந்து படிச்சுக்கிட்டு இருப்பாரு. அங்க போயுத்தா பாக்கணும்ண்டு தாயுந் – தகப்பனும் சொல்றாங்க. 

சரி பின்ன வாங்க. போயிப் பாப்போம்ண்ட்டு, காட்டுக்குப் போறாங்க. தூரத்லபோகும்போது, பரண்ல ஒக்காந்திருக்கிறது தெரியுது. பொண்ணு வீட்டுக்காருக்கு, அந்தா ஒக்காந்திருக்கார்லண்டு காட்டுறாங்க. பாக்கயில, பொசுத்தகத்தக் கையில புடுச்சுக்கிட்டுப் படிக்கிறவ மாதிரி தலய அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டிக்கிட்டிருக்கா. 

படிக்கிறவர, இப்ப ஒண்ணுஞ் செய்யக் கூடாதுண்ட்டு, வீட்டுக்கு வந்திருராங்க. வந்து, சாப்பிட்டிட்டு – கீப்பிட்டிட்டு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. 

கல்யாணமும் முடிஞ்சிறுச்சு. கல்யாணத்தண்ணக்கி கைய காலப்புடுச்சுக் கெத்தாக் கொண்டுபோயி, கல்யாண மேடயில விட்டுட்டாங்க. தாலிய எடுத்துக் குடுக்கவும், மதிப்பாத் தாலியக் கட்டிட்டா. 

கல்யாணம் முடிஞ்சு, மறுவீடு போறாங்க. கோழி கீழிய அடிச்சுக் காச்சி வச்சிட்டுச் சாப்பிடக் கூப்பிடவும், எனக்கு வேணாம்ண்டு சொல்றா. கண்ணுதெரிஞ்சாத்தான, கூப்பிட்டா கூப்பிட்ட எடத்லு போயி மதிப்பா வட்டி முன்னால ஒக்காந்து சாப்பிட முடியும், இவனுக்குத்தா கண்ணு தெரியாதே. எப்டி ஒக்காந்து சாப்பிடப் போறா. பெறகு. படிச்சவரு, நம்ம முன்னோடி சாப்பிடுறதுக்கு வெக்கப் படுறாரு, போலண்ட்டு, தம்பி கேட்கும்போது சோறு போடும்மாண்டு சொல்லிட்டு படுக்கப் போயிட்டாங்க. 

நல்லா நடுக்குளிச் சாமத்ல, வகுத்துப் பசி எடுக்கவும், பொறுக்க மாட்டாம எந்திரிச்சா. பொண்டாட்டிய எழுப்பி, நா ஒரு விடுகத போடுறே, நிய்யி அழிச்சுக் குடுக்கணும்ண்டு சொல்றா. அவளுஞ் சரித்தேண்டு சொல்லிட்டா. இவ் கதயச் சொல்றா. 

சோத்துப் பானயும், சாத்துச் சட்டியும் எங்க இருக்கும்ண்டு கேட்டா. அட! அது கூடவா எனக்குத் தெரியாது. எங்கி இருக்கும்? அடுப்பு மேட்டுல இருக்கும்ண்டு சொல்லிப்பிட்டா. 

தடவிக்கிட்டே போயி, சோறப் போட்டுத் திங்கிறா. திங்கயில, சட்டி உருள்ற சத்தம் கேக்குது. ராத்ரியிலே போயி உருட்டினா சத்தம் கேக்காது. கேட்டுச்சு. நாயிதா சட்டிய உருட்டுதுண்டு, மாமியாகாரி, சே சேண்டு சத்தம் போட்டா. மாமியா சத்தம் போடவும் கம்ண்டு இருந்துகிட்டா. 

காலயில, எந்திருச்சுப் பாத்தா சட்டியில சோறு இல்ல. ஐயையோ! எம் பிள்ளைக்கு வச்ச சோத்தெல்லாம். நாயி திண்டுட்டுப் போயிருச்சு போலண்டு, மாமியாகாரி, மகளச் சத்தம் போடுறா. 

காலைல தவசம் தானியம் எடுக்குறதுக்கு குழியத் தொறந்து போட்டாங்க. ஆவி யெல்லாம் போன பெறகு, எரங்கலாம்ண்ட்டு, எல்லாரும் வெளிய போயிட்டாங்க. 

இவ என்னா செஞ்சா, வெளிய போயித் திண்ணயில ஒக்காரலாம்ண்ட்டு, வெளிய வந்தவ், குழிக்குள்ள விழுந்துகிட்டா.

ஐயையோ! மருமகன், குழிக்குள்ள விழுந்து கெடக்காருண்டு, மாமியா சத்தம் போட்டுக்கிட்டு ஓடியாறா. ஓடியாந்து, என்னாங்க மருமகனே! குழிக்குள்ள விழுந்திட்டிகண்டு பதறுரா. அதுக்கு இவ், ஆமா! தவசந் தானியம் இருக்ற குழிய, சுத்தமா வைக்க வேணாம். இப்டித் தானா? செத்தையுஞ் செடியுமாப் போடுறதுண்டு சொல்லி க்கிட்டே, குழிக்குள்ள கெடக்ற செத்தைகள அள்ளிப் போட்டா. 

சரி – ஏறி வாங்கப்பா, போதும்ண்டு ஏணியத் தூக்கி வச்சாங்க. ஏணி, குழிக்கும், மொகட்டுக்கும் சரியா இருக்கு. ஏறி வாங்கண்டு சொல்லவும், படி வழியே ஏறிக்கிட்டு மொகட்டுக்குப் போயிட்டா. கண்ணு தெரிஞ்சாத்தான தரை இருக்குண்டு தெரிஞ்சுகிறப் போறா. 

நேரா மொகட்டுக்கு ஏறிப் போயிட்டா என்னாங்க மருமகனே! மொகட்டுக்கு ஏறிப்போயிட்டீங்கண்டு மாமியா சொல்றா. 

சொல்லவும், ஆமா இப்டித்தானா கூரய ஓட்டயாப் போடுறது. ரெண்டு, தட்ட முடிய எடுங்க, மேஞ்சு விட்டுட்டு வாரேண்டு சொல்றா. 

சரிண்டு, எடுத்துக் குடுத்தாங்க. மேஞ்சு விட்டுட்டு மதிப்பா ஏணியப் புடுச்சு எறங்கி வந்திட்டா.

மறுநா, மாவு இடிக்கிறாங்க. மருமகனுக்குச் சாப்பிடக் குடுக்கவும், மாவு எனக்கு வேணாம்ண்ட்டா சரி படிச்ச மருமகன், மாவு திங்கமாட்டாரு போலண்ட்டு, பேசாம இருந்துகிட்டாங்க. 

எல்லாரும் வெளில போன சமயத்ல, ஓரல்ல வந்து ஒக்காந்து, லேசா ஒரலத் தொட்டு நக்கிப் பாத்தா. இனிச்சுக் கெடந்திச்சு. மாவு ருசியா இருக்கவும், நாக்க விட்டு நக்கிப் பாத்தா. இன்னும் ருசியா இருந்திச்சு. மண்டய ஒரலுக்குள்ள விட்டு ஓரல நக்குறா. 

நக்கி முடிச்சுட்டு, மண்டய எடுக்கப் போகயில, வர மாட்டேங்குது. எடுத்து – எடுத்துப் பாக்குறா. முடியல. மண்ட ஒரலுக்குள்ள சிக்கிக்கிருச்சு. 

அப்பத்தே – மச்சினன், வீட்டுக்குள்ள வர்றா. என்னாங்க மச்சுனா? ஒரலுக்குள்ள தலய விட்டுக்கிட்டுண்டு கேட்டா. 

அதுக்கு, சும்மா இருயா. ஒங்க வீட்டுலசம்பந்தஞ் செஞ்சுகிட்டு, ஒங்க ஒரலத் தூக்கலண்டா நா.. மச்சுனேண்டு சொல்றா. 

வேண்டாங்க, ஒரலுகூடச் சமத்துப் பாக்க வேணாம். எந்திரீங்கண்டு சொல்றா. சும்மா இருயா. இந்த ஒரலத் தூக்கலேண்டா நா.. என்னா ஆம்பளண்ட்டு, அங்ஙிட்டும். இங்ஙிட்டுந் திருகவும் கழுத்து நொடுக்ண்டு ஒடிஞ்சு போச்சு. ஒரலுக்குள்ள தலய விட்டவாக்குல கெடக்கா. என்னா? மருமகன் பேசாமக் கெடக்குராருண்டு பாத்தா செத்துக் கெடக்கா. செத்தவ எப்டி துளும்ப முடியும். பெறகு எடுத்துப் பெதச்சாங்களாம், முழி கண்ணு குருடனால, நாலு மனுசரப் போல இருக்கமுடியுமா? கண்ணு தெரியாம எத்தன நாளக்கிச் சமாளிக்க முடியும்.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *