முந்தானை! – ஒரு பக்க கதை





திருமணமான இரண்டே மாதத்தில் பிரபாவதியிடம் பெரும் மாறுதல். ருத்ரகோட்டியுடன் “எதிலும்’ அனுசரித்துப் போவதில்லை. மொத்தத்தில் உம்மனா மூச்சியாக மாறிவிட்டாள்!
அன்று அலுவலகத்திலிருந்து திரும்பியதும் ருத்ரகோட்டி, ஆசையாய் ரெண்டு வார்த்தை பேசிக் கொண்டிருக்கலாம் என அவளை தனி அறைக்கு அழைத்தான்.
“எனக்கு வேலை கிடக்கு’ என வெடுக்கென சொல்லிவிட்டு விறுவிறுவென்ற சமையற்கட்டினுள் நுழைந்தாள். அம்மாவும் இதை கவனித்திருக்கிறாள். “என்னடா ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்’ என்றாள்.
“ஒண்ணுமில்லைம்மா’ என்றான்.
அன்று இரவு வெகுநேரம் கழித்து வந்தான் ருத்ரகோட்டி. மனைவி பக்கத்தில் படுத்தான்.
“பிரபா! எனக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்! என்மீது உனக்கென்ன கோபம்? என்னைப் பிடிக்கலையா?’
“உங்க மேல எனக்கு என்னைக்கும் கொள்ளைப் பிரியம்தான். நீங்க என்மேல உள்ள ஆசையாலே அம்மாவை மறந்துட்டீங்க. இத்தனை நாளும் ஒவ்வொண்ணுத்துக்கும் அம்மாவைக் கேட்ட நீங்க, நான் வந்ததும் அம்மாவை மறந்திட்டா அவங்க மனசு என்ன பாடுபடும். அதனாலதான் நான் உங்ககிட்ட கோபப்படற மாதிரி நடிச்சேன்!’
ருத்ரகோட்டி, “அவ்வளவு பெரிய மனுஷியா நீ’ என மகிழ்ச்சியுடன் புன்னகைத்தான். அங்கே ஒரு புதிய உலகம் “சிருஷ்டி’யானது!
– ஆகஸ்ட் 2012