முத்தம்மன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 20, 2025
பார்வையிட்டோர்: 224 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சில உத்தியோகங்கள் பார்ப்பது அதிருஷ்ட வசம் என்பதில் சந்தேகம் இல்லை. தாலூகா ஆபீஸ் குமாஸ்தாவுக்கு கலை வளர்ச்சியிலோ சரித்திர ஆராய்ச்சியிலோ இறங்க நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. என்னைப் போல பள்ளிக்கூடங்களின் இன்ஸ்பெக்டராயிருந்தால் அப்படி அன்று. கலை முதலிய விஷயங்களில் ஈடுபட வேண்டுமான அவகாசம் கிடைக்கும், 

முத்தாபுரம் பள்ளிக்கூட பரிசோதனைக்குப் போயிருந்த பொழுது ஒரு நாள் பிற்பகலில் வேண்டிய நேரம் கிடந்தது. எனக்கு வேலை ஒன்றுமில்லை. சும்மா உலாவலாம் என்று கிளம்பினேன். கிராமத்துக்கு ஒரு மைல் வடக்கே போயிருப்பேன். வேலி போட்டு அடைத்த அழகிய புளியந்தோப்பொன்று தென்பட்டது. அதைக் கண்ட பிறகு அப்பால் செல்ல மனம் வரவில்லை. ஒரு தரம் வேலிக்கு வெளிப்புறமாகத் தோப்பைச் சுற்றிவந்தேன். மேலண்டைப்புறம் தோப்புக்குள் போக ஒரு வழி இருந்தது. சாதாரண வழி அல்ல. இடுப்பு வேஷ்டி சட்டை இவைகளை வழித்துச் சுருட்டி ஊர்த்துவ தாண்டவத்தைப்போல் ஒரு காலை உயர நீட்டி கவட்டைக் கழியைத் தாண்டாவிட்டால் சட்டை யும் சதையும் கருவமுள்ளில் மாட்டி பாவட்டாவாகி விடும். சட்டைக்கு ஒரே கிழிசலும் சதைக்கு ஒரு பழுதுமின்றி நான் உள்ளே சென்றேன். 

தோப்பு நடுவில் ஒரு சிறிய கோவில் இருந் தது. வாசலில் ஒரு கிழவன் குந்திக்கொண்டு பீடி பிடித்துக் கொண்டிருந்தான். நான் நெருங்கியவுடன் பீடியை எடுத்து பின்புறமாக ஒளித்துக்கொண்டு ‘என்னா பாக்கிறீங்க’ என்றான். 

‘ஒன்றுமில்லை கோவிலைத்தான்’ 

அவன் பின்புறமாக பீடியை எறிந்து விட்டு ‘நான் தான் பூசாரி’ என்றான். 

கோயிலுக்குள் நுழைந்தேன்.அவனும் கோயி லுக்குள் நுழைந்து அழுக்குப் பிடித்த ஒரு தாம் பாளத்தில் சூடம் வைத்துக் கொளுத்தி விக்ரஹத் தின் முகத்திற்கெதிரில் பிடித்தான். அழகு கொஞ் சும் அம்மன் சிலை. சிலை அழகென்றாலும். தலை இடது புறம் சாய்ந்து துயரத்தின் களை வீசிக்கொண்டிருந்தது. துயரம் சந்தோஷம் இரண்டுக்கும் அப் பாற்பட்ட சாந்தமல்லவா சிற்பம் தெய்வங்களுக்கு விதித்திருக்கிறது? இந்த விக்ரஹம் வேறுகளையுடன் இருந்ததால் இது தேவதையா என்ற ஐயம் எனக்கு எழுந்தது. 

பூசாரி கொடுத்த சாம்பலை நெற்றியிலிட்டுக் கொண்டே ‘அம்மனுக்குப் பெயரென்ன?’ என்றேன் 

‘முத்தம்மன்’ 

‘இதுக்கு ஸ்தல புராணம் உண்டா?” 

அதென்னமோ தெரியாது, ஆனா செப்புத் தகட்டிலே பாட்டு எழுதியிருக்கு.’ 

‘அம்மனைப் பார்த்தால் ஆள் மாதிரி இருக்கே- அதுதான் கேக்கறேன்.’ 

‘அதென்னங்க சாமி அப்படிச் சொல்றீங்க. அவ மகிமை இந்த ஊர் பிழைக்குது.’ 

எனக்கு மட்டும் சந்தேகம் நீங்கவில்லை. ‘அந்த செப்பேடு எங்கே?’ 

‘இப்பொ சொன்னீங்களே அது சரி. அதுலெ அம்மன் வரலாறெல்லாம் எழுதி இருக்குன்னு எங்க பாட்டன் நான் புள்ளையா யிருக்கிறப்போ சொல்லி இருக்காரு. வேணாப் பாருங்க’ என்று விக்ரஹத்துக்குப் பின்னாலிருந்த இருபத்தி ஒன்று செப்பேடுகளைக் கொண்டுவந்து கொடுத்தான். 

அவ்வளவும் பாட்டு. 

ஆதாரம் மலர்ந்திலங்க பிரம்மதண்டம் அரசின்கீழ்
வேதார்த்தம் விளக்கவந்த எங்கள் தொந்தி பாதாரவிந் தங்கள்
போதார்த்தம் விள்ளவே பாவியோம் தலையில் நாட்டிச்
சாகாத எழுத்தெழுதக் காப்பு

என்பது கணபதி காப்பென்று கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டமாகிவிட்டது. அவ்வளவு எண்ணெய் பிசுக்கு! அவ்வளவு பாட்டுகளையும் தட்டுத் தடவிப் படித்துப் பொருள் கண்டு பிடித்த சிரமத்தை யெல்லாம் உங்களுக்குக்கொடுக்க இஷ்டமில்லை வரலாற்றை மட்டும் வசனத்தில் சொல்லலாம். 

ராஜாதி ராஜன் ராஜமார்த்தாண்டன் சோழ பூபதி (பெயர் ஏட்டில் சரியாகத் தெரியவில்லை.) சிங்கா தனமேறிய காலத்தில் எழுந்த தாயாதி விவகாரம் ஒருவாறு முடிந்திருக்கிறதே அன்றி முற்றிலும் மறையவில்லை. சோழனுக்கு வெகு நாள் வரையில் மகனில்லாதிருந்தது தாயாதிகளுக்கு மனப்பால் குடிக்க இடமளித்துக்கொண்டிருந்தது. ஆனால் வயது முதிர்ந்த காலத்தில் சோழனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததும் அரசனுக்குப் பேரானந்தத்தையும் தாயாதிகளுக்கு எறிச்சலையும் தந்தது, மகனைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை. அந்தக் கவலைக் கூட அரசனுக்கு ரொம்பநாள் நீடிக்கவில்லை. ஏனெனில் அரசனே மகன் பிறந்த பதினேழாவது நாளில் திடீரென்று மாரடைப்பால் காலமாகிவிட்டார். ராணி தான் திசையறியா மரக்கலத்தைப் போல் கலங்கினாள். மகனை தாயாதிகளினின்று இனி காப்பதெப்படி. என்பதே கவலையாகிவிட்டது. 

அரண்மனை தாதி முத்தாம்பா ராணியிடம் குழந்தையைத் தான் இரவில் எடுத்துப் போய் காப்பாற்றி விடுவதாக யோசனை கூறினாள். தண்ணீரில் முழுகுகிறவனுக்குத் துரும்பும் தெப்பக்கட்டையாய்த் தோன்றுமாமே. ராணி சம்மதித்தாள். அன்றிரவே குழந்தை தாதி முத்தாம்பா வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தாதிக்கும் ஒரு ஆண் மகன் உண்டு. அதற்கு வயது 19 நாள். 

எடுத்துச் சென்ற நாற்பத்தி ஐந்து நாள் வரையில் ராஜ்யத்தில் எவ்வித தகராறும் இல்லை. ஏனென்றால் தாயாதிகளுக்கு குழந்தை அரண்மனையில் இருப்பதாகவே நினைப்பு. வாடியிருக்கும் கொக்கைப்போல குழந்தையை ஒழித்துவிட சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்கள். 

தாதி முத்தாம்பா தினம் இரு குழந்தைகளையும் இரண்டு மார்பில் விட்டு பாலூட்டி வளர்த்து வந்தாள். ஒரு குழந்தையின் தலையில் மட்டும் ஒரு பொன் குல்லாயும் மார்பில் முத்தாரமும் இடைவிடாது போட்டிருக்கும் – அதுதான் அரச குழந்தை, குழந்தையின்மீது காற்றுக் கூட படாதபடி அவள் வளர்த்தது கடவுளுக்குக் கூடத் தெரியாது. ஆனால் தாயாதிகளுக்கு விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டது என்ற தகவல் நாற்பத்து ஆறாவது நாள் காலை பத்து நாழிகைக்கு தாதிக்குத் தெரியவந்தது. என்ன செய்வதென்று அவளுக்குப் புரியவில்லை. அதற்காக யோசனை செய்யக்கூடிய அவகாசம்கூட கிட்டவில்லை. ஏனெனில் குதிரை மேல் ஏறிக்கொண்டு உருவிய கத்தியுடன் ஐம்பது பேர் தெருக்கோடியில் வருகிறார்கள் என்ற செய்தியை வீடு கூட்டி பதை பதைத்து தாதியிடம் வந்து சொன்னாள், முத்தாம்பா ஒரு வினாடி யோசித்தாள். மறு வினாடிக்குள் அரசனுடைய குழந்தையின் தலையிலிருந்த பொன் தொப்பியையும் கழுத்திலிருந்த முத்தாரத்தையும் கழட்டி தன் குழந்தைக்குப் போட்டாள். பிறகு இரண்டு குழந்தைகளையும் எடுத்து மார்புடன் அணைத்து பால் கொடுத்தாள். 

குதிரைகள் குளம்போசை வாசல் கதவண்டை நின்றது. சூறைக்காற்றைப் போன்ற வேகத்தோடு வீட்டிற்குள் இருபது வீரர்கள் உருவிய கத்தியுடன் புகுந்து அரசன் மகனைத் தேடிக்கொண்டு வட வண்டை அறைக்கு வந்தார்கள். சுவற்றோரத்தில் இரு குழந்தைகளுக்கும் தாதி பால் கொடுத்துக் கொண்டிருந்ததுதான் தாமதம், ஒரே பாய்ச்சலாகத் தாதியிடம் பாய்ந்தார்கள். முத்தாரத்து மோகராவை ஒரு கையால் இழுத்து விளையாடிக்கொண்டே குழந்தை பால் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. ஒருவன் முத்தாரம் போட்டிருந்த குழந்தையைப் பிடித்திழுத்தான். ஒருவன் வாள் மின்னிற்று. அத்துடன் குழந்தை இரண்டாயிற்று. 

‘ஐயோ’ என்றலறினாள் தாதி. மறுநிமிஷத்தில் நூற்றுக்கணக்கான ஜனங்கள் கூக்குரலிட்டுக்கொண்டு அறைக்குள் புகுந்தனர். இவர்கள் யார் என்று தாதிக்கு விளங்கவில்லை. ஆனால் முதலில் வந்த கூட்டத்தினர் மேல் இவர்கள் ஆரவாரமிட்டுப் பாய்ந்து சின்னா பின்னப்படுத்திய பொழுது தான் அரசனிடம் அன்புகொண்ட கோஷ்டியார் இவர்கள் என்று விளங்கிற்று. தன் குழந்தை உயிர் போனது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் சூது வெளிப்பட்டு அவர்கள் திரும்பவும் மறு குழந்தையிடம் வந்துவிட்டால் மோசமல்லவா என்று தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுது நல்லவேளையாக இவர்கள் வந்தார்கள். 

இரண்டு நாழிகை நேரம் வரையில் சந்தடி. சண்டை, கத்திவீச்சு, பிணங்கள். பிறகு கலகம் ஓய்ந்து அமைதி நிலவிற்று. அப்பொழுதுதான் அரசன் குழந்தை எங்கே என்று விசாரிக்க வந்தவர்களுக்குத் தோன்றிற்று. தாதி திரும்பவும் பழைய முத்தாரத்தைக் கழுவி அதையும் பொன் குல்லாவையும் அரசன் குழந்தைக்கு மாட்டி வந்தவர்களிடம் காட்டின பொழுது செவிடுபட கோஷ மெழுந்தது. ஓசை அடங்கவும் ‘வெட்டுண்டு கிடக்கும் அந்தக் குழந்தை யார்?’ என்று ஒருவன் கேட்டபொழுதுதான் தாதி தன் தந்திரத்தை வெளியிட்டாள். ஆஹாஹா என்று சந்தோஷமும் துயரமும் கலக்க கூச்சலிட்டு தாதியின் காலில் விழுந்தெழுந்தார்கள். அடுத்த நிமிஷம் அவ்வளவு கூட்டமும் அரண்மனையை நோக்கி ஓடி ராணியிடம் அவ்வளவு தகவலையும் ஒளரிக்கொட்டினார்கள். 

ராணிக்கு மகிழ்ச்சி உண்டாகவில்லை. துயரம் கறைபுறண்டோடிற்று. ஒன்றை பலியிட்டு ஒன்றைக் காப்பாற்றவேண்டுவதா கடவுள் திருவுளம் என்று கதறினாள். 

இந்தக் கலகத்தின் நினைப்புத் தேய ஒரு வாரமாயிற்று. ராணிக்கு அப்பொழுதுதான் ஒரு யோசனை உண்டாயிற்று. தாயாதிக் காய்ச்சலில் இனி போட்டியிட யாரும் மிச்சமில்லை. நடந்த கலகத்துடன் பூண்டற்றுப் போயிற்று. ஆகையினால் தெளிவுடன், இளவரசனுக்குப் பிரதிநிதியாக. சோழபுரம் என்று பெயரிட்டிருந்த ஒரு முழு கிராமத்தையே முத்தம்மாபுரம் என மாற்றி இருபத்தி ஒன்று செப்பேடுகளில் இவ்வரலாற்றையும் இந்த இனாம் சாஸனத்தையும் செய்யுளில் எழுதச் செய்து தன் முத்திரையையும் இட்டாள். அச்செப்பேடுகள் தாம் இந்த இருபத்தி ஒன்றும். 

செப்பேடுகளைப் படித்து முடித்துவிட்டு பூசாரியை நோக்கி ‘நான் சொன்னதுபோலத்தான் இருக்கிறது. இந்த விக்ரஹம் தான் தாதி முத்தம்மா’ என்றேன். 

பூசாரி தலையை ஒரே ஆட்டாக ஆட்டி ‘அதெல்லாம் இல்லிங்க. பாட்டு நெறடுன்னூட்டு எங்க பாட்டன் சொல்லுவாரு, ரொம்ப ரொம்ப தமிழ் படிச்சபேருக்குத்தான் புரியுமாம். அவர் இதெல்லாம் சொல்லல்லியே… நீங்க என்னா படிச்சிருக்கீங்க’ என்றான். 

பள்ளிக்கூட இன்ஸ்பெக்டரை பூசாரி பரிசோதிக்க ஆரம்பித்தால் இன்ஸ்பெக்டர் என்ன சொல்லமுடியும்? 

கம்மென்று வாயை வைத்துக்கொண்டேன். மகாபலிபுரத்தில் மலையில் அடித்திருக்கும் ஒரு சிற்பத்தைப்பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ‘அர்ஜுனன் தபஸா. பகீரதன் தபஸா’ என்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அத்துடன் இதையும் சேர்த்துக் கொள்ளட்டும் முத்தம்மா தாதியா தெய்வமா? ஆனால் முத்தம்மா புரம் எங்கே இருக்கிறதென்றால், அதையும் ஆராய்ந்து பார்க்கட்டும்.

– ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு: 1947, கஸ்தூரிப்‌ பதிப்பகம்‌, திருத்துறைப்பூண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *