முடிவு – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,190
‘டேய்…நாளைக்கு என்ன செய்யப்போற?’ – ரவியைக் கேட்டான் சிவா.
‘வழக்கம் போலத்தான்.அப்பா, அம்மாவுக்காக, போய் தலையைக் காட்டிட்டு, பொண்ணு பிடிக்கலேன்னு சொல்லிடப் போறேன்!’
”நியாயமாடா இது? வீட்டிலேயே விஷயத்தைச் சொல்லி தடுக்காம, பொண்ணு பார்க்குற வரைக்கும் போய் அவங்ககிட்டே சொல்றே…அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்!”
‘உண்மைதாண்டா. ஆனா என்னோட காரணத்தை எங்க வீட்டுல சீரியஸா எடுத்துக்க மாட்டேங்குறாங்க. ஆனா பொண்ணுகிட்டே தனியா பேசும்போது சொல்லிட்டா, ‘அப்பாடா! இப்பவே தெரிஞ்சுதே’ன்னு சந்தோஷப்படுறாங்க!’ – சமாதானம் சொல்லிச் சென்றான் ரவி.
மறுநாள்…ரவிக்கு திருமணம் நிச்சயம் ஆன செய்தி கேட்டு சிவாவுக்கு ஆச்சரியம்!
‘என்னது…நீ காரணத்த சொல்லியும் அந்த பொண்ணு ஓகேன்னாளா? யாராவது கண்ணைத் தொறந்துகிட்டே பாழுங்கிணத்துல விழுவாங்களா?”
”விழ மாட்டாங்கதான். ஆனா என் வுட்பி…அந்தக் கிணத்த சுத்தம் பண்றேன்னு சொல்றா. புரியல? நான் குடிகாரன்னு உண்மையைச் சொன்னாலும் பரவாயில்லை…நான் திருத்தறேன்’ங்கிறா. காரணம் என்ன தெரியுமா?”
சிவா புரியாமல் பார்த்தான்.
‘அவ…குடிகாரர்களைத் திருத்தற மறுவாழ்வு மையத்துல வேலை பார்க்குடா!” – ரவி சொல்ல, சிவா வாயைப் பிளந்தான்.
– கீதா சீனிவாசன் (செப்ரெம்பர் 2012)