முகாமைத்துவம்
(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“சேர், ஐ வில் ரேக் திஸ் மெற்றர் அஸ் ஏ சலஞ்” என ஆங்கிலத்தில் அழகிய இனிய குரலில் கம்பீரமாக அதிபரைப் பார்த்து நிமிர்ந்து நின்று கூறினாள். அமலா.
மூவாயிரம் மாணவர்களையும் நூற்று முப்பது ஆசிரியர்களையும், இருபத்தைந்து ஏக்கர் நிலப் பரப்பையும் கொண்ட மிகவும் பிரபல்யம் வாய்ந்த கல்லூரியின் அந்த அதிபர் அமலாவைப் பார்த்தபடியே மௌனமாக நின்றார்.
எந்த விடயமும் நிலையானதல்ல ஒரு நிலையில் தான் ஒருவர் எப்போதும் நின்று வாதிப்பதுமில்லை . “றை யுவ வெ(b)ஸ்ற் அன்ட் குட்லக். கோட் பிளஸ் யூ”, என்று மட்டும் அமைதியாக அழுத்தமாகக் கூறி வைத்தார் அதிபர்.
ஆனந்துடன் அதிகம் நெருங்கிப் பழகவேண்டாம் என்று அடிக்கடி தோழிகள் கூறக்கூற ஏனோ தெரியவில்லை அமலாவின் மனம் அவனை மிகமிக நெருங்கியே சென்றது.
அந்த பெரிய பாடசாலை ஒரு நந்தவனம் போன்றது அமெரிக்க மிசன் பாடசாலையாக இருந்து அரசாங்கம் பொறுப்பேற்ற பாடசாலையானாலும், இன்னும் அது மிகவும் உயர்ந்த நிலையிலேயே இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அப்பாடசாலையில் இல்லை என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை. சகல விளையாட்டுக்களுக்கும் உரிய பயிற்சிக் கூடங்களும் பயிற்றுவிப்பாளர்களும் உள்ளனர். விரும்பிய மொழியைப் பிள்ளை கற்கலாம், விரும்பிய துறையில் தங்களை வளர்த்துக்கொள்ளலாம்.
அமலா அந்தஸ்த்தும் அழகும் உள்ளவள், நல்லவள் ஆனந்த் அந்தஸ்த்து உள்ளவன் சுமாரான அழகுள்ளவன், நல்ல கால் பந்தாட்ட வீரன், அமலா வலைப்பந்தில் சிறந்து விளங்கினாள். இருவரும் கல்வியில் சிறந்து விளங்கினர். இருவருக்கும் அழகியலில் ஆர்வம் இருந்தது. –
அது ஒரு வேகமாகவும் விவேகமாகவும் முறையாகவும் இயங்கும் பாடசாலை. மாணவர் கலாசார மையத்தை அங்கு காணலாம்.
ஆனந்தைப் பற்றி அமலாவும், அமலாவைப் பற்றி ஆனந்தும் அறிந்து கொள்ள நிறையச் சந்தர்ப்பங்கள் இருந்தன.
ஆனந்தின் ஆளுமையில் சிக்கிய அனேக நல்ல பிள்ளைகள் விட்டில் பூச்சிகளானது பெரிய விந்தை இல்லை.
அமலா ஒரு வித்தியாசமான பிள்ளை பெண்மையோடு கூடிய ஆளுமையுள்ள பெண் சாதனையாளராக வர விரும்பினாள்.
அமலாவின் நடை சாதாரணமான பெண் மாணவிகளை விடவும் மிகவும் மேலோங்கி இருந்ததை ஆனந்தும் கவனிக்கத்தான் செய்தான்.
அமலா அளவிற்கு அதிகமாக அவனோடு நெருங்காவிட்டாலும் அடுப்புச் சூட்டிற்கும் சுவையான கறிக்கும் இடையேயுள்ள சட்டியின் வேலையையும் சிறந்த சமையல்காரனின் வேலையையும் ஒத்த ஒரு வேலைத்திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்தி பரீட்சித்துப் பார்த்ததில் சிறிது வெற்றியை அடைந்ததாக அவள் நினைத்தாள்.
பெண்களில் ஆண்கள் அதிகமாக ஏமாந்து போகின்றனரா? அல்லது ஆண்களில் அதிகமாகப் பெண்கள் ஏமாந்து போகிறார்களா? என்பது விவாதத்திற்குப் பொருத்தமான தலைப்பாக இருந்தாலும் மேடைப் பேச்சில் வீரம் விளைவிக்க அமலா விரும்பவில்லை.
ஆனந்தைத் திருத்தும் முயற்சியில் அவள் வெற்றி கொண்டு அதன் பின் ஆத்மார்த்தமானதொரு அன்புப் பிணைப்பு ஏற்பட வாய்ப்பிருந்தால் அவனை தன் துணையாக ஆக்கிக்கொள்ள அவள் விரும்பினாள். நாணயத்திற்கு எப்போதும் இருபக்கம் என்பதில் விவாதத்திற்கு இடமில்லையல்லவா? பத்தாம் வகுப்பில் தொடங்கிய பந்தம் நான்கு வருடங்களாக மேடையேறக் காத்திருக்கும் நாடகம், நல்லபடி அரங்கேற வேண்டும் என இருவரும் நினைக்கும் அளவிற்கு நட்பு வளர்ந்திருந்தது.
அமலாவும் ஆனந்தும் அக்கறையோடு கல்வியைத் தொடர்வதற்கான திட்டங்களைப் பரிமாறிக்கொண்டனர். இருவருமே வைத்தியர்களாக விரும்பினர். விளையாட்டு வீரர்களின் எலும்பு மூட்டுக்களின் உபாதையினைக் குறைப்பதற்கான ஆராய்ச்சியாளராக வர அவன் விரும்பினான். பெண்கள் சம்பந்தமான மரபியல் வளர்ச்சிப் போக்கில் தெளிவு பெறும் வகையில் அவர்களின் பண்பியல் வளர்ச்சியில் நல்ல மாறுதலுக்காக ஆராய்ச்சி செய்யக்கூடிய நரம்பியல் வல்லுனராக வர அமலா விரும்பினாள்.
பதிமூன்றாம் வருடப்படிப்பும் முடிந்து பரீட்சைக்கான நாட்கள் குறையக் குறைய படிக்கும் திறனை இருவரும் அதிகரித்தனர். இலட்சியத்தின் முதல் இலக்கினை அடைவதில் இருவரும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பரீட்சை தொடங்கிவிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்டு பரீட்சை எழுதத் தொடங்கினர்.
தவணை முடிவுற்று பரீட்சைத் திணைக்களத்தின் தேவைகளுக்காகப் பாடசாலையில் இடம் பெறவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய கூட்டமொன்றினை அதிபர் கூட்டியிருந்தார்.
பிரதி அதிபர்கள், கல்விசாரா அதிகாரிகள், ஊழியர்கள் யாவரும் அதில் கலந்து கொண்டனர். தான் வெளிநாட்டு புலமைப்பரிசில் பெற்று மூன்று மாதங்கள் லண்டன் செல்வதாகவும் பிரதி அதிபர்களின் மேற்பார்வையில் பாடசாலை இருக்கும். முகாமைத்துவ உதவியாளர்களினதும் ஏனைய ஊழியர்களினதும் கடமைக் கூறுகளின் முக்கியத்துவத்தை விளக்கிய அதிபர் விடுமுறைக் காலத்திற்குரிய வேலைகளுக்குரிய நேரசூசியினையும் தயாரித்து வழங்குமாறு பிரதி அதிபர்களில் முக்கியமானவரிடம் கூறியிருந்தார்.
ஆறு பரீட்சை மண்டபங்கள் அப்பாடசாலையில் அமைந்திருந்தது. வெளிப்பாடசாலைகளில் இருந்து அங்கு பரீட்சைக்காக மட்டும் முதன் முதலில் வந்த மாணவர்கள் பாடசாலையின் கவின்நிலை அழகு கண்டு மூக்கில் விரல் வைத்தார்கள்.
அது ஜப்பானின் முகாமைத்துவ அமைப்பின் ஐந்து எஸ். முகாமைத்துவ நடவடிக்கைப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக முதலாமிடம் பெற்ற பாடசாலை. மாணவர்களின் கைகளில் ஊத்தைகள் படாதவகையில் உபயோகிக்கக் கூடிய வகையில் குப்பைத் தொட்டிகள். கூட அங்கு அமைக்கப்பட்டிருந்தன. மருந்திற்குக்கூட காக்கைகளோ, நாய்களோ வராதபடி வளாகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பரீட்சைக் காலங்களில் “உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கொட்டான்” எனும் நிலை அப்பாடசாலையில் தோற்றம் பெற்றது.
ஆசிரியர்களைப் போன்று தாங்களும் விடுமுறையில் நிற்கவே கல்விசாரா அனைத்து ஊழியர்களும் விரும்பினர். தங்களது கடமையை புறக்கணிக்கும் நிலை அங்கு காணப்பட்டது. சிலர் சாட்டுக்கு வந்தனர். எவ்வளவோ தடவைகள் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆகியோர் கேட்டுக்கொண்டாலும் முகாமைத்துவ உதவியாளர்கள் பாடசாலைக்கு வரவில்லை . காவலாளி கூட கவலையற்று இருந்தான். விளைவு எப்படியோ ஒரு சோடி நாய்கள் உள்ளே நுழைந்துவிட்டன.
நூற்றுக்கணக்கான மாணவர்கள், மற்றும் பரீட்சை மேற்பார்வை யாளர் மற்றும் பரீட்சை இணைப்பு நிலைய ஊழியர்களின் உணவுப் பொட்டலங்களின் எச்சங்கள் கட்டிடங்களின் ஓரங்களில் வீசப்பட்டிருந்தன. அந்த உணவு மீதிகளைப் பற்றிக்கவலைப்பட அந்த இரு நாய்களையும் தவிர வேறு யாரும் இல்லை. அவை இரண்டும் நன்றாக உண்டு களித்து பொழுது போக்கின. அச்சோடிக்கு எதிலும் போட்டியில்லை. ஓய்வு எடுத்து சினேகம் கொண்டாடி இனிது வாழ்ந்திருந்தன.
உயிரியல் இரண்டாம் பத்திரப் பரீட்சையன்று அந்த இரு நான்கு கால் சீவன்களும் மிகுந்த உற்சாகத்துடன் சந்ததி விருத்தியில் ஈடுபட்டிருந்த சமயம் ஆனந்த் பக்கவாட்டில் தலையைச் சொறிந்தவாறு திரும்பியவன் அக்காட்சியைக் கண்டுவிட்டான். ஒரு பத்து நிமிடம் அதனையே பார்த்திருந்தான். மீண்டும் சுய நினைவிற்கு வந்து பரீட்சையில் மூழ்கினான். பரீட்சை முடிந்துவிட்டது. ஆனந்தும் அமலாவும் விளையாட்டிலும் வீட்டிலும் கவனம் எடுத்தனர். ஆனந்தின் வீட்டாருக்கு ஆனந்த் வீட்டில் தங்கியிருந்து தன்னுடைய சில தேவைகளைத் தானே கவனிக்க ஆரம்பித்திருந்தது எட்டாம் உலக அதிசயமாக இருந்தது.
பல்கலைக்கழக அனுமதியில் அமலாவிற்கு எம்.பி.பி.எஸ். ஆனால் ஆனந்திற்கு மிருக வைத்தியர் பிரிவு கிடைத்தது. இடிந்து போனவன் பரீட்சையில் அந்தப் பத்து நிமிடங்களைச் சபித்தபடி பிரமையோடு சில நிமிடங்களைக் கடத்தினான்.
அமலா பல்கலைக்கழகம் செல்ல ஆயத்தமாகிக் கொண்டி ருந்தாள். ஆனந்த் தெரு நாய்களையெல்லாம் விரட்டி அடித்ததோடு உள்நாட்டு அரச நிறுவனங்களுடன் தொடர்பு கெண்டு தெரு நாய்களை அழிக்கும் முயற்சிக்கு ஆதரவு வழங்கினான். அவனுடைய கண்கள் ஏதாவது தெரு நாயைக் கண்டு விட்டால் அவை பிணமாவது நிச்சயம். ஆனந்த் வாழ்ந்த பிரதேசத்தில் எஜமானின் பிடியில் இருந்தபடியே வீதிக்கு உலாவரும் சிறந்த வளர்ப்பு நாய்கள் கூட ஆனந்தின் மணத்தை முகர்ந்து ஒதுங்கி நின்று வழிவிடும் அளவுக்கு அவன் நாய்களின் எதிரியாகிவிட்டான். செய்தி அப்படிப் பரவியிருந்தது. தப்பித்தவறி அவனுடைய உருவம் கண்ணில் பட்டால் கிடைத்த இடத்தில் வாலைச் சுருட்டியபடி அனுங்கிக்கொண்டு ஒரு சில நாய்கள் மறைந்திருந்ததும் உண்டு.
அவனுடைய சுற்றாடலில் இப்போது தெரு நாய்த்தொல்லையே இல்லை. சாலைகளில் எல்லோரும் நிம்மதியாக நடந்து செல்கின்றனர்.
எவ்வளவு காலத்திற்கு நாய்களைக் கொல்லுவதும் அடித்துக் துரத்துவதும் ஆளுமைமிக்க இளைஞர்களுக்குப் பொருந்தும் எனும் வினாவை அமலா அவனது மனதில் புதைத்துவிட்டாள்.
பணம் அவனுக்குப் பிரச்சினை இல்லை, ஆனாலும் அவன் இப்பொழுது மிகுந்த முரண்பட்ட மனத்தை உடையவனாக இருக்கிறான். என்பது அமலாவிற்குப் புரியும்.
நீண்ட காலமாக ஆனந்தும் தந்தையும் நேருக்கு நேர் சந்திக்காமலே பழகிவிட்டனர். ஆனந்தின் குரங்குச் சேட்டைகளுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் அவர் வாழ்ந்தார். அதுவே பின் பழக்கமாகிவிட்டது.
ஆனந்தின் அம்மாவோடு அமலா தொடர்பு கொண்டதன் விளைவாக ஆனந்த் ரஸ்யாவில் எம்பி.பி.எஸ் படிக்க ஓரளவு இசைந்து வருகிறான்.
தனது பாடசாலையின் மூன்று மாத வரலாற்றை அறிந்து கொண்ட அதிபர் லண்டனில் பிரிட்டிஸ் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முயல்கின்றார்.
– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு..