மு.தவராஜா

 

பிறப்பு : 1950 – 03 – 18
தாய் – திருமதி. வள்ளியம்மை
தந்தை : திரு. முருகேசு பிறந்த இடம் : பேத்தாழை வாழைச்சேனை.
ஆரம்பக் கல்வி : மட் /வாழைச்சேனை, இந்துக்கல்லூரி

இடைநிலைக் கல்வியை மட் /வந்தாறு முலை மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றதின் பின்னர் வாழைச்சேனை காதிதாலையில் 14 வருடங்கள் தொழிலில் ஈடுபட்டு, 1986 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானமானி, வியாபார முகாமைத்துவ சிறப்புப் பட்டதாரி யானார். பின்னர் 1988 இலிருந்து மட்/ வாழைச்சேனை இந் துக்கல்லுாரியில் ஆசிரியராகக்கடமையாற்றிய இவர், 1996 இல் இருந்து அதிபராகக் கடமையாற்றுகிறார்.

பாடசாலைப் பருவத்திலிருந்தே பேச்சுவன்மை மிக் கவராக விளங்கிய இவர், 1990 இல் இருந்து இலக்கிய ஈடு பாடு கொண்டு கவிதை, சிறுகதை ஆகிய வற்றை ஆக்கியி ருந்தும் 2003 இல் கலாநிதி செ. யோகராசா அவர்களின் உந்துதலினால் கோறளைப்பற்று பிரதேசசெயலக கலாசார பேரவையின் ஊடாக இவரது “மறை முகம் எனும் முதலாவது சிறுகதைத் தொகுப்பு வெளியானது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாழர் பேரவை யின் ஒத்தாசையின் மூலம் இரண்டாவது சிறுகதை தொகுப் பான “மறுபக்கம்’ ஆகிய இந் நூல்வாசகராகிய உங்கள் கைகளில் தவழுகின்றது.

– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு.

************

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் பிரபலமான பாடசாலை ‘வாழைச்சேனை இந்துக் கல்லூரி’ (தேசியப் பாடசாலை) ஆகும். இப்பாடசாலை வரலாற்றில் சிறந்ததொரு ஆளுமையின் பெயர்தான் அமரர் முருகேசு தவராஜா.

வாழைச்சேனை பேத்தாழை கிராமத்தில் 18.03.1950 அன்று முருகேசு – வள்ளியம்மை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் தவராஜா. வாழைச்சேனையில் ஆரம்பக் கல்வி கற்று, வந்தாறுமூலையில் இடைநிலைக் கல்வி பெற்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வியாபார நிருவாக விஞ்ஞானமாணி பட்டத்தினைப் பூர்த்தி செய்தார்.

1986 ஆம் ஆண்டு, ஆங்கில ஆசிரியராகப் பணியினைத் தொடங்கியவர், 2007 ஆம் வருடம் அதிபராக ஓய்வு பெற்றார். ஆசிரியராக வாழைச்சேனை, மிறாவோடை, நாசிவன்தீவு போன்ற பாடசாலைகளிலும் அதிபராக வாழைச்சேனை, கரடியனாறு பாடசாலைகளிலும் பணியாற்றியுள்ளார்.

சிறந்ததொரு பேச்சாளராக விளங்கிய இவர், வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய காலப் பகுதியில் சிறுகதை எழுத்தாளராகவும் பரிணமித்தார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பான ‘மறைமுகம்’ 2003ஆம் ஆண்டு, கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் வெளியிடப்பட்டது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘மறுபக்கம்’, 2005 இல் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையினால் வெளியிடப்பட்டது. இரு நூல் வெளியீடுகளும், வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் நடைபெற்றன.

இவரது இரு சிறுகதைத் தொகுப்புகளுக்கும் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவரான பேராசிரியர் செ.யோகராசா அணிந்துரை எழுதியுள்ளார். ‘மறைமுகம்’ நூலின் அணிந்துரையில் “ஆய்வாளரென்ற விதத்தில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிப் போக்கினை உன்னிப்பாகக் கவனித்து வருகின்ற எனக்கு, இத்தொகுப்பின் வரவு மகிழ்ச்சி தருகின்றது.

சமகால பெரும்பாலான சிறுகதைத் தொகுப்புகளில் காண முடியாத சிறப்புக்கள் வெளிப்படுகின்றன. மட்டக்களப்பு சார்ந்த உமா வரதராஜனின் ‘அரசனின் வருகை’யும், திசேராவின் ‘கபாலபதி’யும், அம்ரிதா ஏயெம்மின் ‘மந்திரச் சேவல்கள் – விலங்குகள்’ என்பனவும் அத்தகையனவே. ஆக, மேற்கூறிய இரு அம்சங்களிலும் இத்தொகுப்பின் ஆசிரியரான மு.தவராஜா மட்டக்களப்பு பிரதேசத்தின் எதிர்கால கவனிப்புக்குரிய எழுத்தாளராக குடிபுகுந்திருப்பதனை உணர்த்தி நிற்கின்றன என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை”எனக் கூறி வியக்கின்றார்.

‘மறுபக்கம்’ நூலின் அணிந்துரையில், “ஈழத்திலே வித்தியாசமான சிறுகதைகளைத் தருகின்ற அண்மைக் கால புதிய தலைமுறை எழுத்தாளர்களான திசேரா, அம்ரிதா ஏயெம், கௌரிபாலன், இராகவன் வரிசையில் இனி இவ்வாசிரியரைச் சேர்த்துக் கொள்ள முடியும் என்பது எனது துணிவு. மறைமுகமாகவுள்ள இவ்வெழுத்தாளரை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பொறுப்பு எமது அனைவருமுடையதுமே” எனக் கூறி முடிக்கின்றார்.

ஓய்வு பெறும் முன்னரே வாழைச்சேனையை விட்டு மட்டக்களப்புக்குச் சென்று குடியேறிய அமரர் தவராஜா, மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டார். தமிழ்ச் சங்கத்தினால் முறக்கொட்டாஞ்சேனை, பேத்தாழை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இலக்கியச் சொற்பொழிவு நிகழ்வுகளில் சொற்பொழிவாற்றினார்.

2012ஆம் ஆண்டு மட்டக்களப்பு, கிரான்குளத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு மு.தவராஜா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட தமிழகத் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மு.தவராஜா அவர்களின் பேச்சுத் திறனை வியந்து பாராட்டினார்.

2005ஆம் ஆண்டு வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் ‘தமிழ் இலக்கிய மன்றம்’ உருவாக்கி, ‘மகூலம்’ எனும் இலக்கிய இதழ் வெளியீட்டுக்கு காரணமாக விளங்கிய மு.தவராஜா, 2013 இல் வாழைச்சேனையில், தமிழ்- கலை, இலக்கிய மன்றம் ஒன்றைத் தோற்றுவித்து, அதனைத் திறம்பட செயற்பட வைத்தார். 2015 இல் நோய்வாய்ப்பட்டு, மீண்டும் வாழைச்சேனை திரும்பினார். இந்துக் கல்லூரியில் 2016 மே மாதம் 16 இல் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில மாதங்களின் பின்னர் 2016-செப்டெம்பர் 13 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

எஸ்.ஏ. ஸ் ரீதர்
நூலக சேவகர்,
(பொது நூலகம், வாழைச்சேனை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *