மாப்பிள்ளை – ஒரு பக்க கதை





“அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்துவிட்டான். நிறைய சம்பாத்திப்பான். தன் பெண் நன்றாக இருப்பாள் என்ற சந்தோஷத்தில் நிறைய செலவழித்து அவனுக்கு தன் பெண்ணைக் கொடுத்து எவ்வளவு பேர் ஏமாந்து போயிருக்கிறார்கள் தெரியுமா?
மேலும் ஏதாவது என்றால் உன் ஒரே பெண்ணை அடிக்கடி போய் பார்க்கத்தான் முடியுமா? உன் பெண்ணுக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு மாப்பிள்ளை பார்… அதுதான் நல்லது…’ தன் சிநேகிதி கீதா சொன்னது வைதேகிக்கு சரியாகத்தான்பட்டது.
தரகர் சொன்ன அமெரிக்க மாப்பிள்ளையை நிராகரித்து விட்டாள்.
இரண்டு மாதம் கழித்து தரகரை எதேச்சையாக சந்தித்தபோது அவர் சொன்னார். “மாதம் இருபது லட்சம் சம்பாதிக்கும் அந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்களே?… உங்கள் சிநேகிதி கீதா என் வீட்டிற்கு வந்து “வைதேகி நீங்கள் அவள் மகளுக்கு பார்த்த அமெரிக்க மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாமே? என் பெண்ணுக்கு அந்த மாப்பிள்ளையைப் பேசி முடியுங்களேன்’ என்று சொன்னாள்.
நானும் மாப்பிள்ளை பையனை பெண்ணை பார்க்கச் செய்து கல்யாணமும் நிச்சயம் ஆகிவிட்டது. உங்கள் பெண் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்…’
வைதேகி அதிர்ச்சி அடைந்தாள்.
– முகவை ராஜா (செப்டம்பர் 2011)