மாதவம் செய்திடல்







மத்தியானத்திலிருந்து காய்ந்து கிடந்ததற்கு இப்போது இதமாக இருந்தது. சாயங்காலத்தின் வெம்மையற்ற வெயிலும் சிலுப்புகிற காற்றுமாக நடக்கையில். அதிலும் தனியாக என்பதால் அவற்றை ஆழ்த்து அனுபவிக்கிற வாய்ப்பு. எப்போதும் போல வேலை கைமாறிய பிறகு பெண்களுடனேயே போய்க்கொண்டிருந்தால் காற்றையும், சாயும் பொழுதையும் கவனிக்கவா முடியும்? பேச்சும் சிரிப்புமாகப் பெண்களோடு கூட்டமாகப் போவதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்தத் தருணத்தில் தனிமைதான் அவளுக்கு உவப்பாக இருந்தது. தனியாகத்தானே அவள் போயாகவும் வேண்டும்.
பங்காரு செட்டியார் காட்டுக்கு வேலைக்குப் போயிருந்தாள். நாலைந்து நாளாக அங்கேதான் வேலை. அம்மா, எட்டி மரத்து ஆத்தா கோவிலுக்குப் பக்கமாக உள்ள நாச்சிமுத்துக் கவுண்டர் காட்டுக்குப் போயிருக்கிறாள். அங்கே அவள் நிரந்தர வேலையாள். நேரங்கழித்துத்தான் வீடு திரும்புவாள். அவள் வருவதற்குள் வீட்டுக்குப் போய்விட வேண்டும். வந்திருந்தால் ‘கலாவதியப் பாத்துட்டு வர்றம்மா’ என்று சொல்ல வேண்டியிருக்கும். இப்போதும்கூட வேலைக்கு வருகிற பிற பெண்களிடம் அதே பொய்யைச் சொல்லிவிட்டுத்தானே வர வேண்டியதாயிற்று மற்றவர்கள் நம்பியும் இருப்பார்கள். அம்சவல்லியக்காவுக்கு மட்டும் தெரியும், அவள் எங்கே போகிறாள் என்று. ஒற்றையடிப் பாதையில் அவர்களிடம் சொல்லிவிட்டு மேற்கே வண்டித் தடத்திற்குப் பிரியும்போது அவள் மட்டும் அர்த்தத்துடன் சிரித்துத் தலையசைத்தாளே!
அந்தச் சிரிப்பிலும் தலையசைப்பிலும் ‘சொன்னதெல்லாம் ஞாபகமிருக்குநா?’ என்பது போல ஒரு கேள்வி இருந்தது. ‘மறக்காம எல்லாத்தையும் பேசிரு புள்ள’ என்பது போன்ற புத்திமதியும் இருந்தது.
அம்சவல்லியக்கா மட்டும் இல்லாதிருந்தால் யார் தனக்கு இதையெல்லாம் சொல்வார்கள்? தனக்கு ஏதொன்று நடந்தாலும் ஒத்தாசையாக இருந்து ஆறுதல்படுத்துவார்கள்? எல்லோருக்கும் மற்றவர்களை அவதூறு சொல்லவும் பழிக்கவும்தானே தெரியும். இப்படிப்பட்ட இடத்தில் அம்சவல்லியக்கா கிடைத்தது பாக்கியம்தான்.
ஆறேழு மாதங்களுக்கு முன்பு ஒரு தடவை கௌசல்யாவுக்கு நாள் தள்ளிப் போய்விட்டது. அம்மா சொன்னாள், “இதெல்லாம் சகஜம்தான். ஒவ்வொருத்தரோட ஒடம்பு வாகப் பொறுத்து இப்படி தள்ளிப் போகும். பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல. சரியாயிரும்” என்று.
அவளைப் பற்றி அம்மாவுக்கு இருக்கிற நம்பிக்கையில் இப்படிச் சொல்லிவிட்டாள். வேறொருத்தியாக இருந்தால், உடம்புக் கோளாறு காரணமாகவே இருந்தாலும்கூட “எவன்டீ அது?” என்று மிரட்டவும், “குடிகெடுத்த காரியம் பண்ணிட்டு வந்து நிக்கறயேடி. பாவி!” என்று ஒப்பாரி வைக்கவும் செய்திருப்பாளே! அம்மாவுக்குத்தான் தன்மேல் எத்தனை நம்பிக்கை என்று நினைக்கையில் அவளுக்கு இப்போதும் மனக நெகிழ்ந்தது.
இப்படி எசகேடாக ஏதும் நடக்கலாம் என முன்பே எதிர்பார்த்ததும் உண்டு. ஒவ்வொரு மாதம் விலக்காகும்போதும் அவளது பயங்கள் போய் நிம்மதிப்படுவாள். எத்தனை மாதத்திற்கு இப்படியே தப்பித்துக்கொண்டிருப்பாய் என்று அது விலகிவிட்டபோது, போன பயமெல்லாம் மொத்தமாகச் சேர்ந்துகொண்டது. அம்சவல்லியக்காவிடம் சொன்னபோது அவள் ராஜாமணி வீட்டுக்குப் போய் பப்பாளிப் பழம் வாங்கி வந்தாள். ராஜாமணி வீட்டுப் பொடக்காளியில் மூன்று பப்பாளி மரங்கள் இருக்கின்றன. அம்சவல்லியக்கா அங்கிருந்து பப்பாளிப் பழமும், பொரியல் செய்ய பப்பாளிக் காயும் பறித்து வருவது வழக்கம்.
அன்றைக்குக்கூட பொரியலுக்குக் காய் வேணும் என்று கேட்டுத்தான் இரண்டு பழங்களையும் சேர்த்துப் பறித்துக்கொண்டு வந்தாள்.
“பப்பாளிப்பழம் குடு, நெறய சாப்பிட்டா, அப்பிடி உண்டாயிருந்தாக்கூட கரைஞ்சிரும்” என்றபடியே இரண்டு பழங்களையும் அரிந்து துண்டுகள் போட்டு விதை நீக்கிக் கொடுத்தாள். ஒரு துண்டு மட்டும்தான் அம்சவல்லியக்கா சாப்பிட்டாள். மற்றது முழுக்க கௌசல்யாவுக்கு. முழுக்கவும் இவள் தின்னவே கொடுத்திருப்பாள் அவள். அப்படிச் செய்வது இவளுக்குக் குற்ற உணர்வைத் தூண்டும் எனக் கருதியோ என்னவோ அப்படிச் செய்தாள்.
அவர்கள் வீட்டு சமையல் பகுதியிலேயே வைத்து ஒவ்வொரு துண்டாக இரண்டு பப்பாளிப் பழங்களையும் தின்றபோது கௌசல்யாவின் தொண்டையை அழுகை அடைத்தது.
“இப்ப எதையும் தெனைக்காத” எனச் சொன்னவள், நாலைந்து நாள் கழித்து விலக்காகிவிட்ட பிறகு நிறையப் பேசினாள். சின்ராசுவுடன் இந்தப் பழக்கம் ஏற்பட்டதில் இருந்தே சொல்லிக்கொண்டிருப்பதை அன்று இன்னும் கூடுதலாகச் சொன்னாள். பெரிய இடத்துத் தொடர்பு நல்லதல்ல என்றும், கவனமாக நடந்துகொள்ளும்படியும்.
“பட்டிக்காட்டுல ஒரு ஆம்பளையும் பொம்பளையும் பழகறது ரொம்பக் கஷ்டம். சேந்து நின்னு பேசினாலே படுத்துட்ட மாதிரிதான் பேசிக்குவாங்க. அப்படிப்பட்ட எடத்துல நாம எப்புடி இருக்கோணும்? இப்பவே உம் மேல கொஞ்சம் பேருக்கு சந்தேகம் இருக்குது. வேலாத்தக்கா எங்கிட்டயே கேட்டா, ‘மச்சூட்டுப் பையன் கூட இவளுக்கென்ன பேச்சு?’ன்னு. மத்தவங்ககிட்ட எப்படி சொல்லியிருப் பாளோ?” என்றதுதான் அவள் முதல் தடவையாக இது பற்றிப் பேசியது. ஊருக்குள் எந்தக் காரியம் தெரிகிறதோ இல்லையோ. இம் மாதிரி விஷயங்கள் மட்டும் எல்லோருக்கும் தெரித்துவிடும். சீக்கிரமே பரவும். அதனால் அன்றிலிருந்து வெளியில் சின்ராசுவைப் பார்த்தால் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதோடு சரி.
தனியே இருக்கும்போது பேசுவதற்கு எங்கே வாய்க்கிறது? அவள் அவனிடம் நிறையப் பேச வேண்டும் என்று வரும்போதெல்லாம் அவன் தட்டிக் கழிப்பான். “என்ன கௌசி இது! இருக்கறதே கொஞ்ச நேரம். அதயும் பேசி வீணாக்கணுமா?” என்று. அதற்குள் அவனது கை, ஜாக்கெட் கொக்கியை அவிழ்க்கத் துவங்கியிருக்கும். பிறகு அவள் என்ன செய்ய முடியும்?
கல்யாணப் பேச்சை எடுத்தாலே, “கொஞ்ச நாளைக்காச்சும் சுதந்திரமா இருந்துக்கறனே” என்பான். வலுவில் பேசினால், “எம்மேல நம்பிக்கையில்லாம ஏன் பழகின?” என்று கேள்வி வரும்.
நாள் தள்ளிப்போன சமயம் அதைச் சொன்னபோதுகூட, “இதெல்லாம் ஒரு பிரச்சனையா?” என்றவன்தானே அவன்?
“உங்களுக்கென்ன,… ஆம்பள; ஈஸியாச் சொல்லிட்டீங்க. நாம் பட்ட வேதன எனக்குந்தான தெரியும்?” என்றதற்கு. “சரி, இனிமே கவனமா இருந்துக்கலாம். அதுக்கும் வழியில்லாமயா போச்சு?” என்றான்.
அவனுக்கு எத்தனை எளிதாகப் போய்விட்டது. உண்டானால் கலைப்பதும், உண்டாகாமல் தவிர்ப்பதும். அதைக்கூட அவள் கேட்டுக்கொள்ளவும் சம்மதிக்கவும் செய்தாள். தன்னையே தவிர்க்கும்படியாக இப்போது நடந்துகொள்வதைத்தான் தாங்க முடிவதில்லை.
ஒன்றரை, இரண்டு மாதங்களுக்கு மேற்பட்டே இருக்கும், சின்ராசுவோடு பேரியே. இரண்டொரு முறை அவனை தனியே பைக்கில் போகும்போது பார்க்க நேரிட்டும் அவன் அவளைப் பார்க்கவில்லை. பார்த்தும் பார்க்காதது போலப் போய்விட்டான். பிறகு பல தடவைகளில் அவனைப் பக்கமாக வைத்துப் பார்த்தபோது யாரேனும் உடன் இருந்தனர். ஒரு தடவை கிணத்துக்கடவு பஸ்ஸிற்குக் காத்துக்கொண்டு புளிய மரத்தடியில் நிற்பதைப் பார்த்தாள். மறு முறை போஸ்ட் ஆஃபீஸில் ஏதோ வாங்கிக்கொண்டிருக்கையில். அப்போது அவன் லேசாக அவளைப் பார்த்து சிரித்ததோடு முகம் திருப்பிக் கொண்டான். நிச்சயமாக அவன் வருவான் என்று தெருச் சந்தில் சற்று நேரம் நின்று காத்திருந்து, ஆற்றாமையோடு திரும்பியதுதான் மிச்சம்.
அன்றைக்கு அவன் நமசிவாயத்துடன் இருந்ததாக ஞாபகம். நமசிவாயமும் சின்ராகவும் சேர்ந்து கிணத்துக்கடவில் உரக்கடை துவங்கப் போவதாக ஒரு பேச்சு வேறு சமீப காலமாக இருந்தது. அதைக்கூட அவன் அவளிடம் தெரியப்படுத்தவில்லை. ஊர்க்காரர்கள் பேசக் கேட்டதுதான்.
கௌசல்யாவுக்கு நமசிவாயத்தைக் கண்டாலே ஆகாது. அவனும் தாடி மீசையும் பார்க்கச் சகிப்பதில்லை. எப்போதும் சாராயச் சிவப்புக் கண்களோடு, போகிற வருகிற பெண்களை நோட்டம் விட்டுக்கொண்டிருப்பான். அது நாலு குழந்தைகள் பெற்ற பெண்ணாக இருந்தாலும் சரி, எட்டோ ஒன்பதோ படிக்கிற சிறுமியாக இருந்தாலும் சரி. அவனுடனெல்லாம் சின்ராசு சினேகிதம் வைத்துக்கொண்டிருப்பதை முதலில் முறித்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
வண்டிப் பாதையிலிருந்து விலகி, ஆள் நடக்கிற மாதிரியான தடம் ஒன்று தெற்கே திரும்பியது. கலாவதியின் தோட்டத்திற்குப் போவதென்றால் அதில் போக வேண்டும். கௌசல்யா அதைத் திரும்பிப் பார்த்துவிட்டு நேரே தன் போக்கில் போய்க்கொண்டிருந்தாள். யாரேனும் வருகிறார்களா என்றும் பார்த்தாள். சுற்றிலும் யாரையும் காணோம். எங்காவது தூரத்தில் மட்டும் ஆட்கள் நடமாட்டம் தென்பட்டது.
மழைக்காலமாக இருந்திருந்தால் உழவும் விதைப்புமாக வேலை நடந்துகொண்டிருக்கும், எல்லா இடங்களிலும் இப்போது அறுவடைகளும் முடிந்து, வானம் பார்த்துக் காத்திருக்கிற நேரம். வேலைகூட எப்போதாவது சில நாட்களுக்கு இருக்கும்; சில நாட்களுக்கு வெறுமனே இருக்க வேண்டியதுதான். அம்மாவை மாதிரி நிரந்தரமாக ஒரே இடத்திற்குப்போவதென்றால் எப்படியும் ஏதோ ஒரு வேலை கொடுத்துவிடுவார்கள். ஊருக்குள் எல்லா விவசாயிகளுமே நாச்சிமுத்துக் கவுண்டர் மாதிரி நாற்பது ஏக்கர் தோட்டம் வைத்திருக்கிறவர்களாக இருந்தால் அல்லவா அது முடியும். ஐந்தோ பத்தோ, அதற்கும் குறைந்தோ ஏக்கர்கள் கொண்ட மேட்டாங்காடுகள்தான் பெரும்பாலும்.
மச்சு வீட்டுக்காரருக்கும் தோட்டம் உண்டு பாலார்பதியில் இருபது ஏக்கர். தென்னந்தோப்பு பாதி. மீதியில் கரும்பும் தக்காளியும் பயிரிட்டிருக்கிறார்கள். இங்கே பண்ணையம் பார்ப்பது சின்ராகவும் அவனது அப்பாவும். நாய்க்கனூரில் பதினைந்து ஏக்கர் இருக்கிறது. அதை அவனது அண்ணன் கவனித்துக் கொண்டிருக்கிறார். அது முழுக்க மேட்டாங் காடுதான் என்று சின்ராக சொல்லியிருக்கிறான்.
சின்ராசுவின் பாலார்பதி தோட்டத்திற்கு கௌசல்யா வேலைக்குப் போனதில்லை. அவர்களின் பக்கத்துக் காட்டுக்கு நெல்லறுக்கப் போயிருந்தபோது அம்சவல்லியக்கா, ”அதுதான் உங்க மாமனாரு காடு” என்று காட்டினாள். அவளுக்கு அம்சவல்லியக்கா அப்படிச் சொல்லவும் வெட்கம் வந்துவிட்டது. மச்சு வீட்டுக்காரர் கடைப்பக்கமாக மூக்குப் பொடியோ பீடியோ வாங்கவும், சின்னத் தங்கம் கடையில் டீக் குடிக்கவும் வரும்போது பார்த்தாலும், கெளசல்யாவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவார். “மாமனாரு என்னங்கறாப்புல” என்பான் அம்சவல்லியக்கா அதற்கும்.
ஊருக்குள் இப்போது மச்சு வீடுகள் மூன்று இருந்தாலும், அந்தப் பேர் இவர் ஒருவருக்கே. முதல் தடவையாக மச்சு வீடு கட்டியவர் அவர். 1963 என்று வீட்டின் முன் பக்கத்திலேயே காரையால் திட்டுக்கட்டி வைத்திருக்கும். என்றாலும் அதில் அவர்கள் இப்போது புழங்காமல் களத்திலேயே தங்கிக்கொள்கிறார்கள்.
குழந்தைவேல் கவுண்டரின் காட்டை நெருங்கும்போது சின்ராக வந்திருப்பானா இல்லையா என யோசித்துக்கொண்டே நடந்தாள். குழந்தைவேல் கவுண்டரின் காடு முழுக்கவே மேட்டாங்காடு. அந்த மாதிர் இடத்தில் கிணறு வேறு. மழை பெய்தால் கொஞ்ச நாளைக்கு தண்ணீர் இருக்கும். மோட்டார் வைத்திருந்ததுதான். இப்போது மோட்டார். இல்லை. மோட்டார் ரூம் மட்டும் இருக்கிறது, சிதைந்து போன நிலையில். இப்போது
அதைச் சுற்றியிருக்கிற காடுகளில் வெள்ளாமை ஏதுமில்லை. எனவே, அவரது காட்டுப் பக்கம் யாரும் இருக்க மாட்டார்கள். அந்தப் பக்கம் வேற்றாள் நடமாட்டமும் இருக்காது. ஊரை விட்டு வெகுவாகத் தள்ளி இருக்கிற இடம் அது. அதனாலேயே சின்ராக அவரது மோட்டார் ரூமைத் தேர்ந்தெடுக்கிறான். கரும்புத் தோட்டங்கள், சோளக் காடுகள் என்று கழிந்தது போக அந்த மோட்டார் ரூமிலும் அவர்களுக்கு கழிந்த சாயந்திரங்கள் அநேகம்.
நேற்று சாயங்காலம் வேலை கைமாறி வரும்போது மதுரைக்காரர் கடையில் மளிகைச் சாமான்கள் வாங்க நின்றிருந்தாள். அப்போதே அவன் பைக்கில் வருவது தெரிந்தது. தனியாகத்தான் இருந்தான். அவனிடம் பேசக்கூட முடியாதது பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தபோதே பைக் நின்றது. சின்ராசு இறங்கி, “அரை பாக்கெட் வில்ஸ் குடுங்க அண்ணாச்சி” என்றான். அண்ணாச்சி சிகரெட்டை எடுத்துக் கொண்டிருக்கும்போது, “என்ன… ஆளையே பாக்க முடீறதில்ல?” என்றாள் கெளசல்யா. வேறு வாடிக்கையாளர்களும் இருந்ததால் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தவன் மற்றவர்கள் போன பிற்பாடு அவசரமாக ரகசியக் குரலில் சொன்னான், “நாளைக்குச் சாயந்திரம் மோட்டார் குமுக்கு வந்திரு. அங்க பேசிக்கலாம்.”
அவள் சிரித்துக்கொண்டாள். பேசுவதற்கா வரச் சொல்வான் அவன் இருந்தாலும் இன்று அவனிடம் பேசியே ஆக வேண்டும். இப்படியே எத்தனை நாளைக்குத்தான் வெளியில் தெரியாமல் கட்டிக் காத்துக்கொண்டு இருந்துவிட முடியும்? அம்மாவும் வேறு யார் யாரிடமோ ஜாதகத்தைக் குறித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். ஒன்றிரண்டு சம்பந்தங்களும் வந்து பெண் பார்த்துப் போயிருக்கிறார்கள். இதுவரை தகவல் இல்லை. எப்போதும் வந்துவிடலாம்.
சின்ராக இப்படி அவளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரிய வேண்டும். அவளிடம் எவ்வளவு ஆசையும் உயிராகவும் இருந்தவன் அவன். இப்போது விலகிப் போவதென்றால்… அவள் அவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள். செய்தவளும்தானே! தன்னையே கொடுப்பது அவன் தனக்கே வேண்டும் என்பதற்காகத்தானே! எந்த நிமிஷத்திலும், ‘வா போயிடலாம்’ என்று சின்ராக அழைத்தால் அவனுடன் ஓடிப்போகத் தயார். உலகின் எந்த மூலைக்காக இருந்தாலும்.
சூரியன் மஞ்சளாகிச் சிவந்து வேகமாகக் கீழிறங்கிக்கொண்டிருந்தது. கௌசல்யா வடக்கே திரும்பி வரப்புகள் வழியாக நடத்தாள். கண்ணுக்கு எட்டியவரையில் யாரும் தென்படாதது குறித்து இப்போதும் நிம்மதி உண்டானது. ஊருக்கு வடமேற்கில் இருக்கிற பாறை, அதனை ஒட்டிப் போகிற தார்ரோட்டின் செங்குந்தான மேடு. மேட்டினை ஒட்டி ஆறுமுகன் ஆசாரியாரின் பட்டறையருகே நிற்கும் இலவ மரம் யாவும் தெரிந்தன. பாறைகளை ஒட்டி இருக்கிற ஒட்டர்குடியில் கண்ணாம்புக் காளவாயிலிருந்து எழும் புகை மேலே எழும்பி விரவி காற்றில் கரைந்துகொண்டிருந்தது.
காகங்கள் அவளது தலைக்கு மேலே கூட்டமாகப் பறந்துகொண்டிருந்தன. இந்தக் காகங்களெல்லாம் குப்பாண்டக் கவுண்டனூர் தாண்டி இருக்கிற ஊர்க்கவுண்டரின் தென்னத் தோப்பில் அடையும். ஆயிரக்கணக்கான காகங்கள் கொண்ட தோப்பு அது அதனால் அந்தத் தோப்பிற்கே காக்காத் தோப்பு என்று பெயராகிவிட்டது. பறவைகளும் மனிதர்களைப் போல காலையில் கிளம்பி மாலையில் கூட்டையடைகின்றன. அவற்றிற்கும் கூடு, குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது. ஆனால், பறவைகளைப் போல இருக்க முடிவதில்லையே நமக்கு என நினைத்துக்கொண்டிருந்தவளுக்கு, தானும் சின்ராசுவும் ஏதாவது பறவைகளாக ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கிளிகளாக, குயில்களாக, செம்போத்துக்களாக… அல்லது இரண்டு காகங்களாகவாவது. ஆனால், சின்ராசு காகமாக ஆவதற்கு சம்மதிப்பானா என்று தெரியவில்லை.
அவனை ஒரு அண்டங்காக்கையாகவும் தன்னை ஒரு மணிக்காக்கையாகவும் கற்பனை செய்தபடியே வந்தவளுக்கு மோட்டார் ரூமில் அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. அவனது கருத்த உருவமும், நீளமான மூக்கும் காகத்தைப் போலவே இருந்தன.
“என்ன,… வரும்போதே சிரிப்பு பொத்துட்டு வருது?” என்றபடி அவன் தலையை ஒரு மாதிர் சாய்த்துக்கொண்டு பார்த்ததுகூட, கிளையில் அமர்ந்து நோட்டம் பார்க்கிற காகத்தைப் போலவே.
வெள்ளை வேட்டி அழுக்காவது பற்றிய கவலையின்றி மண்ணிலேயே அமர்ந்திருந்தான். கெளசல்யா அவனுக்குப் பக்கமாய் போய் அமர்ந்துகொண்டாள். மோட்டார் ரூமில் அருகம்புற்கள் ஓரங்களில் வளர்ந்திருந்தன. அவனருகே சிகரெட் புகைத்ததின் மீதமான ஃபில்டர் பாகங்கள். அவன் அவளது கையைப் பற்றியபடியே “என்னத்துக்கு சிரிச்சுட்டே வந்த?” என்று கேட்டான். அவள் சொன்னதைக் கேட்டுவிட்டு அவனுமே சிரித்தான்.
கிணற்றுக்குள் பொந்துகளிலிருந்து கிணற்றுப் புறாக்கள் க்டுக்கும்… க்டுக்டுக்கும்… என முனகிக்கொண்டிருக்கிற சத்தம் வந்தது. கௌசல்யா எட்டிப் பார்த்தாள். தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. சில புறாக்கள் இப்போதுதான் அடைய வந்திருக்கும் போலும். சிறகடித்துப் பறந்தபடியும் உட்பகுதியில் அமர்ந்தவாறும் இருந்தன.
“புறாவைப் பாத்ததே இல்லையா?” என்றவன் அவளைத் தன் வசம் இழுத்தான். அவன் இழுத்த இழுப்பில் அவனது மடியிலேயே விழுந்தாள் கௌசல்யா. பதில் சொல்ல விரித்த உதடுகளை விடாமல் அவனது உதடுகள் கவ்விப் பிடித்தன. உடனடியாக அதைத் தடுக்கவும் அவனை விலக்கவும் தோன்றி, அதைச் செயல்படுத்த முடியாதவளாக உடன்பட்டாள். மங்கத் துவங்கியிருந்த பொழுதினுடே அவனோடு கிடக்கையில் கூரைச் சட்டத்தில் கரையான் படித்திருப்பது தெரிந்தது. கண்களை மூடியபடியே ஒத்துழைத்துக்கொண்டிருந்தாள்.
ஏதோ அரவத்தை அவள் உணர்ந்து திரும்பும்போது கின்ராகவும் திரும்பிப் பார்த்தான். இரண்டு ஆட்கள் வந்து நின்றுகொண்டிருந்தனர். சின்ராகவும் வேட்டியைச் சரி செய்தபடி எழுந்தான். பதற்றத்துடன் பாவாடையைக் கீழே இறக்கி, தாவணியால் மார்பை மூடிக்கொண்டு எழுந்தாள் கௌசல்யா. வந்தது யாரென்று பார்க்காமல் அவர்களுக்கு முதுகு காட்டி நின்றபடியே ஜாக்கெட்டில் ஊக்கைப் போட்டுக்கொண்டாள்.
“எத்தன நாளா இது நடக்குது?” வந்திருந்தவர்களில் ஒருவனின் குரல் கேட்டது. சின்ராசுவைக் கேட்டதாக இருக்கும். அவனிடமிருந்து பதில் இல்லை.
“யார்றா அவ?”
அதற்கும் பதில் சொல்லவில்லை. கேட்ட குரலையும் யாருடையதென்று அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. மெதுவாகத் திரும்பி நின்றாள். இருவரில் ஒருவனை உடனே தெரிந்தது. தாடியும் மீசையுமாக நமச்சிவாயம். மற்றவன்தான் கேள்வி கேட்டவனாக இருக்க வேண்டும்.
“இவதானா…?” என்றான் அவன். பொழுது கருக்கத் துவங்கியிருந்ததால் சட்டென்று தெரியாதிருந்த அடையாளம் மெல்லப் புலப்பட்டது. முத்துராமலிங்கம் பிள்ளையின் இரண்டாவது மகன் கிட்ணசாமி, ‘கிட்ணா’ என்று அழைப்பார்கள்.
என்ன இது, இத்தனை நாளாக இல்லாமல் இன்றைக்கு இப்படி? இந்த நேரத்தில் யாரும் இந்தப் பக்கம் வரமாட்டார்களே! இவர்கள் எதற்காக வந்தார்கள்? பரவாயில்லை. இவர்கள்தானே! சின்ராகவுக்குப் பழக்கமுள்ளவர்கள். நமசிவாயம் அவனுடன் சேர்ந்து உரக்கடை வைக்கப் போகிறவனும்கூட. எப்படியும் இவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள்.
நம்பிக்கை இருந்தாலும் அவளுக்கு நிமிர்ந்து பார்க்கத் தைரியம் வரவில்லை. கையோடு – அதுவும் இந்தக் கோலத்தில் – பிடிபட்டு, எப்படி முகத்தில் விழிப்பது?
”ஏண்டா, அடுத்தவன் காட்டுல வந்துட்டு இந்த வேலையா செய்யறீங்க?” என்பதைத் தொடர்ந்து அறைகிற சத்தமும் கேட்கவும்தான் நிமிர்ந்து பார்த்தாள். மீண்டும் ஒரு அறை கிட்ணசாமியிடமிருந்து சின்ராசுவுக்கு விழுந்தது.
“போடா,… போ…! திரும்பிப் பாக்காம வீடு போய்ச் சேரு. இனிமே இந்தப் பக்கம் வந்தறாத.”
அவர்கள் இருவரையும் கடந்து விடுவிடுவென்று வெளியே சென்றான் சின்ராசு. கௌசல்யாவும் வெளியேற நடந்தாள். இருவரும் அவளைத் தடுத்து நிறுத்தினர்.
“ஏண்டீ, உன்ற நெலமைக்கு மச்சூட்டுப் பையன் கேக்குதா?”
அவள் தயக்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள். இடது கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. வலியுடன் தடுமாறும்போதே புறங்கையால் வலது கன்னத்திலும். கண்ணீர் வந்துவிட்டது.
நமசிவாயம் சிரித்தபடியே பார்த்துக்கொண்டிருத்தான். கிட்ணசாமி அவளது தாவணியைப் பிடித்து இழுத்தான். இரு கைகளாலும் அதைப் பற்றிக் கொண்டாள் கௌசல்யா. அழுதும் கும்பிட்டும் அவர்கள் இரங்கவில்லை. சின்ராசு வந்துவிடுவான் என்று நினைத்தாள். அவன் வராததால் கத்தவும் முயன்றாள். அவளது வாயைப் பொத்தியபடியே அவளை வலுவில் கிடத்தினார்கள். தடுத்தலும் திமிறலும் பலனளிக்கவில்லை. நமசிவாயம் அவளது தலைப்பாகத்தில் இருந்தபடி அவளது கைகளை நிலத்தோடு அழுத்திப் பிடிக்க, கிட்ணசாமி உதறும் கால்களை அழுத்திப் பிடித்தான்.
அவன் முதலில். பிறகு நமசிவாயம்.
அழுகையும் வேதனையுமாக அவள் எழுந்து உடைகளைச் சீர் செய்தாள். கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.
“இனிமே இந்த மாதிரி உன்ன அவன் கூடப் பாத்தன்,… கண்டாரோளி, அப்பறம் ஊருக்குள்ளயே இருக்கமாட்டே. போய்ச் சேரு.”
தளர்ந்த உடம்பும் கலைந்த தலையுமாக நடக்கிறபோது ‘ஓ…’வென்று கதறித் தீர்க்க வேண்டுமாக இருந்தது. சின்ராகவுடன் பழக்கமுள்ளவர்களே இப்படிச் செய்வார்களா? அவன்தான் போனபோது தன்னையும் அழைத்துப் போயிருக்கக் கூடாதா? ஒரு வார்த்தைகூட அவர்களை எதிர்த்துப் பேசவோ பதில் சொல்லவோ இல்லாமல் போய்விட்டானே…!
அவளால் நடக்க முடியவில்லை. வலித்தது. அந்த நமசிவாயத்தின் கைகளில் நகம் பெரிதாக வளர்ந்திருக்கிறது. பற்களாலும் நகங்களாலும் உண்டாக்கப்பட்ட காயங்களில் எரிந்தது. எத்தனை நான் பார்த்துப் பார்த்துப் பழி கிடத்தானோ? இன்று தீர்த்துக்கொண்டிருக்கிறான்.
நன்றாக இருட்டிவிடும் போலிருக்கிறது. சில நட்சத்திரங்கள் வானில் தெரியத் துவங்கியிருந்தன. கிணற்றின் ஏரிமேட்டைத் தாண்டி வரப்புகள் வழியாக வரும்போது முடியாமல் உட்கார்ந்துகொண்டாள். சின்ராசு எங்கே போய்விட்டான். தனக்கு என்ன ஆனது என்று தெரிந்துகொள்ளாமல். நேரம் வேறு ஆகிவிட்டது. அம்மா வந்து, ‘இன்னும் புள்ளையக் காணமே…’ என்று வழி பார்த்துக்கொண்டிருப்பாள். எப்படியாவது நடந்து போகத்தான் வேண்டும். குறுக்கு வழியாகப் போனால் சீக்கிரம் போய்விடலாம். செங்காளியண்ணன் காடு வழியாகப் போக வேண்டும். அதுதான் நல்வது எனத் தீர்மானித்தவள், எழுந்து நடக்கலானாள். வலியைப் பொறுத்தபடியே, முடிந்த வரையில் வேகமாக.
செங்காளியண்ணனின் காட்டைக் கடந்து. கல் ரோட்டைச் சேர்ந்தாள். நிலப் பாலத்தைத் தாண்டி தார் ரோடு தெரிந்தது. வேகத்தைக் கூட்டி நடத்தாள். நிலப்பாலத் திட்டில் உருவங்கள் கருமையான நிழலாக அமர்ந்திருந்தன. அவர்களை நெருங்கும்போது பேச்சுக் குரல்களும் சிரிப்புகளும் அவர்களிடமிருந்து கேட்டன. அவர்களைக் கடக்கையில், சிரித்தவர்கள் நமசிவாயமும் கிட்ணசாமியும் எனவும், பேசிக்கொண்டிருந்தவன் சின்ராசு எனவும் அறிந்தாள்.
– கணையாழி, டிசம்பர் 1996.
குறிப்பு: இக் கதை மாதாந்திர இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |