மலைக் கொழுந்தி




(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மலைக்கொழுந்தி!

எவ்வளவு மதுரமான பெயர். உறங்குகிற நினைவுகளை உசுப்பிவிட்டுக் கனவுகள் காணவைக்கும் அந்தப் பெயருக் குரியவளை நான் முதன் முதலாகக் கண்டது மனசில் பசுமை யாய்ப் பதிந்து நிழலாட்டம் போடுகிறது.
மீண்டும் மீண்டும் தோன்றித் தொல்லை தருகிற அந்த னைவை எழுப்பிவிடுகிற நிகழ்ச்சி!…
நினைவைச் சிலுப்பிவிட்டு நெஞ்சை நிறைவு பண்ணும் இயற்கையின் சௌந்தர்யம் இருக்கிறதே, அது ஊட்டுகிற போதை அதி பயங்கரமானது…
உழைப்பவன் கையொன்று ஒடிய நேர்ந்து உதிரம் பீறிப் டால் அதில் அழகைக் காணுமளவுக்குப் பயங்கர ரசனை என் னுடையது…
இத்தனைக்கும் என்னுடைய இதயம் மிகப் பலவீன மானது. அது எனக்கே தெரியும் என் பலவீனத்தை மறைத்து அந்த மறைப்பிலேயே ஒரு பயங்கரத்தை உண்டு பண்ணுகிற ரசனைக்கு நான் வசப்பட்டிருந்தேன்.
பூத்துக்கிடக்கிற மரகதப் பச்சையைப் பார்த்து ரசிப்பதற் கென்றே ஆண்டுக்கு ஒருமுறை நான் மலைநாட்டுக்குப் போவது வழக்கம்.
இலங்கையின் மலைப்பகுதிகள் எங்கும் அழகு பொங்கி வழிகிறதே!
நீராடிய மங்கையின் ஈர உடம்பின் நீர்த் துளிகளாய்; தேயிலைச் செடிகளின் பசுந்தளிர்களில் உறங்குகிற பனித் திவலைகள்;
மங்கையின் பொங்கிப் பூரித்த மார்பாய் எழும்பிய மலை களில், பாம்பாய் நெளிந்தோடும் ஆறுகள், பால் வண்ணச் சேலையாய் விரிகின்ற அருவிகள்;
கட்டி அணைக்க வரும் காதலன் முன், நிலத்தில் கால் பதித்து உடல் வளைக்கும் காரிகையாய், காற்றடிக்கும் திக்கில் வளைந்து கொடுக்கும் நீண்டு வளர்ந்த மரங்கள்;
வானமழுததால் வடிந்து வார்த்த வெள்ளியாய் விரைந் தோடுகிற ஆற்று நீரில் விழுந்து, துள்ளும் மீனாகத் தெறித்து விழுகிற மழைத் துளிகள்;
பாறையாய் இறுகிய நிலத்தை ஆழத்தோண்டுகையில் வண்ணம் கொட்டிய செம் மஞ்சளாய் எதிர்ப்படுகிற அந்திவானம்.
பார்வை படுகிற இடமெல்லாம் மனித சாதியில் கரம் பட்டதால் இயற்கை அழகு புதியதோர் பொலிவு பெற்றுப் பொங்கி வழிகிற காட்சி காலையும் மாலையும் வெய்யிலிலும் மழையிலும் நிமிடத்துக்கொன்றாய் நிறம் மாறி எழில் காட்டும் இயற்கையின் வனப்பு!
மலைநாட்டுத் தேயிலைத் தோட்டமொன்றில் கணக்கப் பிள்ளையாகத் தொழில் பார்க்கிற என் மைத்துனனின் பங்களா ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருக்கின்றது. அழகின் பார்வைத் தளமாய். அங்கிருந்து பார்த்தால் எதிரே சற்றுத் தூரத்தில் கண்டிபெரஹராவில் அணி வகுக் கிற யானைக் கூட்டங்களாய் இருமருங்கும் தொடருகின்ற மலைகளுக்கு நடுவே உயர்ந்து நிற்கிற சிவனொளிபாத. மலையின் அழகு தெரியும்.
சென்ற வருடத்தில் அதி காலையில் ஒருநாள் இப்படித் தான், வீட்டுக்கு வெளியே நின்று மேகந்தவழ்கின்ற சிவ னொளிபாத மலையின் அழகில் மனம் பறி கொடுத்து நின் றேன். ஊடுருவும் கதிரொளி பனிப் படலத்தின் உருவழித் திருக்க, சவாக்கார நுரையில் வடிந்த இரத்தச் சொட்டாய் வானத்தில் வர்ணம் இழைந்து கிடக்கிறது. மலைச்சரிவில் மதர்த்து வளர்ந்த மட்டக் கொழுந்தின் இளம் மஞ்சள் தளிரில் உறங்குகிற பனித் திவலைகள் கதிரொளி பட்ட கண்ணாடியாக எதிர் நிழலாடுகின்றன. பார்வையை வலப் பக்கம் திருப்பியபோது வெகு அருகில், பத்தடிக்கும் குறைந்த தூரத்தில், பார்வையை நிலத்தில், பதித்து ஒருத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். கொழுந்து கொய்யச் சென்று கொண்டிருக்கும் பெண்களில் ஒருத்தி! தலையை மறைத்து முழங்கால் வரை இறுக்கிப் போர்த்திய கம்பளியால் குளிரின் தாக்குதலைக் குறைத்து தேயிலைச் செடிகளின் பக்க வாது களிலிருந்து உடையையும் உடலையும் காக்க இடையைச் சுற்றிப் படங்கை இழுத்துக் கட்டியிருந்தாள் வெகு நேர்த்தி யாக. முதுகில் தொங்கிய கூடை அவள் குனிந்து நடப்பதால் எடுத்து வைக்கும் ஒவ்வோரடிக்கும் முதுகின் இடமும் வலமும் தொட்டில் தூளியாய் ஆடி அசைந்தது. தலையில் மாட்டி இருந்த கூடை கயிற்றின் அழுத்தச் சுமை தெரியாதிருக்க, மார்பை மறைத்தாற் போல் முன்புறம் மடக்கி தோள் பட்டைக்கு மேலாகக் கழுத்தின் இடைவெளியில் விட்டு இரண்டு கைகளாலும் கயிற்றைத் தூக்கி விட்டுக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தவள் பார்வையை நிமிர்த்திய போது, என் ஊடுருவுகிற பார்வை தன்மீது படிந்திருப்பதைக் கவனித்து மருட்சியால், ஒன்றோடொன்று கால்கள் பின்ன விட்டு நிலத்தில் சாய்ந்தாள். ஒருக்கணித்து விழுந்த கூடை யின் மேல் முதுகைப்படுத்தி, விலகிக் கிடந்த படங்குக்கும் சேலைக்குமூடாக முழங்கால் பாகம் வெளிபட்டுக் கொண் டிருக்க, வலக்கையை நிலத்திலூன்றி அவள் விழுந்து கிடப்பது ஒயிலாக உட்கார்ந்திருப்பதாகவே தோன்றியது. உழைக்கும் ஆண் பிள்ளைக்குப் போல அவளது முழங்காலின் பின்புறம் தசை திரண்டு மலைகளின் நாளாந்தம் ஏறி இறங்கு கிற அவளின் வாழ்க்கைச் சிரமத்தைக் காட்டி நின்றது.
“சே… உங்களுக்கு வெட்கமாக இல்லை… விழுந்து கிடக்கின்ற பெண்பிள்ளையைத் தூக்கிவிட்டு உதவி செய்கிற நினைப்பு கொஞ்சமும் இல்லாமல், வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது ஆண் பிள்ளைக்கு அழகாகவா இருக்கிறது…”
வார்த்தைகளைக் கொட்டிய வேகத்திலேயே எழுந்து கையில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு என்னைப் பார்த்தாள்.
கொட்டி விட்ட வார்த்தைகள் போலவே அவளது குத்தி நிற்கும் பார்வையும் நிர்மலமாய், கட்டில்லாத அவள் உள்ளத்தைக் காட்டுவதாயிருந்தது. அறிமுகமில்லாத ஆடவ னொருவனிடம் அத்தனை அருகில் நின்று அதுவும் அப்படிக் கதைப்பதற்கு அவளது உள்ளம் எவ்வளவு பரிசுத்தமானதா யிருக்க வேண்டும்? மானிட சாதியின் பார்வை ஒடுக்கத்தை வெளிப்படுத்த அழுத்தமாகவே பதில் சொன்னேன்.
“ஆமா, நீ என்ன சின்னப் பொண்ணா? நானுன்னைத் தொட்டுத் தூக்கி விட…” “ஐய… பிள்ளை குட்டி பெத்தெடுத்த கிழவியாட்டமா இந்த மலைக்கொழுந்தி உங்க கண்ணுக்குப் படுறன்” என்று கேட்டு குங்குமச் சிவப்பாய் நிறமேறிய கன்னத்தில் குமிழ் விழச் சிரித்தவாறே, பின்னால் திரும்பி அருகில் மற்றப் பெண்கள் யாரும் வராததை அறிந்து அமைதியடைந்தவளாய் “நான் வர்றேங்கய்யா…நேரமாகிறது. இங்க உள்ள பொம்பளைங்க பார்வை பொல்லாதது…” என்று எச்சரித்தவளாய் நாலைந்து அடிகள் தள்ளிச் சென்று நிரையில் நின்று கொழுந்து பறிக்க ஆரம்பித்தாள்.
நான் கேளாமலேயே தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்தப் பெண்ணின் சாதுர்யமான பேச்சை மனதிற் குள்ளாகவே பாராட்டி, கட்டை விரல் நுனியையும் சுட்டு விரல் நுனியையுமிணைத்து நீண்டு மெலிந்த விரல்களை இலாவகமாக உட்புறமாக வளைத்து தளிரைப் பற்றி ஒடித்து உள்ளங்கை இரண்டினும் நிறைந்த கொழுந்தை ஒரு கூடை யில் போடுகிற அழகையே, மெய்மறந்து வெகுநேரம் ரசித்து நின்றேன்.
ஞாயிற்றுக்கிழமை பதினொரு மணியாகிவிட்ட வேளை ஓய்வு நாளென்ற சாக்கில் என் மைத்துனர் கடைத் தெரு வுக்குப் போய்விட்டார். வெப்பம் தாள முடியாததாகி வீட்டுக் குள் அடங்கி இருக்க விடாது செய்கிறது. நடுப்பகலின் கடும் வெய்யிலிலும் தண்மை மாறாது. குன்றின் அடிவாரத்தில் ஓடி வருகிற ஆற்றில் குளித்துவரப் புறப்படுகிறேன். அக்கா தடுக்கிறாள். “அங்கெல்லாம் லயத்துக் காட்டுச் சனங்கள் வருவார்கள். நீ வீட்டிலேயே பைப் தண்ணீரில் குளி” என்று.
காட்டிலூற்றெடுக்கும் “மஸ்கெலியஓயா”வின் சீதளிப்பை நினைவுபடுத்தி அவளைச் சமாதானம் செய்து விட்டு ஆற்றுக்குச் செல்கிறேன்.
அக்கா சொன்னாற்போல அப்படி யாரும் வரக் காணோம்… ஆனால், வரமாட்டார்கள் என்று உறுதி இல்லை. ஆகவே, போன கையோடு அவசரமவசரமாக நீரில் குதிக்கிறேன்.
குளித்துவிட்டுக் கரைக்கு வந்ததும் ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றேன். எதிரே அந்தப் பெண் வந்து கொண் டிருந்தாள்; இரண்டு பெண்கள் சுற்றிவர செடிகளுக்கு நடுவே மலராய்.
வந்த மூவரும் ஒரே வயதினர்தாம். “ஏண்டி வள்ளி இந்தக் காலத்து ஐயாமாருக்கு நீச்சலடிக்கக் கூடத் தெரியுமா?”
மலைக்கொழுந்திதான் பேசுகிறாள். அவளது பார்வை என்னை நோக்கியிருந்தது.
“ஐய வெட்கமாக இல்ல…. ஆண்பிள்ளை குளிக்கிற இடத்தில் வந்து நின்று அப்படிக்கண்களை விரித்து வைத்துக் கொண்டிருக்க” என்று கேட்க எண்ணுவதை நெஞ்சுக்குள்ளா கவே மூடி மறைத்துக் கொள்கிறேன், அவளருகே நின்ற மற்றப் பெண்களை நினைத்து.
“நல்லாப் பாரடி… மொண்டு ஊற்றிக்கொள்ளக் கொண்டுவந்த வாளியை எங்காவது ஒளித்து வைத்திருப் பாரு…” கூட வந்தவர்களில் ஒருத்தி பேசினாள். கலகல வென்றெழும்பிய அம்மூவரின் சிரிப்பும், ஆற்றின் சலசலப்பில் கலந்து மறைகிறது!
நினைவின் நிழலாட்டம் நித்திரையை விரட்டி அடிக்க, எழுந்து சென்று வீசி நிற்கிற மென்காற்று உடல் தழுவிச் செல்ல திறந்த கதவோரத்தில் நின்றேன். கீழே பள்ளத்தில் தொழிலாளர்கள் குடியிருக்கும் லயத்தில் ஒரு வீட்டின் முன்னர் இருளை விரட்டியடிக்க எழுப்பிவிட்ட ஒளி உமிழ்ந்து கிடக்கிறது. வெட்டிய மரத்தில் எஞ்சிநிற்கும் அடித்தறியாய்த் தெரிகிற மனித உருவங்களின் நடமாட்டம்.
நாதஸ்வர இசையும், தப்படிக்கும் ஒலியும் எழுப்பி விடுகிற ஓசைமயம் சடங்கோ திருமணமோ இரண்டிலொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை என்னாலூகிக்க முடிகிறது.
மங்கள நாளின் பொங்கிய நினைப்பால் பூரிக்கும் பெண் ஒருத்தியினுள்ளத்தை, இருளும் தொலைவும் ஏற்படுத்தும் தடை கடந்து காண முடிகிறது. அந்தரத்தே வெகு தொலை வில், வீட்டுக்கு முன்னால் வைத்த விளக்கு. வீசும் காற்றில் சுழன்று எரிவதுபோல் கண்ணாம்மூஞ்சி காட்டுகிற நட்சத் திரக் குவியல்… நினைவுகளுமப்படித்தான் கண்ணாமூஞ்சி காட்டுகின்றனவா?
இரவின் நெடுநேரக் கண்விழிப்பில் அசதி மேலிட்டு, காலந்தாழ்த்தி எழுந்திருந்தேன், விடிந்து வெகு நேரமாகி விட்டிருந்தது. மைத்துனர் வேலைக்குச் சென்றுவிட்டார்.
அக்கா சமையலறையில் வேலையாயிருந்தாள். அவசரமவசர மாக முகம் கழுவி காலைப் போசனத்தை முடித்துக் கொண் டேன். அக்கா பின்புறம் தோட்டத்துக்குள் ஏதோ வேலை யாகச் சென்றாள். கையில் “நித்திய அழகு” எனும் நூலை எடுத்துக் கொண்டு போய் நாற்காலியில் அமர்ந்தேன்.
”அம்மா!… அம்மா!…’ முன்புற வாசல் பக்கமிருந்து அழைக்கும் குரல்கேட்டு “யாரது” என்று பார்க்க எழுந்து சென்றதும் அப்படியே திகைத்து நின்றேன். என் கண்கள் மலர்ந்தன. “ஓ நீயா!” என்று என் வியப்பை வெளிப் படுத்தினேன் எதிரே நின்று கொண்டிருந்த மலைக்கொழுந்தியிடம்.
அவள் கைப்பிடித்தவன், அவளருகே நின்று கொண் டிருந்தான் சிரித்த முகத்தோடு. நேற்றைய இரவில் நினை வைத்தட்டி விட்ட நிகழ்ச்சியில் மலர்ந்தது இவர்களின் வாழ்க்கைதானோ! மாப்பிள்ளை வீட்டுக்குப் போவதற்கு முன்னால் என் அக்காவிடம் சொல்லிக் கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். சேலையொன்றை அவளுக்கு அன்பளிப் பாகக் கொடுத்து “ஐயா மலைக்குப் போய் விட்டார்” என்று அக்கா சொன்னாள்.
“ஏங்கம்மா, இந்த ஐயாவுக்கு என்னங்கம்மா” என்று என்னைக் காட்டிக் கேட்டாள் மலைக்கொழுந்தி
குறும்புக்காரி! உள்ளத்தூய்மையைக் காட்டவென்றே ருவெடுப்பனவோ அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் விடைபெறக் கரம் கூப்பிய அவளை “நல்லபடியா வாழு” என்று அக்கா வாழ்த்தினாள். “அழகாய் வாழு” என்று என் மனம் கூறிற்று. கொண்டவனை முன்விட்டு ஓரடி பின்னால் அவனைத் தொடர்ந்து நடக்கிறாள்; வாழ்க்கை முழுவதும் கணவன் வழியில் நடக்கத் தயாராகிவிட்ட அவ் வனிதை.
ஒருத்தனின் உறங்குகிற நினைவுகளை உசுப்பிவிட்டு அவன் காணும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள அழகின் பூரணத்துவத்தை நாடிச் செல்கின்ற அவளின் பெயரை என் வாய் மீண்டுமொருதரம் உச்சரிக்கிறது. “மலைக் கொழுந்தி!”
– 1966
– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.