மருமகள் – ஒரு பக்க கதை
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/tags.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/newspaper.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
திருமணமான இரண்டே வருடங்களில் மருமகள் மகனை அழைத்துக்கொண்டு தனிக்குடிதனம் போய்விடுவாள் என்று சாவித்திரி எதிர்பார்க்கவேயில்லை.
அவள் கண்களில் கண்ணீர்த் துளிகள்.
“ஏங்க… நம்ம மருமகள் பண்ண வேலையைப் பார்த்தீங்களா… நினைக்க நினைக்க வயிறு எரியுது…’
சரவணன் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
“ஏங்க… நான் இவ்வளவு புலம்பறேன். நீங்க ஒரு வார்த்தைகூட பேசாம கம்முனு இருக்கீங்க…சொல்லுங்க.. உங்க மனசுல என்ன இருக்குது?’
எரிச்சலோடு கேட்டாள்….
“சொல்லறதுக்கு என்ன இருக்கு… நம்ம மருமகளாவது தனிக்குடித்தனம் போக இரண்டு வருஷம் எடுத்துக்கிட்டா. ஆனா நீ என்ன பண்ணேன்னு ஒரு நிமிஷம் நினைச்சி பாரு. திருமணமான மூணே மாசத்துல என்னை என் அப்பா, அம்மாகிட்ட இருந்து பிரிச்சி அழைச்சினு வந்துட்டே. “கொஞ்ச காலம் போகட்டும்’னு நான்
சொன்னதை நீ கேட்கவே இல்லை. உன்னைப் பார்க்கறதுக்கு நம்ம மருமகள் எவ்வளவோ பரவாயில்லை…’
கணவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் சாவித்திரி.
– இரா. வசந்தராசன் (மே 2012)